Showing posts with label சிந்திக்க. Show all posts
Showing posts with label சிந்திக்க. Show all posts

Tuesday, September 8, 2009

வழிகாட்டி யார் ???

உதவும் கரங்களா?????


சின்ன சின்ன கால்கள் எடுத்து
சிங்காரமாய் நடை பயின்று
அன்னை மடியில்
அலங்காரமாய் வீற்றிருந்து
பொங்கும் மழலையில்
ஆயிரமாயிரம் வினாயெழுப்பி
அன்னை அளித்த
விடைகளின் விபரமரியாமல்
காலத்தின் ஓட்டத்தில்
கற்று பல தேர்ந்து
கவிதையாய் வாழாமல்
ஆபத்து நிறைந்திட்ட
ஆயுதத்தை கையில் - ஏன்
எடுத்தாய் கண்ணே!!

எனக்கு கிடைத்த இந்த படத்தினை இங்கே உங்களுக்கும் பகிர்கின்றேன்.

இது வெறும் படமாக மட்டும் இருந்திட்டால் மிகவும் சந்தோஷமே!

விளம்பரத்திற்காக இருந்தால் கடுமையான கண்டனத்திற்குரியது!

ஆனால் விளையாட்டிற்கு கூட இது போல் படங்கள் எடுப்பதை தவிர்த்திருக்கலாம்!!

இந்த படம் சிரிக்க அல்ல சிந்திக்க.....

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?????

டிஸ்கி : இது என்னோட சொந்த கருத்து!



Monday, April 6, 2009

ஏழைக்குச் செல்வம் கிடைத்தால்!!

எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!

ஓர் ஊரில் அடுத்தடுத்து செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவனும் குடி இருந்தார்கள். செல்வந்தரின் வீடு பெரிதாக இருந்தது. ஏழையின் வீடோ குடிசை வீடு.

ஏழைக்குச் சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்துக் கிடைக்கின்ற சிறிதளவு கூலியுடன் வீடு திரும்புவான் அவன். எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டுக் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும். படுத்தவுடன் நன்றாகத் தூங்கி விடுவான் அவன்.

ஆனால் செல்வந்தரோ எப்பொழுதும் பரப்புடனும், கவலையுடனும், காட்சி அளித்தார். தன் வீட்டுக் கதவுகளையும் சன்னல்களையும் மூடியே வைத்திருந்தார். திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களைத் திருடி சென்று விடுவார்களோ என்று அஞ்சினார். அதனால் அவர் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தார் அவர். இவ்வளவு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக் இருக்க முடிய வில்லையயே என்று வருந்தினார்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய வ்ரும்பினார் அவர்.

ஏழையை அழைத்த அவர், நண்பனே! நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய். உனக்கு உதவி செய்ய எண்ணுகிறேன். என்னிடன் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உள்ளது. அதிலிருந்து உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து" என்றார்.

செல்வந்தரிடம் நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட ஏழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது இந்தப் பொற்காசுகளைத் திருடர்கள் திருடிச் சென்று விடுவார்களோ என்று அச்சத்தில் வீட்டுக் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.

தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.

Sunday, April 5, 2009

செல்லமே செல்லம்ஸ் கார்னெர் !!

நேர்மையான உழவன்!!

இன்று நான் சொல்லும் கதை உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இது ராஜா பற்றிய கதையாயிற்றே.

வீரம் மிகுந்த 'பேசராவ்' என்பவர் மராட்டிய படைத் தலைவராக இருந்தார். பக்கத்து நாட்டின் மீது பெரும் படையுடன் சென்றார். பல வெற்றிகளைக் கண்டார்.

வெற்றி பெற்ற அவர் பல நாட்கள் பயணத்திற்குப் பின் தன் நாட்டை அடைந்தார். தலை நகரத்தை அடைய இன்னும் சில நாட்கள் பயணம் தேவைப்பட்டது.

