Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, June 14, 2010

எனது ஹாஸ்டல் அனுபவம்!!

வேலைக்கு செல்லும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பல அனுபவங்களில் இதுவும் ஒன்று.

தினம் தினம் ஒரு அனுபவம்தான். விடிந்தால் ஒரு பிரச்சனை, விடிந்து முடிந்தால் ஒரு பிரச்சனை, இதில் சில தானே நிகழ்வது, சில நமக்கே தெரியாமல் நாம் காரணமாவது. நான் எப்போதும் இரெண்டாம் ரகம்தான். என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .

உண்மையை ஒத்துக் கொள்வதில் தனி தைரியம் வேண்டும் அல்லவா? ஹா ஹா என்ன செய்ய வால் நம்பர் ஒண்ணாக இருந்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் சகஜம் தானே? சரி வாங்க என்னான்னு பார்க்கலாம்!!

நான் இருவர் தங்கி இருக்கும் அறையில் இருந்தேன். என்னுடன் இருந்த அக்கா ரொம்ப பெரியவங்க. அவங்க டீச்சரா இருந்தாங்க. எனக்கு காலை ஷிப்ட். ஏழு மணிக்கு போயிட்டு மாலை ஐந்து மணிக்கு ஷிப்ட் முடியும். மாலையில் சில சமயம் ஐந்து மணிக்கு வந்து விடுவேன். பல சமயம் அறைக்கு வர ரொம்ப நேரம் ஆகும். அன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டேன். அங்கே எனது விடுதியில் புதுசா சேர்ந்திருந்த சுந்தரி மிகவும் சோகமாக உக்காந்திருந்தாள். இதுதான் வில்லங்கத்திற்கு ஆரம்பம் என்று எனக்கு அப்போ தெரியாமல் போய் விட்டது.

உள்ளே நுழையும்போதே இந்த காட்சியை கவனித்து விட்டேன். இருந்தாலும் பசி என்ற அரக்கன் என்னை மிகவும் மோசமான நிலையில் தாக்கியதால் வேகம் வேகமாக டீ குடித்துவிட்டு சுந்தரியின் அருகே அமர்ந்தேன்..

"என்ன ஆச்சுங்க சுந்தரி? புதுசா வந்திருக்கீங்கல்லே! ஹாஸ்டல் வசதியா இருக்கா? சாப்பாடு நல்லா இருக்கா? " (என்ன கேள்வி சட்டுன்னு விஷயத்திற்கு வருமாறு மனது சொல்கின்றது!)

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ரம்யா, என்னோட ரூம்லே ஒரே கட்டில் தான் இருக்கு. இன்னொரு கட்டில் வர ஒரு வாரமோ இல்லை பத்து நாளோ ஆகுமாம்"...

"சரி அதுக்கு என்ன இப்போ?".

"ரூமுலே ரெண்டு பேரு தங்கி இருக்கோம்"
"சரிப்பா யாரவது ஒருத்தர் கட்டில்லே படுத்துக்கோங்க, அடுத்தவங்க கீழே படுத்துக்கோங்க, என்னப்பா இன்னும் பத்து நாள் தானே சமாளிக்க மாட்டீங்களா?"

"இதெல்லாம் பிரச்சனை இல்லே! என்னோட அறையிலே இருக்கிற கவிதா நான் ஒருத்தி இருக்கிறதை சட்டையே பண்ணாம அவ பாட்டுக்கு நேத்து ராத்திரி கட்டில் நிறைஞ்சு படுத்து தூங்கிட்டா. அதை நினைச்சாதான் ஒரே கோவமா வருது ரம்யா" என்றாள் அழமாட்டாத குறையாக.

"ஐயோ! அப்படியா செஞ்சா கவிதா? எனக்கு அவளை பத்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும் உன் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு தூங்கி இருக்கலாம்" (எண்ணையை ஊத்திட்டோமோ? அப்படிதான் தெரியுது:))

"இன்னைக்கு என்ன பண்ண போறேன்னா, எனக்கும் கட்டில்லே கொஞ்சம் இடம் குடுன்னு கேக்கப் போறேன். நானும்தானே பணம் கட்டறேன். அவ மட்டும் என்ன ஜமீனா?" என்று சொல்லும் போதே கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.

"நேரம் ஆச்சு நான் வரேன்" என்று கிளம்பி போய்ட்டாங்க சுந்தரி.

இது என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தாலும் அடுத்த என்னோட வேலைகளில் கவனம் செலுத்தியதால் (வேறு என்னா சாப்பாடுதான்) சுந்தரியை அப்படியே மறந்து போனேன்.

அடுத்த நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அன்று சுந்தரி என்னோட அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாகிப் போனது. ஏனெனில் வேலம்மாக்கா ஒருவரிடமும் பேச மாட்டாங்க. இந்தப் பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவுடன் புரியாத புதிரானேன். டீ கோப்பையுடன் மெதுவாக சுந்தரியின் அருகே அமர்ந்தேன், மனதில் ஒரே பரபரப்பு. என்னாவா இருக்கும்? மறுபடியம் ஏதாவது பிரிச்சனையா என்று அறிவதில் ஆர்வம் அதிகமானது.

ஆனால் என்னோட அறையில் இருந்த வேலம்மாக்கா என்னைப் பார்த்து முறைத்தார்கள். நான் அதை கண்டு கொள்ளாமல் சுந்தரியின் அருகே அமர்ந்து... "என்னாச்சு பா?" என்றேன்.

"உன் கிட்டே சொன்ன மாதிரி எனக்கும் கட்டில்லே படுக்க உரிமை இருக்கு, மரியாதையா எனக்கு கொஞ்சம் இடம் விட்டு படுத்துக்கோன்னு சொன்னேன். அவளும் தள்ளி படுத்துகிட்டா. ஆனா பாதி ராத்திரி வேணும்னே என்னை உதைச்சி கீழே தள்ளிட்டா! இடுப்பிலே நல்ல அடி" என்று அழ ஆரம்பித்தாள் சுந்தரி.

"ஹையோ இதென்னா கூத்தா இருக்கு! ஆனாலும் கவிதா ரொம்ப மோசம்பா" கிளம்பும்போது என்னால் இயன்ற ஒரு சின்ன ஐடியா சொல்லி அனுப்பினேன். அதாவது ஒரே கட்டிலில் இருவரும் தலை கீழாகப் படுத்துக் கொள்ளுங்கள். அப்போது இடம் அதிகமா கிடைக்கும் என்றேன். அதற்கு சுந்தரியும் வேகமாக தலையை ஆட்டிவிட்டு சென்றார்கள். மறுபடியும் வேலம்மாக்கா என்னை பார்த்து முறைத்தார்கள்"

"சும்மாவே இருக்காமாட்டியா ரம்யா வீண் வம்பை விலை கொடுத்து வாங்குற? இதெல்லாம் நல்லதுக்கே இல்லேன்னு திட்டினாங்க"

அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

மெதுவா என் அறைக்கு செல்ல முயன்றபோது வார்டன் அறையின் முன்னால் ஒரே சத்தம். அனைவரும் வார்டன் ரூம் வாசலில் குழுமி இருந்தார்கள். கவிதா உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள். சுந்தரியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் கத்தியதால் விஷயம் தெரியாதவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குதான் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. நான் கொடுத்த ஐடியாவினால்தான் இப்படி ஆகிவிட்டது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டதாக வேலம்மாக்கா என்னிடம் கூறினார்கள். படுபாவி இன்னும் யார் யாரிடம் சொல்லி இருப்பாளோ என்று மனதில் பயம் வேறு...

மெதுவாக கூட்டம் இருக்கும் திசையில் செல்லாமல் அறையினுள்ளே அடைந்து விட்டேன். எல்லாம் முடிந்து வேலம்மாக்கா வந்தார்கள்.

"என்னாம்மா இப்படி ஒரு ஐடியா கொடுத்திட்டு போயிட்டே??"

