Friday, July 31, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம்: பகுதி - 4

நம் வலை நண்பர்கள் ஆடும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்!!


பங்கேற்பவர்கள்
==============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்


அடுத்து களம் இறங்கியவர் ஆஸ்திரேலிய அணி கேப்டன் Ricky Ponting(Captain). கேப்டன் வந்த வேகத்தில் ரன்களை குவித்தார். மள மளவென்று ரன் ரேட் ஏறியது.
இந்த நிலவரப்படி விக்கெட் எதுவும் சேதமில்லாமல் 60 ரன்கள் எடுத்திருந்தார்கள் ஆஸ்திரேலியர்கள். (60/3).

களத்தில் ஆடிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள் Ricky Ponting(Captain) மற்றும் Simon Katich

ஜீவன் ஏழு ஓவர் முடித்திருந்தார். கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து விட்ட திருப்தி அவர் முகத்தில் காணப்பட்டது.

குடுகுடுப்பை அவரது ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை (Simon Katich) வீழ்த்தினார். தவறான கணிப்பு Simon Katich ஓடி ரன் அவுட் ஆனார். சரியான நேரத்தில் பந்தை வீசி ரன் அவுட் செய்தது நம் இந்திய அணி விக்கெட் கீப்பர் ஜமால்.

கேப்டனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குடுகுடுப்பையை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார் டோணி. கரகோஷம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தது. (72/4).

குடுகுடுப்பை கொடுத்த ரன்கள் மொத்தம் 36. ஜீவன் கொடுத்த ரன்கள் மொத்தம் 36.

ஜீவனுக்கும், குடுகுடுப்பைக்கும் அடுத்து வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.

வால்பையனிடம் இருந்து முதல் பந்து. லாகவமாக ரிக்கி பாண்டிங் மட்டையை சுழற்றினார். பந்து பவுண்டரிக்கு போவதை தடுத்தார் அப்பாவி முரு. பந்து வீசிய அடுத்த நிமிடம் பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தார் வால்பையன்.

அணிமா பந்தை எடுத்து வந்து வால்பையனிடம் கொடுத்தார். பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மறுபடியும் பந்து வீச தயாரானார் வால்பையன்.

ரிக்கி பாண்டிங் வால்பையனை வினோதமாகப் பார்க்கிறார். ஏதோ எழுதுகிறார், மறுபடியும் பந்து வீச வருகிறார். கொஞ்சம் அசால்ட்டாக இருப்பது போல் தெரிந்தது. அதனால் மட்டையால் பந்தை அடிப்பது சுலபம் என்று சந்தோஷ எல்லையை கடந்தார் போல் லேசா புன்முறுவலுடன் அடுத்த பந்தை எதிர் பார்த்தார்.

பந்து வீசிய அடுத்த வினாடி வால்பையன் பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார். மைதானத்தில் இருப்பவர்களுக்கும், விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் என்ன எழுதுகிறார் என்று புரியவில்லை. பந்து வால்பையனிடம் வந்த அடுத்த வினாடி பேப்பரை மடித்து வைத்துக் கொண்டு பலம் அனைத்தும் பிரயோகித்து பந்தை வீசினார். அடுத்த நிமிடம் அங்கேயே நின்று எழுத ஆரம்பித்தார்.

குழம்பி போன பாட்ஸ்மேன் வால்பையனின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாத நிலையில் Matthew Hayden அநியாயத்துக்கு அவுட் ஆனார். அவுட் ஆகும்போது அவர் எடுத்த ரன்கள் 23.

அடுத்து பந்து வீச்சாளர் உருப்புடாதது அணிமா. இவர் ஆல் ரவுண்டர். சுழற்ப் பந்து வீச்சாளர். இவர் வீசும் பந்தை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. பந்தை எதிர் கொள்பவர் Adam Gilchrist. பந்தின் வேகம் காற்றை கிழித்திக் கொண்டு வந்தது. பந்து வேகத்தினை எதிர் கொள்ள முடியாமல் பெரும் முயற்சி எடுத்து மட்டையை சுழற்றினார் Adam Gilchrist. பந்து அங்கேயே விழுந்தது. ஓடுவதற்கு கூட ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை.

