Wednesday, December 30, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!

ம்மிடம் இருந்து வருடம் 2009 விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது !!

பிரியா விடை பெறும் வருடம் 2009 க்கு நன்றி!!

ம்மை நோக்கி வருடம் 2010 வீர நடை போட்டு நெருங்கி வருகின்றது !!

வருடம் 2010 ஐ வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறோம்!!
















இந்த புது வருடத்தில் நாம் அனைவரும் இன்று போல் என்றும் நல்ல நண்பர்களாக வலையுலகில் வலம் வர வாழ்த்துகிறேன்!!

நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வரும் நாட்களில் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே !!






Sunday, December 27, 2009

சமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 !!



முதல் பார்ட் படிக்காதவர்கள் இங்கே படிக்கவும்!!


சரிதாவின் இன்றைய நிலை.....


சென்ற இடுகையில் சரிதாவின் பரிதாபபமான நிலையை தெளிவாகப் பார்த்தோம்.


இப்போது சரிதா என்ன செய்துக கொண்டிருக்கிறாள் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தொண்டு நிறுவனம் அரவணைத்து அழைத்துச் சென்ற சரிதா அங்கே ஒரு பயத்துடன்தான் அறையில் முடங்கி தனக்குத் தானே ஒரு முள் வேலி போட்டு கொண்டிருந்தாள். ஒரு வார காலம் முடிந்தவுடன் எனக்கு சரிதாவின் நினைவு வந்தது. தொண்டு நிறுவன தலைவியிடம் அனுமதி வாங்கி சென்று பார்த்தேன். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அங்கே இருந்த ஒரு நிர்வாகி "இவள் எப்பொதும் இப்படிதான் அழுது கொண்டே இருக்கிறாள்.கொஞ்சம் ஏதாவது கூறி சமாதனப் படுத்திவிட்டு செல்லுங்கள்" என்று கூறினார்கள்.

அதே போல் சமாதானம் செய்து விட்டு கனத்த மனதுடன் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனாலும் எப்போதும் சரிதாவைச் சுற்றியே என் எண்ணங்கள் இருந்து வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வந்தேன். அப்படி ஒரு முறை பார்க்கச் செல்லும் பொது, சரிதா மிகவும் இளைத்துப் போய் இருந்தாள். என்னவென்று விசாரித்ததில் தனக்குத் தானே இட்டுக் கொண்ட தண்டனையால் அந்த இளைப்பு என தெரிந்து கொண்டேன். நன்றாக சாப்பிடுவதில்லை. உறக்கமும் இல்லை. எப்போதும் பிரிந்து போன சகோதர சகோதரிகளின் நினைவால் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன பெற்றோர்களின் நினைவோ உடன் பிறந்தவர்களின் நினைவோ மாறவில்லை அது மிகவும் கொடுமையான ஒன்றுதானே?

அவளின் மன நிலையில் எப்படி மாற்றம் கொண்டு வருவது என்று தீர சிந்தித்து அதை அந்த நிர்வாகத் தலைவியின் உதவியுடன் நிறைவேற்ற முடிவெடுத்தோம். முதலில் அந்த நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங், பிறகு அவளுடன் பழகுபவர்களுக்கு கவுன்சிலிங் இப்படி யார் யாருக்கெல்லாம் கவுன்சிலிங் தரவேண்டி இருந்ததோ அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தோம். சிரத்தை எடுத்து காரியத்தை செவ்வனே செய்து முடித்தோம். கடின உழைப்புடன் கூடிய எங்களின் சிரத்தைக்கு நல்ல பலன் கிடைத்தது.

எங்கள் முயற்சி வீண் போகவில்லை.சரிதாவின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.அதையே ஒரு நூலாகப் பிடித்துக் கொண்டு சரிதாவின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்து விட்டோம். இதற்கு நிறைய பேரின் ஆதரவும் உதவியும் கிடைத்தது.

