Wednesday, December 30, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!

ம்மிடம் இருந்து வருடம் 2009 விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது !!

பிரியா விடை பெறும் வருடம் 2009 க்கு நன்றி!!

ம்மை நோக்கி வருடம் 2010 வீர நடை போட்டு நெருங்கி வருகின்றது !!

வருடம் 2010 ஐ வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறோம்!!
















இந்த புது வருடத்தில் நாம் அனைவரும் இன்று போல் என்றும் நல்ல நண்பர்களாக வலையுலகில் வலம் வர வாழ்த்துகிறேன்!!

நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வரும் நாட்களில் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!!

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே !!






Sunday, December 27, 2009

சமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 !!



முதல் பார்ட் படிக்காதவர்கள் இங்கே படிக்கவும்!!


சரிதாவின் இன்றைய நிலை.....


சென்ற இடுகையில் சரிதாவின் பரிதாபபமான நிலையை தெளிவாகப் பார்த்தோம்.


இப்போது சரிதா என்ன செய்துக கொண்டிருக்கிறாள் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தொண்டு நிறுவனம் அரவணைத்து அழைத்துச் சென்ற சரிதா அங்கே ஒரு பயத்துடன்தான் அறையில் முடங்கி தனக்குத் தானே ஒரு முள் வேலி போட்டு கொண்டிருந்தாள். ஒரு வார காலம் முடிந்தவுடன் எனக்கு சரிதாவின் நினைவு வந்தது. தொண்டு நிறுவன தலைவியிடம் அனுமதி வாங்கி சென்று பார்த்தேன். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அங்கே இருந்த ஒரு நிர்வாகி "இவள் எப்பொதும் இப்படிதான் அழுது கொண்டே இருக்கிறாள்.கொஞ்சம் ஏதாவது கூறி சமாதனப் படுத்திவிட்டு செல்லுங்கள்" என்று கூறினார்கள்.

அதே போல் சமாதானம் செய்து விட்டு கனத்த மனதுடன் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனாலும் எப்போதும் சரிதாவைச் சுற்றியே என் எண்ணங்கள் இருந்து வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வந்தேன். அப்படி ஒரு முறை பார்க்கச் செல்லும் பொது, சரிதா மிகவும் இளைத்துப் போய் இருந்தாள். என்னவென்று விசாரித்ததில் தனக்குத் தானே இட்டுக் கொண்ட தண்டனையால் அந்த இளைப்பு என தெரிந்து கொண்டேன். நன்றாக சாப்பிடுவதில்லை. உறக்கமும் இல்லை. எப்போதும் பிரிந்து போன சகோதர சகோதரிகளின் நினைவால் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன பெற்றோர்களின் நினைவோ உடன் பிறந்தவர்களின் நினைவோ மாறவில்லை அது மிகவும் கொடுமையான ஒன்றுதானே?

அவளின் மன நிலையில் எப்படி மாற்றம் கொண்டு வருவது என்று தீர சிந்தித்து அதை அந்த நிர்வாகத் தலைவியின் உதவியுடன் நிறைவேற்ற முடிவெடுத்தோம். முதலில் அந்த நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங், பிறகு அவளுடன் பழகுபவர்களுக்கு கவுன்சிலிங் இப்படி யார் யாருக்கெல்லாம் கவுன்சிலிங் தரவேண்டி இருந்ததோ அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தோம். சிரத்தை எடுத்து காரியத்தை செவ்வனே செய்து முடித்தோம். கடின உழைப்புடன் கூடிய எங்களின் சிரத்தைக்கு நல்ல பலன் கிடைத்தது.

எங்கள் முயற்சி வீண் போகவில்லை.சரிதாவின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.அதையே ஒரு நூலாகப் பிடித்துக் கொண்டு சரிதாவின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்து விட்டோம். இதற்கு நிறைய பேரின் ஆதரவும் உதவியும் கிடைத்தது.

இப்போது சரிதாவை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாகிவிட்டது. சரிதாவும் தனது நிலை மறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு பள்ளியின் நிர்வாகத்துடன் போராடி, நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, அவளின் இந்த நிலையை ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டோம். தொண்டு நிறுவனத்தின் தலைவி பொறுப்புடன் செய்த செயல்கள் சாலச் சிறந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகமும் அதற்கு சம்மத்தித்து, இப்போது பிளஸ் ஒன் படித்து வருகிறாள். ஒருவருக்கும் அவளின் குறை இப்போது தெரியவில்லை. சரிதாவின் மனதிற்கு மட்டும்தான் அந்த குறை தெரியும். பள்ளி நிர்வாகத் தலைவிக்குத் தெரியும்.

சரிதாவின் உடலில் தற்சமயம் வெளியே எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. சில வருடங்கள் கடந்த பிறகு தெரிய வாய்ப்பு உண்டு. அது சமயம் விடுதியிலேயே படிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்வதாக தொண்டு நிறுவனத்தின் தலைவி கூறி இருக்கிறார்கள்.

சரிதாவின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய தொண்டு நிறுவனம், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல மனங்கள் உள்ள மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நல்ல மனம் படைத்த உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!

நல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்!!

நல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு!!




Monday, December 21, 2009

டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு!!


டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு அபாரமான முறையில் நடந்தேறியது!!




அனைவரையும் நேரில் சந்தித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியையும் கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகா. வருகை தந்தவர்கள் அனைவரும் முன்பே பழகியது போன்று தோன்றியதே அன்றி புதியவர்கள் என்ற எண்ணம் மனதில் எள்ளலவும் ஏற்படவில்லை.

எல்லாரும் ஒரே மாதிரி அன்பாகப் பேசினார்கள், அறிமுகப் படுத்திய விதமும் அருமை.

நிகழ்ச்சியை பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தொகுத்து வழங்கிய விதமும் அபாரம்.

நண்பர் கதிரின் பணி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்திருக்கிறார். நல்லதொரு ஆரம்பம் இவ்விழா என்று கூறலாம்.

சகோதரர் பழமைபேசி அவர்கள் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை.

வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களும் அருமையாக பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்.

சகோதரி சும்ஜலா வலைப்பூவை ஜொலிக்க செய்ய பல நுணுக்கங்களையும் தனது உறையில் தெரிவித்தார்.அந்த விஷயங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஈரோட்டு நண்பர்கள் ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி இவர்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்து அமரச்செய்து, என்னையும் உறையாற்றச் சொன்னார்கள். மிக்க நன்றி மக்கா!

சென்னையில் இருந்து (கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, வானம்பாடி)

திருப்பூரில் இருந்து (பரிசல், வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்)

மதுரையில் இருந்து (சீனா, கார்த்திகைப்பண்டியன் ஸ்ரீதர், தேவராஜ் விட்டலன், ஜெர்ரி)

ஈரோட்டில் இருந்து (ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி)

அமீரகத்தில் இரண்டு நண்பர்கள் (செந்தில்வேலன், நாகா)

கோவையில் இருந்து (லதானந்த், பழமைபேசி, சஞ்சய் காந்தி)

கரூரில் இருந்து (இளையகவி, முனைவர் இரா.குணசீலன்)

மற்றும் வாசகர்களும் எங்களுடன் பங்கேற்றனர்.

சுவையான விருந்து, அன்பான வரவேற்பு நெகிழ்ந்து போனோம். எங்களை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துப் போன பாங்கு என்ன. ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்ற பழமைபேசி அண்ணா மற்றும் சகோதரர் கதிர் உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு என்று தனி அறை. தேவைகள் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்கப் பட்டன. குறை ஒன்றும் இல்லை நண்பர்களே!

நாங்கள் ஊருக்கு திரும்பும் வரை எங்களை நல்ல முறையிலும் அக்கறையுடனும் கவனித்த உங்களின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.

எங்களை சென்னைக்கு திரும்ப ரயில் நிலையத்தில் கொண்டு விட்ட நண்பர் பெயர் தெரியவில்லை. அவருக்கும் எங்களது நன்றி.

எல்லாவற்றிகும் மேலாக நாங்கள் ஈரோடு செல்ல முதல் காரணமாக இருந்த சகோதரர் வானம்பாடி அவர்கள்தான். அண்ணன் வானம்பாடி அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் பல.

வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க. பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் இவை அனைத்தும் இந்த பதிவுலகத்தில்தான் கிடைக்கும்.

என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். ஆனால் பாருங்க நீங்கள் வராமல் போனது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அதையும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிக்க உதவிய தமிழ்மணம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!!

அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!

Monday, December 14, 2009

சமுதாயத்துக்கு ஒரு கேள்வி!!

