Monday, June 22, 2009

சிகரம் தொட்ட காதல்!!




"ஏண்டா சரவணா, ஒரு மாதிரி இருக்கே? மேனேஜர்கிட்டே நீ திட்டு வாங்கி இன்னைக்கிதான் பார்த்தேன். என்ன பிரச்சனை? மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு மருகாதே. வெளியே சொன்னா மனப்பாரம் குறையும்." என்றான் சரவணின் நண்பன் நந்து.


"மனசே சரி இல்லைடா. பழைய நினைவுகளின் அதிர்வுகள் மனசோட ஓட்டத்தை நிறுத்திடுச்சுடா. வேலையிலே கவனம் செலுத்த முடியலை. அதான் லீவு போட்டு போயிடலாமான்னு யோசிக்கிறேன்."

"என்னாச்சு?"

"அவள் என்னைவிட்டு போய் வருஷம் மூணு ஆச்சுடா"




"உன்னோட தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிடுவதாக நினைக்காதேடா, அப்படி என்ன உன் வாழ்க்கையில் நடந்தது? என்மீது நம்பிக்கை இருந்தா உன் கவலைகளை என்னிடம் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம் சரவணா"

"நீ என்னோட நண்பன்டா! உங்கிட்டே பகிர்ந்துகரதுலே தப்பே இல்லை! இருந்தாலும் என் கஷ்டம் என்னோட போகட்டும்னுதான்....."


"என் தேவதை என்னோட கல்லூரிதான். எனக்கு ஒரு வருடம் ஜூனியர். கல்லூரி விழாவில் பாடினாங்க. பாட்டு மட்டும் அசத்தல் இல்லே; அவங்களும் அசத்தல் ரகம்தான். அறிமுகப் படுத்தியது என்தோழி. அவளிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு மெல்லிய புன்சிரிப்பு. அவளின் அமைதியான முகம் அன்றலர்ந்த தாமரைபோல் இருந்தது. அன்றே என் மனதிற்குள் அவளின் நினைவுகள் சாமரம் வீசத் தொடங்கிவிட்டன. அதற்குப்பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பும், பேசும் சூழ்நிலையும் அமையவில்லை. என்னோட கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. அவளின் பசுமையான நினைவுகளை ஆனந்தமாகச் சுமந்தேன் என்றுதான் கூற வேண்டும்."


"என்ன ஆச்சர்யம் பாரு! எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனது அலுவலகத்திற்கே வேலைக்கு வந்தாள். அங்கே நான் அவளுக்கு சீனியர். ஆதலால் வேலைகள் அனைத்தும் சொல்லித்தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. நெருக்கத்தின் விளைவு இருவருள்ளும் ஏற்பட்ட ரசாயன மாற்றம் இருவராலும் கண்டு கொள்ளப்பட்டது. விளைவு? பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். எல்லாமாகிப் போன என் தேவதை என்றோ என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஷயம் எனக்கு மட்டும்தானே தெரியும்!"

"அலுவலக வேலைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவா இருந்திருக்கின்றோம். அலுவலக வேலை தவிர எங்கேயும் வெளியே போகமாட்டோம். வேலை அதிகமானால் சில நாட்கள் இரவு நேரமாகிவிடும். அந்த சமயம் அலுவலகத்தில் அவளுக்காக காத்திருந்து இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு கிளம்புவோம். எங்கள் காதல் எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். அலுவலகத்தில் பாகுபாடின்றி அனைவருக்கு உதவிகள் செய்வேன். ஷாலினிக்கு செய்த உதவிகளும் அதே கோணத்தில்தான் பார்க்கப்பட்டன.. "
"அப்படித்தான் ஒரு நாள்.." சரவணனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டார்கள். ஷாலினி அவசரமாக மின்னஞ்சல் தயார் செய்து கொண்டிருந்தாள். நாளைய வேலையின் ஆரம்பம்தான் இந்த அவசரமான மின்னஞ்சல். சரவணன் வேலைகள் முடிந்ததால் அவள் அருகே வந்தமர்ந்து சில மாற்றங்களை கூறிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக வேலை முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் இருவரும் கிளம்பினார்கள்.


"ஏன் ஷாலு, ரொம்ப சோர்வா இருக்கே ?"