சிரித்த முகம் அணிமாவிற்கு, அவர் என்ன நினைக்கிறார் என்று கணிப்பதில் ரொம்ப கஷ்டம். அதுவும் பாட்ஸ்மேனுக்கு மிகவும் சவாலாக இருந்தது அவரோட சிரிப்பு. எதுக்கு சிரிக்கிறார் என்று யோசிச்சே மண்டை காஞ்சிப் போனார் ரிக்கி பாண்டிங். பந்தை வீசிய அடுத்த நிமிடம் அப்பாவி முருவிடம் ஓடிப் போய்டுவார் அணிமா. அப்பாவி முரு பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார்.யார் எதற்கு ஓடுகிறார்கள் என்று அரங்கத்திலும் சரி மைதானத்திலும் சரி ஒன்றும் புரியாமல் போனது. அப்பாவி முரு ஓடாமல் இருந்தால் அவருடன் பதிவுகள் பற்றி பேசுவாராம். யார் யார் புது பதிவர், எத்தனை பதிவு போட்டிருக்காங்க. யார் யாரை சந்திதாங்க, இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் யார் என்று கேள்விகள் கேட்டு அப்பாவி முருவை இன்னும் அதிகமா அப்பாவியாக்கி மகிழ்ச்சி அடைவார். அதுதான் அணிமா முகத்தில் தேங்கி நிற்கும் சிரிப்புக்கு அர்த்தமாக்கும்.

இம்முறை உருப்புடாதது அணிமா என்ன செய்கிறார் என்ற கவனம் ஈர்க்க பந்தை எதிர் கொள்வதில் கோட்டை விட்டார் ரிக்கி பாண்டிங். ரன் எடுக்க முடியவில்லை.

அவுட் ஆகாமல் இருக்கோமே என்று மகிழ்ச்சியடைந்து இது என்ன சூழ்ச்சி என்று புரியாத வண்ணம் சுற்றி ஒரு முறை நிலவரம் அறிகிறார். தூரத்தில் நசரேயன் ஏதோ எழுதிக் கொண்டு இருப்பது தெரிந்தது. குழப்பத்தின் உச்சிக்கே சென்ற ரிக்கி பாண்டிங் சரி இம்முறை நசரேயன் பக்கமா பந்தை விரட்டலாம் என்று அடுத்த பந்திற்கு காத்திருந்தார். ஆனாலும் அவரின் பந்தை எதிர் கொள்ள சுழற்றிய மட்டை ரெண்டு ரன்கள் தான் எடுத்துக் கொடுத்தது.

இருந்தாலும் அடுத்து அடுத்து ஏழு பௌண்டரிகளை கொடுத்தார் Adam Gilchrist. ரிக்கி பாண்டிங்கும் வேகமாக ரன்கள் குவித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் எதிராளிகள் சற்று குழப்பவாதிங்களாகவே இருப்பதாக மனதிற்கு பட்டது. அவர்களின் பந்து வரும் வேகத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் ஆஸ்திரிலேயர்கள் விளையாட ஆரம்பித்தனர்.

மெது மெதுவாக ரிக்கி பாண்டிங் எழுபத்தைந்தை நெருங்கினார். Adam Gilchrist மெதுவாக 40 ரன்களை எடுத்த நிலையில் அணிமாவின் பந்தில் சற்றே ஏமாந்து மட்டையை சுழற்றிய Adam Gilchrist அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய Michael Clarke இருபது ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் வால்பையனால் திருப்பி அனுப்பப்பட்டார். இம்முறை புத்திசாலித்தனமாக கேட்ச் பிடிப்பது அப்பாவி முரு. (150/6) . அப்பாவி முரு பிடித்த கேட்சை படத்தில் பார்த்து ரசிக்கவும்.

இப்படியாக இருவரும் அதிகம் ரன் கொடுக்காமல் தலா ஏழு ஓவர்களை முடித்தார்கள்.

முடிவடைந்த ஓவர்கள் 28. ஆஸ்திரேலியர்கள் எடுத்த மொத்த ரன்கள் 150. விக்கெட் 6 .

இப்போது இடைவேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி தேநீரும் பெப்சியும் பருகிக் கொடிருந்தார்கள்.

கேப்டன் டோணி வால்பையனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வால்பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்டுக்காம பெப்சி குடிப்பதில் மும்முரமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டார்.

ஒரு வழியாக மவுனத்தை கலைத்த டோணி, நானும் பார்த்துகிட்டே இருந்தேன் என்ன கையில்? பந்து வீசியவுடன் எழுத ஆரம்பிக்கறீங்க? வாட் Mr.வால்பையன்? என கேட்டார்.

என்னிடம் கேட்டார் டோணி நான்தான் நேராக உங்களிடமே கேட்டுக் கொள்ளுமாறு கூறு விட்டேன் வால்பையன். ஆமா அப்படி என்ன எழுதறீங்க என்று கேட்டார் அம்பையர் ராகவன்.

ஒன்னுமில்லீங்கோ ஹி ஹி ஹி என்று கையை பின்னால் ஒளித்துக் கொள்கிறார். கையை பிடித்து டோணி இழுக்க, வால்பையனின் கையில் பேப்பர் மற்றும் பேனா! இதெல்லாம் ஆடு களத்திற்கு கொண்டு வரக்கூடாது என்றார் அம்பயர் ராகவன்.

