
"அவங்க தான் போயி சேர்ந்துட்டாங்களேடா! அதை ஏன் இப்போ நினைனவு படுத்தறே?"
"என்னடி ரொம்ப பீலிங்கி காட்டறயா? இப்படியே அவன பேசவிட்டு அவனோட வாயை பாத்துகிட்டே இரு வெளங்கிடும்"
"நீங்க உள்ளே போயி கை கால் கழுவிகிட்டு வாங்க. கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ஒரு முழுங்கு குடிச்சிட்டு கடையாண்ட போயிட்டு வந்திடுங்க. சரக்கு வரலைன்னு கடையிலே இருந்து சேகர் மத்தியானமே போன் பண்ணினான். போயிட்டு வாங்க அதுக்குள்ளே சமைச்சிடறேன்
"என்னாது கஞ்சியா ஏண்டி சமைக்கலை?"
"நீங்க இல்லாதனாலே சமைக்கலே கஞ்சிதான் காச்சினேன். இனிமேதான் சமைக்கணும். வேலு அந்த மண்ணெண்னை அடுப்பை பத்தவை, பத்தவச்சா குப்பு குப்புன்னு சத்தம் கேக்குது பாரு"
"ஆமா இவனை போய் இந்த வேலையை செய்ய சொல்றே! அடுப்ப பத்தவக்கறேன்னு சொல்லிட்டு வீட்டையே பத்த வச்சிடப் போறான். யாரு கிட்டே என்ன வேலை வாங்கறதுன்னு உனக்கு வெவஸ்தையே இல்லாமப் போச்சு.."
"வேணாம்க்கா என்னைய நெம்ப மட்டமா நினைக்கவேணாம்னு சொல்லி வை"
"நீங்க ராத்திரிக்குதானே வரதா சொன்னிங்க? அதனாலே மத்தியானம் வெறும் கஞ்சியோட நிறுத்திட்டேன். நெத்திலி மீனும், கருவாடும் வாங்கி வச்சிருக்கேன்; கஞ்சி குடிக்க பிடிக்கலைன்னா..... இருங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே சமைச்சிடுறேன், சாப்பிட்டப்பறம் கடைக்குப் போலாம்"
"எனக்கு வேணாம் வடிச்சி உன் தம்பி தலையிலே கொட்டு, ஒரு வேலை செய்ய துப்ப காணோம் நின்னுகிட்டு வேடிக்கை பாக்கறதைப் பாரு"
"நான் உங்க கிட்டேதான் பேசிகிட்டு நிக்கேன், நீங்க ஏன் தம்பியை வம்புக்கு இழுக்குறீங்க?
"ஆமாண்டி அவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது அதான்."
"போங்க பெத்த புள்ளையாட்டமா நம்மளையே சுத்தி சுத்தி வாரான் அவனை வையாதீங்க? பாவம் பெத்தவங்களும் போயி சேர்ந்துட்டாங்க, அவனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா? அதைதான் நான் எப்போதும் யோசிச்சிகிட்டே இருக்கேன்"
"கல்யாணம்.... அதுவும் இவனுக்கு அதுசரி"
"வேணாம் மாமா! நீங்க என்ன வேலை சொன்னீங்களோ அதை நாளைக்கு கச்சிதமா முடிச்சிடுவேன்; சந்தைக்குப் போயி என்ன விக்கணும்? அதை வெவரமா சொன்னா என்னாவாம்?? எதை வித்துட்டு எதை வாங்கணுமோ அதையும் வெவரமா சொன்னா வாங்கியாந்திடுவேன். என்னைய இதுக்கு மேலே எதுவும் சீண்ட வேணாம், அக்கா நீயும் மாமனுக்கு கொஞ்சம் சொல்லி வை"
"ஆமாங்க என்ன பண்ணனும்னு நீங்க சொன்னது எனக்கே புரியல.. இன்னொரு தடவை சொல்லுங்க "