"தலை வலிக்குதுங்க "

"வா, பக்கத்திலே இருக்கிற ஹோட்டல்ல காபி குடிச்சிட்டு உன்னை ஆட்டோலே ட்ராப் பண்றேன்."


"வேண்டாம், யாராவது பாத்துடுவாங்க. நம் விஷயத்தை நல்ல முறையில் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கணும். வேறு யாராவது பார்த்து அப்பாகிட்டே சொல்லி காரியம் கெட்டுடக்கூடாது."

"பரவா இல்லே வா. தலைவலிக்குதுன்னு சொல்றே. அப்படியே உன்னை விட்டுட்டு போகச் சொல்றியா?"

"சரி, வாங்க போலாம் ஆனா சீக்கிரம் கிளம்பிடனும். ஐயோ! எங்க அண்ணன்"

"எங்கே?"


"ஐயோ என்னை பாத்துட்டானே! கிட்டே வரான்"

"ஷாலினி இங்கே எதுக்கு வந்தே? இது யாரு?"

"இல்லே இவரு எங்க ஆபீஸ்.. எனக்கு தலை வலிக்குதுன்னு காபி குடிக்க வந்தோம்" என்று தடுமாறினாள் ஷாலினி

"சரி குடிச்சுட்டு வா. வீட்டுக்கு போலாம்"

"தலை வலிக்குதுன்னு சொன்னாங்க ஷாலினி. காபி குடிக்கலாம்னு வந்தோம் ...."

"நான் அவினாஷ். ஷாலினியோட அண்ணன். பரவாயில்லை வாங்க சேர்ந்தே காபி குடிக்கலாம்" என்று மிகவும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான் அவினாஷ்.

"நான் சரவணன்! நன்றி உங்களோட புரிதலுக்கு"

காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.


"அடுத்தநாளும், அதற்கடுத்தநாளும் ஷாலினி அலுவலகம் வரவில்லை. எனக்கு ரொம்ப பயமா போய்டுச்சு. ஆனா, அன்று மாலை அவினாஷ் வந்தான். அவங்க அப்பா என்னை பார்க்கனும்னு அழைத்து வரசொன்னதாகச் சொன்னான். நானும் பார்க்கச் சென்றேன். எனது தேவதை என்னை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தாள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். என்ன என்று கேட்டேன். சரியாக பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்."

சில நிமிடங்களில் காபியும் பிஸ்கட்டும் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஷாலினியின் அப்பா வந்தார். மரியாதை நிமித்தம் எழுந்து நின்றேன்.

"உக்காருப்பா காபி சாப்பிடு! ஷாலினி நீயும் இப்படி வந்து உக்காரு."

"பரவா இல்லை சார், நான் இப்போதான் அலுவலகத்திலே குடிச்சிட்டு வந்தேன்"

"இங்கே பாருப்பா சரவணா! என்பொண்ணு எல்லா விவரத்தையும் என்கிட்டே சொல்லிட்டா.."

"இல்லேங்க சார்! என்னோட பெற்றோர்களை அழைத்து வந்து பெண் கேட்க வேண்டும்" என்று முடிக்கு முன்னே..


"அதெல்லாம் இருக்கட்டும், என்னோட சூழ்நிலையை உனக்கு சொல்லிடறேன். ஷாலினி அழகான, அடக்கமான பொண்ணு. பாக்கறவங்களுக்கு அவளை ரொம்பப் பிடிச்சிடும் அதெல்லாம் உணமைதான். இப்போது அவளுக்குத் திருமணம் செய்வதாக இல்லை."


"உங்களோட காதல் தவறுன்னு சொல்லலை. உன்னுடன் கூடிய ஷாலியின் நட்பை குறித்து உங்கள் அலுவலகத்திலே விசாரித்தேன். எல்லாரும் உங்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் கூறினார்கள். கண்ணியமாகத்தான் உங்கள் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றது."


"சரவணா! உங்க வீட்டிலேயும் காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டங்காளாமே? உங்க தாய்மாமன் கூறி இருக்கிறாரு . உங்க ஊரிலே எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.உங்கள் குடும்பம் குறித்து விசாரித்ததில் இந்த வெவரம் தெரிஞ்சுது. காதலுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் மூன்று பெண்களைப் பெற்ற மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண தந்தையாகப் பேசுகிறேன். நான் எந்த முடிவெடுத்தாலும் எனது சமூகத்திற்குக் கட்டுப்பட்டுதான் எடுப்பேன்."
"சார்..."

