Tuesday, October 27, 2009

நகரங்களும் நம்மளும்!!


நான் இப்போது சில நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூறுகிறேன். நான் கூறும் நிகழ்வுகள் எந்த நகரத்தில் என்று நீங்கள்தான் கூற வேண்டும்!!

நகரம் 1
நான்கு நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே இருவருக்குள் சண்டை வந்துவிட்டது. மூன்றாம் நண்பரும் நான்காம் நண்பரும் அவர்களுடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இருவரின் சண்டை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் சண்டை போடும் இருவரில் யாரு கரெக்ட் என்பதில் சண்டை போடாத இருவரும் விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 2
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்களுடன் இருந்த மூன்றாவது நண்பர் கண்டுக்காமல் தனியே நடக்க ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 3
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் அவர்களுக்குள் சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தார். தோல்வியுற்றாலும் முயற்சியை கை விடவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து சண்டை போட்டு கொண்டிருந்த இரெண்டு நண்பர்களும் கூட்டு சேர்ந்து மூன்றாம் நண்பரை அடி பின்னி விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 4
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். பெரிய கூட்டம் நின்று அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடன் வந்த மூன்றாவது நண்பர் சத்தம் போடாமல் ஒரு டீ கடையை திறந்து விட்டார். வியாபாரம் கொடிகட்டி பறக்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 5
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். உடன் வந்த மூன்றாவது நண்பர் அவர்களின் சண்டையை நிறுத்த உடனே ஒரு சாப்ட்வேர் தயாரிக்கிறார். அவர் தயாரித்த சாப்ட்வேரில் பக் இருந்ததினால் அவர்களின் சண்டையை நிறுத்த முடியாமல் போனது.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 6
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையை மக்கள் கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நண்பர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பொறுமை இழந்து "அம்மா" இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார், தயவு செய்து அமைதி காக்கவும் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 7
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் ஒரு பெட்டி நிறைய பீர் எடுத்து வருகிறார். அனைவரும் அமர்ந்து பீரை தேவையான அளவு அருந்துகிறார்கள். ஒருவொருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். முடிவில் நண்பர்களாக அவரவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்....

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 8
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். முடிவில் அவரவர்கள் மொபைல் போனை எடுத்து அவரவர்கள் நண்பர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு உடனே வருமாறு அழைக்கிறார்கள். இப்பொழுது அங்கே ஐம்பது ஆட்கள் குழுமி விட்டார்கள். முடிவில் அனைவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??


டிஸ்கி: இது எனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவுக்கு ஒருவர் கேட்டுக் கொள்வது. அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் வெளி இட்டிருக்கிறேன். இது யார் மனதையும் புண் படுத்த அல்ல தமாஷாகப் பேசிக் கொள்வது தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.



Thursday, October 22, 2009

நான் தேடும் அவன்!!

இன்னைக்கு எப்படியும் இவனை.......... இருடி இன்னைக்கி நீ அவ்வளவுதான்!!

எப்படி அவன் இருக்கும் இடத்தை அடைவது? பலத்த பாதுகாப்போடு அல்லவா இருக்கின்றான். இருந்தா என்ன! நமக்கு குறுக்கு வழியா தெரியாது? தொடர்ந்து ரெண்டு வருடங்களாக எவ்வளவு முயற்சி செய்தும் ஒவ்வொரு வருடமும் தோல்விதான் மிஞ்சியது.

சரியான நேரம் நமக்கு அமையவில்லையே! இன்று எப்படியும் நமது வேலையை கச்சிதமாக முடித்து விடவேண்டும். நமது முயற்சிகள் தொடர்ந்து ரெண்டு வருடங்களாக தோற்றுக் கொண்டே வருகின்றது. இந்த முறை தோல்வியே எனக்கு இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவு செய்தான் சந்துரு. தேவையான உபகரணங்கள் அனைத்தும் மறைத்து வைத்துக் கொண்டான். எப்படி உள்ளே போறது? போலீஸ் வழியிலே நிக்குது. மனம் தளரக்கூடாது. எப்படியாவது உள்ளே நுழைந்து விடவேண்டும்.

மெதுவாக மிக மெதுவாக சுவற்றின் மீது ஏற முயன்று கீழே விழுந்து விட்டான் சந்துரு. விழுந்த வேகத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். சத்தம் கேட்டு ஒரு காவலாளி ஓடி வந்து பார்த்தான். யாரும் கண்களுக்கு தென்படாததால் சற்று நேரம் நின்று விட்டு தன இடத்திற்கே திரும்பினான்.

மறுபடியும் என்ன முயற்சி செய்யலாம்னு யோசித்துக் கொண்டு இருக்கையில், ஒரு மரம் கண்களுக்குப் பட்டது. அந்த மரத்தின் வளர்ச்சியும் சந்துருவிற்கு சாதகமாக வளர்ந்திருப்பது போல் தெரிந்தது. ஆமாம் அந்த மரம் சற்றே சாய்வாக வளர்ந்திருந்தது. அதில் ஏறினால் மாடி வரை செல்ல முடியும். அப்படியே சென்றாலும் அவனை கண்டு பிடிக்க முடியுமா? அவன் எந்த அறையில் இருப்பானோ? என்று சற்றே யோசித்தான். இருட்டில் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை.