அட போங்கண்ணே..... நான் பாட்டுக்க எதிர் கவுஜ எழுதிகிட்டு சாக்கனாங்கட சரக்கு பானைய பத்தி ஆராயிச்சி பண்ணிக்கிட்டு.... வலையுலகில நடு ... நடுவுல .... யாரு என்ன கேள்வி கேட்டாலும் பின் நவீனத் துவத்துல பதில் சொல்லி அவுங்க மண்டைய பிச்சுக்க வெச்சிட்டிருந்த என்ன கூட்டிகிட்டு வந்து கிரிக்கெட் ஆடுன்னு சொன்னா இந்த வேலையை யார் செய்வா? அதான் கையிலே பேப்பர் பேனாவோட வந்துட்டேன்.

நீ எதிர் கவுஜ எழுதறதுளையும், சரக்க பத்தி விவரம் சொல்றதுலேயும் கில்லாடிதான் அதை நான் மறுக்கலை. இருந்தாலும் கிரிக்கெட்க்குன்னு சில ரூல்ஸ் இருக்கு இல்லையா? அதைத்தான் கடைபிடிக்கணும்.

ஹலோ லவ்டேல் மேடி.... கம் ஹியர்...!! இவரோட கையிலே இருக்கிற பேப்பரையும்.. பேனாவையும்..... வாங்கிகிட்டு போயி அங்கே உக்காந்து இருக்காரே உங்க ஊருக்காரர் வடக்குபட்டி ராமசாமி கிட்டே கொடுத்திடுங்க. கையிலே இதெல்லாம் வச்சிருந்தா எப்படி பந்து வீச முடியும்.....

வால்பையன் கொடுத்திடுங்க, கேப்டன் கேக்குறாரு இல்லே என்றார் ஜீவன்.

அதெல்லாம் கொடுக்க முடியாது ஜீவன். எழுத பெண்டிங் கேசு நிறைய சேர்ந்து போச்சு.

நமக்கு பெரிய பொறுப்பு கொடுத்திருக்காங்க வால்பையன் அதுனாலே நீங்க அந்த பேப்பரையும் பேனாவையும் என் கிட்டே கொடுங்க விளையாடி முடிச்சவுடனே நான் உங்க கிட்டேயே திருப்பி கொடுத்திடறேன் என்று மறுபடியும் ஜீவன் கூறினார்.

இல்லே ஜீவன் யார் கேட்டாலும் நான் தர்றதா இல்லே.

அடேய் வண்டுருட்டி மண்டையா ..... !! ஜீவன் அண்ணன் சொல்ல்றாருல்லோ ..... அந்த பேப்பரையும் .... பேனாவையும் .. இங்க குட்ரா ....என்று கேட்கிறார் மறுபடியும் மேடி

நோ நோ அதெல்லாம் முடியாது. இதே வச்சுகிட்டே தான் ஏழு ஓவர் முடிச்சிருக்கேன் தெரியுமா? பாருங்க எவ்வளவு எழுதி இருக்கேன்னு.

நடுவே டோணி புகுந்து Mr.வால்பையன் நீங்க பேசறது ரொம்ப தப்பு. ப்ளீஸ் அந்த பேப்பரை கொடுத்திடுங்க. அடுத்து நீங்க பந்து கேட்ச் பிடிக்க வேண்டிய சூழ் நிலை உருவாகலாம் அப்போ இதெல்லாம் சரிப்பட்டு வராது.

ஏண்டா.. வெந்து...வேகாத அர மண்டையா..... நம்ப தலைவரு தோணி சார் சொல்றாருல்லோ ...... ஆனா நீ கேக்க மாட்டேன்னு கொழந்தப் புள்ளையாட்டோ அடம் புடிக்குற....!! பிச்சுபுடுவன்.. பிச்சு...படவா.......

வால்பையனுக்கு செம கோபம் வந்திடிச்சு, பிடிச்சி மேடியை திட்ட ஆரம்பிக்கிறாரு போய்யா அதெல்லாம் கொடுக்க முடியாது. ராகவன் சார் பந்து வீசணும் அவ்வளவுதானே! என்னாலே முடியும். மேடி நீ போகலாம். யாரு கூப்பிடுவாங்கன்னு காத்துகிட்டா இருக்கே எதுக்கு இப்படி தலை தெறிக்க ஓடியாரே? ஓடி வர ஆளுங்களையும் மூஞ்சிங்களையும் பாரு. வீட்டு பக்கம் வா காலை உடைக்கிறேன்!

அடங்கொன்னியா.....!! ஏண்டா பிஞ்ச மண்டையா.....!! நீ ..... என் கால ஒடைக்கிரியா...?? நாலு மாசமா பல்லு வெலக்காத பய நீ... உனக்கு இவ்ளோ மண்ட கொழுப்பா....!!

அடேய்... சாரஜர் மண்டையா....!!! நானெல்லா இங்க பொறக்க வேண்டிய ஆளு இல்லடா....!! சுச்சர்லாந்து பேங்குல குப்பற படுத்துகிட்டு பணமென்ற வேல பாக்கவேண்டியது...... யென்ட்ர கெரவம்... இங்க வந்து மாட்டிகிட்டன் ....!!