"இரு சரவணா நான் இன்னும் பேசி முடிக்கலை, இருமனமும் ஒத்துப் போனால் மட்டும் நிறைவான வாழ்வைத்தராது... அனைவரின் சந்தோஷத்திலும் மலர்வதுதான் வாழ்க்கை"


"இருவர் குடும்பத்திலும் சம்மதிக்கலைன்னா என்ன செய்ய போறீங்க? ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? அப்படி செய்தால் தாயில்லாம வளர்ந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு ஷாலினியை எல்லாரும் தவறாகப் பேசுவாங்களே அதை யோசிச்சீங்களா? மூத்தவள் எப்படி இருக்கிறாளோ அதை வைத்துதான் அவ தங்கச்சிங்களையும் எடை போடுவாங்க அதுவும் உண்மைதானே?" என்று மூச்சு விடாமல் பேசி நிறுத்தினார் நாராயணன். (ஷாலினியின் தந்தை) .

"உங்க நிலைமை எனக்கு புரியுது சார், எனது பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது எனது பொறுப்பு. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க "


"அது இல்லைப்பா அவங்க சம்மதித்தாலும் நான் சம்மதிக்க முடியாதே! எங்க சமூகத்தினர் இந்த திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். அடுத்து எனது ரெண்டு பெண்களின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கு. சூழ்நிலையை நீயே கொஞ்சம் யோசி."


"அதே போல் யாரும் ஒத்துக் கொள்ளாமல் திருமணம் செய்து செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பில்லை. இரு தரப்பு பெற்றோர்களும் ஒதுக்குவார்கள், இரு தரப்பு உறவினர்களும் ஏற்றுக் கொள்வது கடினம். தேவைகள் எந்த ரூபத்திலும் வரலாம். நண்பர்கள் எவ்வளவு நாட்கள்தான் உங்களுக்கு உதவுவார்கள். "திருமணப்பதிவு
அலுவலகம்"
வரை வருவாங்க. அப்புறம் ஒரு ரெண்டு நாட்கள் வரலாம். அதுக்கு மேல் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போய்டுவாங்க. இதுதான் நிதர்சனம்."

"பணக்கஷ்டம்! கடன் வாங்கி சமாளிக்கலாம். மனகஷ்டம்! எப்படி தீர்க்க முடியும் சரவணா? இருவருகுள்ளே இருக்கும் குற்ற உணர்வு.அதுதான் நமது மனசாட்சி அதற்கு வேஷம் கட்ட தெரியாது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்குமே! அதை ஜெயிக்க முடியுமா உங்களால்? உறவினர்களின் பிரிவை அப்பட்டமாக வெளிப்படுத்தும். எவ்வளவு நாட்கள் தனிமையில் போராடுவீர்கள்.?"



"சிக்கல்கள் இல்லாதவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்குள் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தால் யார் தீர்த்து வைப்பார்கள்? சட்டமா? ஒரே கோணத்தில் இருந்துகொண்டு வாழ்க்கையை சித்தரிக்கக்கூடாது. நான் பேசுவது எதிர் மறையாகத்தான் உங்கள் இருவருக்கும் இப்போது தெரியும். அதனால் என் மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் கூறுவது அவ்வளவும் நிதர்சனம்."


"இன்றைய சந்தோஷம் மட்டும் நினைவில் கொண்டு நீங்கள் காரியம் மேற்கொண்டால், நாளைய சந்தோசம் யார் கையில் என்று சிறிதேனும் யோசித்தீர்களா? நீயாவது சொல்லும்மா! ஏன் பேசாமல் இருக்கிறாய்? "அழ அழ சொல்வார் தன மனுஷா சிரிக்க சிரிக்கச் சொல்லுவார் பிறர் மனுஷா" அப்படீன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இதன் முழு விளக்கம் புரியுதா? நான் கூறுவதில் ஏதேனும் நியாயம் இருப்பது போல் இருவரும் உணர்ந்தீர்களேயானால் சரியான முறையில் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாங்க."