சமுதாயம் என்பது நாமதானே! நம்மில் நான்கு பேர் சேர்ந்தால் அது சமுதாயம் சரிதானே நான் கூறுவது?

சில மாதங்களுக்கு முன் நான் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். வயது பதினைந்து இருக்கும் (அவள் பெயர் சரிதா என வைத்துக் கொள்வோம்). அவள் யாரிடமும் பேசமாட்டாள். ஆனால் நான் அந்த பெண்ணிடம் வலியப் போய் பேசுவேன். சரியா பதில் பேசமாட்டாள். என்ன சிகிச்சை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உடன் அந்தப் பெண்ணின் சித்தப்பா இருந்தார். அவரும் ஒரே ஒரு நாள்தான் இருந்தார். இரெண்டாம் நாளில் இருந்து அவரும் இல்லை. சித்தப்பா எங்கே போனார் என்று விசாரித்தேன். ஊருக்குப் போய் இருக்கிறார், வந்திடுவார் என்று நம்பிக்கையுடன் கூறினாள். அம்மா அப்பா இல்லையா என்று கேட்டேன், எல்லாரும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தாள். காலம் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.

காலக் கண்ணாடியில் அந்தப் பெண்ணின் சோகங்கள் ஏனோ தெரியவில்லை. மருத்துவர்கள் சரிதாவிற்கு அறுவை சிகிச்சை குறித்து அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதம் சரிதா அறியவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு விவரம் யாரும் தெரிவிக்கவில்லை.

அந்த நாளும் வந்தது. அதாவது சரிதாவின் அறுவை சிகிச்சைக்கு குறித்த நாள். மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து விட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும்படி கூறினார்கள். அப்போதுதான் அவளுடன் ஒருவரும் இல்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொண்டார்கள் மருத்துவர்கள் உட்பட.

தன்னுடன் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள். எனக்கு மிகவும் கஷ்டமா போச்சு. அனைவரும் சேர்ந்து சமாதனப் படுத்தினோம். அப்போ கூட கேட்டோம் என்ன அறுவை சிகிச்சை என்று, சரிதா கூற மறுத்து விட்டாள். விளங்காத விளக்கத்துடன் அறுவைசிகிச்சை முடிந்து வரும்வரை காத்திருந்தோம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு வேற அறைக்கு மாற்றி விட்டார்கள். அது என் அறையில் இருந்து ரெண்டு அறை தள்ளி இருந்தது. அதனால் எனக்கு சரிதாவிடம் பேச வசதியாக இருந்தது.

சரிதாவைப் பார்க்க ஒருவரும் வரவில்லை. மருத்துவமனையில் சரிதாவுடன் வார்டில் இருந்தவர்கள் மட்டுமே வருவதும் போவதுமாக இருந்தார்கள். கடைசியில் ஒரு நாள் சரிதா என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்..

சரிதாவுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை, ரெண்டு தம்பிகள். உடன் பிறப்புகளுடன் மிகவும் ஒத்துமையாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த சரிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இடி போல் இறங்கியது. அதை வெளிப்படுத்த தெரியாமலே சில மாதங்களை கடத்தி இருக்கிறாள். சக மாணவிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, தனது உடன்பிறந்தவர்களிடம் சரியாகப் பேசுவதில்லை. அவர்களே வந்து பேசினாலும் பதில் கூறுவதில்லை.

இன்னும் சில மாதங்கள் ஆனது பள்ளிக்குச் செல்வதை அறவே வெறுக்க ஆரம்பித்தாள். தோழிகள் வந்து பேசினால் கூட பதில் பேசுவது இல்லை. சரிதாவிற்குள் எப்பொழுதும் இல்லாத கூச்ச சுபாவம் ஒரு வியாதி போல் தொற்றிக் கொண்டுள்ளது.

அதை வெளியே காட்டாமல் அமைதியை ஒரு போர்வையாக்கி அதற்குள் ஒளிந்து கொண்டு சில மாதங்களை கடத்தி இருக்கிறாள்.அதுவரை சரிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வராத பெற்றோர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் சந்தேகம் வந்திருக்கிறது. பிறகு உக்கார வச்சி விசாரித்ததில் சரிதாவால் சரியானபடி விளக்கமளிக்க முடியவில்லையாம்.

பிறகு அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சரிதா தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்துள்ளாள். பெண்மைத் தன்மையில் இருந்து மாற்றங்கள் அவளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருக்கிறது. சரிதாவுக்கு புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆனதாம். புரிந்தபிறகு அவள் மனதில் பயமும், கூச்சமும் கோலோச்சி இருக்கிறது. பெற்றோர்களிடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று மனதிற்குள்ளேயே மருகி இருக்கிறாள். உடன் பிறந்தவர்களிடமும் எதையும் விளக்க முடியவில்லை. அவர்களும் சரிதா ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி கேட்டு அலுத்து விட்டார்களாம். இறுதியில் மருத்துவரால் சரிதாவின் நிலை உணர்த்தப் பட்டதுமருத்துவர் ஒரு மருத்துவமனை முகவரி கொடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

ஆனால் சரிதாவின் பெற்றோர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இதனால் அந்த பதினைந்தே வயது நிறைந்த பெண்ணின் மனதில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நிலையில் அந்த கொடுமையும் நிகழ்த்தி அதிலிருந்தும் காப்பாற்றப் பட்டிருக்கிறாள். இந்த நிகழ்விற்கு பிறகு மருத்துவர் கூறிய மருத்துவமனைக்கு செல்லாமல் வேற மருத்துவமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து நான் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிராகள். மருத்துவர்களும் பரிசோத்தித்து விட்டு அவர்களால் என்ன முடியுமோ அதை செய்வதாக கூறி இருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்ட சரிதாவின் பெற்றோர்கள் சரிதாவின் சித்தப்பாவை துணைக்கு வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். சித்தப்பாவும் அடுத்த நாள் கச்சிதமாக நழுவிவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் சரிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமான பிறகு

சரிதாவின் வீட்டிற்கு அனுப்ப பல முயற்சிகள் மேற்கொண்டனர். அனைத்தும் தோல்வியையே தழுவின. அவர்கள் கொடுத்த முகவரியும் தவறானது. சரிதாவிடம் பெற்ற முகவரியிலும் சரிதாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து கொண்டு புறப்பட்டு விட்டனர். எங்கே தேடுவது இது மருத்துவர்களின் முதல் கேள்வி. சரிதாவை என்ன செய்வது இது மருத்துவர்களின் இரெண்டாவது கேள்வி. இறுதியில் சரிதாவிடமே வேறு யாரவாது உறவினர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள்.சில முகவரிகள் சரிதாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றன. அங்கேயும் ஆட்களை அனுப்பி விசாரித்தார்கள். அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது, அவர்கள் பெண்ணை நாங்கள் எப்படி வைத்துக் கொள்வது? பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். மருத்துவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

எங்கே செல்கிறாய் என்ற மருத்துவர்கள் தன்னை நோக்கி கேட்ட கேள்விக்கு அவளின் அழுகைதான் பதிலாகக் மருத்துவர் கிடைக்கப் பெற்றார்கள்.

இந்த சூழ்நிலையில் மனதளவில் மிகவும் பாதித்த சரிதா எங்கே செல்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களும் அவர்களாலான உதவிகளை செய்து வந்தார்கள்.ஆனால் சரிதாவை எவ்வளவு நாட்கள்தான் மருத்துவமனையில் வைத்திருப்பது? அவர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். பிறகு சில தொண்டு நிறுவனத்திடம் பேசி சரிதாவை அங்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே செல்ல சரிதா மறுத்து விட்டாள். மிகவும் பயமாக இருக்கிறது. யார் எப்படி எல்லாம் என்னை கிண்டல் செய்வார்களோ என்று காரணமும் கூறி அழுதாள். ஆனாலும் அனைவரும் சமாதானப் படுத்தி அந்த தொண்டு நிறுவனத்தில் சேர்த்து விட்டார்கள். இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..

இப்போது பெற்றோர்களிடம் வருவோம்... பிறப்பில் குறை ஒன்றும் இல்லை. இடையிலே வந்த குறை. அந்த பதினைந்தே வயது நிரம்பிய பெண் என்ன பாவம் செய்தாள். எப்படி பெற்றோர்களே உங்களக்கு இது போல் செய்ய மனது வந்தது. சரிதாவின் பெற்றோர்கள் ஊரை விட்டே சென்று விட்டார்கள். அதுவும் மிகக் குறுகிய காலத்தில் ஊரை மாற்றுவது என்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. சரிதாவை மருத்தவனையில் சேர்த்த இடைப்பட்ட கால அவகாசத்தில் இடப் பெயர்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டுத்தான் அவர்கள் சரிதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இது சரிதாவின் உறவினர்கள் கூறிய விளக்கங்கள். எது உண்மையோ எது பொய்யோ தெரியாது, ஆனால் இவர்களின் செய்கையால் பாதிக்கப்பட்டு நிற்கும் அந்த பெண்ணிற்கு இவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?