"ஐடியா கொடுக்கத்தான் முடியும், கவிதாவை அடிக்கவா முடியும் போங்கக்கா"

"உனக்கு கொழுப்பு ஜாஸ்த்தி ஏன் வீணா இதுலே எல்லாம் தலையிடரே ஒழுங்கா உன்னோட வேலை உண்டு நீ உண்டுன்னு இருக்க மாட்டியா" இது வேலம்மாக்காவின் தரப்பு நியாயம்.

மெதுவா போய் கூட்டத்தில் கலந்து கொண்டு இருவரையும் நோட்டம் விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. ரெண்டு பேரு முகமும் வீங்கிப் போயிருந்தது எனக்கு ரொம்ப பயமா போச்சு. இந்த சண்டைக்கும், இந்த செயலுக்கும் காரணம் யாரு என்று நைசா விசாரித்தேன். காரணம் யாருக்கும் தெரியாது என்று கூறினார்கள். பிறகுதான் உயிர் வந்தது. தைரியமா சுந்தரியை என் அறைக்கு வரவழைத்து விவரம் அறிந்தேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது தங்கி இருக்கும் அறையை காலி செய்து விட்டு வேறே அறைக்கு செல்லுமாறு ஐடியா கொடுத்தேன். அதன்படி மறுபடியும் வார்டனிடம் தனக்கு வேறே அறை கேட்டு இருக்கிறாள் சுந்தரி. இப்போது அறை எதுவும் காலியாக இல்லை இரு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த செய்தி மாலை என் காதுகளுக்கு எட்டியது. இரண்டு நாட்கள் முன்பு நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு பெண் காலி செய்துவிட்டு சென்று விட்டதால் அங்கு ஒரு பெட் காலியாக இருப்பது எனக்கு தெரியும். அதனால்தான் அப்படி ஒரு ஐடியா சுந்தரிக்கு கொடுத்தேன். ஆனால் ஏன் வார்டன் அப்படி கூறினார்கள் என்று புரியவில்லை. அந்த விவரத்தையும் சுந்தரியின் காதில் போட்டு வைத்தேன். ஏனெனில் கவிதா சரியான ராங்கிக்காரின்னு இன்னொரு தோழியும் என்னிடம் கூறியதால் சுந்தரியை காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக என் மனது கூறியது(இதெல்லாம் கொஞ்சம் ஓவரா ஸீன் போடறதா நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது:-)).

இந்த வெவரம் தெரிந்தவுடன் சுந்தரிக்கு மிகவும் கோவம் வந்து, அதே வேகத்துடன் வார்டன் அறைக்கு விரைந்து சென்றாள். அங்கே கவிதா தனக்கு வேறே அறை கொடுக்குமாறு விவாதம் செய்து கொண்டிருந்திருக்கிறாள், இல்லாதையும் பொல்லாததையும் வார்டனிடம் சுந்தரியை பத்தி கவிதா போட்டு கொடுத்ததை காதில் வாங்கிய சுந்தரி, அழுகையுடன் எனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த நேரத்தில் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. கவிதா அறையை காலி செய்து விட்டால் சுந்தரிக்கு பிரச்சனை இல்லை என்று முடிவெடுத்து அதை உடனே அவளிடம் கூறாமல் அமைதியாக ஒரு நாளை கடத்து ஆறப்போட்டு பிறகு யோசிப்போம் என்று கூறி சுந்தரியை அனுப்பி வைத்தேன் (இப்போதைக்கு சுந்தரிக்கு நான்தான் லீகல் அட்வைசர்.. காலத்தின் கொடுமையை பார்த்தீங்களா?).

பிறகுதான் தெரிய வந்தது, கவிதாவும், சுந்தரியும் சண்டை போடுவாங்கன்னு நாலு பேர் ரூமிலே இருக்கறவங்க பயப்பட்டதால், வார்டன் இவர்களை தவிர்த்து விட்டதாக ஒரு செய்தி எனது காதுகளுக்கு எட்டியது. தெரிந்தும் நானும் பேசாமல் இருந்து விட்டேன். எந்த தரப்பிலும் எந்த மாறுதல்கள் இல்லாததால் சுந்தரி வேறே ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.

இப்படி தினம் தினம் பல அனுபவங்களுடன் கடத்திய நாட்களை இப்போது அசை போட்டாலும், சில அனுபவங்கள் மனத்திற்கு கஷ்டமாக இருந்தாலும் பல அனுபவங்கள் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கும்.

நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நம்மை விட்டு வெகு தூரத்தில் விலகி நிற்கும்....

ரம்யா...

Monday, December 21, 2009

டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு!!


டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு அபாரமான முறையில் நடந்தேறியது!!




அனைவரையும் நேரில் சந்தித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியையும் கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகா. வருகை தந்தவர்கள் அனைவரும் முன்பே பழகியது போன்று தோன்றியதே அன்றி புதியவர்கள் என்ற எண்ணம் மனதில் எள்ளலவும் ஏற்படவில்லை.

எல்லாரும் ஒரே மாதிரி அன்பாகப் பேசினார்கள், அறிமுகப் படுத்திய விதமும் அருமை.

நிகழ்ச்சியை பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தொகுத்து வழங்கிய விதமும் அபாரம்.

நண்பர் கதிரின் பணி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்திருக்கிறார். நல்லதொரு ஆரம்பம் இவ்விழா என்று கூறலாம்.

சகோதரர் பழமைபேசி அவர்கள் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை.

வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களும் அருமையாக பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்.

சகோதரி சும்ஜலா வலைப்பூவை ஜொலிக்க செய்ய பல நுணுக்கங்களையும் தனது உறையில் தெரிவித்தார்.அந்த விஷயங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஈரோட்டு நண்பர்கள் ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி இவர்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்து அமரச்செய்து, என்னையும் உறையாற்றச் சொன்னார்கள். மிக்க நன்றி மக்கா!

சென்னையில் இருந்து (கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, வானம்பாடி)

திருப்பூரில் இருந்து (பரிசல், வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்)

மதுரையில் இருந்து (சீனா, கார்த்திகைப்பண்டியன் ஸ்ரீதர், தேவராஜ் விட்டலன், ஜெர்ரி)

ஈரோட்டில் இருந்து (ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி)

அமீரகத்தில் இரண்டு நண்பர்கள் (செந்தில்வேலன், நாகா)

கோவையில் இருந்து (லதானந்த், பழமைபேசி, சஞ்சய் காந்தி)

கரூரில் இருந்து (இளையகவி, முனைவர் இரா.குணசீலன்)

மற்றும் வாசகர்களும் எங்களுடன் பங்கேற்றனர்.

சுவையான விருந்து, அன்பான வரவேற்பு நெகிழ்ந்து போனோம். எங்களை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துப் போன பாங்கு என்ன. ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்ற பழமைபேசி அண்ணா மற்றும் சகோதரர் கதிர் உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு என்று தனி அறை. தேவைகள் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்கப் பட்டன. குறை ஒன்றும் இல்லை நண்பர்களே!

நாங்கள் ஊருக்கு திரும்பும் வரை எங்களை நல்ல முறையிலும் அக்கறையுடனும் கவனித்த உங்களின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.

எங்களை சென்னைக்கு திரும்ப ரயில் நிலையத்தில் கொண்டு விட்ட நண்பர் பெயர் தெரியவில்லை. அவருக்கும் எங்களது நன்றி.

எல்லாவற்றிகும் மேலாக நாங்கள் ஈரோடு செல்ல முதல் காரணமாக இருந்த சகோதரர் வானம்பாடி அவர்கள்தான். அண்ணன் வானம்பாடி அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் பல.

வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க. பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் இவை அனைத்தும் இந்த பதிவுலகத்தில்தான் கிடைக்கும்.

என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். ஆனால் பாருங்க நீங்கள் வராமல் போனது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அதையும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிக்க உதவிய தமிழ்மணம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!!

அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!

Thursday, December 3, 2009

தேவதையில் நான்!!

மாதம் இருமுறை வெளிவரும் தேவதைகளுக்கான பத்திரிக்கைதான் தேவதை!!


வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!

ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!

தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!

அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.

ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!

சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!

வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.

தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.

தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!

எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.

தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!

தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)



Thursday, August 20, 2009

நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு!!