இங்க பாருடா ஆன் டூட்டி மண்டயா... மருவாதையா பேப்பரையும்... பேனாவையும் எங்கிட்ட குடுத்துபோடு..... இல்லீனா திரும்பி நிக்க வெச்சு..." அங்க பாரு உங்கொப்புக்சி ஆத்துக்குள்ள மீன் புடிக்கிறாரு ன்னு சொல்லி எட்டி ஒதச்ச்சன்னு வெச்சுக்கோ.....விக்க்ரமாதித்தியன் கதையில வர்ற வேதாளம் மாறி ஈரோட்டு காவிரி ஆத்து பாலத்துல தலகீழா தொங்குவ பாத்துக்கோ.....!!!

திட்டிகிட்டு நிக்கற மேடியை பார்த்து மறுபடியும் சினம் கொண்ட வால்பையன்...." யோவ் மேடி ... நீ போமாட்ட....?? என்று கேட்டு கொண்டே அடிக்க ஓடுகிறார். ஓடுகிற வழியிலே பெப்சி குடிச்சிக்கிட்டு இருந்த அ.மு.செய்யது மேலே இடிக்க அந்த பெப்சி வணங்காமுடி மேல் கொட்டிப் போச்சு.

இந்த செய்கையில் வால்பையன் மீது அ.மு.செய்யதுக்கும், அண்ணன் வணங்காமுடிக்கும் கோபம் வந்துடுது.....

அடடா பெப்சி போச்சே என்ற கோபத்துடன் வால்பையன் திஸ் இஸ் டூ மச் என்கிறார் அ.மு.செய்யது. அதை ஆமோதிக்கறார் வணங்காமுடி.

என்ன? டூ மச்! த்ரீ மச்! இது மாதிரி பேச எனக்கும் தெரியும். கட்டிங் இல்லாம வந்தது ரொம்ப தப்பா போச்சு.

என்ன அண்ணாத்தே கட்ச்சீலே இப்படி பண்ணிபுட்டியே? காலைலயே சரக்கா? தள்ளாடிகிட்டே வந்து விழுந்தியா! இல்லே நிசமாலுமே ஓடியாந்தியா! ஐயே இங்கன நாங்க குந்திக்கினு கீரோமே கண்ணு தெரியலே அப்பாலே போ! எதையும் கண்டுக்காமே ஏதோ மாதிரி வந்து முட்டிக்கினியே! என்கிறார் வணங்காமுடி.

என்னை என்ன எருமைன்னு சொல்ல வரியா? நீதான் பந்து பொறுக்க வந்த பண்ணி குட்டி மாதிரி இருக்கே.

ஆமாம் இவரு டீ ராஜேந்திரன் வீட்டு பக்கத்து வீடு. சாராய கடைல கீற பொடிப்பசங்கள எல்லாம் இங்க இட்டாந்தா இப்பிடித்தான். என்று வணங்காமுடி முணு முணுக்க.

ஏய் யாரப்பாத்து பொடிப்பயன்னு சொல்லற.

ஆமாமா வேறே வயசானவருன்னா சொல்றதாம்!என்று முணங்கிக்கொண்டே. அண்ணாத்தே உன்னிய யாராச்சு பொடிப்பயன்னு சொல்லுவாங்களாணாத்தே. நீங்க தானே இங்க கீரதுலயே பெருசு. என்றார் வணங்காமுடி.

என்னது பெருசா? வால்பையன்...

அதான், அண்ணாத்தே பெரிய மனுஷர். வணங்காமுடி.

டேய் ரொம்ப பேசாத போ... அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய்டு.

பாவம் பெருசுன்னு பாத்தா ரொம்பத்தான் அலட்ரே. இன்னா நினைச்சிகிட்டு கீரே? எனக்கு கோவம் வந்திச்சு நடு மண்டையிலே நச்சுன்னு போட்டா நாக்கு தள்ளிக்கும். இது வணங்காமுடி

எங்கே போடு பார்க்கலாம், நீயோ ஒரு குழந்தை பிள்ளை. உனக்கு மண்டை எங்கே இருக்குன்னே தெரியாது. அதுலே நடு மண்டையை எப்படி தேடுவே? உன்னோட கூட்டாளி முழிக்கிற முழிய பாரு பந்த திரிடிகிட்டு வந்த மாதிரி முழிக்கிறாரு.

இங்கே பாருங்க வால்பையன் என்னை அனாவசியமா வம்புக்கு இழுக்காதீங்க. அப்புறமா எனக்கு கோவம் வந்திடும். வந்திச்சுன்னா...... கோவத்தின் உச்சியிலே அ.மு.செய்யது.

கோவம் வந்தா என்னா பண்ணுவே சொல்லு சொல்லு.....

நாங்க எல்லாம் சொல்லமாட்டோம் செஞ்சிடுவோம்லே...

