கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .
தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன். ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் .
அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.
உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.
சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! கல்லூரி இறுதி ஆண்டு. அந்த இறுதி ஆண்டு முடிவதற்குள், வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை. கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.
எல்லாரும் சேர்ந்து கேரளா டூர் போனோம். கேரளாவில் ஒரு தோழியின் வீடு உள்ளது. அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள்.
அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். ரொம்ப நல்ல முடிவுதான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது. தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன். கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம். சினிமா காட்சி தோற்றுப் போய்விட்டது போங்க.
ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.
ஏற்கனவே தனது கழுத்தில், கையில், காதுகளில் இருந்து பறிகொடுத்த தோழிகள் திரு திரு என்று சத்தம் போடாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் கை கழுவ போய் இருந்ததால் விளக்கை அணைக்கவில்லை. எங்களைப் பார்த்தவுடன் எனது தோழிக்கு கண்களில் ஒரு பிரகாசம். எப்படியும் நான் காப்பாற்றி விடுவேன் என்று. நான் எங்கே காப்பாற்றுவது! நானே கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைத்தால் திருடன் என் பக்கம் திரும்பி விடுவானோன்னு ஒரே பயம்.
ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள், விளக்கும் போட்டார்கள், ஆனால் ஒருவரும் அருகே வரவில்லை.
ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான். அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன். எனது தோழிகள் இருந்த இடம் தெரிய வில்லை.
ஆனாலும் பிடியை தளர்த்த வில்லை.உள்ளூர ஒரே பயம்! ஆனாலும் அசட்டு தைரியம்தான். எங்களோட போராட்டத்தை பார்த்து இரெண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். கட்டுவதற்கு கயறு இல்லை. ஒரு இளைஞன் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அருகில் ஒருவர் தலையில் துண்டு கட்டி இருந்தார், அதை கேட்டால் தர மறுத்தார். நான் அந்த துண்டை உருவச்சொல்லி அந்த துண்டை வைத்து திருடனின் கைகளை கட்டுமாறு கூறினேன். ஒரு இளைஞன் நான் கூறியதுபோல் செய்தான், மற்றொரு இளைஞனை ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்கச் செய்தனர் என் தோழிகள். ரயிலு நின்னுடுச்சு. உடனே முக்கியமான நிர்வாகிகள், எங்க TTR எல்லாரும் எங்க இடத்துக்கு வந்துட்டாங்க.
ஒரு ஊரு வந்தவுடன் அங்கே அந்த திருடனை இறக்கி, எங்களையும் ரயில்லே இருக்கற போலீஸ்காரங்க போலீஸ் ஸ்டேஷன் வரை வரச்சொன்னாங்க. எனக்கு ஒரே பயமா போச்சு. ஏன்னா வீட்டுக்கு தெரியாம டூர் வந்திருக்கேன் அது முதல் பயம்! அப்புறமா போலீஸ் என்றால் அதைவிட ரொம்ப பயம். நான் எல்லாம் வரமாட்டேன் என்று அடம் பிடிச்சேன்.
அப்புறமா எல்லாரும் தைரியம் கூறி அனுப்பிவைத்தார்கள். ஆனால் திருடனோட கண்ணில் கட்டி இருக்கும் துணியை கழட்ட கூடாது. கழட்டினால் அவன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அப்புறம் வந்து கத்தியாலே குத்தி விடுவான் என்று ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரு சரி என்றார்.
ஸ்டேஷன் போய் எனது தோழிகளின் நகைகளை கேட்டோம். போலீஸ்காரங்க தரமாட்டோம், அவன் பையிலே நிறைய நகைகள் இருக்கு.
அதுனாலே நீங்க அப்புறமா சொல்லி அனுப்பறோம், அடையாளம் சொல்லி வாங்கி செல்லுங்கள் என்றார்கள். நாங்களும் உடனே கிளம்பிட்டோம்.
மறுபடியும் கல்லூரியில் சகஜமான வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு திகிலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தோம்.
இரெண்டு மாதங்கள் கழித்து ஒரு அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அழைப்பு எனது பெயருக்கு தான் வந்தது. எனக்கு ஒரே பயம், எனது தோழிகள் தைரியம் கூறி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
நிறைய பெரியவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, முக்கியமான பெரியவங்க பக்கத்துலே உக்கார்ற பாக்கியம் கிடைச்சுது. எல்லாரும் எங்களையே பாக்கறமாதிரி ஒரு உணர்ச்சி. வெக்கம் வெக்கமா இருந்திச்சு.
நல்ல முறையில் வேலை செய்த போலீஸ்காரங்க, பல துறையில் வேலை செய்தவங்க, நேர்மையான முறையில் பல லட்சங்களை தனது ஆட்டோவில் வைத்து சென்ற பணத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர், இப்படி பலர். அவர்களின் நடுவே நாங்களும் ஏன் என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.
ஆனால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அக்கா என்னை பேச அழைத்தார்கள். நான் பேச மாட்டேன் என்று மறுப்பு சொல்ல எனக்கு உரிமை வழங்க வில்லை. கால்கள், கைகள் தந்தி அடிக்க மைக் முன்னால் போய் நின்றேன். நான் போய் வீர மங்கையாம். நான் சொல்லலை, அவங்க சொன்னாங்க. ஏதோ உளறி கொட்டி கிளறி மூடிட்டு வந்துட்டேன். இந்த விஷயம் சும்மா இருக்குமா? வெளியே சத்தமில்லாமல் சுத்தமாக எங்க வீட்டுக்கு தெரிந்து விட்டது. எங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய?? நாளிதல்லே படிக்கும் பொண்ணோட போட்டோ வந்ததுன்னா சும்மாவா??
இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!
இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!