பயணத்தால் தன் வீரர்கள் களைப்பு அடைந்து இருப்பதைக் கண்டார். அருகில் இருந்த சிற்றூர் ஒன்று அவர் கண்களுக்குத் தெரிந்தது.

வீரர்களைப் பார்த்து, "நாம் இங்கேயே முகாமிட்டுத் தங்குவோம்" என்றார். அங்கே முகாம் அமைக்கப்பட்டது.

வீரர்கள் பசியுடன் இருப்பதை அறிந்தார் அவர்.

வீரர் தலைவன் ஒருவனை அழைத்து "அருகில் உள்ள ஊருக்குச் செல், நமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா, தேவையான வீரர்களை உன்னுடன் அழைத்துச் செல்" என்று கட்டளை இட்டார்.

ஐம்பது வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் வீரர் தலைவர். அவர்கள் எதிரில் உழவர் ஒருவர் வந்தார்.

அவனைப் பார்த்து வீரர் தலைவர், "இந்த ஊரிலேயே தோட்டத்துடன் நல்ல விளை நிலம் எங்கே உள்ளது?" எங்களுக்குக் காட்டு என்றார்.

உழவர் அவர்களை அழைத்துச் சென்று ஒரு நிலத்தைக் காட்டினார்.

அங்கே ஒரு பக்கம் வாழையும், தென்னையும் காய்த்துத் தொங்கின. இன்னொரு பக்கம் கரும்பும் நெல்லும் நன்றாக விளைந்து இருந்தன.

மகிழ்ச்சியுடன் வீரர் தலைவர், "வீரர்களே! வயலுக்குள் இறங்கி உங்கள் விருப்பம் போல உணவுப் பொருள்களைக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

ஆரவாரத்துடன் வீரர்கள் அந்த வயலில் இறங்கினார்கள்.

இதைக் கண்ட அந்த உழவர், "இதை விட அருமையான வயல் ஒன்று காட்டுகிறேன். எல்லாப் பழவகைகளும், கரும்பும், நெல்லும், காய்கறிகளும் அங்கே உள்ளன" என்றார்.

"இதை விட அருமையான நிலம் இருக்கிறதாம். நாம் அங்கே செல்வோம்" என்றார் வீரர் தலைவர்.

உழவரைத் தொடர்ந்து வீரர் தலைவரும், வீரர்களும் நடந்தார்கள், நெடுந்தொலைவு நடந்த பிறகு ஒரு நிலத்தைக் காட்டிய உழவர் "இதில் உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

அந்த நிலத்தை பார்த்த வீரர் தலைவர் கடுப்பாகிப் போனார். "உழவரே! எதற்காக எங்களை இவ்வளவு தொலைவு வீணாக அழைத்து வந்தீர்? நீர் முதலில் காட்டிய நிலமே இதைவிட வளமாக இருந்ததே" என்று கோபத்துடன் கேட்டார்.

"ஐயா! நான் முதலில் காட்டியது வேறு யாருடைய நிலமோ? நீங்கள் அந்த நிலத்தில் பொருள்களை எடுத்திருந்தால் அந்த உழவனின் இழப்பிற்கு நானும் பொறுப்பு ஆவேன். இந்த நிலம் எனக்கே சொந்தமான நிலம். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். உங்கள் விருப்பம்போலப் பொருள்களை எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

உழவரின் சொற்கள் வீரர் தலைவரின் உள்ளத்தைத் தொட்டது. அந்த நிலத்தில் எதையும் தொடாமல் திரும்பிய அவர் படைத் தலைவரிடம் நடந்ததைச் சொன்னார்.

ஒரு உழவருக்கு இருக்கும் நேர்மையான உள்ளம் தனக்கு இல்லையே என்று வருந்தினார் அவர்.

"வீரர்களே! இந்த ஊரில் எந்தப் பொருள் எடுத்தாலும் அதற்கு உரிய விலையைத் தந்து விடுங்கள்". என்று கட்டளை இட்டார் அவர்.