இப்போது சரிதாவை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாகிவிட்டது. சரிதாவும் தனது நிலை மறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு பள்ளியின் நிர்வாகத்துடன் போராடி, நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, அவளின் இந்த நிலையை ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டோம். தொண்டு நிறுவனத்தின் தலைவி பொறுப்புடன் செய்த செயல்கள் சாலச் சிறந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகமும் அதற்கு சம்மத்தித்து, இப்போது பிளஸ் ஒன் படித்து வருகிறாள். ஒருவருக்கும் அவளின் குறை இப்போது தெரியவில்லை. சரிதாவின் மனதிற்கு மட்டும்தான் அந்த குறை தெரியும். பள்ளி நிர்வாகத் தலைவிக்குத் தெரியும்.

சரிதாவின் உடலில் தற்சமயம் வெளியே எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. சில வருடங்கள் கடந்த பிறகு தெரிய வாய்ப்பு உண்டு. அது சமயம் விடுதியிலேயே படிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்வதாக தொண்டு நிறுவனத்தின் தலைவி கூறி இருக்கிறார்கள்.

சரிதாவின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய தொண்டு நிறுவனம், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல மனங்கள் உள்ள மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நல்ல மனம் படைத்த உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!

நல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்!!

நல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு!!




Monday, December 21, 2009

டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு!!


டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு அபாரமான முறையில் நடந்தேறியது!!




அனைவரையும் நேரில் சந்தித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியையும் கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகா. வருகை தந்தவர்கள் அனைவரும் முன்பே பழகியது போன்று தோன்றியதே அன்றி புதியவர்கள் என்ற எண்ணம் மனதில் எள்ளலவும் ஏற்படவில்லை.

எல்லாரும் ஒரே மாதிரி அன்பாகப் பேசினார்கள், அறிமுகப் படுத்திய விதமும் அருமை.

நிகழ்ச்சியை பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தொகுத்து வழங்கிய விதமும் அபாரம்.

நண்பர் கதிரின் பணி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்திருக்கிறார். நல்லதொரு ஆரம்பம் இவ்விழா என்று கூறலாம்.

சகோதரர் பழமைபேசி அவர்கள் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை.

வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களும் அருமையாக பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்.

சகோதரி சும்ஜலா வலைப்பூவை ஜொலிக்க செய்ய பல நுணுக்கங்களையும் தனது உறையில் தெரிவித்தார்.அந்த விஷயங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஈரோட்டு நண்பர்கள் ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி இவர்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்து அமரச்செய்து, என்னையும் உறையாற்றச் சொன்னார்கள். மிக்க நன்றி மக்கா!

சென்னையில் இருந்து (கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, வானம்பாடி)

திருப்பூரில் இருந்து (பரிசல், வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்)

மதுரையில் இருந்து (சீனா, கார்த்திகைப்பண்டியன் ஸ்ரீதர், தேவராஜ் விட்டலன், ஜெர்ரி)

ஈரோட்டில் இருந்து (ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி)

அமீரகத்தில் இரண்டு நண்பர்கள் (செந்தில்வேலன், நாகா)

கோவையில் இருந்து (லதானந்த், பழமைபேசி, சஞ்சய் காந்தி)

கரூரில் இருந்து (இளையகவி, முனைவர் இரா.குணசீலன்)

மற்றும் வாசகர்களும் எங்களுடன் பங்கேற்றனர்.

சுவையான விருந்து, அன்பான வரவேற்பு நெகிழ்ந்து போனோம். எங்களை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துப் போன பாங்கு என்ன. ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்ற பழமைபேசி அண்ணா மற்றும் சகோதரர் கதிர் உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு என்று தனி அறை. தேவைகள் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்கப் பட்டன. குறை ஒன்றும் இல்லை நண்பர்களே!

நாங்கள் ஊருக்கு திரும்பும் வரை எங்களை நல்ல முறையிலும் அக்கறையுடனும் கவனித்த உங்களின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.