"அது சரி நீ அவனோட அக்காதானே! உனக்கு மட்டும் சட்டுன்னு வெளங்கிடுமா? எல்லாம் என் தலைவிதி; அதாண்டி நம்ம சின்னுவை (கெடாவை) வித்துட்டு ஆட்டுகுட்டி நாலு வாங்கி வரச்சொன்னேன். அதைதான் சுருக்கமா 'வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிவான்னு சொன்னேனேன்.' ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சிக்கவேண்டாம் அவனவன் கோடு போட்டா ரோடு போடறான். நீங்க மட்டும் இன்னும் வெளங்காமையே இருங்க, போடா போ என் முன்னாடி இப்படி நிக்காதே! உங்க கூட பேசியே எவ்வளவு நேரம் ஆச்சு இப்படியே பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருந்தா ஒருநாள் நானும் வெளங்காம போயிடுவேன். சரி நீ சமைச்சு வை நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்"
"சரிங்க சீக்கிரமா வந்துடுங்க"
"ம்ம்ம்... உன் தம்பிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி வை"
"ம்ம்ம்ம்... போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க"
"அப்பாடா மாமா கிளம்பிட்டருக்கா... கிளம்பிட்டாரு.. என்னக்கா எப்ப பார்த்தாலும் இப்படி கடிஞ்சிகிட்டே இருக்காரே! உனக்கு கோவமே வராதாக்கா "
"கடைக்குத்தான் போயி இருக்காரு இரு இப்ப வந்திடுவாரு ஜப்பானுக்கு போயிட்ட மாதிரி சந்தோஷப் படறே!"
"பின்ன என்னக்கா.. எப்ப வாயை தொறந்தாலும் விளங்க மாட்டே, விளங்காமே போயிடுவே, நானும் விளங்க மாட்டேன் இதை தவிர உன்னோட புருஷன் வேறே ஏதாவது பேசி இருக்காரா? என்ன பிரிச்சனைக்கா அவருக்கு ?"
"உனக்கு ரொம்ப திமிருடா, உன்னை சும்மா உக்கார வச்சி சோறு போடறாரே! அதுக்கு நீ இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே, நாளைக்கு அவரு சொன்ன வேலையை கச்சிதமா முடிக்கிற வழியை பாரு"
"என்ன நீ கூட ரொம்ப கோச்சுக்கரே.. சரிக்கா விடு விடு"
"டேய் வேலு சமைச்சிண்டேடா, கஞ்சியும் குடிக்கலே, சாப்பிட வாடா"
"மாமா வரட்டும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்க்கா"
"அம்மா அப்பா வந்திட்டாரு... வந்திட்டாரு... வந்து பாரு..." இது அந்த தம்பதியரின் சீமந்த புத்திரன் மாது"
"ஏண்டா இப்படி கத்தறே? ஏங்க கை கால் கழுவிகிட்டு வாங்க சாப்பிடலாம்; வேலு கூட நீங்க வரட்டும்னு சாப்பிட காத்திருக்கான்"
"பரவா இல்லையே உன் தம்பிக்கு என் மேலே இவ்வளவு பாசமா? இல்லே நடிக்கிறானா?" பய நம்ம மேலே பாசமாத்தான் இருக்கான் போல, நாமதான் ரொம்ப வேலுவை நோகடிச்சுட்டோமோ இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இப்படியே இருந்தாதான் அவனை திருத்த முடியும்.
"ஏங்க எப்ப பார்த்தாலும் அவனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க?
"சரி சரி சோத்தைப் போடு. ஏண்டா நிக்கறே இப்படி உக்காரு"
"இருக்கட்டும் மாமா நீங்க மொதல்ல சாப்பிடுங்க நானும் அக்காவும் அப்பறமா சாப்பிட்டுக்குறோம்."
"அட இங்கே பாருய்யா! அக்கா மேலே கரிசனத்தை.. அடச்சே உக்காந்து சாப்பிடு.."
"சரிங்க மாமா...." அப்பாடா... அப்பாடா....!! சாப்பிட்டு முடிச்சாச்சு. நல்ல சாப்பாடு கருவாட்டு குழம்பும், நெத்திலி வருவலும் எம்புட்டு நல்லா இருக்கு, அக்காவுக்கு அப்படியே நம்ம அம்மாவோட கை பக்குவம். பாவம் அக்கா இந்த சிடுமூஞ்சியை கட்டிக்கிட்டு அல்லாடுது....