நானும் நாகராஜனும்!!

ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன்.

அங்கேயே கெஸ்ட் ஹவுஸ். அதுலே எனக்கு சூப்பர் A.C. வசதியுடன் கூடிய ரூம் கொடுத்தாங்க. ரூமிலே கம்ப்யூட்டர். தெரிந்த மிக உயர்ந்த உறவு அப்போது அந்த கம்ப்யூட்டர்தான். அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் முன்னேதான் அமர்ந்திருப்பேன். அதுக்காக கேம்ஸ் விளையாடுவேன் என்று நினைக்காதீங்க. அப்படி வேலை செய்வேனாக்கும். இதுலே நாகராஜன் எங்கே இருந்து வந்தான் என்று யோசிக்கிறீங்களா? இருங்க விரிவா சொல்றேன்!

அந்த கெஸ்ட் ஹவுஸ்லே நிறைய பூக்கள் கிடைக்கும். பின்னால் அழகான நந்தவனம் இருக்கும். அந்த நந்தவனத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். செம்பருத்தி மரங்களின் கிளைகளை வளைத்து ஆர்ச் மாதிரி எல்லாம் நுழைவாயிலில் கட்டி இருப்பார்கள். அதில் செருகி வைத்தாற்போல் செம்பருத்தி பூக்கள் பூத்து குலுங்கும். நான் தினமும் அந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி எனது அறையில் உள்ள படங்களுக்கு போடுவேன்.

நந்தவனம் பக்கத்தில் IAS குவார்ட்டர்ஸ் இருக்கிறது. அங்கே பத்து பதினைந்து ரூம்கள் இருக்கிறது. வெளியே இருந்து வரும் கலெக்டர்கள் அங்கேதான் தங்குவார்கள்.

மாவட்டச் ஆட்சியாளர்கள் எந்தவித வித்தியாசம் இன்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். அவங்களை எல்லாம் உணவு அருந்தும் சமயம் சந்திக்க நேரிடும். அதனால் அங்கே வரும் அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். சரி, நம்ம கதைக்கு வருவோம்!!

ஒரு நாள் விடிந்தும் விடியாத காலை நேரம். நிறைய பூக்கள் பூத்திருந்தன வழக்கத்தைவிட மிக ஆர்வத்துடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். மேலே எட்டிபிடித்தும் குதித்தும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். பூக்களை பிடித்து இழுக்கையில் ஆர்ச் மாதிரி வைத்திருந்த செம்பருத்தி மரம் அழகாக வளைந்து கொடுப்பது சுவாரசியமாக இருக்க அதி வேகத்துடன் குதித்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது கழுத்தில் ஏதோ கணமாக விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியல. வினாடிக்கும் குறைந்த நேரத்தில் விழுந்தது நெளிய ஆரம்பித்தது. கழுத்தில் சத சத என்று ஈரம். கயறு என்று எடுத்துப் போட கையை வைத்தேன். வழ வழவென்று இருந்தது. அதனால் சந்தேகம் மனதில் ஒரு சிறு மின்னல் போல் தோன்றியது. இடது ஓரக்கண்ணால் என்னால் காண முடிந்தது! "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். எனது வலது புறம் அன்னாரின் வால் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு ஒரு மாவட்ட ஆட்சியாளர் வெளியே வந்திருக்கிறார். கணப்பொழுதில் என் நிலை கண்டு பதறிப் போயிருக்கிறார். எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. மனதில் எண்ணங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. ஆஹா, நாளைக்கு நமக்கு பால் ஊத்துவது இப்பவே கண்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே! இவ்வளவு சின்ன வயதிலேயா! இதுலே போயி வயது என்ன கணக்கு? இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அது சர்வ நிச்சயம்!

பயத்திலே இயந்திரம் இல்லாமலே கை கால்கள் டைப் அடிக்க, எனது உதறல்கள் கழுத்திலே இருந்தவருக்கு புரியல போல. புரிந்திருந்தால் அன்னைக்கே போட்டு தள்ளி இருப்பாரு. இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!


இந்த விபரங்களை எழுதும்போதுதான் இவ்வளவு நேரம், களத்தில் நான் யோசித்து எடுத்த முடிவோ வினாடிக்கும் குறைவானதுதான். அப்போதுதான் நமது மூளை எவ்வளவு விரைவாக வேலை செய்கிறது என்பதை (பல முறை உணர்ந்ததுண்டு) மறுபடியும் உணரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

வாலைப் பிடித்து இழுக்கலாம்! என்ன நடக்கும்? கழுத்துலே போட்டுடுவார்! அதான் எனது இடதுபுறமாக அந்த நல்லவரை சடுதியில் இழுத்து தூக்கி எறிந்தேன். சுருண்டு போயி மணலில் விழுந்தார். விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். அடுத்து அரை நொடியில் என்னைச் சுற்றி சிறு சல சலப்புடன் கூடிய கும்பல். அங்கே தங்கி இருந்தவர்கள் மற்றும் வேலையாட்கள் அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டனர்.

எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்). அங்கே குவார்டர்ஸ்லே தங்கி இருந்த எனது நண்பிக்கு விஷயம் காற்றோடு செல்ல கணவர் சகிதமாக ஓடி வந்துவிட்டார். நானோ பேசும் நிலையில் இல்லை. வேறே என்ன நடந்ததை ஜீரணிக்க முடியாமல் பயத்துலே பேச்சு போச்சில்லே. உடல் முழுவதும் ஒரே நடுக்கம். கால்கள் பின்னி நடக்க முடியல! ஒரு வழியா எனது அறைக்கு வந்து செட்டில் ஆனேன்.

இந்த விஷயம் அதே காற்றோடு எனது அக்காவிற்கு செல்ல அடுத்த நாள் காலையில் அக்கா விஜயம்.

சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!!

Friday, June 12, 2009

கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !!


கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம்.

அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா?

வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.

கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு
உக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்! அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.

சரி மேலே சொல்லு அப்படின்னு ஒரே சுவாரசியமா கேட்க ஆரம்பிச்சிட்டோம். இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். என்ன செய்ய! உடம்பு பூரா ஒரே கொழுப்பு அப்போ. இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன்.

தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. ரொம்ப தைரியசாலிதான் போங்க. என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்!

அப்படிதான் அன்னைக்கும் நட்ட நடுவிலே உக்காந்து உம் கொட்ட கூட பயந்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு இரவின் லேசான குளிரிலும் எனக்கு ரொம்ப வியர்த்துப் போச்சு. நீங்களும் அந்த கதையை கேளுங்க கொஞ்சம். என்னை திட்டாதீங்க!

நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க.

என்ன அட்டகாசம் செய்யறாங்கன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே இல்லே, நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும், நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு சொன்னாங்க. ரொம்ப பழக்கப் பட்ட மாதிரி பேசினாங்க. எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய்டுச்சு. ஏன்னா, அப்போ மணி பன்னிரெண்டரை. என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு தோழி சத்தம் போடாதேன்னு எனது வாயை பொத்தினாள். அதையும் மீறி நான் அழ ஆரம்பிக்க! அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு.

அவ்வளவுதான்! எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்டுச்சு!! ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்". இன்னொரு தோழி நாம் இங்கே இருக்கிறது நல்லது இல்லே, அவங்க அவங்க ரூமிற்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க.

ஆனால் நான் போகமாட்டேன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். தனியா ரூம்லே படுக்க பயம்.

சரி போய் உன்னோட தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்திடு. அதுவரை நாங்க எல்லாம் இங்கேயே நிக்கறோம்னு சொன்னாங்க.

நானும் சரின்னு மெதுவா ரொம்ப மெதுவா "இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க" ன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி அடிபிரதச்சனம் பண்ணி என்னோட ரூமை அடைந்தேன். விளக்கை போட பயம். மெதுவா தண்ணி பாட்டில் எடுத்து தண்ணீர் குடிச்சேன். தண்ணீரை குடிச்சிட்டு நேரா இருந்த ஜன்னலை பார்த்தேன். சரி அதையும் மூடி விடலாம்னு நினைச்சி ஜன்னல் கிட்டே போனேன். அவ்வளவுதான், அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான்!! கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். அதுக்குள்ளே எங்க வார்டன் எழுந்திட்டாங்க. லைட் போட்டாங்க.