பின்குறிப்பு
==========
இந்த கதையும் உங்களுக்கு சிந்திக்கவும், நல்ல நெறிகள் பற்றி யோசிக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது.

Saturday, April 4, 2009

மறுபடியும் குட்டீஸ் கார்நெர் !!

தனக்கு நன்மை!! அடுத்தவனுக்குத் தீமை!!


ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது.

பக்கத்து ஊருக்குச் சென்ற அவன், "ஐயா! நிறைய பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. உங்கள் கழுதையை இரவல் தாருங்கள். வணிகம் முடிந்து திரும்பியதும் கழுதையைத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான்.

பக்கத்து ஊர்காரனும் தன் கழுதையைத் தந்தான்.

வஞ்சகனான அந்த வணிகன் தன் கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை ஏற்றினான். பக்கத்து வீட்டுக்காரனின் கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றினான்.

தன் வேலையாளைப் பார்த்து "நான் குதிரையில் முன்னாள் செல்கிறேன். என்ன நடந்தாலும் கழுதைகளை எங்கும் நிறுத்தாதே. பக்கத்து ஊர் வந்து சேர்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப்பட்டான். உப்பு மூட்டை ஏற்றப்பட்ட கழுதை தள்ளாடித் தள்ளாடி நடந்தது. பஞ்சு மூட்டையைச் சுமந்த கழுதையோ மகிழ்ச்சியுடன் நடந்தது.

திடீரென்று வானம் இருண்டது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரண்டு கழுதைகளும் மழையில் நனைந்து கொண்டே நடந்தன.

மூட்டைக்குள் இருந்த உப்பு மழை நீரில் கரைந்து கீழே விழுந்து கொண்டே வந்தது. ஆனால் பஞ்சு மூட்டைகளோ மழையில் நனைந்து நீரை இழுத்துக் கொண்டு எடை அதிகமாகிக் கொண்டே வந்தது.

பஞ்சு மூட்டைகளின் கனத்தைத் தாங்க முடியாமல் வணிகனின் கழுதை துடித்தது. அதனால் அடியெடுத்து வைக்கவும் முடிய வில்லை. ஆனால் வேலையாளோ அதை அடித்து விரட்டினான்.

பஞ்சு மூட்டைகளின் எடை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முதுகு எலும்பு முறிந்த அந்தக் கழுதை அங்கேயே விழுந்து இறந்தது.

மூட்டைகள் வந்து சேரத் தாமதம் ஆவதை அறிந்தான் வணிகன். என்ன நடந்தது என்பதை அறிய குதிரையில் திரும்பினான்.

தன் கழுதை இறந்து கிடப்பதைக் கண்டான். என்ன நடந்து இருக்கும் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

'அடுத்தவன் கழுதை துன்பப் படட்டும். என் கழுதை மகிழ்ச்சியுடன் வர வேண்டும் என்று சூழ்ச்சி செய்தேன்! எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது'. என்று வருந்தினான் அவன்.

பின்குறிப்பு

==========

எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா??

மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லவைகள் நம்மை ஓடோடி வந்தடையுமே !!

Monday, March 30, 2009

நீங்கள் சிங்கங்கள் !!

என் அருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!


ஒரு பெண் சிங்கத்தை பற்றி ஒரு கதை உண்டு. ஒரு சமயம் அது கருவுற்று இருந்தது. அது ஒரு நாள் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன்மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில் சிங்கம் இறந்துவிட்டது. இறப்பதற்கு முன் அது ஒரு குட்டியை ஈன்றது. தாயற்ற அந்தச் சிங்கக்குட்டியை ஆடுகள் வளர்த்தன.


அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லைத் தின்றது. ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச் சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து, பெரிய சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஒரு ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.