"என்னடா யோசிக்கற மாதிரி நடிக்கறே? மனசுக்குள்ளே என்னைய திட்டிகிட்டு நிக்கிறியா?
"நான் ஏன் உங்களை திட்டபோறேன், நாளைக்கு போப்போற என்னோட வேலையை பத்தி யோசிக்கிறேன்"
"ஆமா நீ யோசிச்சிட்டாலும்.. அதை ஏன் இங்கே நின்னுகிட்டு செய்யறே"
"சரி நன் யோசிக்கலை டிவி பார்கலாமுல்லே"
"ம்ம்ம்ம்.. என்னமோ செய்யி, செய்யறது உனக்கே நல்லா இருந்தா சரி"
"ஏன் மாமா நீங்க மட்டும் டீவி பாக்கறீங்க நானும் கொஞ்சம் நேரம் பக்ககூடாதா.."
"மாமா... மாமா... இங்கே நின்னுகிட்டு என்ன பண்றீங்க? என்னடா அங்கே நின்னா உங்கப்பா கேள்வி கேக்கறாரு, இங்கே நின்னா நீ கேள்வி கேக்கறே? ஏண்டா உங்க குடும்பமே எல்லாரும் ஒரு மார்க்கமாதான் பேசுவீங்களா?
"என்னாது குடும்பமா? யாரை சொல்றீங்க? எங்க அம்மா, அப்பா, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, சின்ன அத்தை, பெரியத்தை, எங்க பாட்டி, சின்ன தாத்தா எல்லாரையும் சொல்றீங்களா? இருங்க இதை எங்கப்பாகிட்டே சொல்றேன்"
டேய் இருடா.. இருடா... ஏண்டா! இப்படி வில்லங்கமாவே யோசிக்கறே? கொஞ்சம் சின்னபுள்ளையா யோசிக்க மாட்டியா?
"நான் சின்ன புள்ளையா? ஒன்பதாவது படிக்கிறேன் தெரியுமுல்லே? அது சரி நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க மாமா?"
"நானா? நிறைய படிச்சிருக்கேன்."
"அதான் எது வரைன்னு கேக்குறேனுல்லே!"
"அதா அது வந்து.. வந்து இல்லே.. அதை சொன்னா உனக்கு புரியாது"
"சொல்லுங்க எனக்கு நல்லாவே புரியும்"
இவன் போற ரூட்டே சரி இல்லே, எப்படியாவது பேச்சை மாத்தியாகணும், "டேய் டீவிலே ஒரு பொண்ணு பேசிகிட்டு நிக்குதே என்ன சொல்லுது?"
"ஐயோ மாமா இது கூட விளங்கலையா? சர்தான்... அந்தக்கா ஒன்னும் பேசிகிட்டு நிக்கலை? வானிலை அறிக்கை சொல்லிக்கிட்டு இருக்காங்க"
"என்னவாம்? மழை வருமா வராதா?
"வரும்... ஆனா வராது..."
"டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன என்கிட்டவேவா?"
"சரி சரி கோச்சுக்காதீங்க வாங்க நான் கொல்லப்பக்கம் போனும்"
"எதுக்குடா நான் வரமாட்டேன் போ, இந்த நேரத்துலே அங்கே வர பயந்து வருது "
"ஏன்? நான் சின்ன பையன் எனக்குதான் பயம் உங்களுக்குமா?"
"கொஞ்ச நேரம் முன்னாடிதானேடா பெரிய பையன்னு சொன்னே? இப்போ சின்ன பையனாயிட்டியா?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது வாங்கன்னா வாங்க. இல்லேன்னா அப்பா கிட்டே சொல்லிடுவேன். அப்பா... அப்பா..."
"டேய் வாயை மூடுடா, வந்து தொலைக்கிறேன்"
"மாமா உங்க கையி ஏன் இப்படி நடுங்குது"
"நீ ஏண்டா என் கையை புடிக்கறே? மொதல்லே கையை விடு, போ போயி வேலையை முடிச்சிட்டு வந்து தொலை"
"டப் டப் டப டப டப்"
"ஐயோ மாமா யாரோ இருட்டுலே இருக்காங்க.. ஓடுங்க.. ஓடுங்க.."