"முயற்சி திருவினையாக்கும்" என்ற சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் மரத்தின் மீது கால்களை வைத்து ஏற ஆரம்பித்தான். கால்களை மாற்றி வைக்கும்போது மடியில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்த சத்தத்தில் மறுபடியும் எல்லாரும் விரைப்பானார்கள். காவலுக்கு கட்டி இருந்த செல்லப் பிராணியும் தனது வேலையை கச்சிதமாக செய்தது. மறுபடியும் காவலாளி கோபத்தின் உச்சத்துக்கே போனான்.

"யாரு! யாரு! யாரா இருந்தாலும் மரியாதையா வெளியே வந்திடுங்க, நான் கண்டுபிடிச்சா நாளைக்கு பால்தான்!" என்று குரல் கொடுத்தான்.

கீழே விழுந்த பொருளை எடுத்து மறுபடியும் மடியில் கட்டிக் கொண்டு மறைந்து கொண்டான் சந்துரு. எந்த சத்தமும் இல்லாததால் காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

விளக்கைப் போட்டு "என்னாச்சு கோபால்" என்று குரல் கொடுத்தார். (அந்த வீட்டு முதலாளி சாரங்கன்! இவர் உளவுத்துறை அமைச்சர்! அதனால் அவர்கள் வீட்டில் எந்த நேரமும் காவலுக்கு குறைச்சல் இருக்காது)

"ஒன்றும் இல்லை எசமான்! மரத்திலுள்ள கிளைகள் அசைந்த சத்தம்னு நினைக்கின்றேன். ஏதோ சத்தம் கேட்டுது அப்புறம் யாரும் இல்லை"

"போலீஸ் என்ன செய்யுது?"

"இப்போதான் டீ குடிக்கப் போனாங்க எசமான்"

"சரி உஷாரா இரு. ஏன் பிங்கி கத்திகிட்டு இருக்கு?"

"தெரியலை எசமான்! பசியா இருக்கும்னு நினைக்கிறேன்"

"உள்ளே வா பிஸ்கட் தரேன் பிங்கிக்கு கொடு நீ சாப்பிட்டுடாதே"

"இல்லைங்க எசமான்! நான் அப்படி எல்லாம் சாப்பிடமாட்டேன்!"

என்ன செய்யலாம்னு யோசித்த சந்துரு எப்படியும் இந்த முறை தவறு செய்யாமல் மரம் ஏறி மாடியை அடைந்து விட வேண்டும். அவங்க அப்பாவின் ரூம் தெரிந்து விட்டது. அவனின் அறையும் பக்கத்துலே தான் இருக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்தவன் மெதுவாக மரத்தை தொட்டு கும்பிட்டான்.

"மரம் மாமா! மரம் மாமா! நான் உன்னை ஒரு மரமா நினைக்கலை. இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்லும் படகு போல் நினைத்துக் கொள்கின்றேன். தயவுசெய்து எந்த தடங்கலும் வராமல் என்னை அக்கரைக்கு கொண்டு சேர்த்து விடு மரம் மாமா" என்று மரத்திடம் கெஞ்சிக் கேட்டு கொண்டபிறகு மெதுவாக ஏற ஆரம்பித்தான்.


பிஸ்கட் போட்ட பிறகும் பிங்கி கத்துவதை நிறுத்தவில்லை. பிங்கியின் சத்தம் சற்றே வேகமாக வந்துகொண்டிருந்தது. குறிப்பா அண்ணாந்து பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. டீ குடிக்கச் சென்ற போலீஸ் இருவரும் காவலாளி அருகே வந்தனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியலை.

"ஏன் கத்துது?" என்று ஒரு போலீஸ் காவலாளியிடம் கேட்டார்.

"அதான் சார் எனக்கும் புரியலை. இது ரொம்ப நேரமா கத்திகிட்டே இருக்கு. இது கத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தேன். யாரும் அங்கே இல்லை. அதுலே இருந்து பிங்கி கத்திகிட்டே இருக்கு. மொதலாளி பிஸ்கட் கூட கொடுக்க சொன்னாரு. பிங்கி அதை தொடவே இல்லை. கத்திகிட்டே இருக்கு" என்று மூச்சு விடாமல் விளக்கினார் காவலாளி.

"சரி, என் கூட வா! எங்கே சத்தம் கேட்டது? வரதா! அந்த டார்ச் எடுத்து வா" என்று இரெண்டாவது போலீசுக்கு கட்டளை போட்ட முதல் போலீசு இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.

"இந்த இடத்துலேதான் சார் சத்தம் கேட்டிச்சு"

"இங்கே ஒண்ணுமே இல்லையே?" நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். "இங்கே யாரும் இல்லையே? ஏன் பிங்கி விடாமல் கத்துது?"

"மருது, பிங்கி கத்தறதை பார்த்தா, யாரோ திருடன் உள்ளே புகுந்த மாதிரி சந்தேகமா இருக்கு. நீ எங்கேடா போனே? நாங்க டீ குடிச்சிட்டு வர்றவரை ஒழுங்கா இங்கேயே நிக்கனம்னுதானே சொல்லிட்டுப் போனோம். அறிவு இருக்கா உனக்கு? நாங்க அந்த பக்கம் போன உடனே நீ இந்த பக்கமா நழுவிட்டியா?"

"இல்லே சார் நான் இங்கேதான் இருக்கேன், நீங்க வேணா மொதலாளிகிட்டே கேட்டுப் பாருங்க" என்று அழமாட்ட குறையா சொன்னான் காவலாளி.