சரிதா மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண்ணாம். ஒவ்வொரு தேர்விலும் சரிதா வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் 90க்கும் மேலே. மேலே படிக்க ஆசைப் படுகிறாள். இதுவும் அந்த பெண் செய்த தவறோ? ஏதோ குறை வந்துவிட்டது. அதற்கு அந்த அறியாப் பெண் எப்படி காரணமாவாள். நல்லா படிக்கற பெண்தானே அவளை அவளின் விருப்பம் போல் படிக்க வைத்திருக்கலாமே!

அவளின் கூச்சத்தை நல்ல கவுன்சிலிங் முறையில் போக்கி இருக்கலாமே!ஏன் செய்யவில்லை? சரிதாவிற்கு வந்த குறைக்கு அவளை எப்படி பெற்றவர்கள் தண்டிக்கலாம்?மற்ற குழந்தைகளை நல்ல முறையில்தானே அதுவும் நகரத்தில் மிக உயரிய பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால தற்சமயம் ஊரை விட்டே சென்று விட்டார்கள். இது எப்படி நியாயமாகும்? இதற்கு விடை தெரியாமல், அந்த தொண்டு நிறுவனத்திற்கு பெரிய நன்றி கூறிவிட்டு எங்களாலான உதவிகள் செய்து விட்டு, அவளின் கண்ணீரை தற்காலிகமாக துடைத்து விட்டு வந்தோம். நாங்கள் விடை பெறும் நேரம் நெருங்கும்போது சரிதாவின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மனம் கனத்து விட்டது....





Thursday, December 3, 2009

தேவதையில் நான்!!

மாதம் இருமுறை வெளிவரும் தேவதைகளுக்கான பத்திரிக்கைதான் தேவதை!!


வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!

ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!

தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!

அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.

ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!

சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!

வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.

தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.

தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!

எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.

தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!

தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)



Wednesday, November 11, 2009

ரம்யாவின் நூறாவது இடுகை நிறைவு!!

நூறைத் தாண்டிய இடுகை நண்பர்களே!!





நண்பர்களே உங்களுக்கு கேக்கு வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க!





என் இதயப் பூக்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன் நண்பர்களே!!



மகிழ்ச்சியின் உச்சம் உங்களுக்கு நான் அளிக்கும் இந்த பூங்கொத்து!!


என்னுடன் சேர்ந்து அவங்களும் உங்களுக்கு நன்றி சொல்கிறார்கள்!!

எழுத ஆரம்பித்து நூறைத் தாண்டிவிட்டது "Will To Live". இது நிஜமா... இல்லே இது நிஜம்தானா... என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வேள்வியையே நிகழ்த்தி விட்டேன் எந்தன் மனதிற்குள்ளே.

எழுதப்பட்ட இடுகைகள் எனக்கு மன நிறைவை கொடுத்ததா என்று பல முறை என்னையே கேட்டுக் கொள்கிறேன்! கேள்விக் குறியாகவே இன்னும் நிற்கின்றேன்.

நூறை தொடுவதற்கு உதவியது யாரு? எல்லாம் நீங்கள்தான். என்ன யோசிக்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!

எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன்.

என்னை உங்களின் பாசம் என்ற நேசக் கயிற்றால் இழுத்து வந்து நூறைத் தொட வைத்தீர்களே அதைத்தான் கூறுகிறேன்!

எத்துனை நட்புகள் எத்துனை உறவுகள், எத்துனை பந்தங்கள், இவைகள் எல்லாம் எங்கே சாத்தியம்? எங்கேயும் கிடைக்காது!

நான் மேலே கூறிய பொக்கிஷங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்தது இந்த வலையுலகில்தான்.

வலைபூக்களின் வாடாமலர்களான் நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கும் வரை எனது வலையும் வாடாமலராக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நினைக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. திரும்பி பார்ப்பதற்குள் நூறைத் தாண்டிவிட்டது "Will To Live" என்ற உண்மை.

பத்திரைமாத்து சொக்கத்தங்ககளான நீங்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னால் இது சாத்தியப் படுத்த முடிந்தது. சாதிக்கவில்லை ஆனால் நூறைத் தாண்டிவிட்டேன். அதை நினைக்கையில் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த என் மகிழ்ச்சிக்கு காரணனமான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே! மிக்க நன்றி!




Monday, November 9, 2009

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்..!

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர் என்ற தொடர் பதிவை தொடர அழைத்த வால்பையனுக்கு மிக்க ந‌ன்றி.

பிடித்தது பிடிக்காதது

பிடிக்காதது என்ற தெரிவில் எனது மனதில் இருப்பதைத்தான் எழுதினேன். எஸ்கேபிஸம் எல்லாம் உண்மையாகவே இல்லீங்க. இதுவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இருந்தது இல்லீங்க.

என்னைப் பிடிக்காதவங்களிடம் கூட நான் நட்போடுதான் பழகுவேன். (அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்ய எனக்கு பிடிக்குதே!) எல்லாவற்றையும் அதன் அதன் தனித்தன்மையோடு ரசிப்பேன். இதுவும் என்னோட பல குணங்களில் ஒன்றுதாங்க. என்னுடன் நெருங்கி பழகும் அனைவருக்கும் இந்த குணம் நன்கு தெரிந்த விஷயம்தான்.

நேர்மறையான அப்ரோச், இங்கே வாலின் தனித்தன்மை வெளிப்படுகிறது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுவிட்டார்கள். அது வால்பையனோட எண்ணங்கள். நான் பிடிக்காதது என்ற சொல்லை எப்படி மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வால்பையன் முந்திக் கொண்டு விட்டார்!

என்ன! ரம்யா ஓவரா புலம்புராளேன்னு பார்க்கறீங்களா? ச்சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க என்னைப் பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறேன் என்பதை மிகவும் அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

நண்பர் வால்பையன் அழைத்த தலைப்பு மாற்றுக் கருத்துடைய தலைப்பு. அதனால்தான் இந்த தலைப்பை தனியாக எழுதுகிறேன்.


அரசியல் தலைவர்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
ரொம்ப பிடித்தவர்: கர்மவீரர் காமராஜ்

நடிகர்

பிடித்தவர்: ரஜனி, சூர்யா
ரொம்ப பிடித்தவர்: கமல்ஹாசன்

நடிகை

பிடித்தவர்: திரிஷா
ரொம்ப பிடித்தவர்: ஜோதிகா

பாடகர்
பிடித்தவர்: ஜேசுதாஸ்
ரொம்ப பிடித்தவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகி

பிடித்தவர்: S.P.ஷைலஜா, சித்ரா, ஸ்வர்ணலதா
ரொம்ப பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
ரொம்ப பிடித்தவர்: விசு, கிரேஸிமோகன்

போன முறை நண்பர் உள்குத்து, வெளிகுத்து மற்றும் கும்மாகுத்தா ஒரு கேள்வி கேட்டு இருந்தார் ("கிரேஸிமோகன் ஒரு இயக்குனரா சொல்லவே இல்லே") இந்த விளக்கம் அந்த நண்பருக்கு, அவர் யார் என்று படிக்கும்போது அவருக்கே தெரியும். கிரேஸிமோகனும் ஒரு இயக்குனர்தான். நாடகங்கள் எல்லாம் இவர் இயக்கவில்லையா நண்பரே! அந்த வழியில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாடக இயக்குனர், விளக்கம் எப்பூடி ?? நண்பரை மடக்கிட்டேனாமா இஃகிஃகி இஃகிஃகி)

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.
ரொம்ப பிடித்தவர்: கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்

இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: A.R. ரஹ்மான்
ரொம்ப பிடித்தவர்: இளையராஜா

எழுத்தாளர்

பிடித்தவர்: பாலகுமாரன்
ரொம்ப பிடித்தவர்: சுஜாதா

பேச்சாளர்

பிடித்தவர்: வை.கோபால்சாமி
ரொம்ப பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

டம்பிமேவி எழுதவில்லை என்பது இப்போதுதான் தெரியவந்தது.

அதனால் இத்தொடரை தொடர டம்பிமேவியை அழைக்கிறேன் மொத்தல்லேயே அழைக்காமல் விட்டுப் போனதிற்கு என்னை மன்னிக்க.

தொடரை விரைவில் எதிர் பார்க்கும் ரம்யா.....



Thursday, November 5, 2009

பிடித்தும் பிடிக்காம‌லும்!!


தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ நண்பர்கள் ஜீவன், அ.மு.செய்யது, உங்கள் ரங்கா, Romeoboy இந்த நால்வருக்கும் மிக்க ந‌ன்றி.


அரசியல்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

நடிகர்

பிடித்தவர்: கமல்ஹாசன், ரஜனி, சூர்யா

பிடிக்காதவர்: S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

நடிகை

பிடித்தவர்: ஜோதிகா

பிடிக்காதவர்: சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

பாடகர்

பிடித்தவர்: ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

பாடகி

பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்

பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.

பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.



இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: இளையராஜா

பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க



எழுத்தாளர்

பிடித்தவர்: சுஜாதா

பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே



பேச்சாளர்

பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன் (மேடையில் பேச்சு தர்மம் மீறி ரொம்ப கேவலமா பேசுவாரு)

பதிவினை தொடர நான் அழைப்பது !

இருவரை அழைக்க விரும்புகிறேன். இவர்கள் இருவரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று நம்பி அழைத்துள்ளேன். என் அழைப்பை ஏற்று எழுதுவீர்களா மக்கா?

R.கோபி

அண்ணன் வணஙகாமுடி









நியாயங்கள் எங்கு கிடைக்கும்!! பகுதி - 2

முதல் பகுதி படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கவும்.....

திரும்பிப் பாராமல் சென்று விட்ட முதலாளி குடும்பம் போலீஸ்காரர்களிடம் என்ன கூறிச் சென்றிருப்பார்கள் என்று சங்கருக்கு புரியாத போதும் தங்கள் குடும்பத்திற்கு சாதகமாக பேசி இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது.

உள்ளே சென்று தங்கள் குடும்பத்தை விடுவிக்குமாறு அப்பாவியாய் கேட்டு இருக்கிறார் சங்கர். என்ன உங்க ஆளுங்களை விடுறதா? என்னா கேட்கறே நீ? உங்கள் முதலாளி வீட்டுலே இருந்து வந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க மேலேதான் அவர்களுக்கு முழுச் சந்தேகமாம்.எப்படியாவது நகைகளை வாங்கித்தருமாறு மனு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த குற்றம் நீங்க அவங்க வீட்டுலே போய் மிரட்டி விட்டு வந்திருக்கீங்க! அதுக்கும் உங்க மேலே நடவடிக்கை எடுக்கப் போறோம்.

இப்போ நீங்க போலாம். உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம். அதுவரை நீங்க எங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அதற்கு "சங்கர் தனது மனைவி மற்றும் மகளையாவது விட்டுங்க. பெண்கள் இரவில் காவல் நிலையத்தில் தங்குவது எப்படிங்க நியாயமாகும். இப்போதே மணி ஆறு ஆகப்போகுது. அதனாலே இப்போ விட்டுடுங்க காலையிலே அழைத்து வந்து விடுகிறேன் என்று மன்றாடி இருக்கிறார்" அதற்கும் ஒன்றும் சரியான பதில் இல்லை.

இந்த சூழ்நிலையில்தான் சங்கரின் நிலைமை எங்களின் காதில் விழுந்தது. உடனே நானும் எனது சகோதரி மற்றும் நண்பர் மூவரும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தோம். எங்களின் குடும்ப சட்ட வல்லுனரை சந்தித்து விவரத்தை கூறினோம். பெண்கள் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டவுடனே தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தார். நானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தேன். ஆனால் எனது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் வக்கீலை பார்த்தவுடன், காவல் நிலைய மேலதிகாரி நீங்க ஏன் இதில் தலை இடுகிறீர்கள் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். பாருங்க, அந்த வக்கீல் சீனியர் வக்கீல் மிகவும் பிரபலமானவர், அவர் பெயர் எல்லாருக்கும் தெரியும். எல்லா விததிதிலும் சலுகைகள் அதிகம். அதுவும் அவைகளை நேர்மையான முறையில் பெற்றிருப்பவர். அந்த விவரமும் காவல் துறை அதிகாரிக்கு தெரிந்த போதிலும், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். வக்கீலும் பெண்களை முதலில் விடுவிக்க பாடு பட்டிருக்கிறார். "நீங்க செல்லுங்கள், நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அனுப்பி விடுகிறோம்" என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். சீனியர் வக்கீல் தனது ஜூனியர் வக்கீலை காவல் நிலையத்திலயே இருக்குமாறு கூறிவிட்டு எங்களுக்கும் விவரம் கூறினார். இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அனைவருக்கும் பெண்களுக்கும் சேர்த்துத்தான் அடி பின்னிருக்காங்க. வேறு எதுவும் முன்னேற்றம் இல்லை.

ஜூனியர் வக்கீலும், சங்கரும் அங்கேயே கொட்ட கொட்ட இரவு பூரா தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

காவல் துறையினர் மாற்றி மாற்றி செய்த விசாரணையில் அந்த பெண் மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டாள். இரவு முழுவதும் இருப்பு கொள்ளாமல் எப்போது விடியும் என்று காத்திருந்தோம். அடுத்த நாள் எங்களின் வக்கீலை தலயிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் வக்கீலும் அவரின் கேசை கவனிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். சங்கர் காவல் நிலையத்திலயே பலியாக கிடந்தார். எங்களுக்கும் எந்த வேலையும் ஓட வில்லை யாரோ எவரோ இருந்தாலும் தவறு செய்யாத மனிதர்கள் என்று தெரிந்து விட்டது. எதற்கு இந்த நாடகம் என்றுதான் புரியவில்லை.

அதற்குள் எல்லா உறவினர்களும் வந்துவிட அவர்களை சாமாளிப்பது மிகவும் கஷ்டமாகிப் போனது சங்கருக்கு. பணம் தண்ணீராக கரைந்தது. கோவிலுக்குச் செல்ல வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணம் முழுவதும் காலியானது. காவல் நிலையத்தில் இருப்பவர்களுக்கு காபி, டீ, டிபன் மற்றும் சாப்பாடு வரை வெளியே இருந்து சங்கர் வாங்கி கொடுப்பார். அப்போது அங்கே இருக்கும் அனைவருக்கும் சங்கர் வாங்கி தரவேண்டுமாம். அதனால் பணம் கண்ணா பின்னாவென்று செலவானது. செலவானாலும் உள்ளே இருப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வக்கீலையும் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். என்ன நடக்கும் என்பதே யாருக்கும் விளங்க வில்லை. FIR போடப்படவில்லை. பயங்கரமான சூழ்நிலை என்று மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. நாங்கள் மூன்று பேரும் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.

ஆனால் என் சகோதரி காவல் நிலையத்திற்கு செல்லாமல் அதன் அடுத்த தெருவில் காரை நிறுத்திவிட்டு, சங்கருக்கு போன் போட்டு உடனே வருமாறு அழைத்தார்கள். வந்தவரை பார்த்ததும் எங்களுக்கே அழுகை வந்து விட்டது. முதல் முறை பார்க்கும் போது கூட கொஞ்சம் தைரியமா நல்லா இருந்தாரு. இரெண்டே நாட்களில் உருக்குலைந்து மிகவும் பாவாமா காட்சி அளித்தார்.

சரி என்னாதான் சொல்றாங்க என்று வினவினால் பேரம் பேசி இருக்கிறார்கள். ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்று அழ மாட்டாத குறையாக சொன்னார். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கேம்மா போவேன்.

இருந்தது பூரா செலவு பண்ணிட்டேனே. நீங்க யாரோ எவரோ என்னோட கஷ்டத்துலே இவ்வளவு நல்லது நடக்கனம்னு முயற்சி பண்றீங்க. ஆனா இங்கே இருப்பவங்களுக்கு மனதே இல்லையே. இதை சங்கர் கூறும்போது மனது வலித்தது. யாரா இருந்தால் என்னாங்க கஷ்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே! நீங்க மனதை தளர விடாமல் தைரியமா இருங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம் என்று நாங்கள் சமாதானப் படுத்தினோம். குலுங்கி அழுத அந்த தந்தையை பார்க்க மனதை என்னவோ செய்தது.

சரி எதுவானாலும் முதலில் எல்லாரையும் வெளிய எடுக்க முயற்சி செய்வோம் பிறகு என்னா செய்யலாம்னு யோசிக்கலாம் என்று நான் கூர்நேன். ரத்தம் கொத்திக்குது. நியாயம் கிடைக்க ஏதாவது செய்யனும்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது.

