Thursday, January 28, 2010

காதலியும் அவளே! மனைவியும் அவளே!!

" என்ன விஷ்ணு க்ரீட்டிங்க்ஸ் மறைச்சி வச்சிருக்கே? எனக்கும் காட்டுடா." என்ற சக்தியின் ஆவலுக்கு....

"போடா, உனக்கு இல்லே இதெல்லாம் என்னோட அவளுக்கு" என்ற பெருமிதத்துடன் தாமரையின் இருப்பிடம் அடைந்தான் விஷ்ணு.
"இந்தாம்மா இந்த இரண்டு க்ரீட்டிங்க்ஸ் கார்டும் உனக்குத்தான், என் உயிர் நண்பனுக்கு கூட காட்டலை.."

"அவ்வளவு ஒன்னும் நல்லா இல்லே.. ஏதோ கொஞ்சம் பரவா இல்லே!"

"ஏன் சொல்லமாட்டே? எவ்வளவு அலைஞ்சி திரிஞ்சி வாங்கியாந்தேன். வேணும்! எனக்கு நல்லா வேணும்!.."

"சரி, மூஞ்சியை தூக்கி வச்சிக்காதீங்க. நல்லாதான் இருக்கு. என்ன விஷ்ணு இன்னைக்கு எங்கே போகலாம்"

"எங்கே வேணும்னாலும் போலாம்டா"

"நான் ஒரு இடத்திற்கு அழைத்துப் போகிறேன் சரியா? வேலை முடிந்தவுடன் சீக்கிரமா வந்திடுங்க, நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்" என்றாள் தாமரை.

"சரிம்மா"

"இங்கே பாருங்க உங்க மேனேஜர் கூப்பிடறாரு, அவங்க கூப்பிடறாங்க, இவங்க கூப்பிடறாங்கன்னு மொக்கை போடக் கூடாது. நான் வெளியே காத்திருககேன்னு பயம் இருக்கணும்"

"ச்ச்சே!! இதுக்கு போய் ஏம்மா கோவப்பட்டு பல்லை கடிக்கறே"

"தேவை இல்லாமே பேசாதீங்க... கண்டிப்பா நான் சீக்கிரம் வந்திடுவேன்"

"இப்போ நான் என்னோட வேலையை பார்க்கலாமா? ரொம்ப நேரமா இங்கேயே நின்னுகிட்டு இருக்கீங்க எல்லாரும் நம்பளையே பாக்கறாங்க"

"என்னை போகச் சொல்றே அவ்வளவுதானே!"

"இல்லங்க , யாராவது வேலையே செய்யலைன்னு தப்பா நினைக்கப் போறாங்க அதான் சொன்னேன்"

"சரி சாயங்காலம் சீக்கிரம் கிளம்பிடுவோம். இப்போ நான் போறேன்"

மாலை விஷ்ணுவிற்காக காத்திருந்த தாமரை மனதிற்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தாள் "எவ்வளவு நேரம் நிக்கறது. இவனுக்கு கொஞ்சம் கூட நம்ம கிட்டே பாசமே (பயமே) இல்லை. அதான் சீக்கிரம் வராமே என்னை காக்க வைக்கிறான். சரி போன் செய்து பார்க்கலாம். மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. விஷ்ணு ஏன் போனை எடுக்கலை. வழக்கம்போல் மேனேஜெர் கிட்டே மாட்டிகிட்டானோ? இன்னும் ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு சென்று விடலாம்" இந்த எண்ணம் மனதில் ஓடிய அடுத்த நிமிடம் அவன் வந்து சேர்ந்தான்.

"அப்பா, எல்லாரையும் ஏமாத்திட்டு ஒரு வழியா வந்திட்டேன்.........."

"என்ன ராகம் ரொம்ப அதிகமா இருக்கு? "

"என்னாது ராகமா? எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கேன் தெரியுமா?"

"தெரியுது! தெரியுது! சரி, சரி அதிகமா பேசாதீங்க! ரொம்ப நேரம் இங்கேயே நிக்க வேண்டாம், கிளம்புங்க! "

"சரிம்மா, இதோ வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டேன்."

"மெதுவா போங்க? என் இவ்வளவு வேகம்? எனக்கு பயமா இருக்கு.."

"ஹி! ஹி! இல்லே நீ என்னை நல்லா பிடிச்சிக்கோ அதுக்குதான்.."

"ரொம்ப வழியாதீங்க! மெதுவாவே போலாம் அவசரம் இல்லே."