ஒருநாள் வேறொரு சிங்கம் இரை தேடிக்கொண்டு அங்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அது அந்த ஆட்டுச் சிங்கத்தை நெருங்கி, நீ ஆடல்ல, சிங்கம் என்று சொல்ல முயன்றது. ஆனால் ஆட்டுச் சிங்கம் புதிய சிங்கம் தன்னை நெருங்கும் போதே தலை தெறிக்க ஓடியது. ஓட்டத்தில் பயம்தான் அதிகம் காணப்பட்டது. ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து புதிய சிங்கம் காத்திருந்தது.


ஒருநாள் ஆட்டுச் சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி, நீ ஒரு சிங்கம் என்று கூறியது.


அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொல்வதை நம்பாமல் 'நான் ஆடுதான்' என்று சொல்லிக் கொண்டே ஆட்டைபோல் கத்தியது.


புதிய சிங்கம் ஆட்டுச் சிங்கத்தை ஓர் ஏரிக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அது ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து, 'தண்ணீரில் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகின்றன' என்று கூறியது.


ஆட்டுச் சிங்கம் ஏரி நீரில் தென்பட்ட இரண்டு பிரதிபிம்பங்களையும் ஒத்துப் பார்த்தது.
பின்னர் புதுச் சிங்கத்தையும் தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது. அடுத்த கணமே, தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்துவிட்டது. உடனே அது கர்ஜித்தது. ஆடுபோல் கத்துவது மறைந்துவிட்டது.


பின் குறிப்பு
==========
ஆட்டு மந்தையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்பது தெளிவான கருத்து. சில வருடங்கள் தன் நிலை மறந்திருந்தாலும், தனது இனம் தன்னை உணரவைத்தவுடன் சிங்கமானது தனது குரலே மாறும்படி கர்ஜிக்கின்றது.

எனவே, நாம் இதிலிருந்து அறிவது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மனித நேயமிக்க மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.








Saturday, March 28, 2009

பொருள் தேடுவதின் பயன்!!


என் செல்வங்களே இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான கதை சொல்லப்போகிறேன்!!

ஒரு நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு நாள்தோறும் அழகாக முக சவரம் செய்து வந்தார் நாவிதர் ஒருவர்.

மகிழ்ச்சி அடைந்த அரசர் அவருக்கு நிறைய ஊதியம் தந்தார்.

ஆனால் அவரோ அரசர் தரும் பணத்தைச் சிறிதும் செலவு செய்ய வில்லை. சில ஆண்டுகளில் அவரிடம் ஏராளமான செல்வம் சேர்ந்தது. இருந்தும் அவர் நிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

வெளியூர் சென்று திரும்பிய அவர் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா?" என்று கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் அவர் கண்களுக்குத் தெரிய வில்ல.

அங்கிருந்து சிறிது தொலைவு நடந்தார். மீண்டும் அந்தக் குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா? என்று கேட்டது.

பேராசை கொண்ட அவர், "ஆமாம் வேண்டும்" என்றார்.

"நீ கேட்ட ஏழு குடம் தங்கமும் உன் வீட்டில் இருக்கும்" என்றது அந்தக் குரல்.

மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தார் அவர். வீட்டிற்குள் ஏழு பெரிய குடங்கள் இருந்தன. ஆறு குடங்களிலும் தங்கம் முழுமையாக இருந்தது. ஒரு குடத்தில் மட்டும் சிறிது குறைவாக இருந்தது.

மறுநாள் 'வழக்கம் போல அரசருக்கு முக சவரம் செய்த அவர், "அரசே! நீங்க குடுக்கும் ஊதியம் எனக்குப் போதவில்லை" என்றார்.

"நாளையில் இருந்து இரண்டு பங்கு ஊதியம் தருகிறேன்" என்றார் அரசர்.

கூடுதலாகக் கிடைத்த ஊதியத்தையும் பொன்னாக மாற்றிக் குடத்தில் போட்டார். குடம் நிறையவில்லை.

ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் பிச்சை எடுத்துப் பொருள் ஈட்டினார். அப்படிக் கிடைத்த பணத்தையும் குடத்தில் போட்டார்.

நகர வீதி வழியாக வந்து கொண்டிருந்த அரசர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நாவிதனைக் கண்டார்.

நாவிதனை தன் அருகே அழைத்த அரசர், "உனக்கு தான் நிறைய ஊதியம் தருகிறேன். அது போதாதா?? இப்பொழுது எல்லாம் பணம் பணம் என்று அலைகிறாய். நீ படும் துன்பத்தைப் பார்த்தால் அந்த ஏழு குடம் தங்கத்தை நீ வாங்கிக் கொண்டாயா?" என்று கேட்டார்.

அதிர்ச்சி அடைந்த நாவிதர். "அரசே! ஏழு தங்கக் குடங்கள் பற்றிய செய்தி' உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

"அந்த தங்கக்குடங்களின் இயல்பு தெரியாமல் நீ அதை வாங்கிக் கொண்டாய். அந்த குடத்தில் தங்கத்தைப் போட்டுக் கொண்டு இருக்கலாமே தவிர அதிலிருந்து குந்து மணி அளவும் எடுக்க முடியாது. அதற்காகப் பொருள் தேடி வீணாக அழிந்து போகாதே" என்று அறிவுரை சொன்னார் அரசர்.

உண்மை உணர்ந்த அவர் காட்டிற்குச் சென்றார் குரல் கேட்ட இடத்தில் நின்று, "எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் இப்பொழுது ஏழு தங்கக் குடங்களும் இல்லை.

"எழாவது குடத்தில் தான் போட்ட தங்கமும் போய் விட்டதே. பேராசையால் உள்ளதையும் இழந்தேன்" என்று வருந்தினார் அவர்.



பின்குறிப்பு
=======
எனதருமைச் செல்லங்களே பேராசை பெரும் நஷ்டம் ஆகிவிட்டது பார்த்தீர்களா?

ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கதையும் உங்களுக்கு எதிர்காலத்திலும் நிகழ காலத்திலும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

எனது கதைகளைப் படித்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கும் அனைத்து என் செல்லங்களுக்கும் மிக்க நன்றி. எனது நன்றியை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு கூறிக் கொள்கிறேன். திங்கட் கிழமையில் இருந்து வேறு பதிவு போட முடிவு செய்திருந்தேன். ஆனால் உங்களின் மின்னஞ்சல்களால் மறுபடியும் இந்த பதிவை போடுகிறேன்.

மின்னஞ்சல்கள் அனுப்பிய செல்லங்கள்
==============================

காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, விமல், விதுஷா, வாண்டு, விக்கி, சதா, சந்தானம், தென்றல், ஏகாம்பரம், சரசு, மிருதுளா, சாதிக், சந்திரன்.

உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப் பெண்கள் பெற எனதன்பு வாழ்த்துக்கள்!!

தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். அதை நான் என் பதிவில் உங்கள் பெயருடனும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் போட்டோவுடனும் பதிவிடுகிறேன்.






Friday, March 27, 2009

நானா? நாமா??


எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!

இரண்டு நண்பர்கள் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வழியில் பணப்பை ஒன்று கிடப்பதை அவர்களில் ஒருவன் பார்த்தான். அதை எடுத்துத் திறந்து பார்த்தான் அவன். அதில் ஏராளமான பணம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.

உடன் இருந்த நண்பன், "ஆ! நம் நேரம் நல்ல நேரம். இல்லா விட்டால் இவ்வளவு பணம் நமக்குக் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"பணப்பையைக் கண்டது நான் பணப் பையை எடுத்தது நான். நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய்? உனக்கு என்று குறிப்பிட்டுச் சொல்" என்றான் முதலாமவன்.

இரண்டாமவன் ஏதும் பேச வில்லை. இருவரும் அங்கிருந்து நடந்து சென்றார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்று இருப்பார்கள். வீரர்கள் சிலர் குதிரையில் வருவதை இருவரும் கண்டார்கள்.