அடங்கொக்காமக்கா! என்னை இவிங்க அடிப்பாங்கலாமா நான் அதெ பாத்துகிட்டு சும்மா இருபேனாமா. எங்கே கையை ஓங்குங்க பாக்கலாம். கையை ஓடிச்சிடுவேனாக்கும்.

ஐய! என்னாங்க நம்மளை நம்பி இந்தியாவோட கௌரவத்தை கொடுத்திருக்காங்க. நீங்க இப்படி சண்டை போடறீங்க. இது சரியா வால்பையன்? என்கிறார் அ.மு.செய்யது.

என்னா நம்பளா? நம்ப இல்லே தம்பி எங்களை நம்பி கொடுத்திருக்காங்க.உங்களை எல்லாம் போனாப் போகுதுன்னு கூட்டிகிட்டு வந்திருக்காங்க. ஏதாவது மிட்டாய் குடுத்தா வாங்கி சப்பிட்டிட்டு பந்து உங்ககிட்டே வந்தா மட்டும் பொறுக்கிப் போட்டுட்டு நல்ல பேரு வாங்கிகிகங்க. சொல்றது புரியுதா?

என்ன பந்து பொருக்கி போடறதா? அப்போது லவ்டேல் மேடி அங்கு வந்து சேருகிறார்.

என்னாங்கோவ்...... வால்பையனுங்கோ... குழந்தை பசங்க கிட்டே உங்க வீரத்தை காட்டுரீங்களாக்கும்... நம்ப்ளமாதிரி வீரன்கிட்டே காட்டுங்........

இங்கே பாரு உங்கிட்டே பேச எனக்கு நேரம் இல்லே, விளையாட கூப்பிடறாங்க நான் போகனும் வழி விடு.

ஐயே! இவரு பெரிய விளையாட்டு வீரருங்கோஓஓஓஓஓவ்.. ஒன்ற விளையாட்டுத் தெறமை என்ற மனசுக்கு தெர்யலைங்கோஓஓஓஒவ்வ்...

டேய் வேணாம் எல்லாரும் என்னைய வெறுப்பேத்தரமாதிரி தெரியுது. இதோட நிறுத்திக்கோ.

நெம்ப சாரிங்கோஓஓஓஓஓவ்............ ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடிக்கிரெநுங்கோஓஓ. கோவம் வராதுங்களே........

இதோ....... என்ற பாட்டுங்.....

ஏ..... அகுலு பாரு .. பிகுலு பாரு ...
அண்டா ... உண்டா.... ரவுசு பாரு ...
கோடமபாக்காம் மயிலு பாரு......
ஏ ... இந்தா ... ஏ ... இந்தா ... ஏ ... இந்தா ...

வளரும்
ரம்யா....

Monday, July 27, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - பகுதி - 3

நம் வலை நண்பர்கள் ஆடும் அதிரடி கிரிக்கெட்!!




அறிமுகங்கள் ஒரு வழியாக முடிந்து அனைவரும் மைதானத்தில் குழுமினார்கள். இரெண்டு அம்பையர்களும் ஆடுகளத்தின் நிலையையும், வானிலை பற்றியும் விளக்கம் அளித்தனர். ஆடுகளம் பேட்டிங் ஆடுபவர்களுக்கு வசதியாக இருப்பதாக ஆஸ்திரேலிய அம்பையர் கூறினார். அதை நம் இந்திய அம்பையரும் ஆமோதித்தார்.

இரு அம்பையர்களும் மற்றும் இரு அணி கேப்டன்களும் ஒன்று சேர்ந்து டாஸ் போட தயார் ஆனார்கள்.இந்திய அணி கேப்டன் பூவா தலையாவில் "பூ" செலக்ட் பண்ணினார். இந்திய அணியின் அம்பையருக்கு டாஸ் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. டாஸ்சில் இந்தியா வென்றது. இந்திய அணி கேப்டன், துணை கேப்டனுடனும், அம்பையருடனும் கலந்தாலோசித்து முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு விட்டு குடுக்கலாம் என்று முடிவிற்கு வந்தனர். இந்த முடிவை மற்ற இந்திய அணி வீரர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், பார்வையாளர்கள் எதிர்ப்பு குரல்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுபவர்கள் எல்லாருமே புதியவர்கள் கேப்டனைத் தவிர. அதனால் பேட்டிங் எடுப்பதுதான் இந்திய அணியினருக்கு நல்லது என்று குரல் கொடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி: பேட்டிங்
இந்திய அணி: பீல்டிங்

பார்வையாளர்கள் பேசுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மைதானம் பரபரப்பானது. பௌலிங் செய்ய தயாரான இந்திய அணியினர் அவரவர்களின் நிலைப்பாடை கேட்டு தெரிந்து கொண்டார்கள். ஒபனிங் பௌலர் வேகபந்து வீச்சாளர் நமது துணை கேப்டன் ஜீவன். பந்து வீச தயார் ஆனார். கேப்டன் சில நிமிடங்கள் துணை கேப்டனுடன் காதில் முணுமுணுத்தார். பிறகு அனைவரும் சரியான இடத்தில் இருக்கிறார்களா என்பதை மறுபடியும் உறுதி செய்து கொண்டு துணை கேப்டனின் பந்து வீச்சை பார்க்க நம்முடன் கேப்டனும் தயார் ஆனார்.