எங்களை சென்னைக்கு திரும்ப ரயில் நிலையத்தில் கொண்டு விட்ட நண்பர் பெயர் தெரியவில்லை. அவருக்கும் எங்களது நன்றி.

எல்லாவற்றிகும் மேலாக நாங்கள் ஈரோடு செல்ல முதல் காரணமாக இருந்த சகோதரர் வானம்பாடி அவர்கள்தான். அண்ணன் வானம்பாடி அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் பல.

வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க. பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் இவை அனைத்தும் இந்த பதிவுலகத்தில்தான் கிடைக்கும்.

என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். ஆனால் பாருங்க நீங்கள் வராமல் போனது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அதையும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிக்க உதவிய தமிழ்மணம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!!

அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!

Monday, December 14, 2009

சமுதாயத்துக்கு ஒரு கேள்வி!!

சமுதாயம் என்பது நாமதானே! நம்மில் நான்கு பேர் சேர்ந்தால் அது சமுதாயம் சரிதானே நான் கூறுவது?

சில மாதங்களுக்கு முன் நான் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். வயது பதினைந்து இருக்கும் (அவள் பெயர் சரிதா என வைத்துக் கொள்வோம்). அவள் யாரிடமும் பேசமாட்டாள். ஆனால் நான் அந்த பெண்ணிடம் வலியப் போய் பேசுவேன். சரியா பதில் பேசமாட்டாள். என்ன சிகிச்சை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உடன் அந்தப் பெண்ணின் சித்தப்பா இருந்தார். அவரும் ஒரே ஒரு நாள்தான் இருந்தார். இரெண்டாம் நாளில் இருந்து அவரும் இல்லை. சித்தப்பா எங்கே போனார் என்று விசாரித்தேன். ஊருக்குப் போய் இருக்கிறார், வந்திடுவார் என்று நம்பிக்கையுடன் கூறினாள். அம்மா அப்பா இல்லையா என்று கேட்டேன், எல்லாரும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தாள். காலம் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.

காலக் கண்ணாடியில் அந்தப் பெண்ணின் சோகங்கள் ஏனோ தெரியவில்லை. மருத்துவர்கள் சரிதாவிற்கு அறுவை சிகிச்சை குறித்து அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதம் சரிதா அறியவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு விவரம் யாரும் தெரிவிக்கவில்லை.

அந்த நாளும் வந்தது. அதாவது சரிதாவின் அறுவை சிகிச்சைக்கு குறித்த நாள். மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து விட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும்படி கூறினார்கள். அப்போதுதான் அவளுடன் ஒருவரும் இல்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொண்டார்கள் மருத்துவர்கள் உட்பட.

தன்னுடன் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள். எனக்கு மிகவும் கஷ்டமா போச்சு. அனைவரும் சேர்ந்து சமாதனப் படுத்தினோம். அப்போ கூட கேட்டோம் என்ன அறுவை சிகிச்சை என்று, சரிதா கூற மறுத்து விட்டாள். விளங்காத விளக்கத்துடன் அறுவைசிகிச்சை முடிந்து வரும்வரை காத்திருந்தோம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு வேற அறைக்கு மாற்றி விட்டார்கள். அது என் அறையில் இருந்து ரெண்டு அறை தள்ளி இருந்தது. அதனால் எனக்கு சரிதாவிடம் பேச வசதியாக இருந்தது.

சரிதாவைப் பார்க்க ஒருவரும் வரவில்லை. மருத்துவமனையில் சரிதாவுடன் வார்டில் இருந்தவர்கள் மட்டுமே வருவதும் போவதுமாக இருந்தார்கள். கடைசியில் ஒரு நாள் சரிதா என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்..

சரிதாவுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை, ரெண்டு தம்பிகள். உடன் பிறப்புகளுடன் மிகவும் ஒத்துமையாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த சரிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இடி போல் இறங்கியது. அதை வெளிப்படுத்த தெரியாமலே சில மாதங்களை கடத்தி இருக்கிறாள். சக மாணவிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, தனது உடன்பிறந்தவர்களிடம் சரியாகப் பேசுவதில்லை. அவர்களே வந்து பேசினாலும் பதில் கூறுவதில்லை.