அஞ்சி நடுங்கிய முதலாமவன், "அந்த வீரர்கள் பணப் பையைத் தான் தேடி வருகிறார்கள். குதிரையின் பின்னால் வரும் ஒருவன் பணப் பைக்குச் சொந்தக்காரன் போலத் தெரிகிறான். இந்தப் பணப்பையினால் நமக்குத் தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றான்.
அதற்கு இரண்டாமவன், "இந்தப் பணப்பையைக் கண்டது நீ. எடுத்தது நீ. இப்பொழுது மட்டும் நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய். எனக்கு என்றே சொல்" என்றான்.


பின்குறிப்பு
==========
என் அன்புச் செல்லங்களே உங்களுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கும் என்று நம்புகின்றேன்.

இதன் கருத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்.

நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. துன்பத்திலும் தோள் கொடுக்கவேண்டும். இவைகள் தான் நாம் நட்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம்.





Thursday, March 26, 2009

கடமையை செய்தால் உயர்வை அடையலாம் !!


என் செல்வங்களுக்கு இன்று நான் தொடுக்கும் கதை மாலை !!

நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம்.

ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார்.

யோகி அல்லவா! அவரது தலையிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளைச் சாம்பலாக்கிவிட்டது.

அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, தலைகால் புரியாத மகிழ்ச்சி கொண்டார்.சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி உணவிற்காக அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா, பிச்சை இடுங்கள்' என்று கேட்டார்.

'மகனே கொஞ்சம் இரு' என்று வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், 'பேதைப் பெண்ணே, என்னைக் காக்க வைப்பதற்கு உனக்கு என்ன தைரியம்! என் சக்தியை நீ அறியவில்லை' என்று நினைத்தார்.

இப்படி அவர் நினைத்ததுமே உள்ளிருந்து, 'மகனே, உன்னைப்பற்றி அவளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே. இங்கே இருப்பது காகமும், அல்ல. கொக்கும் அல்ல' என்று குரல் வந்தது.

துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது.

கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவளது கால்களில் வீழ்ந்து, 'தாயே, நான் மனதில் நினைத்ததை நீங்க எப்படி அறிந்தீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அவள், 'மகனே, எனக்கு உன்னைப்போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது'.

அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோயுற்றிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன்.

அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்து வருகிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது கணவருக்குச் செய்து வருகின்றேன்.

கடமைகளைச் செய்வதாலேயே என் ஞானக் கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. காட்டில் நடந்ததையும் தெரிந்து கொண்டேன். இதற்கு மேலும் ஏதாவது அறிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்துலுள்ள சந்தைக்குச் செல். அங்கே ஒரு வியாதன் (இறைச்சி வியாபாரி) இருப்பான், அவனை நீ சந்தித்தால் அவன் உனக்கு போதிப்பான்' என்றாள்.

முதலில் அந்தத் துறவி, 'ஒரு வியாதனிடம் போவதா?' என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். சந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார்.

அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, விலை பேசுவதும், விற்பதுவுமாக இருந்தான். 'அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைக் கற்கப் போகிறேன்?. இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே!' என்று அதிர்ந்தார் துறவி.

இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்து விட்டு, 'ஓ ஸ்வாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்து விட்டு வருகிறேன்' என்றான்.

'இங்கே என்ன நடக்கப் போகிறதோ' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழித்து, வேலை முடிந்தது. வியாதன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து, 'வாருங்கள் வீட்டிற்குப் போகலாம்' என்றான்.

வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்காக இருக்கை ஒன்றை அளித்து, 'இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன்'என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

பின்னர், வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான்.

பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தகுந்த விளக்கம் தந்தான். (அது வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் உள்ளது.)

பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இந்தத் தொழில் இழிந்தது ஆயிற்றே' என்று கேட்டார். இதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, 'மகனே, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ கேவலமானதோ இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் வைத்திருக்கிறது. எனக்குப் பற்று ஏதும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கான சேவைகள் அனைத்தையும் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என்னிடம் நீங்கள் பார்ப்பவை கேட்பவை எல்லாம், எனது நிலைக்கு உரிய கடமைகளைப் பற்றின்றிச் செய்ததால் கிடைத்ததாகும்' என்றான்.


பின் குறிப்பு
==========

எனது செல்லங்களாகிய உங்களுக்கு இந்த கதை பிடித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த கதையின் முழு அர்த்தத்தையும் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை உங்கள் பிஞ்சு மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

பிற் காலத்தில் இவைகள் அனைத்தும் உங்களுக்கு உபயோகப்படும்.






எது தானம் ??

என் சக வலைப்பதிவர்களின் வீட்டுச் செல்லங்களுக்கு!!


குருச்சேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லாரும் அந்த யாகத்தின் சிறப்பையும் பெருமையையும் கண்டு வியந்து, அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர்.


யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பின் ஒரு பகுதி பொன்னாகவும், மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது. உள்ளே நுழைந்த கீரிப்பிள்ளை யாக குண்டத்தில் இருந்த சாம்பலில் விழுந்து புரண்டது.


பின் எல்லோரையும் பார்த்து. நீங்கள் அனைவரும் பொய்யர்கள், இது யாகமே அல்ல என்று கூறியது.


கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன! இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய்? எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளி கொடுக்கப் பட்டுள்ளது என்பது உனக்கு தெரியுமா?? எல்லோரும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே! இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.


அதற்கு கீரிப்பிள்ளை கூறியது, முன்பொரு முறை சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள். பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து, அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.


ஒருமுறை அந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன.


அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலயில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத் தயாராயினர். அந்த வேலையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. பிராமணர் கதவத் திறந்தார். எதிரே விருந்தினர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.


இந்தியாவில், விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும்.


எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்பு தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும்படி உபசரித்தார்.


வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினி கிடக்கிறேன். இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது, என்று கதறினார்.


உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம், என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள், வந்திருப்பவர் விருந்தினர். வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை. அவருக்குக் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது, என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித் தன் பங்கை அந்த விருதாளிக்குக் கொடுத்தாள்.


அதை உண்ட பிறகும் விருந்தாளியின் பசி தீரவில்லை. அவர் துடித்தார்.


இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன், தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை. இதோ என் பங்கு உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன் பங்கை அந்த விருந்தாளியிடம் கொடுத்தான்.


அப்படியும் விருந்தாளியின் பசி அடங்கவில்லை. அவர் மிகுந்த வேதனைப் பட்டார். இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது. அவர்களை வாழ்த்தி விடைபெற்றார், அந்த விருந்தாளி.


ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்.


அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள்.


அது போல் நிகழ்வுகள் எங்கேயாவது நடந்துள்ளதா என்று அறிந்தால் அதில் புரண்டு மீதி பாதி உடலையும் பொன்னாக்கி கொள்ளத்தான் ஆசைப் படுகின்றேன்.

அந்த இடம் நோக்கி அலைந்து கொண்டிருக்கின்றேன். இங்கு பெரிய யாகம் நடப்பதாகவும் ஏழைகளுக்கு தானம் செய்வதாகவும் அறிந்து இங்கு ஓடோடி வந்து உங்கள யாக குண்டத்தில் விழுந்து புரண்டேன். அந்த அந்தணர் வீட்டில் சிதறிக் கிடந்த சிறிய பார்லி மாவில் புரண்டு பாதி பொன்னான என் உடலின் மீதி பாதியும் பொன்னாக்க நினைத்துதான் இந்த காரியத்தை செய்தேன். ஆனால் நடந்தது என்ன ? என் உடல் பொன்னாக மாறவில்லை.அப்போ உங்கள் யாகம் தவறுதானே என்றது அந்த கீரிப்பிள்ளை.