மறுபடியும் சத்தம் கேட்டு வெளியே வந்த அமைச்சர். "பிங்கி, சட் அப்! என்ன சத்தம் அங்கே?" என்று உரத்த குரலில் கேட்டாரு. பிங்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தது.

"என்னாங்கடா காவல் காக்கறீங்க! எவனோ உள்ளே பூந்திருக்கான். இல்லேன்னா பிங்கி இப்படி கத்தாது. மொதல்லே பூந்தவன் யாருன்னு தேடுங்க" என்று உரத்த குரலில் கூறினார் அமைச்சர்.

மரம் ஏறி ஒளிந்து கொண்டிருந்த சந்துருவிற்கு சப்த நாடியும் ஓடிங்கிப் போய்டிச்சு. அய்யய்யோ இப்படி வந்து சிக்கிட்டோமே. மாட்டிக்குவோம் போல இருக்கே!எப்படி அவனைப் பார்ப்பது! எனது இந்த எண்ணம் சாத்தியமா? என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கும்போதே சந்துருவின் மனதில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

"பிங்கியை அவுத்து விடுங்க, உங்களாலே என்ன செய்ய முடியும்? நேரத்துக்கு நல்லா சாப்பிடனும்! காவல் காக்காம டீ ரொம்ப முக்கியமா போச்சு இல்லே? விடியட்டும், உங்க ரெண்டுபேரையும் வேலையை விட்டே தூக்குறேன்." கோவத்தில் வார்த்தைகள் தடுமாற இறங்கி வந்த அமைச்சர் தானே பிங்கியை அவிழ்த்து விட்டார்.

பிங்கி வேகமாக மாடியை நோக்கிப் பாய்ந்தது. மாடி ஏறிய வேகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சந்துருவின் சட்டையை பிடித்து இழுத்தது. பின்னாடியே ஓடி வந்த போலீஸ், காவலாளி மற்றும் அமைச்சர் அனைவரும் அதிர்ந்து விட்டனர். அங்கே ஒரு பதினோரு வயது ஒத்த பையன் பயந்த முகத்துடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அமைச்சருக்கு கோபம் வந்துவிட்டது, "யார்ரா நீ" என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் ஒரு போலீஸ்காரர் ஓங்கி அந்த பையனின் கன்னத்தில் அறைந்தார். அறைந்த வேகத்தில் அந்த பையன் கொஞ்ச தூரத்தில் போய் சுருண்டு கீழே விழுந்தான்.

"எழுந்திரிடா எங்கே வந்தே" யார் நீ" என்று அமைச்சர் முடிப்பதற்குள் போலீசின் அடுத்த அடி அச்சிறுவனின் மீது விழுந்தது.

"இந்தாப்பா வெவரம் கேளு சும்மா அடிக்காதே. அடிச்சின்னா சரியாப் போயிடுமா?" என்றார் அமைச்சர்.

அடிச்ச அடியில் சந்துரு மடியில் கட்டிக் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் கீழே சிதறிப் போயின.

"என்னடா அது?" என்று போலீஸ் மறுபடியும் மிரட்டியது.

சத்தம் கேட்டு கல்யாண் வெளியே வந்தான். "என்ன டாடி, இங்கே ஒரே சத்தமா இருக்கு? யாரு வந்திருக்காங்க? அம்மா எங்கேப்பா? எனக்கு ஒரே பயமா இருக்கு! இது யாரு? "என்று கூறியபடி அந்த சிறுவனின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

"ஹேய்! சந்துரு நீ எங்கேடா இங்கே? உன்னை ஏன் போட்டு அடிக்கறாங்க!" என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் கல்யாண்.

"என்ன உனக்கு இவனை ஏற்கனவே தெரியுமா?"

"தெரியும் டாடி, இவன் எங்க பள்ளியில்தான் படிக்கறான். என்னோட கிளாஸ்தான் ரொம்ப நல்ல பையன். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா! பாவம் சந்துரு, அவனை அடிக்காதீங்கப்பா. சந்துரு ஒரு தப்பும் கண்டிப்பா பண்ண மாட்டான். ரொம்ப நல்லவன்பா" என்று கெஞ்சிய கல்யாண் தந்தையின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

"சரி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வா" என்று உள்ளே போனார் அமைச்சர்

"டேய் வாடா உள்ளே " என்று அழைத்த கல்யாண் அதிர்ந்து போனான். "என்ன சந்துரு கையிலே? எங்கே காட்டு" அதற்குள் அப்பாவின் குரல் வந்தவுடன் உள்ளே வேகமாக நண்பனின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் கல்யாண்.

"என்ன சத்தம் எல்லாரும் தூங்காமல் இங்கே என்ன செய்யறீங்க?" என்று கேட்ட கல்யாணோட அம்மா, ஒரு பையன் நிற்பதை அப்போதுதான் கவனித்தார்கள். "யாரு இந்த பையன்"

"என்னோட நண்பன் மம்மி"

"அது இருக்கட்டும் இந்த நேரத்தில் அவனுக்கு இங்கே என்ன வேலை? அவங்க வீட்டிலே தேடமாட்டாங்களா?"

"இல்லீங்கம்மா, எங்க அம்மாகிட்டே சொல்லிட்டுதான் வந்தேன்" இப்போதுதான் சந்துரு திருவாய் மலர்ந்தான்.

"என்ன சொல்லிட்டு வந்தியா? எதுக்கு இந்த இருட்டிலே மரம் ஏறி வந்தே?"