"நீங்க சம்மதிச்சீங்கன்னா சரவணன் அவங்க பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிடுவாருப்பா ப்ளீஸ்பா"


"ப்ளீஸ் போட்டு வாழ்க்கையை ஆரம்பிக்ககூடாதும்மா. அவர்கள் சம்மதித்தாலும் நானும், நமது உறவினர்களும் சம்மதிக்க மாட்டோம். இருவரும் யோசிச்சு முடிவெடுங்க. ஷாலினி சரவணனை சாப்பிடச் சொல்லி அனுப்பும்மா. நான் கடை வரை போயிட்டு வரேன். வரேன் சரவணா!"

அமைதியை விழுங்கிய நாங்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து அமர்ந்திருந்தோம்.

"ஷாலினி கிளம்பறேன் "

"இப்போ என்ன பண்ணறது சரண், எங்க அப்பா இப்படி சொல்லிட்டாரே?"


"உங்க அப்பா அவரோட கவுரவமும், சமுதாயமும்தான் முக்கியம்னு தெளிவா சொல்லிட்டாரு. அடுத்து திருமணமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்காது. நாம ஓடிபோய் அவமானப்பட வேண்டாம். நாம் இருவரும் சந்திக்கவே இல்லைன்னு நினைச்சுக்குவோம்.

"உங்களாலே முடியுமா சரண்"


"முடியனும் ஷாலினி! நான் கிளம்பறேன்" முத்துக்களாக உருண்டு ஓடி வந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் மறைத்த அதே நேரத்தில் ஷாலினியும் விம்மிக்கொண்டு உள்ளே ஓடுவதும் சரவணனுக்கு தெரிந்தது.

"அதற்குப்பின் அவளை நான் சந்திக்கவில்லை" இந்த ஊருக்கு வந்துட்டேன் என்று பெருமூச்சு விட்டான் சரவணன்.

"சரவணா என்ன சொல்றதுன்னே தெரியலைடா..! ஆனா உங்க காதல் சிகரத்தைத் தொட்ட காதல்தாண்டா!"

('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)




Friday, June 19, 2009

ஏழு அதிசயங்களில் அடங்கிய ஒரு அதிசயம்!!

உலக அதிசியங்களில் ஒன்றான பிரேசில் நகரத்தின் எழில் கொஞ்சும் அழகை உங்களுக்காக இங்கே அளிக்கின்றேன். ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கலாம் இருப்பினும் நான் போற்றி பாதுகாக்கும் பெட்டகங்களில் இந்த பொக்கிஷங்களும் அடங்கும்.

வாங்க அந்த அழகை ஆராதிக்க போகலாம்....


உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றான அழகிய பிரேசில் நகரம்!!


அழகே உன்னை ஆராதிக்கின்றேன் என்று சொல்லலாமா!!






நகரத்தை ஆசிர்வதிப்பது போன்ற சிலையின் வடிவமைப்பு!!



பிரேசில் நகரின் கண்கொள்ளா காட்சிகள் அசத்துகின்றதே !!


Corcovada இந்த மலையை அடைய சிரமம் ஒன்றும் இல்லை. பேருந்திலோ அல்லது ரயிலின் உதவியாலோ காடுகளுக்கு நடுவே பிரயாணம் செய்து மலையுச்சியை அடையலாம்.



இந்த படத்தில் Corcovada மலையை அடைய போடப் பட்டிருக்கும் பாதையை தெளிவாகக் காணலாம்.



இந்த படம் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகரத்தின் கொள்ளை அழகு


வானத்துச் சந்திரனே ஜீசஸின் சிலை அழகை மேலேயிருந்து ரசிக்கின்றதோ ?




இந்த அழகை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை!!



இந்த ஜீசஸ் சிலையின் உயரம் 125 அடி (38 மீ) . மேலும் 2330 அடி (710 மீ) Corcovada மலையின் உச்சியில் அமைந்திருக்கின்றது.




இவர்களின் சந்தோஷங்கள் நமக்கும் தொற்றிக் கொள்கின்றதே !!


நமது கண்களுக்கு விருந்து வைக்க எடுத்த படமாக இருக்குமோ?

வானமெது! பூமியெது! கடலெது! மலையெது! இப்படி பல கேள்விகள் நம்மைச் சுற்றுகின்றனவே !! இதில் ஏசுவின் சிலை அழகே அழகு!!




இந்த அழகான இயேசுவின் சிலை அருகே நாம் செல்கின்றது போல் உணர்வு ஏற்படுத்துகின்றதே!!