"ஐயோ யாருடா அது? எங்கே நிக்கறாங்க? ஓடியா.. ஓடியா.. ஆத்தாடி மூச்சு வாங்குதே"
"வேகமா ஓடுங்க மாமா அவங்க இப்போ சத்தமில்லாம நம்ப பின்னாடி வராங்க போல இருக்கு"
"ஓட முடியலடா! ஆமா எங்கேடா நிக்கறாங்க? புளியமரத்துகிட்டேவா இல்லே வேப்பமரத்துகிட்டேவா ? அது சரி........ ஒரு ஆளா இல்லே இரண்டு மூணு பேரா? எதுக்கு அங்கே நிக்கறாங்க?
"மாமா எனக்கு என்ன தெரியும்? யாரோ கை தட்டினாங்க உங்களுக்கு கேக்கலையா? அதான் நான் உங்களை ஓடச் சொன்னேன்"
"என்னா கை தட்டினாங்களா லூசுப் பயலே! லூசுப் பயலே! கை தட்டினது வேறே யாரும் இல்லை நான்தான்டா"
"என்ன நீங்க கை தட்டினீங்களா? நீங்கதான் லூசு மாமா! ஏன் மாமா கை தட்டினீங்க? "
"அது இல்லேடா, ராத்திரியிலே இந்த மாதிரி இடத்துலே நடக்கும் போது இப்படிதான் கை தட்டிகிட்டே போகணும்"
"எதுக்கு கை தட்டனும்?
"ராத்திரியிலே அது.. அது.. ப்ரீயா சுத்தும்! நம்மளை பாத்தவுடனே பாசக்கார பயலுகன்னு ஒரே போடா போட்டுடும். அதுக்காகத்தான் இப்படி கையை தட்டிகிட்டே போனா வழியிலே நிக்காம ஓடிடும், புரிஞ்சுதா?"
"டேய் எங்கேடா இருக்கே நான் தனியாதான் பேசிகிட்டு இருக்கேனா?"
"மாமா நான் இங்கே இருக்கேன். பயப்படாதீங்க, இருங்க வந்திடறேன்"
"சரிடா! பயபடாம சீக்கிரமா வா"
"கை தட்டுங்க மாமா எனக்கு பயந்து வருதே!" இந்த மாமா ரொம்ப பயப்படறாரே லேசா பயமுறுத்தி பார்ப்போம். நினைத்து முடிப்பதற்குள் வித்தியாசமான சத்த கேட்க ஆரம்பிக்குது. அட இது என்ன சத்தம்? இதுவும் மாமாவோட வேலையா இருக்குமோ? அந்த சத்தம் வர்ற திக்கு நோக்கி கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாது.
"சர சர சர சர சர சர...."
"என்னடா கை தட்ட சொன்னா சருகுமேலே நடக்கற, ஓரமா வாடா, எனக்கு பயந்து வருது"
"மாமா நான் எங்கே சருகு மேலே நடக்கறேன், நான் கிணத்துப் பக்காமால்லே நிக்கறேன்"
"ஐயோ அப்படின்னா என்னா சத்தம் இது? எனக்கு புரிஞ்சி போச்சு"
"என்னா மாமா புரிஞ்சி போச்சு?"
"என்னாடா கேள்வி எனக்கு வயத்தை கலக்குது. வரவேண்டியது வந்துடுச்சு போல! ஓடியா... ஓடியா..... ஓடியா... ஓடியாடா ஓடலாம்... "
டிஸ்கி:நண்பர்கள் வளருமா என்று பயந்ததால், அவர்களின் பயத்தை போக்க இந்த தொடரை முடிக்கிறேன். எழுதற ஃப்ளோ கட்டுப் படுத்த முடியாமல் பீரிட்டு வந்தாலும்:)நண்பர்களின் நன்மையைக் கருதி, என்னோட ஆணிகளுக்கும் மதிப்பு கொடுத்து முடிக்கிறேன் :)
சுபம்
ரம்யா...