"இல்லே சார் இன்னைக்கு கல்யாணுக்கு பிறந்தநாள் இல்லையா? அதனால் முதல் கேக்கும், முதல் வாழ்த்தும் என்னோடதா இருக்கனும்னுதான் வந்தேன். ரெண்டு வருடமாக எப்படியாவது மொதல் ஆளா சொல்லனும்னு முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. கல்யாண் ரொம்ப பாதுகாப்பா இருக்கறதுனாலே என்னால் அவனுக்கு முதல் கேக் கொடுக்க முடிய வில்லை. நாங்க எல்லாம் ரொம்ப ஏழைங்க. உங்க வீட்டுலே எல்லாம் சேர்க்க மாட்டீங்கன்னு நினைச்சிதான், இப்படி தப்பிதமா முயற்சி பண்ணி உங்க வீட்டுக்குள்ளே வந்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார். போலீஸ் கிட்டே பிடிச்சி கொடுத்துடாதீங்க. நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன், ஒரு தங்கச்சிதான் இருக்கு. எங்க அம்மாவுக்கு யாருமே இல்லைங்க சார்" என்று அழ ஆரம்பித்தான் சந்துரு.

"மனம் நெகிழ்ந்த அந்த தாய், அவனை அருகே அழைத்து கன்னத்தில் தட்டி கொடுத்து, சரி உன் நண்பனுக்கு இப்பவே பிறந்த நாள் கொண்டாடுவோமா?" என்று அன்புடன் கேட்டார்கள்.

ஆர்வத்துடன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான் கல்யாண்.

"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ மணி பன்னிரண்டு தாண்டிடுச்சு. பரவா இல்லே, சந்தோஷமா சந்துரு?" என்று அன்பாக சந்துருவைப் பார்த்தார்.

"ரமா நீ போய் கல்யாண் போடாத டிரஸ் இருந்தால் ரெண்டு எடுத்து வா! சந்துரு நீ போய் கை கால்கள் கழுவிக் கொண்டுவா"

இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு. நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிறிய விழா ஆரம்பித்து முடிந்தும் விட்டது. அவனிடம் மிகவும் பரிவாக நடந்து கொண்ட கல்யாணின் பெற்றோர்களை மிகவும் வியப்புடனும் பெருமையுடனும் பார்த்தான் சந்துரு. நாம் எவ்வளவு தவறாக இவர்களை நினைத்து விட்டோம். மறுபடியும் இருவருடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

"ஏண்டா கேக் மட்டும் எடுத்து வரக்கூடாதா? கத்தி கூடவா எடுத்து வருவே? எங்கேயாவது குத்தி இருந்தா என்னடா செய்வே? இதுபோல் என்றுமே செய்யாதே. இனிமேல் என்னோட பிறந்த நாளுக்கு முன் தினமே எங்க வீட்டுக்கு வந்திடு" என்று மிகவும் முதிர்ச்சியான தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான் கல்யாண்.

இப்படி ஒரு குழந்தையை ஈன்று எடுத்ததிற்கு மிகவும் பெருமை அடைந்த அந்த பெற்றோர்கள் அதே சமயத்தில் சந்துருவின் நட்பையும் அன்பையும் சரிவிகத்தில் புரிந்து கொண்டனர்.

காவலாளியை அனுப்பி சந்துருவை அவங்க வீட்டில் விடச் சொன்னதோடு அல்லாமல், அடுத்த நாள் நடக்கப் போகும் கல்யாணின் பிறந்தநாள் விருந்திலும் சந்துருவின் வீட்டில் அனைவரையும் கலந்து கொள்ளச் சொல்லி அன்பு வேண்டுகோள் விடுத்து அச்சிறுவனை அனுப்பி வைத்தார்கள்.





Wednesday, October 14, 2009

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!!

அனைத்து நண்பர்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!




உடல் ஆரோக்கியம் மற்றும் இப்பூவுலகில் உள்ள அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இந்த திருநாளில் உங்களை நான் உளம் கனிந்த அன்போடு வாழ்த்துகிறேன் நண்பர்களே!

பிரியமுடன்
ரம்யா.....

செல்லும் பாதை!!


அனைத்து வலை நண்பர்களின் குட்டிச் செல்வங்களுடன் நான்!!

கட்டித் தங்கங்களான சொக்கத் தங்கங்களை ஒரு சிறிய சுற்றுலா அழைத்துச் செல்ல ஆசைப் பட்டேன்!

அந்த ஆசையின் விளைவு இந்த இடுகை....

பிஞ்சு விரல்களை செல்லமாக பிடித்து செல்கையில் நழுவி ஓடும் செல்லங்களை ஓடிப்பிடித்து ஒய்யாரமாக நடக்கும் பாதை இது...


வியக்க வைக்கும் இந்த வர்ணப்பாதையில் நடை பயில வாருங்கள் செல்லங்களே!!


வெள்ளைகோடுகளும் மஞ்சள் கோடுகளும் சீரான வழியை காட்டுகிறதோ!!


வானம், பூமி, மலைகளுக்கிடையே வழி நடத்திச் செல்லும் பாதையோ!!


இந்த கண்கொள்ளா காட்சியாக தோற்றமளிக்கும் பாதைகளில் நடப்பது நாங்கள் தானே!!
வளைந்து நெளிந்து செல்கையில் மரங்களில் பூத்து குலுங்கும் மலர்கள் எங்களுக்கு மாலையணிவித்து அல்லவா வழி காட்டுகிறது!!