ஆதவனின் அழகில் இவர் போடும் தூண்டிலில் என்ன சிக்கியது!


கடலும் கடலைச் சுற்றி வீடுகளையும் காப்பேன் என்று கூறுகிறாரோ!!

ஜீசஸ் சிலைதான் ஏழு அதிசயங்களில் ஒன்றானாலும், என் மனதில் அந்த நகரமே அதிசயமாகத்தான் தெரிகின்றது.





Wednesday, June 17, 2009

பதினேழு சட்ட திட்டங்கள் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே!!

சட்ட திட்டங்கள் என்பது பல உள்ளன.

ஆனால் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமான முறையில் இங்கே.....


1. எப்பொழுதும் சட்ட திட்டங்களை உருவாக்குவது பெண்ணே.


2. அச்சட்டதிட்டங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாறக் கூடியது.


3. எந்த ஒரு ஆணும் அச்சட்டத்திட்டங்கள் அனைத்தயும் அறிந்திருக்க இயலாது.


4.ஒருவேளை, ஆண் அச்சட்டதிட்டங்களை அறிந்திருப்பானோ என்று ஐயம் ஏற்பட்டால், பெண்ணானவள் அனைத்து அல்லது சில சட்ட திட்டங்களையாவது உடனடியாக மாற்றி விடுவாள்.


5. பெண் எப்போதும் தவறாக இருக்க மாட்டாள்.


6. அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில், அது அனேகமாக ஆண் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் தவறு செய்து இருக்க வேண்டும்.


7. ஒருவேளை விதி #6 நடந்துவிட்டால், ஆண் உடனே நடந்து முடிந்த கருத்து வேறுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.


8. பெண் எந்த நேரமும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளல்லாம்.


9.ஆண் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு முன், வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ பெண்ணிடம் தெரிவித்தாக வேண்டும்.


10. பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் கோபம் கொள்ளவோ வருத்தப்பட வைக்கவோ உரிமை உண்டு.


11.ஆணானவன் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண்ணால் அனுமதிக்கப்படும் வரை எப்போதும் அமைதி காத்து புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.


12. எந்த நேரத்திலும் ஆண் கோபம் கொள்ளவோ, வருத்தம் கொள்ளவோ பெண் அனுமதிக்க மாட்டாள்.


13.பெண்ணின் மனதை புரிந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கப் படுகிறான்.


14. எப்போதும் என்ன முக்கியம் என்று பெண் கருதுகின்றாள் என்றால், அவள் என்ன சொல்லுகின்றாள் என்பதைவிட என்ன நினைக்கின்றாள் என்பதுதான்.


15. ஆண் ஏன் இந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை என்றால் .........


16.இந்த சட்டதிட்டங்களை எழுத்து வடிவில் கொடுக்க முயற்சித்தால் உடல் வதைதான் மிஞ்சும்.


17. ஒருவேளை ஆண் தான் செய்வது சரி என்று நம்பினால் #5வது விதியை நினைவு கூர்ந்து கொள்ளவேண்டும். (இது மிக மிக அவசியமான ஒன்று.......)




டிஸ்கி: இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதியவை அல்ல. எனக்கு ஒரு தோழி அனுப்பியதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான் சிரிக்க மட்டும்தான்..........


Friday, June 12, 2009

கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !!


கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம்.

அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா?

வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.

கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு
உக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்! அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.

சரி மேலே சொல்லு அப்படின்னு ஒரே சுவாரசியமா கேட்க ஆரம்பிச்சிட்டோம். இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். என்ன செய்ய! உடம்பு பூரா ஒரே கொழுப்பு அப்போ. இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன்.

தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. ரொம்ப தைரியசாலிதான் போங்க. என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்!

அப்படிதான் அன்னைக்கும் நட்ட நடுவிலே உக்காந்து உம் கொட்ட கூட பயந்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு இரவின் லேசான குளிரிலும் எனக்கு ரொம்ப வியர்த்துப் போச்சு. நீங்களும் அந்த கதையை கேளுங்க கொஞ்சம். என்னை திட்டாதீங்க!

நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க.