இன்னும் சில மாதங்கள் ஆனது பள்ளிக்குச் செல்வதை அறவே வெறுக்க ஆரம்பித்தாள். தோழிகள் வந்து பேசினால் கூட பதில் பேசுவது இல்லை. சரிதாவிற்குள் எப்பொழுதும் இல்லாத கூச்ச சுபாவம் ஒரு வியாதி போல் தொற்றிக் கொண்டுள்ளது.

அதை வெளியே காட்டாமல் அமைதியை ஒரு போர்வையாக்கி அதற்குள் ஒளிந்து கொண்டு சில மாதங்களை கடத்தி இருக்கிறாள்.அதுவரை சரிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வராத பெற்றோர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் சந்தேகம் வந்திருக்கிறது. பிறகு உக்கார வச்சி விசாரித்ததில் சரிதாவால் சரியானபடி விளக்கமளிக்க முடியவில்லையாம்.

பிறகு அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சரிதா தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்துள்ளாள். பெண்மைத் தன்மையில் இருந்து மாற்றங்கள் அவளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருக்கிறது. சரிதாவுக்கு புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆனதாம். புரிந்தபிறகு அவள் மனதில் பயமும், கூச்சமும் கோலோச்சி இருக்கிறது. பெற்றோர்களிடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று மனதிற்குள்ளேயே மருகி இருக்கிறாள். உடன் பிறந்தவர்களிடமும் எதையும் விளக்க முடியவில்லை. அவர்களும் சரிதா ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி கேட்டு அலுத்து விட்டார்களாம். இறுதியில் மருத்துவரால் சரிதாவின் நிலை உணர்த்தப் பட்டதுமருத்துவர் ஒரு மருத்துவமனை முகவரி கொடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

ஆனால் சரிதாவின் பெற்றோர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இதனால் அந்த பதினைந்தே வயது நிறைந்த பெண்ணின் மனதில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நிலையில் அந்த கொடுமையும் நிகழ்த்தி அதிலிருந்தும் காப்பாற்றப் பட்டிருக்கிறாள். இந்த நிகழ்விற்கு பிறகு மருத்துவர் கூறிய மருத்துவமனைக்கு செல்லாமல் வேற மருத்துவமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து நான் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிராகள். மருத்துவர்களும் பரிசோத்தித்து விட்டு அவர்களால் என்ன முடியுமோ அதை செய்வதாக கூறி இருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்ட சரிதாவின் பெற்றோர்கள் சரிதாவின் சித்தப்பாவை துணைக்கு வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். சித்தப்பாவும் அடுத்த நாள் கச்சிதமாக நழுவிவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் சரிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமான பிறகு

சரிதாவின் வீட்டிற்கு அனுப்ப பல முயற்சிகள் மேற்கொண்டனர். அனைத்தும் தோல்வியையே தழுவின. அவர்கள் கொடுத்த முகவரியும் தவறானது. சரிதாவிடம் பெற்ற முகவரியிலும் சரிதாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து கொண்டு புறப்பட்டு விட்டனர். எங்கே தேடுவது இது மருத்துவர்களின் முதல் கேள்வி. சரிதாவை என்ன செய்வது இது மருத்துவர்களின் இரெண்டாவது கேள்வி. இறுதியில் சரிதாவிடமே வேறு யாரவாது உறவினர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள்.சில முகவரிகள் சரிதாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றன. அங்கேயும் ஆட்களை அனுப்பி விசாரித்தார்கள். அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது, அவர்கள் பெண்ணை நாங்கள் எப்படி வைத்துக் கொள்வது? பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். மருத்துவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

எங்கே செல்கிறாய் என்ற மருத்துவர்கள் தன்னை நோக்கி கேட்ட கேள்விக்கு அவளின் அழுகைதான் பதிலாகக் மருத்துவர் கிடைக்கப் பெற்றார்கள்.