ஏதோ எங்களாலான பண உதவியாவது செய்யலாம் என்று அழைத்துப் போய் ATMஇல் எடுத்துக் கொடுத்தோம். அதற்குள் மேலதிகாரி சங்கரை அழைத்திருக்கிறார். சங்கர் மேலதிகாரியை சந்தித்து பேசி இருக்கிறார். எந்த தவறும் செய்யாத என்னோட குடும்பத்தை இப்படி அலைக்களிக்கரீங்களே! இது நியாயமா? நான் வேறே யாரு கிட்டேயாவது முறை இடனுமா? என்று கேட்டு இருக்கிறார். பார்த்தார் அந்த அதிகாரி சங்கரையும் தூக்கி உள்ளே போட்டு விட்டார்கள். இந்த விவரம் எங்களுக்கு வந்தவுடன் மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு படை எடுத்தோம்.அவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. பேரம் விவரம் சொன்னவுடந்தான் அந்த கோணத்தில் யோசிச்சு மறுபடியும் அவர்களை சந்திக்க சென்றார்.

வக்கீல் வருவதை விரும்பாத காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், மறுபடியும் அவரின் தலையீட்டை தடை செய்திருக்கிறார்கள். சங்கரும் உள்ளே சென்றதினால் இந்த முறை பல விதத்திலும் முயற்சி செய்து அதிகாரிகளை தவறே செய்யாமல் அடைபட்டிருக்கும் அந்த ஏழைகளை விடுவிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

பேசியபடி எல்லாமே கொடுக்கப் பட்டது. மூன்றாம் நாள் நள்ளிரவு சங்கரின் மனைவி மற்றும் மகளை விடுவித்து வக்கீல் அழைத்து வந்து விட்டார். மீதி உள்ளவர்களை அடுத்த நாள் அனுப்புவதாகக் கூறி விட்டனர். இவர்கள் வந்த செய்தி கேட்ட பிறகு தான் எங்களுக்கு பசிக்கவே ஆரம்பித்தது.

அடுத்த நாள் அனைவரையும் விட்டு விட்டார்கள். திருடியது யாரு என்று இதுவரை இந்த பக்கம் யாருக்கும் தெரியாது. கேட்டும் கூறவில்லை.

ஆனால் தவறாக அல்லது வேண்டுமென்றே அழைத்துச் சென்ற அந்த ஏழைகளின் உடல் பலம், மனோபலம், தேவையற்ற கடன், உறவினர்கள் முன்னே ஏற்பட்ட அவமானங்கள், அக்கம் பக்கம் ஏற்பட்ட தீரா கரைகள் இவற்றிற்கெல்லாம் யார் பதில் கூறப் போகிறார்கள்? சம்பத்தப் பட்டவர்களா! இல்லே முதலாளியம்மாவா?

இதில் சங்கரின் மாப்பிள்ளையின் அண்ணனையும் அழைத்துச் சென்றார்கள் அல்லவா? தினம் தினம் நடத்திய நூதன விசாரிப்பில் புத்தி பேதலித்து விட்டது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பதினெட்டே வயது நிறைந்த அந்த பெண்ணின் மனநிலையை யோசித்தார்களா? சித்தப் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்து இருந்தாளே! அந்த காட்சியை பார்க்கும் அந்த ஏழை தந்தை கதறிய கதறல்களுக்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

எல்லாவற்றிகும் முத்தாய்ப்பு வைப்பது போல் அந்த குடும்பத் தலைவர் ஒரு முடிவு எடுத்த்தார், அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம்என்று முடிவெடுத்தும் விட்டார்.

அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் மனம் அமைதியை அடைந்தாலும், சங்கரின் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்ற பயம் மனதில் கவ்வ சங்கர் ஏதேனும் தவறான முடிவு எடுத்து விடுவாரோ என்று எனக்கு வந்த பயத்தை என் சகோதரியிடம் தெரிவித்தேன். அவர்களும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தொலைபேசியில் அழைத்து சகஜமாகப் பேசி காலையில் வீட்டுக்கு வருமாறும் கூறினார்கள். தவறான எந்த முடிவிற்கும் செல்லக் கூடாது என்று நேராகவே கூறி விட்டார்கள். அதை கேட்டவுடன் சங்கர் அழுதாராம்.

சிலதினங்கள் இப்படியே சென்றன. அவர்கள் இல்லத்தில் யாரும் சகஜ நிலைக்கு வரவில்லை. என் கவனம் முழுவதும் பதினெட்டு வயது நிரம்பிய பெண்ணின் நிலைதான் கவலைக்கிடமாக தோன்றியது.

மறுபடியும் நானும் சகோதரியும் கலந்து ஆலோசித்து அவளை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியயே கொண்டு வரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை சங்கரிடம் தெரிவித்தோம்.

அதற்கு சங்கர் கூறினார் , நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல் படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். பிறகு தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள். ஆனால் அந்த குடும்பம் இன்னும் நிமிரவில்லை.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் நிறைய கசப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறி விட்டன. யாரால்தான் என்ன செய்ய முடியும். விதியின் வில்லத்தனமா இல்லே அவர்கள் கூறுவதுபோல் கெட்ட நேரமோ எதுவோ, இது போல் நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மனதார வேண்டுகிறேன்.

எங்கள் சட்ட வல்லுனரும் கூறினார். இந்த காவல்துறை அதிகாரிகள் செய்த செயல்கள் எதுவுமே விதிகளுக்குள் இல்லை. அதனால் எல்லா நிலையிலும் சென்று நீதி கேட்கலாம் என்றார். ஆனால் அந்த ஏழைத் தந்தையோ வேண்டாம் சாமி, இனி நான் எங்கேயும் வரமாட்டேன். என்னையும் என் குடுபத்தாரையும் இப்படியே விட்டுடச் சொல்லுங்க என்று கூறி விட்டார். எங்க வக்கீலும் "பாவம் மனதாலும் பொருளாதார நிலையிலும் மிகவும் பலவீனப் பட்டு இருக்கிறார்; அப்படியே விட்டுடலாம்" என்று கூற நாங்களும் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த உண்மையை உங்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். என் மனதும் சற்றே லேசாகிப் போனது.

இந்த இடுகை எழுதியதின் நோக்கம், இந்த பயங்கர சூழ்நிலையில் நாங்களும் எங்களின் சகஜ வாழ்க்கையை மறந்து இந்த நிகழ்வில் அமிழ்ந்து போனோம். இனி இது போல் ஒரு கெட்ட சம்பவங்கள் யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது என்று மனது நினைத்தாலும் அந்த எண்ணங்கள் ஜெய்க்குமா?? ஆனால் இது போல் சில நிகழ்வுகள் சாதாரன மக்களை எப்படி பாதித்து விடுகிறது?

டிஸ்கி: காவல் துறையில் நேர்மையான பல அதிகார்கள் இருக்கிறார்கள் அதே போல் நேர்மையான காவல் நிலையங்களும் இருக்கின்றன. நேர்மையானவர்கள் தவிர்த்து தவறு செய்பவர்களைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

நிறைவுற்றது.....

Tuesday, November 3, 2009

நியாயங்கள் எங்கு கிடைக்கும்!!

நியாயங்களைத் கேட்டும், நீதியைத் தேடியும், நேர்மையை நாடியும் நாம் ஓடினோம், ஓடிக் கொண்டிருக்கிறோம், ஓடிக் கொண்டிருப்போம். இன்னும் இவைகளை அடைய முடியவில்லை என்ன செய்ய? அடையும் தூரம் அதிகமாக இருக்கிறது!!!



நான் எழுதுவது இந்த சமுதாயத்தில் சில மாதங்களுக்கு முன்னால் சத்தமில்லாமல் அரங்கேறிய ஒரு உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்.

ஒரு வீட்டில் கனகம்மா பல வருடங்களாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்(பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). தனது மூத்த மகள் பிரசவத்திற்கு வந்திருப்பதால் தனக்குப் பதிலாக தனது பதினெட்டு வயதே ஆன இளைய மகளை அந்த வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார் கனகம்மா. வேலைக்கு சென்ற பெண்ணின் பெயர் இப்போதைக்கு வனஜா என்று வைத்துக் கொள்வோம். காலை மாலை இரெண்டு நேரமும் வேலைக்கு செல்வது வனஜாவிற்கு வழக்கம். அப்படி ஒரு நாள் வேலைக்கு சென்ற போது அந்த வீட்டு எஜமானியம்மா தனது வீட்டில் சில கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் வேலைகள் இருப்பதாகவும், யாராவது தெரிந்த ஆள் இருந்தால் கனகாகிட்டே (வனஜாவின் அம்மா) சொல்லி வரச்சொல்லு என்று கூறி இருக்கிறார். இந்த பெண்ணும் சரி என்று கூறிவிட்டு வந்திருக்கிறாள்.இதே விஷயத்தை அந்த எஜமானியம்மா அக்கம் பக்கம் வீட்டிலும் கூறி வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் செய்ய கார்பென்டர் என்று கூறிக் கொண்டு ஒருவன் வந்திருக்கிறான். அந்த அம்மா யாரு அனுப்பி வந்திருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள். வெளியூரில் தங்கி இருக்கும் உங்கள் கணவர்தான் என்னை இங்கு வேலை இருப்பதாக போன் செய்து போகச் சொன்னார் என்று கூறி இருக்கிறான். இந்த அம்மாவும் அதற்குமேல் விவரம் கேட்காமல் வேலை என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி விட்டு சமையல் செய்ய சென்றிருக்கிறார்கள்.