என்ன அட்டகாசம் செய்யறாங்கன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே இல்லே, நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும், நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு சொன்னாங்க. ரொம்ப பழக்கப் பட்ட மாதிரி பேசினாங்க. எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய்டுச்சு. ஏன்னா, அப்போ மணி பன்னிரெண்டரை. என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு தோழி சத்தம் போடாதேன்னு எனது வாயை பொத்தினாள். அதையும் மீறி நான் அழ ஆரம்பிக்க! அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு.

அவ்வளவுதான்! எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்டுச்சு!! ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்". இன்னொரு தோழி நாம் இங்கே இருக்கிறது நல்லது இல்லே, அவங்க அவங்க ரூமிற்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க.

ஆனால் நான் போகமாட்டேன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். தனியா ரூம்லே படுக்க பயம்.

சரி போய் உன்னோட தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்திடு. அதுவரை நாங்க எல்லாம் இங்கேயே நிக்கறோம்னு சொன்னாங்க.

நானும் சரின்னு மெதுவா ரொம்ப மெதுவா "இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க" ன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி அடிபிரதச்சனம் பண்ணி என்னோட ரூமை அடைந்தேன். விளக்கை போட பயம். மெதுவா தண்ணி பாட்டில் எடுத்து தண்ணீர் குடிச்சேன். தண்ணீரை குடிச்சிட்டு நேரா இருந்த ஜன்னலை பார்த்தேன். சரி அதையும் மூடி விடலாம்னு நினைச்சி ஜன்னல் கிட்டே போனேன். அவ்வளவுதான், அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான்!! கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். அதுக்குள்ளே எங்க வார்டன் எழுந்திட்டாங்க. லைட் போட்டாங்க.

நான் பயத்திலே வெளியே ஓடி வந்திட்டேன். கத்திகிட்டே ஓடி வந்தேனா! வந்த வேகத்திலே கீழே விழுந்துட்டேன். அதுக்குள்ளே வார்டன் கதவைத் திறந்து நான் விழுந்த இடத்திற்கு வந்திட்டாங்க.

"என்னாடி இங்கே வந்து கிடக்கறே? எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம்? படிக்காதீங்க! எப்போ பார்த்தாலும் கூட்டமா உக்காந்துகிட்டு ரந்து பண்ணுங்க. உங்களை எல்லாம் நிக்க வச்சி தோலை உரிக்கனும்னு" திட்டினாங்க. நான் அழுகையை நிறுத்தலை. அழுதுகிட்டே இருந்தேன்.

"சரி சொல்லித் தொலை ஏன் அழறே என்ன நடந்தது?"

அவங்களுக்கு எப்பவுமே என் மீது கொஞ்சம் அன்பு உண்டு. ஏன்னா பத்து தேதிகுள்ளே கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்க்கச் சொல்லுவாங்க. மெஸ் கூட அவங்கதான் பார்ப்பாங்க. அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். அதனால் நான் பண்ற தப்பை கண்டிப்பாங்க, ரொம்ப திட்ட மாட்டாங்க. அப்புறமா நான் நடந்ததை சொன்னேன். சரின்னு அவங்களும் என்னோட அறைக்கு வந்து ஜன்னல் வழியா பார்த்தாங்க. ஒண்ணுமே அப்போது தெரியலை. நான் என்ன சொல்லியும் அவங்க என்னை நம்ப தயாரா இல்லே.

சலங்கை சத்தம் பற்றி கூட சொன்னேன். அதையும் அவங்க நம்பலை. ஆனா பாருங்க வார்டன் கிட்டே சொல்லும் போது சலங்கை சத்தமும் கேட்கலை, அங்கே அமர்ந்திருந்த என்னோட தோழிகள் ஒருவரையும் காணலை.

அதனால் வார்டன் "சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரமா கட்டறேன்னு" கருவிகிட்டாங்க. ஆனா ஒருத்தி கூட நான் என்ன ஆனேன்னு வெளியே வந்து பார்க்கலை. எனக்கும் எல்லார் மேலேயும் ஒரே கோவமா வந்தது.