இரவின் ஒளியில் மிளிரும் நடை பாதையின் அழகு என்னுடன் நடை பயிலும் கட்டித் தங்கங்களுக்கு இயற்கை காணிக்கையாகியதோ!!

இந்தப் பாதைகளை என்ன வென்று சொல்ல!
என்னுடன் நடக்கும் செல்லங்கள் கண்டு களிக்க மட்டும் அமைந்தவையோ!!


தெளிவான பாதை மட்டும் அல்ல நமது எண்ணங்களும் தெளிவாக்க இந்த பாதை அமைந்ததோ!!


கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும் இந்த பாதையில் நடக்கும் போது செல்லங்கள் குதியாட்டம் போடுவார்கள் இல்லையா!!
பார்க்கும் போதே மனம் துள்ளுகிறதே!!
நடந்து செல்லும் போது.........


குகை போல் அமைப்பு நிழல்கள் தரும் சுகம் தனித்தன்மை வாய்ந்ததோ!!


கண்களுக்கு மட்டும் அல்ல கருத்துக்கும் குளிர்ச்சிதான் இந்த வர்ண மலர்களுடன் கூடிய நடை பாதை!!

மலைகளுக்கு நடுவே தோன்றும் இந்த பாதைகளை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறதே!! இந்த பாதையில் என்னுடன் வரும் அன்புச் செல்லங்களுடன் நடந்தால்....


அச்சச்சோ இது பனி என்ற ஜில் அரக்கனால் ஏற்பட்ட ஈரம் நடக்க முடியாமல் நாங்க அழுததால் ஏற்பட்ட ஈரம் அல்ல!!


பாதையின் கருமை நிறம் கண்களை பறிக்கின்றதே!
எனது செல்லங்களின் கால்களில் கருமை நிறம் ஒட்டிக் கொள்ளுமோ!!







Monday, October 12, 2009

நண்பர்கள் சந்திப்பு - இரெண்டாம் பாகம்!!

சந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.

முதல் பாகம் படிக்க இங்கே கிளிக்கவும்.

"ஜமால் அண்ணே! எனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கீங்க. மறந்துடாதீங்க..."

"அதான் நாம வர வழியிலே பார்த்தோமே அங்கேயே போலாம் பாண்டி.
கண்டிப்பா வாங்கித் தாரேன். "

"என்ன நய்யி நய்யின்னு பேசிகிட்டு இருக்கீங்க? வாங்க கிளம்பலாம்."

"வால்பையன் நமக்கு வேண்டியதை வாங்கிட்டு நேரா கோல்டன் பீச் பக்கம் போய்டலாமா? "

"அதுவும் சரிதான் ஜீவன். என்ன ஜமாலு ரொம்ப யோசனையா இருக்கீங்க??"

"அதெல்லாம் ஒன்னும் இல்லே வாலு"

"அண்ணே ஜமால் அண்ணனோட அண்ணி ரொம்ப திட்டிட்டாங்க போல. அதான் உம்முன்னு இருக்காரு."

"திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "

"சரி முடிஞ்சி போச்சு இப்போ யோசிச்சு என்ன பலன்? வந்திட்டோம் வாங்க சீக்கிரமா ஆரம்பிக்கலாம்."

"என்ன வாலுண்ணே ஆரம்பிக்கணும்? கோல்டன் பீச் கிளம்பறதைத் தானே சொல்றீங்க?"
"இல்லே பாண்டி மேட்டரு வாங்கணும் அதைத்தான் சொல்றேன்"

"அட நான் போய் வாங்கிகிட்டு வந்திடறேன்"

"இல்லே
ஜமால்ண்ணே தோ! மேட்டரு மீட்டர் தூரத்துலேதான் இருக்கு நான் போய் வாங்கியாறேன். அதுவரை நீங்க பாமிலி மேட்டர் பேசிகிட்டு இருங்க"


"அதெல்லாம் இருக்கட்டும். நீ போய் ஒழுங்கா நல்ல பிராண்டா பார்த்து வாங்கியாரனும் சரியா?"

"என்னாது பிராண்டா என்னங்கண்ணே சொல்றீங்க? இது கூட எனக்கு தெரியாதா? அதெல்லாம் நான் கவனிச்சு நல்லா வாங்கியாறேன்"

"சரி இந்தாங்க பாண்டி பணம்..."

"ஜீவண்ணே! என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க. பணமெல்லாம் வேணாம். என் கிட்டே பணம் இருக்குண்ணே"

"சரி பேசிகிட்டே நிக்காதே சீக்கிரம் போயிட்டு வாங்கிகிட்டு வா. வாலுவிற்கு அவசரமான அவசரம்"

"சரி வாலுண்ணே கப்பு வேணுமா கோன் வேணுமா?"

"என்னாது கப்பு! கோனா! என்னையா சொல்றே நீயி?"

"ஐயோ அண்ணே! கப்பு ஐஸ் வேணுமா? இல்லே கோன் ஐஸ் வேணுமான்னு கேக்கறேன்!"

"தம்பி மொதல்லே மேட்டரு அப்புறம்தான் ஐஸ் எல்லாம் அதுக்கு சாதா ஐஸ் போதுமே கப்பு, கோன் எல்லாம் வேணாமே!"

"ஜீவன் அண்ணே! எனக்கு சுத்தமா புரியல என்று சத்தமாக கார்த்திகைப் பாண்டியன் வெள்ளையாக கூறினார்"

"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??"