அன்று வேலைக்கு வந்த வனஜாவோ திடுக்கிட்டுப் போனாள். ஐயோ! நம்மளிடம் யாரையாவது கார்பெண்டரி ரிப்பேர் வேலைக்கு வரச்சொல்லு என்றார்களே! அவர்களே ஆளை தேடிகிட்டாங்களே! ஒரு வேளை நம்மை திட்டுவாங்களோ! என்று பயந்தவாறு வேலைகளை முடித்து விட்டு மாடி வீட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாள்.

இதற்கிடையே வனஜாவின் வீட்டில் அனைவரும் வேண்டுதலை நிறைவேற்ற வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு போக முடிவு செய்தனர். வனஜாவின் தந்தை முடிவெடுத்த அடுத்த நாள் தனது மகளை வேலைக்கு செல்லும் போது அடுத்த ரெண்டு நாட்களுக்கு லீவு சொல்லிவிட்டு வா என்று கூறி இருக்கிறார். அதன்படி வனஜாவும் வேலைகளை முடித்துவிட்டு லீவு கேட்டிருக்கிறாள். அவர்களும் லீவு எடுக்க சம்மதித்து கையில் இருபது ரூபாவும் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். சந்தோஷமாக வீட்டிற்கு வந்த பெண் விவரத்தை பெற்றோர்களிடம் விவரிக்க, அனைவரும் கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் முன்னே ரெண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்க தந்தை வெளியே வர, அவர்கள் மூத்த மாப்பிள்ளையின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். எதற்கு என்று கேட்டதிற்கு விவரம் ஒன்றும் சொல்லாமல் அவர்களின் வீடு எங்கே என்று கேட்க; மூத்த மகளின் வீடும் எதிர் வீடுதான் என்று போலீசிடம் குழப்பத்துடன் கூறி இருக்கிறார் அந்த தந்தை.

அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிடவே யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் சகோதரர் இருவரையும் கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள், இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னே, விவரம் எதுவும் தெரியாத நிலையில் அழைத்துச் சென்று விட்டார்கள்.

கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்த ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட இந்த சலசலப்பு மிகப் பெரிய இடியாக இறங்கி விட்டது. குடும்பத்தலைவர் (சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கர் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் காவல் நிலையத்திற்கு ஓடி விவரம் கேட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் ஒரு அதிகாரி கூறி இருக்கிறார், என்னவென்று? வனஜா வேலை செய்த வீட்டில் "42" பவுன் தங்க நகைகள் காணமல் போய் விட்டதாம். உங்கள் மருமகன்தான் ஆள் வைத்து திருடி இருக்கிறான், அதற்கு நிறைய பேர் உங்கள் வீட்டில் உதவி ய்திருக்கிர்றார்கள் அதனால் ஒவ்வொருவராக கைது செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள்.

சங்கருக்கு தலை தட்டாமாலை சுற்ற ஒன்றும் விளங்காதவராக அடுத்து என்ன செய்வது என்று புரியாமலும், உதவிக்கு யார் வருவார்கள் என்று மனம் அலைபாய, வீட்டிற்கும் காவல் நிலையத்திற்குமாக அலைந்து கொண்டிருக்கும் போதே, அவரின் மனைவி மற்றும் மகளை (வயது பதினெட்டு) அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பயந்து போன
சங்கர் ஐயோ! என்னோட மொத்த குடும்பமும் இப்படி ஆகிவிட்டதே என்று அங்கலாய்த்த வண்ணம் என்ன செய்யலாம் என்று சங்கருக்கு குழப்பம் மிகுதியால் விவரம் அறிய மகள் வேலை செய்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே வெளியூரில் இருந்து வந்துவிட்ட கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிராகள். சங்கர் உள்ளே என்ட்ரி ஆனதும் மிகவும் சாதரணமாக பேசி அனுப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் சங்கரோ என்ன நடந்திச்சு எனக்கு எதுவுமே புரியல, உங்க வீட்டுலே நடந்த திருட்டுக்கும் எங்க வீட்டு மனுஷங்களுக்கும் என்ன தொடர்பு என்று அழமாட்டாத குறையா விசாரித்திருக்கிறார்.

அதற்கு அந்த வீட்டு எஜமானி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது! ஆனால் எங்க வீட்டுலே திருட்டு போனது உண்மை. ஆனால் உங்க ஆளுங்களை நாங்க காட்டிக் கொடுக்கலை. போலிஸ் வந்து உங்க ஆளுங்களை அழைத்துச் சென்றால் நாங்க என்ன செய்ய முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு சங்கர் மிகவும் தாழ்மையுடன் தயவு செய்து நீங்க காவல் நிலையம் வந்து எங்க வீட்டுலே கைது செய்த அனைவரையும் ரிலீஸ் செய்ய சொல்லுங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் நீங்க போங்க நான் உடனே காவல் நிலையம் வருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். சங்கர் நம்பிக்கையுடன் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து அங்கே எஜமானி அம்மாவிற்காக காத்திருந்தார்.

அவர்களும் வந்தார்கள், வந்தவர்கள் கையில் ஒரு மனு எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சங்கர் தன்னை வந்து மிரட்டியதாகவும் அவர்களின் குடும்பத்தார் மீதுதான் அதீதமான சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு நீதி அளிக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்து விட்டு சங்கரை திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டார்கள்.


வளரும்.....




Tuesday, October 27, 2009

நகரங்களும் நம்மளும்!!


நான் இப்போது சில நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூறுகிறேன். நான் கூறும் நிகழ்வுகள் எந்த நகரத்தில் என்று நீங்கள்தான் கூற வேண்டும்!!

நகரம் 1
நான்கு நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே இருவருக்குள் சண்டை வந்துவிட்டது. மூன்றாம் நண்பரும் நான்காம் நண்பரும் அவர்களுடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இருவரின் சண்டை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் சண்டை போடும் இருவரில் யாரு கரெக்ட் என்பதில் சண்டை போடாத இருவரும் விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 2
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்களுடன் இருந்த மூன்றாவது நண்பர் கண்டுக்காமல் தனியே நடக்க ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 3
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் அவர்களுக்குள் சமாதானம் செய்ய பல முயற்சிகள் செய்தார். தோல்வியுற்றாலும் முயற்சியை கை விடவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து சண்டை போட்டு கொண்டிருந்த இரெண்டு நண்பர்களும் கூட்டு சேர்ந்து மூன்றாம் நண்பரை அடி பின்னி விட்டார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 4
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். பெரிய கூட்டம் நின்று அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடன் வந்த மூன்றாவது நண்பர் சத்தம் போடாமல் ஒரு டீ கடையை திறந்து விட்டார். வியாபாரம் கொடிகட்டி பறக்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 5
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். உடன் வந்த மூன்றாவது நண்பர் அவர்களின் சண்டையை நிறுத்த உடனே ஒரு சாப்ட்வேர் தயாரிக்கிறார். அவர் தயாரித்த சாப்ட்வேரில் பக் இருந்ததினால் அவர்களின் சண்டையை நிறுத்த முடியாமல் போனது.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 6
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையை மக்கள் கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நண்பர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பொறுமை இழந்து "அம்மா" இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார், தயவு செய்து அமைதி காக்கவும் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 7
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். மூன்றாவது நண்பர் ஒரு பெட்டி நிறைய பீர் எடுத்து வருகிறார். அனைவரும் அமர்ந்து பீரை தேவையான அளவு அருந்துகிறார்கள். ஒருவொருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். முடிவில் நண்பர்களாக அவரவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள்....

கேள்வி: இது எந்த நகரம்??

நகரம் 8
இரெண்டு நண்பர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். முடிவில் அவரவர்கள் மொபைல் போனை எடுத்து அவரவர்கள் நண்பர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு உடனே வருமாறு அழைக்கிறார்கள். இப்பொழுது அங்கே ஐம்பது ஆட்கள் குழுமி விட்டார்கள். முடிவில் அனைவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

கேள்வி: இது எந்த நகரம்??


