அழகு இந்த தலைப்பில் என்னை எழுத அழைத்த தண்டோரா மணிஜிக்கு எனது அன்பு வணக்கங்களும் நன்றிகளும்!!
மணிஜி அவர்கள் அழகு என்ற இந்த தொடருக்கு அழைத்து பல நாட்கள் ஆகிவிட்டன. மிகவும் தாமதமாக இந்த இடுகை மன்னிக்க மணிஜி...
அழகு!! இது எதில் இல்லை என்பதை என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அழகை ஆராதிக்க மட்டுமே முடியும்.
அழகு!! இந்த வார்த்தைக்குள்தான் எத்தனை அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அழகு என்பது, ஒரு மனிதருக்கோ, ஒரு இடத்துக்கோ, ஒரு பொருளுக்கோ அல்லது ஒருவரின் எண்ணங்களுக்கோ இருக்கக்கூடிய இயல்பு. அது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவு போன்றவற்றை கொடுக்ககூடிய அனுபவத்தை வழங்கக்கூடியது.
சட்டென்று மனதை அள்ளக் கூடியது அழகு. அவரவர்கள் கண்களுக்கு எது அழகாய் தெரிகிறது என்பதை காண்போரின் எண்ணங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருக்கு அழகாய் தெரிவது மற்றவர்களுக்கு அழகாய் தெரியாமல் போகலாம். மனிதன் அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி! பேசும் விதம் அழகு! பேச்சின் வீச்சில் ஏற்படும் முக பாவம் அழகு! பாவத்திற்கேற்ப விழிகளின் அசைவுகள் அழகு! இவை எல்லாவற்றிற்கும் மேலாக வார்த்தைகளை பேசும் விதம் தேன் தடவியது போல் மனதிற்கு இதமாக தோன்ற வைப்பதும் ஒரு தனிவிதமான அழகுதான்.
ரசனைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் அழகு என்ற சொல்லிற்கு பஞ்சம் இருந்ததே இல்லை.
மனிதர்களை அவரவர்களின் இயல்பைக் கொண்டு அழகு என்ற அடைமொழி வைத்து ரசிக்க முடியும். அதே போல் பொருட்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் அழகை தேடிக் கண்டுபிடித்து ரசிக்க முடியும். எது அழகு எது அழகு இல்லை என்பது பிரித்து சொல்ல எனக்கு தெரிய வில்லை.
நான் மிகவும் ரசிக்கும் அழகான உணர்வுகள் சில இங்கே உங்களின் பார்வைக்காக!
பெருக்கெடுத்தோடும் காவிரியின் அழகைப் பாருங்கள். இந்தப் படம் திருவையாறு அருகே ஓடும் காவிரியின் அழகிய காட்சி....
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் போய் சேரும் இடம் கொள்ளிடம். கொள்ளிடம் நிரம்பி வழியும் காட்சியையும், எனது கற்பனையும் ஒரு சேர இணைத்து பார்த்த போது அந்த அழகு என் கண்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது.
மயில் பார்ப்பதற்கு சாதுவாக சுற்றி வந்தாலும் தோகை விரித்து ஆடும் அழகே கொள்ளை அழகாய் காட்சி அளிக்கின்றது பாருங்கள். தோகை விரித்து ஆடும் மயிலின் தோற்றம் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. மழை மேகம் சூழ்ந்தால் மயிலின் ஆட்டத்தை நம்மால் கண்கள் குளிர காண முடியும். முக்கியமான விஷயம் மயில்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தை நான் பல முறை நேரில் பார்த்து ரசித்திருக்கின்றேன். இங்கே மயில் அழகு என்று நாம் விவரிக்கத் தேவையே இல்லை. அதன் அழகுதான் கண்களை கொள்ளை கொள்கிறதே!

கூட்டிற்குள் அன்னையின் வரவிற்காக காத்திருக்கும் அந்தக் குருவிக் குஞ்சுகளின் அழகு கண்களுக்கு ஒரு அருமையான விருந்து. பாருங்கள் உணவிற்காக அதன் செப்பு வாயை திறந்து வைத்துக் கொண்டு நால்வரும் காத்திருக்கிறார்கள்.

அதே போல் கிராமங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உழவர்களை கூர்ந்து கவனித்துப் பார்த்திருக்கிறேன். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ஏர் உழுது, தனது அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்காமல் நமக்கு உண்ண உணவைக் கொடுக்கும் உழவனின் செயலில் இருக்கும் அக்கறையும் கொள்ளை அழகுதான்!! உழவனின் உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் இந்த விளைச்சல் மிக்க வயல் என்றால் அது மிகையாகா...
பாருங்கள் விவசாயின் வியர்வைத் துளிகள் நெல் மணிகளாக காட்சி அளிக்கின்றது.

நான் ரசிக்கும் அழகை ஓரளவிற்கு புரிய வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
என்னை நம்பி அழகைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பினை கொடுத்த மணிஜிக்கு மிக்க நன்றி.
டிஸ்கி: ம்ம்ம்...... மிகவும் தாமதமாக உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன். வழக்கம் போல் என் மீது கோவம் கொள்ளாமல் என்னை உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் இந்த இடுகையை முடிக்கிறேன்.