"சரி விடுங்க வாலு, நானே போய் வாங்கியாறேன்.."

"சீக்கிரமா போயிட்டு வாங்க ஜமால். இன்னும் அவ்வளவு தூரம் போயிட்டு சுருக்கா வீடு திரும்பனும்..."

"தோ! வந்துடறேன் ஜீவண்ணே!"

"வாலு அண்ணே! ஜீவன் அண்ணே இதெல்லாம் வேணாம். நாம கோல்டன் பீச்சை சுத்திப் பாத்துட்டு திரும்பிடலாம்..."

"பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?"

"இல்லே வாலு பாண்டி பயப்படறாரு போல இருக்கே! வேணா நாம சரக்கு இல்லாமல் சுத்திட்டு வீட்டுக்கு போய்டலாம்..."

"அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்..."



"அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."

"ஜீவண்ணே! வந்துட்டேன் வாங்க வாலு, ஜீவண்ணே! பாண்டி எல்லாரும் கிளம்புவோம்..."

"அப்பாடா ஒரு வழியா கோல்டன் பீச் வந்தாச்சு. கொஞ்ச நேரம் அப்படியே காலாற நடக்கலாம் வாங்க எல்லாரும்..."

"என்ன ஜீவன்! கொஞ்சம் கூட வெவரம் இல்லாதவங்களா இருக்காங்க இந்த ரெண்டு பேரும். ஜீவன் அவங்க போகட்டும், நம்ம ரெண்டு பேரும் இப்படியே இங்கனகுள்ளே ஒதுங்கிக்கலாம்..."

"சரி வாலு, நீங்க ரெண்டு பேரும் சுத்தி பாத்துட்டு வாங்க. சரியா ரெண்டு மணிநேரம் சுத்திட்டு வந்திடனும். நாம கிளம்பிடலாம்..."

"சரி ஜீவண்ணே! பத்திரமா இருங்க, வாலு நீங்களும்தான் ரொம்ப அலம்பல் வேண்டாம் உஷாரா இருங்க. பாண்டி வாங்க அந்த ஜெயின்ட் வீல் சுத்தலாம்..."

"தோ! வாங்க ஜமால்ண்ணே போலாம், அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இவங்க பத்திரமா இருப்பாங்களா. பயமா இருக்கு. .."

"இதுலே அவங்களுக்கு சர்வீஸ் அதிகம் பத்திரமா இருப்பாங்க பாண்டி, கவலைப் படாதீங்க வாங்க போலாம்.."

"என்ன அது ஜீவன் பாக்கெட்டுலே இருந்து எடுக்குறீங்க?"

"ஒன்னும் இல்லே வாலு வீட்டுலே இருந்து ஊறுகாய் எடுத்து வந்தேன்"

"அட என்னாங்க? கடையிலே பாக்கெட் கிடைக்குமே அதை வாங்கி இருக்கலாமே? "இதை போய் வீட்டுலே இருந்தா எடுத்து வந்தீங்க ? அண்ணி பார்க்கலை"?

இல்லே பாட்டில்லே கொஞ்சமாதான் இருந்திச்சி அதுனாலே பாட்டிலோட நைசா பாக்கெட்டுலே வச்சிக்கிட்டு வந்துட்டேன். கடையிலே வாங்கினா நமக்கு ஒத்துக்காது. அதான் வீட்டுலே இருந்து தள்ளிகிட்டு வந்துட்டேன்.

"அப்படியா எங்கே கொடுங்க அட சுவை கூட நல்லா இருக்கு ஜீவன் "

வால்பையனின் கைபேசி செல்லமாக சிணுங்கியது. யாரு ஜீவன்?

"நிம்மதியா இருக்கலாம்னு வந்தா... "ஹலோ யாரு?? யாரு தங்கமணியா? சரி அதுக்கு என்ன இப்போ?"

"என்னாங்க நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க?"

"இங்கே பாரு!.. நான் ஒரு முக்கியமான வேலையிலே இளுக்கேன். சரியா நீ அப்புலமா பேசு..."

"என்னாங்க சரியா பேசுங்க ஏன் உளர்ற மாதிரி பேசறீங்க? அப்படி என்ன முக்கியம் ?"

"இங்கே பாலு நானு வந்து.... ஜீவன் அந்த பாட்டிலை எழுங்க..."

"ஐயோ! யாருங்க ஜீவன்.. பாட்டிலா என் கிட்டே பொய் சொல்லிட்டு அங்கே போய் தண்ணி அடிக்கிறீங்களா?"

"ஹலோ! நீ மொதல்ல போனை கீழே வை.. நான் அப்புலமா நேத்தைக்கு பேசறேன்..."

"ஐயோ! நேத்தைக்கா? அட என்னாங்க? நீங்க நேத்து ராத்திரிதானே சென்னைக்கு வண்டி ஏறினீங்க?"

"ஜீவன் ரொம்ப பேசறா போனை வச்சிடட்டுமா???"

"சரிங்க வாலு வச்சிடுங்க.. வீட்டுக்கு போய் தங்கச்சிகிட்டே சண்டை போடுங்க. இப்போ வேணாம்...."

"இருங்க ஜீவா ஒரே ஒரு பாட்டு படிக்கறேன். எம்பொண்டாட்டிக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்..."

"அட பாட்டு பாட தெரியுமா வாலு?"