டிஸ்கி: இது எனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவுக்கு ஒருவர் கேட்டுக் கொள்வது. அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் வெளி இட்டிருக்கிறேன். இது யார் மனதையும் புண் படுத்த அல்ல தமாஷாகப் பேசிக் கொள்வது தமாஷாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.



Thursday, October 22, 2009

நான் தேடும் அவன்!!

இன்னைக்கு எப்படியும் இவனை.......... இருடி இன்னைக்கி நீ அவ்வளவுதான்!!

எப்படி அவன் இருக்கும் இடத்தை அடைவது? பலத்த பாதுகாப்போடு அல்லவா இருக்கின்றான். இருந்தா என்ன! நமக்கு குறுக்கு வழியா தெரியாது? தொடர்ந்து ரெண்டு வருடங்களாக எவ்வளவு முயற்சி செய்தும் ஒவ்வொரு வருடமும் தோல்விதான் மிஞ்சியது.

சரியான நேரம் நமக்கு அமையவில்லையே! இன்று எப்படியும் நமது வேலையை கச்சிதமாக முடித்து விடவேண்டும். நமது முயற்சிகள் தொடர்ந்து ரெண்டு வருடங்களாக தோற்றுக் கொண்டே வருகின்றது. இந்த முறை தோல்வியே எனக்கு இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவு செய்தான் சந்துரு. தேவையான உபகரணங்கள் அனைத்தும் மறைத்து வைத்துக் கொண்டான். எப்படி உள்ளே போறது? போலீஸ் வழியிலே நிக்குது. மனம் தளரக்கூடாது. எப்படியாவது உள்ளே நுழைந்து விடவேண்டும்.

மெதுவாக மிக மெதுவாக சுவற்றின் மீது ஏற முயன்று கீழே விழுந்து விட்டான் சந்துரு. விழுந்த வேகத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். சத்தம் கேட்டு ஒரு காவலாளி ஓடி வந்து பார்த்தான். யாரும் கண்களுக்கு தென்படாததால் சற்று நேரம் நின்று விட்டு தன இடத்திற்கே திரும்பினான்.

மறுபடியும் என்ன முயற்சி செய்யலாம்னு யோசித்துக் கொண்டு இருக்கையில், ஒரு மரம் கண்களுக்குப் பட்டது. அந்த மரத்தின் வளர்ச்சியும் சந்துருவிற்கு சாதகமாக வளர்ந்திருப்பது போல் தெரிந்தது. ஆமாம் அந்த மரம் சற்றே சாய்வாக வளர்ந்திருந்தது. அதில் ஏறினால் மாடி வரை செல்ல முடியும். அப்படியே சென்றாலும் அவனை கண்டு பிடிக்க முடியுமா? அவன் எந்த அறையில் இருப்பானோ? என்று சற்றே யோசித்தான். இருட்டில் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை.

"முயற்சி திருவினையாக்கும்" என்ற சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் மரத்தின் மீது கால்களை வைத்து ஏற ஆரம்பித்தான். கால்களை மாற்றி வைக்கும்போது மடியில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்த சத்தத்தில் மறுபடியும் எல்லாரும் விரைப்பானார்கள். காவலுக்கு கட்டி இருந்த செல்லப் பிராணியும் தனது வேலையை கச்சிதமாக செய்தது. மறுபடியும் காவலாளி கோபத்தின் உச்சத்துக்கே போனான்.

"யாரு! யாரு! யாரா இருந்தாலும் மரியாதையா வெளியே வந்திடுங்க, நான் கண்டுபிடிச்சா நாளைக்கு பால்தான்!" என்று குரல் கொடுத்தான்.

கீழே விழுந்த பொருளை எடுத்து மறுபடியும் மடியில் கட்டிக் கொண்டு மறைந்து கொண்டான் சந்துரு. எந்த சத்தமும் இல்லாததால் காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

விளக்கைப் போட்டு "என்னாச்சு கோபால்" என்று குரல் கொடுத்தார். (அந்த வீட்டு முதலாளி சாரங்கன்! இவர் உளவுத்துறை அமைச்சர்! அதனால் அவர்கள் வீட்டில் எந்த நேரமும் காவலுக்கு குறைச்சல் இருக்காது)

"ஒன்றும் இல்லை எசமான்! மரத்திலுள்ள கிளைகள் அசைந்த சத்தம்னு நினைக்கின்றேன். ஏதோ சத்தம் கேட்டுது அப்புறம் யாரும் இல்லை"

"போலீஸ் என்ன செய்யுது?"

"இப்போதான் டீ குடிக்கப் போனாங்க எசமான்"

"சரி உஷாரா இரு. ஏன் பிங்கி கத்திகிட்டு இருக்கு?"

"தெரியலை எசமான்! பசியா இருக்கும்னு நினைக்கிறேன்"

"உள்ளே வா பிஸ்கட் தரேன் பிங்கிக்கு கொடு நீ சாப்பிட்டுடாதே"

"இல்லைங்க எசமான்! நான் அப்படி எல்லாம் சாப்பிடமாட்டேன்!"

என்ன செய்யலாம்னு யோசித்த சந்துரு எப்படியும் இந்த முறை தவறு செய்யாமல் மரம் ஏறி மாடியை அடைந்து விட வேண்டும். அவங்க அப்பாவின் ரூம் தெரிந்து விட்டது. அவனின் அறையும் பக்கத்துலே தான் இருக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்தவன் மெதுவாக மரத்தை தொட்டு கும்பிட்டான்.

"மரம் மாமா! மரம் மாமா! நான் உன்னை ஒரு மரமா நினைக்கலை. இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்லும் படகு போல் நினைத்துக் கொள்கின்றேன். தயவுசெய்து எந்த தடங்கலும் வராமல் என்னை அக்கரைக்கு கொண்டு சேர்த்து விடு மரம் மாமா" என்று மரத்திடம் கெஞ்சிக் கேட்டு கொண்டபிறகு மெதுவாக ஏற ஆரம்பித்தான்.


பிஸ்கட் போட்ட பிறகும் பிங்கி கத்துவதை நிறுத்தவில்லை. பிங்கியின் சத்தம் சற்றே வேகமாக வந்துகொண்டிருந்தது. குறிப்பா அண்ணாந்து பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. டீ குடிக்கச் சென்ற போலீஸ் இருவரும் காவலாளி அருகே வந்தனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியலை.

"ஏன் கத்துது?" என்று ஒரு போலீஸ் காவலாளியிடம் கேட்டார்.

"அதான் சார் எனக்கும் புரியலை. இது ரொம்ப நேரமா கத்திகிட்டே இருக்கு. இது கத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தேன். யாரும் அங்கே இல்லை. அதுலே இருந்து பிங்கி கத்திகிட்டே இருக்கு. மொதலாளி பிஸ்கட் கூட கொடுக்க சொன்னாரு. பிங்கி அதை தொடவே இல்லை. கத்திகிட்டே இருக்கு" என்று மூச்சு விடாமல் விளக்கினார் காவலாளி.

"சரி, என் கூட வா! எங்கே சத்தம் கேட்டது? வரதா! அந்த டார்ச் எடுத்து வா" என்று இரெண்டாவது போலீசுக்கு கட்டளை போட்ட முதல் போலீசு இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.

"இந்த இடத்துலேதான் சார் சத்தம் கேட்டிச்சு"

"இங்கே ஒண்ணுமே இல்லையே?" நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். "இங்கே யாரும் இல்லையே? ஏன் பிங்கி விடாமல் கத்துது?"

"மருது, பிங்கி கத்தறதை பார்த்தா, யாரோ திருடன் உள்ளே புகுந்த மாதிரி சந்தேகமா இருக்கு. நீ எங்கேடா போனே? நாங்க டீ குடிச்சிட்டு வர்றவரை ஒழுங்கா இங்கேயே நிக்கனம்னுதானே சொல்லிட்டுப் போனோம். அறிவு இருக்கா உனக்கு? நாங்க அந்த பக்கம் போன உடனே நீ இந்த பக்கமா நழுவிட்டியா?"

"இல்லே சார் நான் இங்கேதான் இருக்கேன், நீங்க வேணா மொதலாளிகிட்டே கேட்டுப் பாருங்க" என்று அழமாட்ட குறையா சொன்னான் காவலாளி.

மறுபடியும் சத்தம் கேட்டு வெளியே வந்த அமைச்சர். "பிங்கி, சட் அப்! என்ன சத்தம் அங்கே?" என்று உரத்த குரலில் கேட்டாரு. பிங்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தது.

"என்னாங்கடா காவல் காக்கறீங்க! எவனோ உள்ளே பூந்திருக்கான். இல்லேன்னா பிங்கி இப்படி கத்தாது. மொதல்லே பூந்தவன் யாருன்னு தேடுங்க" என்று உரத்த குரலில் கூறினார் அமைச்சர்.