நான் பயத்திலே வெளியே ஓடி வந்திட்டேன். கத்திகிட்டே ஓடி வந்தேனா! வந்த வேகத்திலே கீழே விழுந்துட்டேன். அதுக்குள்ளே வார்டன் கதவைத் திறந்து நான் விழுந்த இடத்திற்கு வந்திட்டாங்க.

"என்னாடி இங்கே வந்து கிடக்கறே? எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம்? படிக்காதீங்க! எப்போ பார்த்தாலும் கூட்டமா உக்காந்துகிட்டு ரந்து பண்ணுங்க. உங்களை எல்லாம் நிக்க வச்சி தோலை உரிக்கனும்னு" திட்டினாங்க. நான் அழுகையை நிறுத்தலை. அழுதுகிட்டே இருந்தேன்.

"சரி சொல்லித் தொலை ஏன் அழறே என்ன நடந்தது?"

அவங்களுக்கு எப்பவுமே என் மீது கொஞ்சம் அன்பு உண்டு. ஏன்னா பத்து தேதிகுள்ளே கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்க்கச் சொல்லுவாங்க. மெஸ் கூட அவங்கதான் பார்ப்பாங்க. அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். அதனால் நான் பண்ற தப்பை கண்டிப்பாங்க, ரொம்ப திட்ட மாட்டாங்க. அப்புறமா நான் நடந்ததை சொன்னேன். சரின்னு அவங்களும் என்னோட அறைக்கு வந்து ஜன்னல் வழியா பார்த்தாங்க. ஒண்ணுமே அப்போது தெரியலை. நான் என்ன சொல்லியும் அவங்க என்னை நம்ப தயாரா இல்லே.

சலங்கை சத்தம் பற்றி கூட சொன்னேன். அதையும் அவங்க நம்பலை. ஆனா பாருங்க வார்டன் கிட்டே சொல்லும் போது சலங்கை சத்தமும் கேட்கலை, அங்கே அமர்ந்திருந்த என்னோட தோழிகள் ஒருவரையும் காணலை.

அதனால் வார்டன் "சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரமா கட்டறேன்னு" கருவிகிட்டாங்க. ஆனா ஒருத்தி கூட நான் என்ன ஆனேன்னு வெளியே வந்து பார்க்கலை. எனக்கும் எல்லார் மேலேயும் ஒரே கோவமா வந்தது.

வார்டன் ரூமிலேயே படுத்துக்கறதா முடிவெடுத்தப் பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. ஆனாலும் அந்த ஜன்னல் காட்சி மனதை நெருடிக் கொண்டிருந்தது. அதையே மறுபடியும் அசைப் போட்டுக் கொண்டே தூங்கப் போனேன்னு நினைக்கின்றேன். திடீர்ன்னு பேய் பேய்ன்னு தூக்கத்திலே கத்த.. வார்டன் என்னை அடிச்சு எழுப்ப... ஒரே அமர்க்களம் ஆகிவிட்டது. எழுந்து உக்காந்துகிட்டே இருந்தேன். வார்டன் மறுபடியும் தூங்கிட்டாங்க.

இப்படியே விடிஞ்சிடுச்சு. என்னோட அறைக்குப் போனவுடன் முதல் காரியம் என்னோட ஜன்னலைப் பார்த்தேன். யாருமே அங்கே இல்லே. காலையிலே ஆறு மணிக்கு பேய் போய்டும்னு நினைச்சிகிட்டு வரப் போகும் இருட்டிற்கு பயந்தவாறு கல்லூரிக்குப் போனேன். என்னோட தோழிகள் ஒருவருடனும் நான் பேசவில்லை. என்னை அநியாயத்திற்கு கழட்டி விட்டுட்டாங்கன்னு அவங்க மேலே கோவம்.

கல்லூரிக்கு போகுமுன் எல்லாரும் ஒரு இடத்திலே சேர்ந்து கொஞ்ச நேரம் இருப்போம். அப்புறமாதான் கல்லூரிக்குள்ளே போவோம். ஆனா அன்னைக்கி நான் அந்த இடத்துலே நிக்காமல் அவங்களை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் அவங்களையும் தாண்டிப் கல்லூரிக்குள்ளே போயிட்டேன். என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க.

சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க. அடி பாவிங்களா, நான் ஒண்ணுமே சொல்லலை, என்னை நம்புங்கடின்னு சொல்லியும் கேட்கலை.

எல்லாமே எங்க தோழிங்களோட செட்டப்புன்னு ஒரு தோழி எனக்கு உணமையானவளா உண்மையை ஒத்துகிட்டா. என்னோட பயம் அவங்களுக்கு தெரிந்ததாலே என்னை போட்டு பயமுறித்தி தாளிச்சிட்டாங்க.

அவங்களோட மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர கொஞ்ச நாட்கள் ஆனது. அப்புறம் என்ன? மறுபடியும் சேர்ந்து உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டோமில்லே!

டிஸ்கி: இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. இதைப் படிக்கும் எனது கல்லூரி தோழிகளே! என்னை திட்டாதீங்க. இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.

டேக் இட் ஈசிம்மா!!



Tuesday, April 28, 2009

கல்லூரி கலாட்டாக்களின் நடுவே ஒரு சுற்றுலா!!

கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!

நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .

தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன். ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் .

அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.

உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! கல்லூரி இறுதி ஆண்டு. அந்த இறுதி ஆண்டு முடிவதற்குள், வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை. கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.

எல்லாரும் சேர்ந்து கேரளா டூர் போனோம். கேரளாவில் ஒரு தோழியின் வீடு உள்ளது. அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள்.

அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். ரொம்ப நல்ல முடிவுதான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது. தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன். கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம். சினிமா காட்சி தோற்றுப் போய்விட்டது போங்க.


ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.

ஏற்கனவே தனது கழுத்தில், கையில், காதுகளில் இருந்து பறிகொடுத்த தோழிகள் திரு திரு என்று சத்தம் போடாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் கை கழுவ போய் இருந்ததால் விளக்கை அணைக்கவில்லை. எங்களைப் பார்த்தவுடன் எனது தோழிக்கு கண்களில் ஒரு பிரகாசம். எப்படியும் நான் காப்பாற்றி விடுவேன் என்று. நான் எங்கே காப்பாற்றுவது! நானே கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைத்தால் திருடன் என் பக்கம் திரும்பி விடுவானோன்னு ஒரே பயம்.


ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள், விளக்கும் போட்டார்கள், ஆனால் ஒருவரும் அருகே வரவில்லை.

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான். அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன். எனது தோழிகள் இருந்த இடம் தெரிய வில்லை.

ஆனாலும் பிடியை தளர்த்த வில்லை.உள்ளூர ஒரே பயம்! ஆனாலும் அசட்டு தைரியம்தான். எங்களோட போராட்டத்தை பார்த்து இரெண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். கட்டுவதற்கு கயறு இல்லை. ஒரு இளைஞன் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அருகில் ஒருவர் தலையில் துண்டு கட்டி இருந்தார், அதை கேட்டால் தர மறுத்தார். நான் அந்த துண்டை உருவச்சொல்லி அந்த துண்டை வைத்து திருடனின் கைகளை கட்டுமாறு கூறினேன். ஒரு இளைஞன் நான் கூறியதுபோல் செய்தான், மற்றொரு இளைஞனை ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்கச் செய்தனர் என் தோழிகள். ரயிலு நின்னுடுச்சு. உடனே முக்கியமான நிர்வாகிகள், எங்க TTR எல்லாரும் எங்க இடத்துக்கு வந்துட்டாங்க.