முதல் பந்து! பார்வையாளர்களின் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம்.

வேகமாக வீசிய ஜீவனின் பந்தில் நிலைகுலைந்து போன Michael Hussey ரன் எடுக்காமல் சமாளித்தார். அடுத்த பந்தில் கவுன்டர் அட்டாக். இந்த பந்திலும் ரன் எடுக்க முடியவில்லை. டோணிக்கு முகத்தில் லேசாக மகிழ்ச்சி தெரிந்தது. புதியவர்கள் கை கொடுத்து விட்டார்கள் என்று நிம்மதியும் முகத்தில் தெரிந்தது. மூன்றாவது பந்து வீச்சில் மைக்கேல் நான்கு ரன்கள் எடுத்து விட்டார். நான்காவது பந்தில் மைக்கேல் இடது புறத்தில் வேகமாக தட்டி (Flick) விட்டார். உருப்படாதது அணிமா அதை திறமையாக தடுத்து ஸ்டம்ப்பை குறிபார்க்கிறார் மைக்கேல் பயந்து திரும்புகிறார். ஐந்தாவது பந்து மட்டை விளிம்பில் பட்டு வால்பையனிடம் செல்கிறது. பந்தை மிக விரைவாக எடுத்து திருப்பி அடிக்கிறார். ரன் எடுப்பதற்காக ஓடுவதில் இருவருக்கும் வேற்றுமை ஏற்பட ரன்னை முழுமை செய்யாமல் அவரவர் இடத்திற்கே திரும்புகின்றனர். ஆறாவது பந்து முருவிடம் செல்கிறது. அவரும் விறு விறுப்பாக பந்தை எடுத்து கீப்பரிடம் அடிக்கிறார். அதனால் ரன் எதுவும் அடிக்காமல் கடைசி பந்தும் முடிவடைகிறது.தனது முதல் ஓவரை முடித்துக் கொண்டார் ஜீவன். ரன்(4/0)

அடுத்து களம் இறங்கியவர் வேகப் பந்து வீச்சாளர் குடுகுடுப்பை. டோணி அவர் அருகே வந்து எதிராளியின் ஆட்டம் விவரம் பற்றி கூறிச் சென்றார். சில நிமிடங்களில் குடுகுடுப்பையின் பக்கம் இருந்து அதி வேகமாகப் பறந்து வந்த பந்து ரன் எதுவும் இல்லாமல் விக்கெட் கீப்பரின் கைகளை பதம் பார்த்தது.

பாட்ஸ்மேன் Matthew Hayden சற்றே நிதானத்திற்கு வந்து யோசிக்க ஆரம்பித்தார். புதியவர்களை சாதரணமாக் நினைத்து விட்டோமே! இவ்வளவு வேகமா விளையாடறாங்க என்று ஆச்சர்யமாக வினாடிக்கும் குறைவான நேரத்தில் அம்பையரை நோட்டம் விட்டார். ரெண்டு அம்பையர்களும் பந்து வரும் திசையை நோக்கி தெளிவாக நின்று கொண்டிருந்தார்கள். ஒ முதல் பௌலர் மிரட்டி விட்டாரே, இவரும் மிரட்டுவாரோ புதியவர்களின் பெயர்கள் புது மாதிரியாகத்தான் இருக்கிறது. அடுத்து வரும் பந்தை நோக்கி தனது மட்டையை சுழற்ற ஆரம்பித்தார் Matthew Hayden.

இந்த முறை பந்து சிக்ஸ்சருக்கு அதிவேகமாகப் பறந்தது. Matthew Hayden மனதிற்குள் புது வெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகம் தொற்றிக் கொள்ள, அடுத்த பந்தை எதிர் கொள்ள தயாரானார். அடுத்த பந்து புல்டாஸ், வந்த வேகத்தில் தடுமாற்றம் Matthew Hayden னால் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளும் லவ்டேல் மேடி இடம் செல்ல தலா ஒரு ரன் வீதம் இரண்டு ரன் குவிந்தது. பீல்டிங் செம டைட். சுற்றி சுற்றி பார்த்தாலும் எல்லாரும் சும்மா வேடிக்கை பார்ப்பது போல் இருக்கிறது. ஆனால் அடித்து ஆட முடியவில்லையே என்று ஒரே சோகம் Hayden முகத்தில். இப்படியே வெந்து வெம்பியே எட்டு ரன்னுக்கு மேல் இந்த ஓவரில் அவர்களால் எடுக்க முடியவில்லை. இந்த நிலவரப்படி கேப்டன் முகத்தில் சிறிது மகிழ்ச்சி தெரிந்தது. (12/0)