மரம் ஏறி ஒளிந்து கொண்டிருந்த சந்துருவிற்கு சப்த நாடியும் ஓடிங்கிப் போய்டிச்சு. அய்யய்யோ இப்படி வந்து சிக்கிட்டோமே. மாட்டிக்குவோம் போல இருக்கே!எப்படி அவனைப் பார்ப்பது! எனது இந்த எண்ணம் சாத்தியமா? என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கும்போதே சந்துருவின் மனதில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

"பிங்கியை அவுத்து விடுங்க, உங்களாலே என்ன செய்ய முடியும்? நேரத்துக்கு நல்லா சாப்பிடனும்! காவல் காக்காம டீ ரொம்ப முக்கியமா போச்சு இல்லே? விடியட்டும், உங்க ரெண்டுபேரையும் வேலையை விட்டே தூக்குறேன்." கோவத்தில் வார்த்தைகள் தடுமாற இறங்கி வந்த அமைச்சர் தானே பிங்கியை அவிழ்த்து விட்டார்.

பிங்கி வேகமாக மாடியை நோக்கிப் பாய்ந்தது. மாடி ஏறிய வேகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சந்துருவின் சட்டையை பிடித்து இழுத்தது. பின்னாடியே ஓடி வந்த போலீஸ், காவலாளி மற்றும் அமைச்சர் அனைவரும் அதிர்ந்து விட்டனர். அங்கே ஒரு பதினோரு வயது ஒத்த பையன் பயந்த முகத்துடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அமைச்சருக்கு கோபம் வந்துவிட்டது, "யார்ரா நீ" என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் ஒரு போலீஸ்காரர் ஓங்கி அந்த பையனின் கன்னத்தில் அறைந்தார். அறைந்த வேகத்தில் அந்த பையன் கொஞ்ச தூரத்தில் போய் சுருண்டு கீழே விழுந்தான்.

"எழுந்திரிடா எங்கே வந்தே" யார் நீ" என்று அமைச்சர் முடிப்பதற்குள் போலீசின் அடுத்த அடி அச்சிறுவனின் மீது விழுந்தது.

"இந்தாப்பா வெவரம் கேளு சும்மா அடிக்காதே. அடிச்சின்னா சரியாப் போயிடுமா?" என்றார் அமைச்சர்.

அடிச்ச அடியில் சந்துரு மடியில் கட்டிக் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் கீழே சிதறிப் போயின.

"என்னடா அது?" என்று போலீஸ் மறுபடியும் மிரட்டியது.

சத்தம் கேட்டு கல்யாண் வெளியே வந்தான். "என்ன டாடி, இங்கே ஒரே சத்தமா இருக்கு? யாரு வந்திருக்காங்க? அம்மா எங்கேப்பா? எனக்கு ஒரே பயமா இருக்கு! இது யாரு? "என்று கூறியபடி அந்த சிறுவனின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

"ஹேய்! சந்துரு நீ எங்கேடா இங்கே? உன்னை ஏன் போட்டு அடிக்கறாங்க!" என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் கல்யாண்.

"என்ன உனக்கு இவனை ஏற்கனவே தெரியுமா?"

"தெரியும் டாடி, இவன் எங்க பள்ளியில்தான் படிக்கறான். என்னோட கிளாஸ்தான் ரொம்ப நல்ல பையன். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா! பாவம் சந்துரு, அவனை அடிக்காதீங்கப்பா. சந்துரு ஒரு தப்பும் கண்டிப்பா பண்ண மாட்டான். ரொம்ப நல்லவன்பா" என்று கெஞ்சிய கல்யாண் தந்தையின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

"சரி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வா" என்று உள்ளே போனார் அமைச்சர்

"டேய் வாடா உள்ளே " என்று அழைத்த கல்யாண் அதிர்ந்து போனான். "என்ன சந்துரு கையிலே? எங்கே காட்டு" அதற்குள் அப்பாவின் குரல் வந்தவுடன் உள்ளே வேகமாக நண்பனின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் கல்யாண்.

"என்ன சத்தம் எல்லாரும் தூங்காமல் இங்கே என்ன செய்யறீங்க?" என்று கேட்ட கல்யாணோட அம்மா, ஒரு பையன் நிற்பதை அப்போதுதான் கவனித்தார்கள். "யாரு இந்த பையன்"

"என்னோட நண்பன் மம்மி"

"அது இருக்கட்டும் இந்த நேரத்தில் அவனுக்கு இங்கே என்ன வேலை? அவங்க வீட்டிலே தேடமாட்டாங்களா?"

"இல்லீங்கம்மா, எங்க அம்மாகிட்டே சொல்லிட்டுதான் வந்தேன்" இப்போதுதான் சந்துரு திருவாய் மலர்ந்தான்.

"என்ன சொல்லிட்டு வந்தியா? எதுக்கு இந்த இருட்டிலே மரம் ஏறி வந்தே?"

"இல்லே சார் இன்னைக்கு கல்யாணுக்கு பிறந்தநாள் இல்லையா? அதனால் முதல் கேக்கும், முதல் வாழ்த்தும் என்னோடதா இருக்கனும்னுதான் வந்தேன். ரெண்டு வருடமாக எப்படியாவது மொதல் ஆளா சொல்லனும்னு முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. கல்யாண் ரொம்ப பாதுகாப்பா இருக்கறதுனாலே என்னால் அவனுக்கு முதல் கேக் கொடுக்க முடிய வில்லை. நாங்க எல்லாம் ரொம்ப ஏழைங்க. உங்க வீட்டுலே எல்லாம் சேர்க்க மாட்டீங்கன்னு நினைச்சிதான், இப்படி தப்பிதமா முயற்சி பண்ணி உங்க வீட்டுக்குள்ளே வந்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார். போலீஸ் கிட்டே பிடிச்சி கொடுத்துடாதீங்க. நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன், ஒரு தங்கச்சிதான் இருக்கு. எங்க அம்மாவுக்கு யாருமே இல்லைங்க சார்" என்று அழ ஆரம்பித்தான் சந்துரு.

"மனம் நெகிழ்ந்த அந்த தாய், அவனை அருகே அழைத்து கன்னத்தில் தட்டி கொடுத்து, சரி உன் நண்பனுக்கு இப்பவே பிறந்த நாள் கொண்டாடுவோமா?" என்று அன்புடன் கேட்டார்கள்.

ஆர்வத்துடன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான் கல்யாண்.

"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ மணி பன்னிரண்டு தாண்டிடுச்சு. பரவா இல்லே, சந்தோஷமா சந்துரு?" என்று அன்பாக சந்துருவைப் பார்த்தார்.

"ரமா நீ போய் கல்யாண் போடாத டிரஸ் இருந்தால் ரெண்டு எடுத்து வா! சந்துரு நீ போய் கை கால்கள் கழுவிக் கொண்டுவா"

இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு. நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிறிய விழா ஆரம்பித்து முடிந்தும் விட்டது. அவனிடம் மிகவும் பரிவாக நடந்து கொண்ட கல்யாணின் பெற்றோர்களை மிகவும் வியப்புடனும் பெருமையுடனும் பார்த்தான் சந்துரு. நாம் எவ்வளவு தவறாக இவர்களை நினைத்து விட்டோம். மறுபடியும் இருவருடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

"ஏண்டா கேக் மட்டும் எடுத்து வரக்கூடாதா? கத்தி கூடவா எடுத்து வருவே? எங்கேயாவது குத்தி இருந்தா என்னடா செய்வே? இதுபோல் என்றுமே செய்யாதே. இனிமேல் என்னோட பிறந்த நாளுக்கு முன் தினமே எங்க வீட்டுக்கு வந்திடு" என்று மிகவும் முதிர்ச்சியான தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான் கல்யாண்.

இப்படி ஒரு குழந்தையை ஈன்று எடுத்ததிற்கு மிகவும் பெருமை அடைந்த அந்த பெற்றோர்கள் அதே சமயத்தில் சந்துருவின் நட்பையும் அன்பையும் சரிவிகத்தில் புரிந்து கொண்டனர்.

காவலாளியை அனுப்பி சந்துருவை அவங்க வீட்டில் விடச் சொன்னதோடு அல்லாமல், அடுத்த நாள் நடக்கப் போகும் கல்யாணின் பிறந்தநாள் விருந்திலும் சந்துருவின் வீட்டில் அனைவரையும் கலந்து கொள்ளச் சொல்லி அன்பு வேண்டுகோள் விடுத்து அச்சிறுவனை அனுப்பி வைத்தார்கள்.