ஒரு ஊரு வந்தவுடன் அங்கே அந்த திருடனை இறக்கி, எங்களையும் ரயில்லே இருக்கற போலீஸ்காரங்க போலீஸ் ஸ்டேஷன் வரை வரச்சொன்னாங்க. எனக்கு ஒரே பயமா போச்சு. ஏன்னா வீட்டுக்கு தெரியாம டூர் வந்திருக்கேன் அது முதல் பயம்! அப்புறமா போலீஸ் என்றால் அதைவிட ரொம்ப பயம். நான் எல்லாம் வரமாட்டேன் என்று அடம் பிடிச்சேன்.

அப்புறமா எல்லாரும் தைரியம் கூறி அனுப்பிவைத்தார்கள். ஆனால் திருடனோட கண்ணில் கட்டி இருக்கும் துணியை கழட்ட கூடாது. கழட்டினால் அவன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அப்புறம் வந்து கத்தியாலே குத்தி விடுவான் என்று ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரு சரி என்றார்.

ஸ்டேஷன் போய் எனது தோழிகளின் நகைகளை கேட்டோம். போலீஸ்காரங்க தரமாட்டோம், அவன் பையிலே நிறைய நகைகள் இருக்கு.

அதுனாலே நீங்க அப்புறமா சொல்லி அனுப்பறோம், அடையாளம் சொல்லி வாங்கி செல்லுங்கள் என்றார்கள். நாங்களும் உடனே கிளம்பிட்டோம்.

மறுபடியும் கல்லூரியில் சகஜமான வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு திகிலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தோம்.

இரெண்டு மாதங்கள் கழித்து ஒரு அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அழைப்பு எனது பெயருக்கு தான் வந்தது. எனக்கு ஒரே பயம், எனது தோழிகள் தைரியம் கூறி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

நிறைய பெரியவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, முக்கியமான பெரியவங்க பக்கத்துலே உக்கார்ற பாக்கியம் கிடைச்சுது. எல்லாரும் எங்களையே பாக்கறமாதிரி ஒரு உணர்ச்சி. வெக்கம் வெக்கமா இருந்திச்சு.

நல்ல முறையில் வேலை செய்த போலீஸ்காரங்க, பல துறையில் வேலை செய்தவங்க, நேர்மையான முறையில் பல லட்சங்களை தனது ஆட்டோவில் வைத்து சென்ற பணத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர், இப்படி பலர். அவர்களின் நடுவே நாங்களும் ஏன் என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.

ஆனால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அக்கா என்னை பேச அழைத்தார்கள். நான் பேச மாட்டேன் என்று மறுப்பு சொல்ல எனக்கு உரிமை வழங்க வில்லை. கால்கள், கைகள் தந்தி அடிக்க மைக் முன்னால் போய் நின்றேன். நான் போய் வீர மங்கையாம். நான் சொல்லலை, அவங்க சொன்னாங்க. ஏதோ உளறி கொட்டி கிளறி மூடிட்டு வந்துட்டேன். இந்த விஷயம் சும்மா இருக்குமா? வெளியே சத்தமில்லாமல் சுத்தமாக எங்க வீட்டுக்கு தெரிந்து விட்டது. எங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய?? நாளிதல்லே படிக்கும் பொண்ணோட போட்டோ வந்ததுன்னா சும்மாவா??

இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!

இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!





Wednesday, April 1, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!


முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!

பாகம் II
==========

ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம். வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க. வேடிக்கை பாத்துட்டு எங்க ரூம்க்கு போனோம். என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன். இப்போ தொடருவோம் சரியா ??

சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அக்கா கூறினார்கள், நாங்களே இன்னும் ரூமை பார்க்கவில்லை, இருங்க குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கின்றேன் என்றார்கள்.


நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன். அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு இங்கே எதுக்கும்மா Fan?? அதெல்லாம் இங்கே தேவையே இல்லை என்றார். என்னை ஏன் அவர் அப்படி பார்த்தார் என்று புரியவில்லை. அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன். அதற்கு மேல் Fan வேறே கேட்டதால் அந்த மேலாளர் என்னை ஒரு மாதிரிப் பார்த்திருக்காரு.


அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு. ஏனென்றால் ஒருவரும் எனக்கு சப்போர்ட்டா பேசவில்லை. அதான் அதுக்கு மேலே நான் வாயை திறக்கவே இல்லை.


எல்லாரும் படுத்துட்டாங்க. ஆனா எனக்குதான் தூக்கமே வரலை. மொத்தம் ஐந்து பெட், எல்லாம் டபுள் காட். எனக்கு என்று நான் பிடித்த இடம் கடைசி கட்டில். அதில் நானும் என் நெருங்கிய தோழியும் படுத்திருந்தோம். அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா. என்னையை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு, நானும் எப்பவுமே அவளை கிண்டல் பண்ண மாட்டேன். மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன். நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.


அதே போல் அன்றும் கடைசியா தான் நான் படுத்துக் கொண்டு இருந்தேன். இடம் மாற்றம் எனக்கு எப்பவும் தூக்கம் வராது. இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி. என்ன செய்ய?? எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.


நான் மட்டும் விழித்திருந்தேன். இப்போதுதான்விழித்திரு, தனித்திரு என்ற சொற்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.
திடீரென்று ஏதோ சத்தம். என்னவென்று லைட் போட்டு பார்த்தேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள். இருவரில் ஒரு பையன் கீழே கிடந்தான். ஒருவன் மற்றொருவனை எட்டி உதைத்ததால் ஏற்பட்ட குழப்பம்.


ஆனால் உதைத்தவனோ ஒரு கேள்விக் குறியாக படுத்திருந்தான். கட்டிலில் இடமே இல்லை மற்றொருவனுக்கு. அவ்வளவு ஆக்கிரமிப்பு அவனை அடித்து எழுப்பி கீழே கிடந்தவனை கட்டிலில் படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டோம்.

ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று அனைவரும் தூங்கி விட்டார்கள். மறுபடியும் எனக்குள் ஒரே போராட்டம். தூக்கம் வரலை.

ஜன்னல்கள் மூடி இருந்ததாலே காற்றோட்டமே இல்லாதது போலவும், மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு. அதனால் ஜன்னலை திறந்தேன் அவ்வளவுதான் ஐஸ் வந்து மேலே விழுந்தது போல் மூச்சு திணறி விட்டது. அவ்வளவு சில்! லேசாக திறந்து வைத்து விட்டு, கம்பளிப் போர்வைக்குள் புகுந்து விட்டேன். எனக்கு மட்டும் இரெண்டு கம்பளிப் போர்வை அதற்குள்ளும் ஒரே குளிர். உள்ளுக்குள் இருக்கும் எலும்புகள் கூட ஆடற மாதிரி தோன்றியது. ஐயோ! இந்த செப்டம்பரில் தெரியாமல் வந்திட்டோமே என்று என் மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டு இருந்தேன்.

இப்போது யாரோ குதித்து போல் ஒரு சத்தம், பிடி பிடி அவனை பிடிங்க என்று ஒரு அபயக் குரல். எனக்கு புரிந்துவிட்டது என்னவென்று, ஏனெனில் அந்த ஜன்னலில் கிரில் இல்லை. திறக்கும்போதே பயம்தான். ஆனாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். அவ்வளவு தான் நான் பயந்து விட்டேன்; நாம் ஜன்னலை திறந்து வைத்தது தப்பா போச்சு எவனோ அது வழியா குதிச்சுட்டான்னு பயந்துட்டேன். இருட்டில் ஒன்றும் புரியவில்ல. அவன் எங்கு இருக்கிறான், யாரு பக்கமா நகருவான்னு கண்களை மிகவும் கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்தேன்.


இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.


எல்லாரும் எழுந்து விட்டார்கள், அக்கா எழுந்து லைட் போட்ட பிறகு யாரு யாருன்னு கேட்டாங்க. எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு! ஒரு பதிலும் இல்லை. அக்காவுக்கு கோவம் வந்துடுச்சு போல.