அடுத்து துணை கேப்டன் ஜீவன் பந்து வீச்சுக்கு தயாரானார். பந்தை எதிர் கொள்ளபோறவர் ஆஸ்திரேலியா ஆட்டக்காரர் Michael Hussey. ஒரு முறை பீல்டிங் எப்படி இருக்கிறது என்று கணித்துக் கொண்டார். அவரின் பார்வை நமது அ.மு.செய்யது மற்றும் வணங்காமுடி பக்கம் போயிற்று. அவர்கள் சற்றே அசால்ட்டாக நிற்கின்றனரோ, இது Michael Hussey பயம். நமது ஜீவன் அதிவேகமாக ஓடிவந்து பந்தை வீசினார். இம்முறை கண்டிப்பாக அது சிக்ஸ்தான் என்ற மனநிறைவோடு Michael Hussey.

மேலே பறந்த பந்து பௌண்டரி தாண்டி போகாமல் மெதுவாக பூமியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த நமது அ.மு.செய்யதும், அண்ணன் வணங்காமுடியும் பந்தை பிடிக்க ஓடினர். ஓடிய வேகத்தில் பந்தை பிடித்தது நமது அண்ணன் வணங்காமுடி. அவர்கள் போட்ட சத்தமும் ஆட்டமும் நம்மையும் தொற்றிக் கொண்டது. அ.மு.செய்யது அவரை அப்படியே தூக்க முயற்சிக்க, அதுக்குள்ளே அம்பையர் கை விரலை மேலே தூக்கி அவுட் சிக்னல் கொடுத்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து வணங்கமுடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெளியே செல்வது ஆஸ்திரேலிய ஓபனிங் பேட்ஸ்மன் Michael Hussey, வெளியேற்றியது நமது துணை கேப்டன். அனைவரும் சேர்ந்து துணை கேப்டனை தூக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பலம் இப்போதுதான் லேசாகப் புரிய ஆரம்பித்தது ஆஸ்திரேலியர்களுக்கு.

அடுத்து களம் இறங்குபவர் Simon Katich. ரொம்ப கஷ்டப்பட்டு பீல்டிங்கை நோட்டம் விட்டார். பிறகு பந்தை எதிர்கொள்ள தயார் ஆனார். ஆனால் அவர் மனதில் குழப்பம் இவர்கள் அனைவரும் புதியவர்கள். இவர்களிடம் நமது துவக்க ஆட்டக்காரர் அவுட் ஆகிவிட்டாரே என்றுதான். நாம் அதுபோல் ஏமாந்து விடக்கூடாது என்று மனதில் உறுதி கொண்டு ஜீவனை நோட்டம் விட்டார். ஜீவன் பந்து வீச தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். அருகில் டோணி ஏதோ பேசிக் கொண்டிருந்தார். சரி என்று தலையாட்டிவிட்டு தனது காரியத்தில் கண்ணாக அதே வேகத்துடன் இந்த முறையும் பந்தை வீசினார். பந்து வந்த வேகத்தில் பேட்ஸ்மன் மட்டையின் ஓரமாக பட்டு பின்னால் காத்திருந்த விக்கெட் கீப்பர் வெகு லாவகமாக பந்தை கேட்ச் பிடித்தார். மறுபடியும் அரங்கத்திலும் மைதானத்திலும் கரகோஷ அலைகள். இப்போது டோணி ஜீவனை அலாக்காக தூக்கி விட்டார். அனைவரும் சேர்ந்து ஜமாலை வாழ்த்தினார்கள். அரங்கத்தில் இருந்து வந்த விசில் சத்தம் விண்ணை பிளந்தது.

விபரம் அறிந்த வலை நண்பர்கள் அதிகம் பேர் குவிந்து விட்டனர். அவர்கள் செய்த ஆரவாரங்கள் நமது நண்பர்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது.

Matthew Hayden இவருக்கு என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை. அதற்குள் ரெண்டு விக்கெட்டா? பதறிப்போனார்கள் ஆஸ்திரிலேயர்கள்.

ஆஸ்திரேலிய கேப்டன் முகத்தில் ஈயாடவில்லை. அடுத்து யாரை அனுப்புவது என்று சற்றே குழம்பி பின் Andrew Symonds ஐ அனுப்பினார்.


எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு. இருதரப்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. திடீரென்று எதிர்பாராத விதத்தில் இருவர் அவுட் ஆகிவிட்டனர். ஜீவன் முகத்தில் எப்போதும் போல் அமைதியான எந்த எதிர்பார்ப்பையும் காட்டாத அக்மார்க் அமைதி. அவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அவருக்கு பலவிதத்திலும் ஐடியா கொடுத்த வண்ணம் இருந்தனர். அதற்குள் புது பேட்ஸ்மன் தயார் ஆகிவிட்டார். ஜீவன் நண்பர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு தனது நோக்கம் ஒன்றிலேயே குறியாக இருந்தார். அதாவது கவனம் பிறழாமல் தன வேலையை கவனிப்பது. இதுதான் ஜீவனிடம் அனைவரும் கண்ட ஒரு அரிய குணம். எதற்கும் அசைந்து கொடுக்காத ஒரு அமைதி எப்போதும் அவர் முகத்திலே காணலாம்.

மூன்றாவதாக களம் இறங்கியிருக்கும் பேட்ஸ்மன் முகத்தில் எப்படியும் அவுட் ஆகாமல் நின்று விடவேண்டும் என்ற எண்ணம் முகத்தில் தெரிந்தது. ஜீவன் அதே வேகத்துடன் வருகிறார், அனைவரும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தனர். சத்தமே இல்லை. காம்பியர்கள்தான் விளையாட்டை விமர்சித்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போலவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்தை வீசினார் ஜீவன். இம்முறை பந்து விண்ணை நோக்கி பறந்தது. அனைவரும் சிக்ஸர் எதிர்பார்த்து பந்து செல்லும் திசையை கண்களை விரட்டினார்கள். இந்த முறை பந்தை பிடித்தவர் நமது நண்பர் நசரேயன். அவர் பாய்ந்து பிடித்த வேகத்தை பார்த்ததும் அனைவரும் ஆர்ப்பரிக்க துவங்கி விட்டனர்.

இப்போதுதான் ஜீவன் முகத்தில் சந்தோஷம் அனைவரையும் நோக்கி கைகளை நீட்டியபடி ஓடி வந்தார், வந்த வேகத்தில் ஜமால் ஜீவனை அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றினார். ஜீவன் அடித்த ஹாட்ரிக். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அனைவரும் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் இருந்தனர். நம்ப நண்பர் நசரேயன் பிடித்த கேட்ச் பலமுறை டிவியில் போட்டு காட்டியவண்ணம் இருந்தனர். பறந்துதான் பிடித்திருக்கிறார். அவரின் இந்த கேட்ச் மிகவும் பெருமையாகப் பேசப்பட்டது. நசரேயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல திசைகளிலும் இருந்து வந்தவண்ணம் இருந்தது.

இந்தியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறியபடி இருந்தனர்.

SCORE BOARD


வளரும்
ரம்யா....



Thursday, July 23, 2009

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க நண்பர்களே!!


நமது வால்பையனோட செல்லம் இதோ பாருங்க!!




ஏனிந்த கோவம் சிரிப்பையும் தாண்டி கோபமா செல்லம்



தானும் மயங்கி தன்னை பார்ப்பவர்களையும் மயக்கும் சிரிப்பு
குழந்தையின் சிரிப்பில் மயங்காதவர்களும் இருக்கின்றனரோ?



கேக்கு உனக்குத்தான் சீக்கிரம் எங்களுக்கும் தருவாயா கண்ணே !!



வர்ஷாவிற்கு இந்த கேக்கு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!!



வர்ஷா சிரிக்கணும் போட்டோ எல்லாம் எடுத்துட்டாங்க!!


விண்ணுலுக தேவதையே
பூவுலுக பூந்தளிரே
உனது பெயரால்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நட்பை கொடுத்தனையோ
நடந்தால் அன்னமோ
சிரித்தால் தாமரையோ
திருவாய் மலர்ந்து உதிர்க்கும்
சொற்கள் சங்கீதமோ
கண்கள் விண்மீன்களோ
அதில் தோன்றும்
வண்ணங்கள் வானவில்லோ
இவை அனைத்தும் அடங்கிய
எங்கள் அன்புச் செல்வி
வர்ஷா என்றால்
அது மிகையாகா!


இந்த அனைத்து மலர்களும் வர்ஷாவிற்கே சொந்தம் !!




வர்ஷா என்ற இந்த குழந்தை நமது வலை நண்பர் வால்பையனின் குமாரத்திதான். இன்று பிறந்த நாள் காணும் வர்ஷாவை அனைவரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்த வாருங்கள்! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!




வர்ஷா நீ வாழிய பல்லாண்டு மட்டுமல்ல பல கோடி நூற்றாண்டுகள்!

வர்ஷா உலகத்தில் உள்ள அனைத்து அறிவுகளும் பெற எங்கள் வாழ்த்துக்கள்!

வர்ஷா கல்வியில் சிறந்து விளங்கி பெற்றவர்கள் பெருமையடைய செய்ய எங்கள் வாழ்த்துக்கள்!

வர்ஷா நீ நடந்து வரும் பாதைகள் மலர் பாதைகளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!!

வர்ஷா வாழ்வாங்கு வாழ என்றென்றும் வாழ வாழ்த்தும் அன்பு வலையுலக உறவுகள்.....






பிரியமுடன்
ரம்யா..........