"சரிம்மா ஒரு இருபதுலே போகவா? போதுமா??"

"ரொம்ப நடிக்காதீங்க... ஒழுங்கான வேகத்துலே வண்டியை ஓட்டுங்க."

"சரிம்மா! நீ சொல்றமாதிரியே ஓட்டுறேன், சரி, எங்கே போகலாம் சொல்லவே இல்லே"

"என்னோட பிரண்டு விமலா சொல்லி இருக்கேன் இல்லே, அவளுக்கு பர்த்டே. அந்த பார்ட்டிக்குத்தான் போறோம்."

"ஓ! இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை? நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு வந்திருப்பேன். சதி பண்ணிட்டியேடி கள்ளி. சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. உன்னோட பிரண்டு அழகா இருப்பாங்களா?"

"என்னா???..."

"இல்லே! இல்லே! சும்மா உன்னே கலாய்க்கத்தான் கேட்டேன். அவங்க எப்படி இருந்தா எனக்கு என்ன? சரி மூஞ்சியை உம்முன்னு வச்சுக்காதே. ஏன் முட்டை கண்ணை போட்டு உருட்டறே? கொஞ்சமா சிரிக்கக் கூடாதா?"

"சொல்றதையும் சொல்லிட்டு என்ன...!"

சில மாதங்களுக்கு பிறகு

திருமணம் முடிந்து விடுகிறது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க........

"என்னாங்க சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க."

"என்ன விஷயம்? "

"சொன்னாதான் வருவீங்களா? என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு? "

"அதெல்லாம் ஒண்ணுமில்லை விஷயத்துக்கு வா மொதல்லே"

"இல்லே! கோவிலுக்கு போகலாம்னு வரச் சொன்னேன்..."

"சரி, உங்களுக்கு அதிகமா வேலை இருந்தா பாத்துட்டு வாங்க. நாம அடுத்தவாரம் கோவிலுக்குப் போனா போச்சு."

"அவளே வேண்டாம்னு சொல்லிட்டா.. இன்னைக்கு எப்படியும் வேலையை முடிச்சிட்டு வரணும். என்று மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்த விஷ்ணுவால் நம்பவே முடியவில்லை. வரமுடியாதுன்னு சொன்னா சண்டை போடும் தாமரை இப்போ எப்படி இப்பூடி...?"


"என்னாங்க ஏதோ யோசனையா இருக்கீங்க? கிளம்பலையா?பரவா இல்லை நான் கோவிச்சுக்கலை. நீங்க கிளம்புங்க.... "

"அட இங்கே பாருய்யா இன்னமும் என்னை சமாதானப் படுத்துறா.."

"ஏங்க முழிச்சி முழிச்சி பாக்கறீங்க.. கிளம்புங்க.... "

"ம்ம்ம்ம்... நான் வரேன்...."

மனது கேட்காமல் சாயங்காலம் சீக்கிரமே கிளம்பி வந்துட்டான் விஷ்ணு.

"வாங்க! வாங்க! சீக்கிரமா வந்துட்டீங்க? வேலை முடிஞ்சி போச்சா!"

"வேலை முடியலைம்மா! நீ கோவிலுக்கு போகணும்னு சொன்னியா அதான் சீக்கிரம் வந்துட்டேன்."

"பரவா இல்லீங்க! இன்னொரு நாள் போகலாம்.."

"தாமரை நான் ஒண்ணு கேட்பேன் உண்மையை சொல்லணும் சரியா.. "

"இதென்னாங்க கேள்வி.. என்ன வேணும்னாலும் கேளுங்க சொல்றேன்.."

"நீ சொன்ன நேரத்துலே வரலேன்னா முந்தி எல்லாம் ரொம்ப கோவப் படுவே... எதுக்கு எடுத்தாலும் திட்டுவே இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்டியே எப்படிம்மா?"

"உங்களை திட்டினா எனக்குதான் கஷ்டமா இருக்கும். அப்போ எல்லாம் எங்க வீட்டுக்கு தெரியாம உங்களை சந்திப்பேன். வீட்டுக்கு போற அவசரம் அதான் ரொம்ப கோவம் வரும். இப்போ அப்படி இல்லையே. அவங்களே நம்மை சேர்த்து வச்சிட்டாங்களே!"

பயபுள்ளே ரொம்ப வெவரமாத்தான் நடந்திருக்கா.. நாமதான் புரிஞ்சிக்கலை...... (மனதிற்குள் புலம்பிக் கொண்டான் விஷ்ணு)

டிஸ்கி:என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...