யாரு எங்கே ஒளிஞ்சி இருக்கீங்க மரியாதையா வெளியே வந்துடுங்கன்னு அக்கா சொன்னாங்க. ஆனால் யாரும் வரவில்லை. அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள். ஐயோ! அவ ரொம்ப பயப் படுவாளே உன் கூடத்தானே படுத்திருந்தாள் இப்போ எங்கே போனா? அவளை மொதல்லே தேடுங்கன்னு சொல்லிட்டு, நாங்கள் படுத்திருந்த ரூம் பக்கத்திலே சிறிய ஒரு டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது. அங்கே திருடன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருப்பானோ?? என்று அக்கா உடனே ஹோட்டல் மேலாளருக்கு போன் செய்தார்கள். அந்த கதவையும் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டார்கள்.


பிறகு ஒரு வழியாக எல்லாரும் நின்று கொண்டிருந்ததால் மெதுவாக நான் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை எல்லாரும் என்னை எங்கே தேடுவது என்று விழித்துக் கொண்டிருந்தார்கள். நான் மெதுவா போய் என் தோழியின் தோள் மீது கை வைத்தேன். அவள் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கட்டிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தாள். நான் கூறுகின்றேன் நான்தான்பா உன் தோள் மீது கை வைத்தேன் என்று. அதை யாருமே காதில் போட்டு கொள்ளவில்லை. அப்புறம்தான் எங்க அக்காவிற்கு உறைத்தது போல. ஆமா நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேன்னு கேட்டாங்க. அவங்களோட எல்லாரும் என்னை அடிக்கற மாதிரி பார்த்தாங்க.


அதுக்குள்ளே விடுதி மேலாளர் வந்து விட்டார். எங்கேம்மா திருடன் என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாரு. வந்தவரு கேட்டது என்னான்னா, அப்படி எல்லாம் இங்கே யாரும் வர முடியாது அந்த அளவிற்கு செக்யூரிட்டி வச்சிருக்கோம். என்ன ஒரே ஆர்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டினாரு. அக்காவுக்கு கோவம் வந்திடிச்சு என்னாங்க இப்படி பேசறீங்க?? நானே சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்னு சொன்னாங்க. அப்போ சரிம்மா வந்த திருடன் எங்கே அப்படின்னு மேலாளர் கேட்டாரு. இல்லைங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நாங்க பார்த்தோம் என்று என் தோழி ஒருவள் பீலா விட்டாள்.

மேலாளர் சரி எங்கே காட்டுங்கள் என்றார். அக்கா அடைத்து வைத்த ரூமை காட்டினார்கள். அங்கே மெதுவா கையில் குச்சியுடன் சென்றார். அவருடன் எங்க அக்காவும் போனாங்க.


நான் எதுக்கும் இருக்கட்டும்னு ரூமின் ஒரு கோடியில் போய் நின்று கொண்டேன். வெளியே ஓடலாம்னு பார்த்தா கும்மிருட்டு. எங்கே ஓடுவது என்று தெரியவில்லை,அதான் அங்கே போய் நின்னுட்டேன்.


அந்த ரூமுக்குள்ளே போனா யாரையும் காணோம். மேலாளருக்கு ஒரே கடுப்பு. ஏம்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டிட்டாரு. அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. இருங்க யோசிக்கலாம்னு எங்க அக்கா சொன்னாங்க. அப்புறம்தான் ஆராய்ந்தார்கள், ஏன் திருடன் என்று முடிவு செய்தோமுன்னு யோசிச்சாங்க. ஆனா ஏன்னு புரியலை போல.

எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து எல்லோருடனும் சேர்ந்து பேச ஆரம்பித்தேன். அதுவரை சும்மா இருந்த தோழிகள் என்னை கண்ணகி பார்வை பார்த்தார்கள். மேலாளர் சரி எல்லாரும் எதை வச்சு திருடன்னு முடிவு பண்ணினீங்கன்னு கேட்டாரு?? அப்போதான் எல்லாருக்கும் அது உறைச்சுது.

நான் சொன்னேன் இல்லேங்க யாரோ பிடி பிடின்னு கத்தினாங்க அதான் பயந்துட்டோம்.நான் கூறியதை அந்த மேலாளர் நம்பாமல் என்னைய ஒரு மாதிரி பார்த்தார். ஏன்னா மொதல்லே நான் விட்ட உதாரிலே (Fan இல்லேன்னு சொன்னேனே)என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதான். போய்யா போன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். வெளியே சிரிச்சேன்.

அப்போதான் எல்லாரும் கவனித்தோம் கட்டிலில் படுத்திருந்த ஒரு பையன் மறுபடியும் கீழே விழுந்து அப்படியே தூங்கி கொண்டிருந்தான். மற்றொருவன் கட்டிலிலேயே படுத்திருந்தான்.

பிறகுதான் என் தோழி மெதுவாக கூறினாள், இல்லேப்பா என் தம்பி கொஞ்சம் தூக்கத்திலே உளருவான் ஆனா இப்படி எல்லாம் கத்துவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை என்று மிகவும் சாதரணமாக கூறினாள். அவ்வளவுதான் எல்லாரும் அவள் மீது கொல வெறியோட பாய்ந்தோம்.

மவளே!! நாங்க உயிரை கையிலே பிடிச்சிகிட்டு எங்கே ஒளியரதுன்னு தெரியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும். நொந்து நூலாயிட்டேன் என்று சொல்லி நான்தான் அதிகமா அடிச்சுட்டேன். அப்புறமா, தம்பிங்க இரண்டு பேரையும் அடிச்சு எழுப்பிட்டோம்.


மரியாதையா உன் தம்பியைக் கூட்டிகிட்டு காலையிலே மலையை விட்டு ஏறங்கிடனும் ஆமா. அப்படின்னு கண்டிஷனா சொல்லிட்டேன். அதுக்கு அந்த தம்பி அக்கா நான் இனிமேல் அதுமாதிரி எல்லாம் கத்த மாட்டேன் என்னை அனுப்பிடாதீங்க என்று கெஞ்ச ஆரம்பிச்சான.


பாத்தா பாவமா போச்சு. சரிடா தூங்கும் போது வாயில் துணியை கட்டிக்கிட்டு தான் தூங்கனும். உன்னாலே அந்த பையன் வேறே ரொம்ப கஷ்டப் பட்டான் தெரியுமா?? அப்படின்னு சொன்னேன். இப்படிதாங்க ஒரு நாள் முடிஞ்சிபோச்சு.


பிறகு எங்க அக்கா என்னை நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே?? அடி விழுந்தா எல்லாருக்கும் விழட்டுமே அப்படி நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா என்றார்கள். அட போங்க அக்கா எனக்கு பயத்துலே ஒண்ணுமே புரியலை அதான்...........






Tuesday, March 31, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!

இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன். சில நாட்கள் நட்புகளுக்காக எழுதலாம்னு இப்போ இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.



பாகம் I
=========

வழக்கமாக எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், எனது கல்லூரி தோழிகள் சிலர் எல்லாரும் சேர்ந்து அடிக்கடி டூர் செல்லுவோம். இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.


இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது, அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம். ஆனால் வருடத்தில் இருமுறையாவது ப்ளான் பண்ணி டூர் சென்று விடுவோம். அப்படி சென்றது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஊட்டி டூர்.


எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் ஹி ஹி ஹி). ரயில்வே ஸ்டேஷன்லே எல்லாரும் கூடியவுடனே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கலாட்டாதான். ஆனா இந்த வாலுங்களுக்கு எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்.


அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே. இவங்க என்னோட அக்கா. இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே?? சரி இப்போ தொடருகிறேன்.


எல்லாரும் ரயிலுக்குள்ளே ஏறிட்டோம். எங்க எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் அமையவில்லை. சிலர் ஒண்ணா இருந்தோம். சிலர் கொஞ்சம் தனித்தனியா இருந்தாங்க. உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா? அதெப்படி முடியும். எல்லாரும் எங்க இடத்துலே வந்து அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகிட்டாங்க. பேச்சு பேச்சு தான் ஒரே கும்மாளம். பாட்டு, டான்ஸ் இப்படி பொழுதை தள்ளினாங்க (போக்கினோம்).