இந்த சூழ்நிலையில் மனதளவில் மிகவும் பாதித்த சரிதா எங்கே செல்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களும் அவர்களாலான உதவிகளை செய்து வந்தார்கள்.ஆனால் சரிதாவை எவ்வளவு நாட்கள்தான் மருத்துவமனையில் வைத்திருப்பது? அவர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். பிறகு சில தொண்டு நிறுவனத்திடம் பேசி சரிதாவை அங்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே செல்ல சரிதா மறுத்து விட்டாள். மிகவும் பயமாக இருக்கிறது. யார் எப்படி எல்லாம் என்னை கிண்டல் செய்வார்களோ என்று காரணமும் கூறி அழுதாள். ஆனாலும் அனைவரும் சமாதானப் படுத்தி அந்த தொண்டு நிறுவனத்தில் சேர்த்து விட்டார்கள். இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..

இப்போது பெற்றோர்களிடம் வருவோம்... பிறப்பில் குறை ஒன்றும் இல்லை. இடையிலே வந்த குறை. அந்த பதினைந்தே வயது நிரம்பிய பெண் என்ன பாவம் செய்தாள். எப்படி பெற்றோர்களே உங்களக்கு இது போல் செய்ய மனது வந்தது. சரிதாவின் பெற்றோர்கள் ஊரை விட்டே சென்று விட்டார்கள். அதுவும் மிகக் குறுகிய காலத்தில் ஊரை மாற்றுவது என்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. சரிதாவை மருத்தவனையில் சேர்த்த இடைப்பட்ட கால அவகாசத்தில் இடப் பெயர்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டுத்தான் அவர்கள் சரிதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இது சரிதாவின் உறவினர்கள் கூறிய விளக்கங்கள். எது உண்மையோ எது பொய்யோ தெரியாது, ஆனால் இவர்களின் செய்கையால் பாதிக்கப்பட்டு நிற்கும் அந்த பெண்ணிற்கு இவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?

சரிதா மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண்ணாம். ஒவ்வொரு தேர்விலும் சரிதா வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் 90க்கும் மேலே. மேலே படிக்க ஆசைப் படுகிறாள். இதுவும் அந்த பெண் செய்த தவறோ? ஏதோ குறை வந்துவிட்டது. அதற்கு அந்த அறியாப் பெண் எப்படி காரணமாவாள். நல்லா படிக்கற பெண்தானே அவளை அவளின் விருப்பம் போல் படிக்க வைத்திருக்கலாமே!

அவளின் கூச்சத்தை நல்ல கவுன்சிலிங் முறையில் போக்கி இருக்கலாமே!ஏன் செய்யவில்லை? சரிதாவிற்கு வந்த குறைக்கு அவளை எப்படி பெற்றவர்கள் தண்டிக்கலாம்?மற்ற குழந்தைகளை நல்ல முறையில்தானே அதுவும் நகரத்தில் மிக உயரிய பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால தற்சமயம் ஊரை விட்டே சென்று விட்டார்கள். இது எப்படி நியாயமாகும்? இதற்கு விடை தெரியாமல், அந்த தொண்டு நிறுவனத்திற்கு பெரிய நன்றி கூறிவிட்டு எங்களாலான உதவிகள் செய்து விட்டு, அவளின் கண்ணீரை தற்காலிகமாக துடைத்து விட்டு வந்தோம். நாங்கள் விடை பெறும் நேரம் நெருங்கும்போது சரிதாவின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மனம் கனத்து விட்டது....





Thursday, December 3, 2009

தேவதையில் நான்!!

மாதம் இருமுறை வெளிவரும் தேவதைகளுக்கான பத்திரிக்கைதான் தேவதை!!


வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!

ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!

தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!

அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.

ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!

சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!

வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.

தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.

தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!

எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.

தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!

தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)