"தெரியும் தோ பாடறேன் கேளுங்க! நீயும் கேட்டுக்கோம்மா...ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு! இந்த உலகமே சுத்துதடி பல ரவுண்டு"

"என்னாங்க என்ன பண்றீங்க அங்கே! யாரு பக்கத்திலே இருக்காங்க? எங்கே போனை கொடுங்க, அவங்க கிட்டே நான் பேசிக்கறேன்..."

"ஹேய்! என்னா என்னோட ஃப்ரெண்டை உனக்கு தெரியாது.. நீ எதுக்கு அவருகிட்டே பேசலும்..."

"வாலு என் கிட்டே கொடுங்க நான் பேசறேன்! தங்கச்சிகிட்டே. பயப்படவேனாம்னு சொல்றேன்..."

"இல்லே ஜீவன் அவ ரொம்ப திட்டுவா! நான் குடிக்கிறது புடிக்காது அதான்; நான் சமாளிக்கறேன்....... எம்மா வச்சிடு போனை நான் அப்புறமா கூப்புடறேன்.."

"முடிக்கவும் ஜீவனின் அலைபேசி சிணுங்கவும் சரியா இருந்தது. இதற்கிடையே ஜமாலும், கார்த்திகைப் பாண்டியனும் வந்து சேர்ந்தார்கள்.."

"ஜீவன் தன்னோட போன் அடிப்பது கவனிக்காம சிப்ஸ் சாப்பிடுவதிலேயே குறியா இருந்தார். ஆமா போன் யாரோடது? அடிச்சுகிட்டே இருக்கு! எங்கேப்பா இங்கே இருந்த ஊறுகா? இந்த வாலு எல்லாத்தையும் விளுங்கிட்டாறு..."

"ஜீவன் ஊறுகா நல்லா இருந்துச்சு அதான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்.."

"அண்ணே உங்க போன் அடிக்குது எடுத்து பேசுங்க" என்று அங்கலாயிச்சார் பாண்டி


"இல்லே பாண்டி வாலுவோட போன்தான் அடிக்குது "

"அட! இல்லே ஜீவன் உங்க போன்தான் அது கூடவா தெரியலை?" இது ஜமால்

"அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் போன் எடுத்துகிட்டு வரலை. வாலு இன்னொரு பெக் ஊத்துங்க..."

"பெக் என்ன கணக்கு ஜீவன் இருக்கறதை அப்படியே சாச்சுக்கோங்க"

"வாலு அண்ணே ஏன் எப்படி சொல்லுறீங்க ஏற்கனவே அவரோட போன் அடிக்கிறது கூட தெரியாம பேசிகிட்டு இருக்காரு"

"ஜமால் நான் என்ன பிளாட் ஆகிட்டேன்னு நினைக்கிறீங்களா, நான் எப்பவுமே ஸடடிதான்"

"ஐயோ! அண்ணே போன் விட்டு விட்டு அடிக்குது, நீங்க என்னவோ எடுக்காமே இப்படி..."

"ஓ! அட ஆமா! ஹல்லோ யாலு யாலு?"

"என்னாது என்னை தெரியலை?"


"ஆமாம் நீங்க யாலு? எதுவானாலும் நாளைக்கு பேசுங்க. நான் இப்போ பிஸி"

"என்னாது பிசியா?? என்னாங்க நான்தான் பேசறேன்""

"நான்னா யாரு தெரியலையே?"

"நான் தான்.... இன்னுமா என்னோட குரல் தெரியலை"??

"ஐயோ எங்கவீட்டு சிங்கமணி..... நீயா சரி என்ன சொல்லு!"

"டைம் என்னாச்சு ?"

"அதை அங்கே இருக்குற கடிகாரத்துலே பாறேம்மா அதை போய் ஏன் என்கிட்டே கேக்குறே??"

"இல்லே ஒரு மார்க்கமாத்தான் பேசறீங்க. எனக்கு ஒன்னும் புரியல சீக்கிரம் வீட்டுக்கு வாங்க ஆமா சொல்லிட்டேன்...."


"அதான் சொல்லிட்டே இல்லே அப்புறம் ஏன் உருமரே???"


"என்னா???"


"இல்லே வந்துடறேன்னு சொன்னேன் வை போனை! வேலை நிறைய இருக்கு.."


"தெரியும்! தெரியும்! உங்க வேலை என்னான்னு..."


"போனை வச்சிட்டாங்க! ஹா ஹா ஹா...."


"ஜீவன் அண்ணே! நீங்க ரொம்ப தைரியமா டீல் பண்ணிட்டீங்க"


"வால் எப்படி டீல் பண்ணினாருன்னு நாங்க பாக்காம போனோமே"


"சரி வாங்க நேரம் ஆச்சு கிளம்பலாம்..


"ஜீவன் அண்ணே நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க, நீங்க கிளம்புங்க"

"நானும் பாண்டியும் வாலுவை அப்துல்லா வீட்டுலே டிராப் பண்ணிட்டு கிளம்பறோம். பாண்டிக்கு பர்ச்சஸ் பண்ண போகனுமாம்..."

"இல்லேண்ணே! அவரு(ஜீவன்) ஒன்னும் ஸடடியா இல்லே லேசா தூக்கம் வருதுன்னு சொன்னாரு . அதுனாலே கடைக்கு போக எனக்கு அவசரம் இல்லே"

"ரெண்டு பேரையும் பொறுப்பா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்துட்டு நாம் கிளம்பலாம்..."