அங்கு அமர்ந்திருந்தவர்கள் என்ன சொல்லுவது என்று புரியாமலும், என்ன தவறு நடந்திருக்க முடியும் என்றும் யோசிக்க ஆரம்பித்தனர்.


பின்குறிப்பு
==========
நான் எழுதும் இந்தக் கதைகள் ஏற்கனவே நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள். இந்த கதைகள் நான் எழுதக் காரணம் இருக்கின்றது. நான் சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு வலைப்பதிவு அண்ணா ஒருவரிடம் சாட்டிங்கில் பேசிக் கொண்டு இருந்தேன். மிகவும் நேரம் ஆகிவிட்டதால் அப்போது அந்த அண்ணா சொன்னாங்க ஏன்மா இன்னும்
தூங்காமல் இருக்கே. நான் வேணும்னா ஒரு கதை சொல்லாவா என்றார். நான் என் சிறு பிராயத்துக்கே சென்று விட்டேன். கதை சொன்னார் மிக அருமையான கதை.

கதை சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு தந்தையின் ஆர்வம் அவர் குரலில் தெரிந்தது. முடிக்கும் போது குழந்தைக்கு சொன்ன ஒரு முழுமையும், பெருமிதமும் அவர் குரலில் தெரிந்தது. அதன் பாதிப்புதான், இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதைகள். கதைக்காக ஏங்கும் குழந்தைகள்! அருகே இருந்தும் அவர்களுக்கு வேலைப் பளுவின் காரனமாக கதை சொல்ல முடியாத தந்தைமார்கள் மற்றும் தாய்மார்கள்!! அருகே இருந்து தன் குழந்தைகளுடன் கழிக்க முடியாமல், தொலை தூரத்தில் இருக்கும் அன்பு தந்தைகள் இவர்களின் ஏக்கத்தைப் போக்கவே இந்தக் கதைகள்.


குழந்தைகளை நினைத்து ஏங்கும் தந்தைமார்களான என் சகோதரர்களின் செல்லங்களுக்கும் இந்த அத்தை எழுதும் மிகச் சிறிய கதைதான்! இது என் கற்பனைக் கதை அல்ல. எல்லாரும் கேள்விப்பட்டு தற்சமயம் மறைந்து கொண்டிக்கும் கதைகள்தான்.


நான் இப்போது எழுதிக்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், தனித்தனியாக இந்தக் கால என் செல்லங்ககளுக்கு சொல்ல முடியாது. அதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லுகிறேன். என் நோக்கம் அவ்வளவுதான்.









Wednesday, March 25, 2009

பரந்த மனம் வேண்டும் !!!

நான் கேள்விப் பட்ட ஒரு சிறு கதை!!


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.


அந்த தவளை நாள்தோறும் நீரில் இருந்த புழுபூச்சிகளையும், கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றி சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராயிச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.

கிணற்றுத் தவளை: நீ எங்கிருந்து வருகிறாய்??

கடல் தவளை: கடலில் இருந்து

கிணற்றுத் தவளை: கடலா? அது எவ்வளவு பெரியது?? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா? என்று கூறி, ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குத் தாவிக் குதித்தது .

கடல் தவளை: நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிட முடியும் என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை: மறுபடியும் ஒரு குதி குதித்தது, உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா? என்று கேட்டது.

கடல் தவளை: ச்சேச்சே! என்ன இது முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?

கிணற்றுத் தவளை: நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலங்காலமாக இருந்து வருகின்ற கஷ்டம் இதுதான்

இந்த கஷ்டத்திற்கு விவேகானந்தர் கூறிய ஒரு கூற்று என் நினைவிற்கு வருகிறது அதை பார்ப்போம்:


நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.