பக்கத்திலே இருக்கறவங்களை பற்றி கவலையா?? அப்படீன்னா என்னா? ஒன்னும் இல்லை. ஒரே ஆட்டம் தான் compartment சும்மா அதிர்ந்து போச்சில்லே அப்படீ ஒரே சத்தம். TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.


அவரு வெளியே செல்லும்போது அவரு யாருன்னு அவருக்கே தெரியாம குத்து மதிப்பா தான் அடுத்த compartment போனார். அவரிடம் அவ்வளவு கேள்வி. அவரு வேலையை Resign பண்ற அளவுக்கு யோசிச்சு இருப்பாரு. அவ்வளவு அமர்க்களம் போங்க. எங்களை மாதிரி நிறைய பேரை பாத்திருப்பாறு போல. நாங்க பண்ண அமர்க்களத்துக்கு அவரு சிரிச்சுகிட்டே பதில் சளைக்காமல் சொன்னாரு. எங்க அக்கா தான் அவரையாவது உருப்படியா இருக்க விடுங்கன்னு கெஞ்சினாங்க. அப்புறம் தான் அவரை அந்த இடத்தை விட்டு நகர அனுமதித்தோம்.


இரயிலில் ஒரு மணி நேரம் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். திடீரென்று நான்கு பேரை காணவில்லை. கொஞ்ச நேரம் ஆனது இந்த முறை ஐந்து பேரை காணவில்லை. மொத்தம் காணாமல் போன லிஸ்ட் ஒன்பது பேரு. எங்க அக்கா கேட்டாங்க (போன பதிவிலே சொன்ன அக்கா இல்லே). என்னா ஆச்சு கொஞ்ச பேரை காணலைன்னு. எனக்கும் ஒன்னும் புரியலை. இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க). மீதி இருக்கறவங்க அதானே இருங்க என்னாச்சுன்னு பாத்துட்டு வாரோம்னு எல்லாரும் கும்பலா கிளம்பி போனாங்க. போனவங்க அவ்வளவுதான்.


பிறகு நான் எனது தோழிகள் எட்டு பேரு மற்றும் தோழிகளின் இரு தம்பிகள் (8 + 2) பேசிக் கொண்டு இருந்தோம். சில நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து கஷ்டப்பட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். பேச்சையும் தொடர்ந்தார்கள்.


மொதல்ல சுமாராக பேசிக் கொண்டிருந்தவர்கள்,இப்போ என்னாடான்னா சும்மா சும்மா சிரிச்சாங்க. நாங்க என்ன பேசினாலும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சிது, என் தோழிகளிடம் மெதுவாக என் சந்தேகத்தை கூறினேன். எங்க அக்கா இடத்தை காலி பண்ணிட்டு பின் பக்கத்து இருக்கையில் அந்த சிறுவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்க ஏதோ சப்ஜெக்ட் பற்றி பேசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.


ஆனால் நம் நண்பர்களோ என்னா பேசினாலும் ஓவர் சிரிப்பு. இதில் அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது. இவர்களின் சத்தம் அதிகரித்தது. எனக்கு தர்மசங்கடமாகிப் போச்சு. எல்லாரும் போங்க அவங்க அவங்க பெர்த்லே போயி படுங்க மேட்டுபாளையம் போயி எழுப்பரோம்னு சொல்லி அனுப்ப முயற்சி பண்ணினாலும் ம்ம் ஒண்ணும் முடியலை.

குழந்தையின் அழுகை சத்தம் அதிகமானதால் என் அக்கா அங்கு வந்தார்கள். ஏம்பா இப்படி சத்தம் போடுகிறீர்கள். மீதி நாளை உதைகையில் போயி பேசிக் கொள்ளலாம்.இப்போ தூங்குங்கன்னு சொன்னாங்க. அக்கா என்றால் எல்லாருக்கேமே கொஞ்சம் பயம். இடம் காலி ஆனது. எனக்கு உள்ளூர ஒரே நிம்மதி.


ஒரு வழியா மேட்டுபாளையம் சென்று அங்கிருந்து உதகை அடைந்தோம். அமர்க்களமா ஊர் சுற்றிப் பார்த்தோம். மாலைப் பொழுது வந்தது. கடைசியாக எல்லாரும் பார்க் சென்று பார்த்துவிட்டு வந்து சாப்பிட்டோம். ஆனால் நண்பர்களோ எதுவுமே சாப்பிடாமல் எல்லாம் கையில் பார்சல் வாங்கிக் கொண்டார்கள். கிளம்பியும் விட்டார்கள். எல்லாவற்றிற்கும் பில் செட்டில் செய்து விட்டு விடுதிக்கு போனோம். அவர்களின் அறையை தாண்டிச் செல்லும் போது ஒரே சத்தம். எங்களுடன் வந்த இரண்டு சின்ன பசங்களும் அவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள்.


நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!! மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்) மற்றும் சாப்பாடு இருந்தது. ஐட்டங்களைப் பார்த்தவுடன் எனது தோழிகளின் தம்பிகளை எங்களுடன் அழைத்து வந்து விட்டேன். வந்த எடத்துலே ஏதாவது கசமுசா ஆகிவிட்டால் என்ன செய்வது அவர்கள் பெற்றோர்களுக்கு நான்தானே பதில் சொல்லணும் அதான்.


ஆனால் அந்த பசங்களுக்கோ அண்ணன்களுடனே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோமே என்று கெஞ்சினார்கள். பசங்களுக்கு பதினைந்து வயதுதான். இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான். நான் பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன். பயந்து வந்து விட்டார்கள். யாரு கண்டா உள்ளே திட்டிக் கொண்டே வந்திருப்பார்கள். நசரேயன் சொல்வது போல பூலான் தேவி கணக்கா மிரட்டினா திட்டத்தானே செய்வாங்க!!


எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை. அவங்களைப் பற்றி விவெரம் தெரியலயே அதான்..... நீங்க என்ன சொல்லறீங்க இப்போ?? நான் சொல்லறது சரிதானே??


அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும்.






Tuesday, March 24, 2009

ரம்யாவின் சோகம் - PART - II !!


ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!



அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.


அவர்கள் ஊருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு வால்ப்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில், மாட்டியவர் ரம்யா".


இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள். (ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??)
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

வால்பையனின் கேள்விகள், ரம்யாவின் பதில்கள்.
அந்த அக்காவின் -- மறு விமரிசனம்

===================================

1.இங்கே முதல் ரசனை வால்பையனுக்கு போகின்றது. 2.இரண்டாவதாகத்தான் அவர்களின் சபாஷ் எனக்கு.
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
6.ஜெயித்தது என் நண்பர்தானே. (உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) சேச்சே இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பாட்டு. ஹி ஹி ஹி.


அப்பா ஒரு வழியா முன்னுரை முடிந்தது.


இப்போ வாங்க உள்ளே போகலாம்.
=========================
ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். நல்ல முடிவுதானே!! என்னப்பா சிரிக்கறீங்க?? போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை...


சரி வாங்க மீதியை படிக்கலாம்
======================
அவங்க வந்தப்போ எங்க வீட்டுலே நான் தனியா தான் இருந்தேன். விட்டுலே இருந்தவங்க ஊருக்கு போய் இருந்தாங்க.


வந்தாங்க வந்தவுடன் சில விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் மறுபடியும் ஏன் வந்தாங்க என்கின்ற விஷயத்தை சொன்னாங்க.


அக்கா: ஒன்னும் இல்லைப்பா!!


ரம்யா: ஏதோ விஷயம் என்று தானே சொன்னீங்க, அப்புறம் என்ன ஒன்னும் இல்லை??


அக்கா: இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??


ரம்யா: ஓ!! ஆரம்பமா?? அது சரி


அக்கா: என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.


ரம்யா: இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.


அக்கா: பத்தியா கடைசியிலே என்னையே நீ வாருரே?? பரவா இல்லையாடி??


ரம்யா: இல்லேக்கா நான் கடைசியிலே இல்லே மொதல்லே இருந்தே உங்களை வாரிக்கிட்டு தான் இருக்கேன்.


அக்கா: தனியா இருக்கியே அப்படின்னு யோசிச்சு சரி இந்த பிள்ளை கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தா நீ என்னை வச்சி காமெடியா பண்ணறே??