"மறுபடியும் ஒரு நாள் சந்திப்போம்... பை பை பை எல்லாருக்கும்"

Tuesday, October 6, 2009

தேவதையின் வரங்கள்!!


தனக்குத்தானே சட்டம் வகித்துக் கொள்ளுதல், என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த "தேவதையின் வரங்கள்" என்ற இடுகையை வெளியிட துணிந்து விட்டேன்.

சமீப காலமாக வலையுலகில் தொடர் பதிவுகள் அனைவரையும் கலக்க வைத்தது - கேள்வி பதில்கள், தேவதையின் வருகை.. இதில் "தேவதையின் வரங்கள்" என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால், அந்த தலைப்பில் நானே என்னை எழுத அழைத்து இதோ எழுதவும் ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் உங்களுக்கு புரியும் (இப்படி குழப்பினா எப்படி புரியும், புரியாம எழுதறது அப்புறம் இப்படி ஒரு பிட்டை போடறது). நான் விளக்க தேவை இல்லை (அட இங்கே பாருய்யா! இந்த மாதிரி தொல்லைகள் வேறே! இப்படி நீங்க சொல்றது என் காதுலே விழுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுத்துக்கோங்க) .

சரி என்ன நடக்குதுன்னு இப்போ பார்க்கலாம்!

தேவதை என் முன்னே வந்தாச்சு! என்னுடைய அழைப்பை ஏற்று ரெண்டு தேவதைகள் வந்து விட்டார்கள். ஒரு தேவதை அமைதி, ஒரு தேவதை கொஞ்சம் லேசா குறும்பு அதிகம்.

தேவதையிடம் எவ்வளவு வரம் என்றெல்லாம் விதி முறைகள் வகுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்படும் தேவைகள் நிறைவடையும் வரை கேக்கலாமே! நீங்க என்ன சொல்லவரீங்க? சரிதானே நண்பர்களே!

பாருங்க ரெண்டு தேவதையும் எப்படி ஜொலிக்கராங்கன்னு!!


இவங்கதான் சாதுவான தேவதை


இவங்கதான் குறும்பான தேவதை

வரம் நம்பர் ஒன்று
சிக்கன் குனியா, தக்காளி குனியா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரையும் தாக்கக் கூடாது. மேலும் குழந்தைகளை டச் பண்ணவே கூடாது. மீறி இந்த நோய் பரவ வேண்டும் என்று விதி இருந்தால், அதை நீயே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வரம் நம்பெர் இரெண்டு
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.

வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது.

வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.

வரம் நம்பர் ஆறு
நண்பர் குடுகுடுப்பையார் என்னை அவரது ஸ்பெஷல் வலைப்பதிவான "வருங்கால முதல்வர்" என்ற வலைப்பதிவில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். அந்த தலைப்பை எழுதும் போது இந்த ஆசை எனது மனதினுள்ளே தோன்றியது,

என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.

வரம் நம்பர் ஏழு
சுனாமி, நிலநடுக்கம் இது போல் பேரழிவைத் தரும் இயற்கை சீற்றங்கள் அறவே இருக்கக் கூடாது.

வரம் நம்பர் எட்டு
நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.

வரம் நம்பர் ஒன்பது
அப்புறம், தேவதைகளே!! நீங்கள் இருவரும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும்.

வரம் நம்பர் பத்து
நானும் எனது தோழிகள் ஐந்து பேரும் நினைக்கும் போதெல்லாம் இன்விசிபிள் ஆகவேண்டும். அப்படி ஆகி எல்லா சினிமா தியேட்டரிலும் நைசா போயி சினிமா பார்க்கணும். பிடித்த காட்ச்சிகளில் தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து மகிழ வேண்டும். யாருமே சிரிக்காத போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். ஹோட்டல்லே போயி வேண்டியதை எடுத்து சாப்பிடனும். அதான் நாங்க யாருக்கும் தெரிய மாட்டோமே!

வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்

வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது

வரம் நம்பர் பதிமூன்று
கடலுக்கு அடியில் போயி எல்லாவற்றையும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணும். ஆனா மூச்சு முட்டக் கூடாது. பவளப் பாறை மேலே எல்லாம் ஏறி ஒக்காந்துக்கணும்.

வரம் நம்பர் பதினான்கு
வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு பார்த்து முடிந்தால் கையோட எடுத்திகிட்டு வந்துடனும்.

வரம் நம்பர் பதினைந்து
ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும்.

எனது கோரிக்கைகளை கேட்டு தேவதைகள் ஓடி போயிடப் போறாங்க!

அதனாலே இப்போதைக்கு இவ்வளவு போதும்........






Friday, October 2, 2009

காத்திருந்த விழிகளில் கண்ணீர் ஏனோ!!


இலவின் மென்மை
இசையின் இனிமை
மதியின் குளுமை
மனதின் வலிமை
இவற்றில் கிடைக்கும்
நெஞ்சின் நிறைவை
நித்திய சோதனையில்
சத்தியமா மறந்தாய்
காத்திருந்த கண்கள்
நேற்று வரை தோற்க
மனதின் மகிழ்ச்சி
கனவாகிப் போக
காத்திருந்த காலங்கள்
கணிதம் தெரியாமல்
காலாவதியாகிப் போனதே
நிஜம் நிழலாகையில்
கருத்தில் ஏற்பட்ட வலி
கண்ணீர் பெருக்கியதே
வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு
புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!!