ரம்யா: சேச்சே, நான் உங்களை வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலைக்கா!! சரி, சரி நான் அடங்குறேன், நீங்க இப்போ சொல்லுங்க.


அக்கா: ஏய் குறுக்கே ஒன்னும் பேசக் கூடாது என்ன புரிஞ்சி போச்சா??


ரம்யா: இல்லேக்கா, நான் குறுக்கே பேசவே மாட்டேன். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல விரும்பறேன். எனக்கு உங்க பிரச்சனை புரிஞ்சிடுச்சு, ஆனா போகலை சரியா??


அக்கா: ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை.


ரம்யா: இல்லேக்கா, போன வாரம் டாக்டர் கிட்டே போனேன், நின்னா, நடந்த மயக்கம் வருதுன்னு. டாக்டர் சொன்னாரு உடம்பு ரொம்ப அனிமிக்கா இருக்கு, நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவா எடுத்துக்கோன்னு சொன்னாரு. ஆனா என்னக்கா நீங்களும் அந்த துறைலே தானே இருக்கீங்க. நீங்க மட்டும் என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க??


நான் டாக்டர் சொன்னதை அப்படியே எடுத்துகிட்டு என் உணவு பழக்கங் வழக்கங்களை இப்போ தான் மாற்றிக் கொண்டு வருகின்றேன். உங்க கிரகம் அந்த நேரமா பார்த்து என் கிட்டே மாட்டிடீங்க போல இருக்கு. சரி சரி, கோச்சுகாதீங்க. இப்போதில் இருந்து நான் ஒழுங்கா கேக்கறேன் சரியா??


அக்கா: இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.


ரம்யா: அது நம்ப தம்பி இல்லே, உங்களுக்கு தம்பி, எனக்கு அண்ணா சரியா?


அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க.


ரம்யா: அக்கா எப்படி வர்றது ??


அக்கா: ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க.


ரம்யா: ரெண்டு கிலோமீட்டரிலா?? என்னாக்கா சொல்லறீங்க?? இல்லையே, வீரபாண்டிபட்டினம் ரொம்ப தூரமாச்சே, ரெண்டு கிலோ மீட்டரா?? அதுக்கு எதுக்கு ரயிலு?? எங்க காரிலேயே வந்துடுவொமே?? ஒரே குழப்பம்ஸ். இல்லேக்கா நீங்க சொல்லறமாதிரி ரெண்டு கிலோமீட்டரில் சேத்துப்பட்டே தாண்டாது ரயிலு, எப்படி அது வீரபாண்டிபட்டினம்னு சொல்லறீங்க??


அக்கா:வேண்டாம்டி நான் ஊருக்கு போய் பத்திரிகை அனுப்பறேன்.மரியாதையா வாயை மூடிகிட்டு வந்து சேரு. இப்போ நான் தூங்கப் போறேன், பேசிகிட்டே இருக்காமே தூங்கு சனியனே. எதைப் பேசினாலும் நொண்டு பேசறே!


ரம்யா: இந்த அக்காவை ரொம்ப கடுப்பேத்திட்டோமோன்னு ரொம்ப யோசனையா இருந்திச்சு. சரி சரி இனிமேல் இவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டு அப்படியே கொஞ்சம் லேசா தூங்க ஆரம்பிச்சுட்டேன். திடீர்ன்னு ஒரே சத்தம்.


"என்னங்கடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, நல்லா அழுந்த தேச்சு கழுவுங்கடி" அப்படீன்னு அமானுஷ்யக் குரல் கேட்டுச்சு.


எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் தனியா தானே இருந்தேன். இந்த அக்கா இருப்பது நினைவிற்கு வரலை.


ரொம்ப பயந்துட்டேன். எழுந்து விளக்கு போடக் கூட பயம். வீட்டுக்குள்ளே யாரோ பூந்துட்டாங்க, இப்போ என்னா நடக்கப் போகுதோ,ஐயோ பயந்து வருதேன்னு நினைக்கும்போதே அழுகையா வருது.


கொஞ்சம் நேரம் விழித்திருந்தேன். அப்புறம் ஒன்னும் சத்தம் இல்லை. பயந்தபடியே தூங்கிட்டேன். மறுபடியும் ஒரு குரல்,


"நான் சொல்லிகிட்டே இருக்கேன் உன்னாலே கேக்க முடியலை இல்லே??" இந்த முறை கோவம் குரலில் அதிகம் தெரிஞ்சுது. சரி இன்னைக்கு தூக்கத்திற்கு சங்குதான் தெரிஞ்சி போச்சு. சரி, கொஞ்சம் புத்தியா யோசிக்கலாம்னு நினைச்சேன் (அதெல்லாம் எங்கே உனக்குன்னு கேக்கறது காதிலே விழுது, என்ன செய்ய அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா) எங்கே இருந்து இந்த சத்தம் வருதுன்னு உன்னிப்பா கவனிச்சேன். தொடர்ந்து பேச்சுக் குரல் கேட்ட வண்ணம் இருந்தது.


அட நம்ப அக்காதான் இவ்வளவோ அமர்க்களம் பண்ணறாங்க. ஓ!! இவங்களுக்கு தூக்கத்திலே பேசற பழக்கம் போல இருக்கு. தெரிஞ்சாலும் பயத்தோட தான் படுத்திருந்தேன். எப்பபோ விடியும்ன்னு காத்திருந்தேன், காலையிலே என்னாக்கா! ராத்திரி தூக்கத்திலே பேசினீங்கன்னு கேட்டா, இல்லேடி நான் பேசமாட்டேன், ஆனா அந்த ஜெயா அக்கா இல்லே அவங்க தான் தூக்கத்திலே பேசுவாங்க....


ரம்யா:இங்கே பாருங்க நேத்து ராத்திரி இங்கே படுத்து இருந்தது நீங்க தான், நீங்க தான் பேசினீங்க, ஏனக்கா ஜெயாக்கவை சொல்லறிங்க??


அக்கா:சரிடி இப்போ என்னா அதுக்கு, நான் கிளம்பறேன், கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டு.


கிளம்பிட்டாங்கையா!! கிளம்பிட்டாங்க!!




Thursday, January 8, 2009

வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்

ஏலகிரி மலையில் நான் கண்டு களித்தது சில எனது நண்பர்களான உங்களின் பார்வைக்கு


மாலை பொழுதின் மயக்கத்திலே
மறையும் ஆதவன் அழகினிலே
மயங்கி நின்றேன் மலைமேலே
மதியை பார்த்து மயங்கிய
ஆதவனோ மறைகிறான்
மலைகளுக்கிடையே
வெட்கிய ஆதவனை க்ளிக்கியது நாங்க.

மக்களையும் மரங்களையும் பனி என்ற ஜில் அரக்கன் மறைக்கப் பார்க்கிறான். மலை மேலே இருந்து க்ளிக்கியது.


இது தொலைநோக்கு பார்வையில் உங்களுக்காக கிளிக்கியது


இது ஏலகிரியில் சுற்றி பாக்க வேண்டிய இடங்கள் இதுவும் உங்களுக்காக




நாங்கள் தங்கி இருந்த விடுதியில் வேலை செய்பவர்களின் கைவண்ணம்.



இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்

இதுவும் அவங்களோட கை வண்ணம் தான்.


இவை எல்லாம் படகுத்துறை வேறு வேறு கோணங்களில் கிளிக்கியது










.
























.







.











மலையரசன் ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும் ஒரு பகுதி.





ஏலகிரியில் உள்ள முருகன் கோயில் நுழைவாயில் பாதுகாவலர் போல யாருன்னு தெரியாமலே கிளிக்கியது.








இதுவும் ஆதவனை மறைக்க மேக கூட்டங்கள் கன்னி முயற்சி
செய்கின்றன .










நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல









போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் கண்ட பாதையின் அழகு








இந்த அருமை நண்பர் நான் கொடுத்த இனிப்பை உண்கிறார். உண்மைதாங்க நான் தான் தைரியமாக கிட்டே கொண்டு கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.