வார்டன் ரூமிலேயே படுத்துக்கறதா முடிவெடுத்தப் பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. ஆனாலும் அந்த ஜன்னல் காட்சி மனதை நெருடிக் கொண்டிருந்தது. அதையே மறுபடியும் அசைப் போட்டுக் கொண்டே தூங்கப் போனேன்னு நினைக்கின்றேன். திடீர்ன்னு பேய் பேய்ன்னு தூக்கத்திலே கத்த.. வார்டன் என்னை அடிச்சு எழுப்ப... ஒரே அமர்க்களம் ஆகிவிட்டது. எழுந்து உக்காந்துகிட்டே இருந்தேன். வார்டன் மறுபடியும் தூங்கிட்டாங்க.

இப்படியே விடிஞ்சிடுச்சு. என்னோட அறைக்குப் போனவுடன் முதல் காரியம் என்னோட ஜன்னலைப் பார்த்தேன். யாருமே அங்கே இல்லே. காலையிலே ஆறு மணிக்கு பேய் போய்டும்னு நினைச்சிகிட்டு வரப் போகும் இருட்டிற்கு பயந்தவாறு கல்லூரிக்குப் போனேன். என்னோட தோழிகள் ஒருவருடனும் நான் பேசவில்லை. என்னை அநியாயத்திற்கு கழட்டி விட்டுட்டாங்கன்னு அவங்க மேலே கோவம்.

கல்லூரிக்கு போகுமுன் எல்லாரும் ஒரு இடத்திலே சேர்ந்து கொஞ்ச நேரம் இருப்போம். அப்புறமாதான் கல்லூரிக்குள்ளே போவோம். ஆனா அன்னைக்கி நான் அந்த இடத்துலே நிக்காமல் அவங்களை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் அவங்களையும் தாண்டிப் கல்லூரிக்குள்ளே போயிட்டேன். என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க.

சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க. அடி பாவிங்களா, நான் ஒண்ணுமே சொல்லலை, என்னை நம்புங்கடின்னு சொல்லியும் கேட்கலை.

எல்லாமே எங்க தோழிங்களோட செட்டப்புன்னு ஒரு தோழி எனக்கு உணமையானவளா உண்மையை ஒத்துகிட்டா. என்னோட பயம் அவங்களுக்கு தெரிந்ததாலே என்னை போட்டு பயமுறித்தி தாளிச்சிட்டாங்க.

அவங்களோட மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர கொஞ்ச நாட்கள் ஆனது. அப்புறம் என்ன? மறுபடியும் சேர்ந்து உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டோமில்லே!

டிஸ்கி: இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. இதைப் படிக்கும் எனது கல்லூரி தோழிகளே! என்னை திட்டாதீங்க. இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.

டேக் இட் ஈசிம்மா!!



Wednesday, June 10, 2009

வேலை கிடைக்கலையே வேலை!!


"அப்பா! கடவுளே! இன்னைக்காவது நமக்கு வேலை கிடைக்கணும். பிள்ளையாரப்பா நீதான் என் கூட வரணும். வந்து அந்த வேலையை கையோட வாங்கி குடுத்துடணும். என்ன அப்படி பாக்கறே? எனக்குன்னு யாரு இருக்கா? அதான் உங்கிட்டே மொத்தமா பொலம்பறேன். ஒன்னும் நினைச்சுக்கலையே?"

"சரி நான் முன்னாலே போறேன் நீ பின்னாலே வாரே!" என்னாதிது! சாமியைப் பார்த்தா இந்த பாட்டு வருது? நான் ரொம்ப மோசமோ? ச்சேச்சே அப்படி எல்லாம் இல்லே. ஏதோ யாரும் இல்லாத இந்த அனாதைப் பயலுக்கு இந்த பிள்ளையாருதானே துணை என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு சென்றான் நந்தா.

அப்பாடி ஒரு வழியா வந்தாச்சு. எப்போ மொதலாளி வருவாரோ தெரியலையே! இங்கே வந்து காவ காக்கணும் போல இருக்கே. இங்கே யாரையுமே காணோமே? சரி, இங்கே உக்கந்திருப்போம்.

"யார் நீ? என்ன வேணும்? ஏன் இங்கே வந்து உக்காந்திருக்கே?" இந்த கேள்வியின் நாயகன்தான் அந்த அலுவலகத்தின் காவலாளி.

"நான் மளிகைகடைக்கா வந்திருக்கேன்? இவன் ஏன் இப்படி நம்பகிட்டே கேள்வி கேக்கறான்? பார்வையே சரி இல்லையே! நம்பளை ஒரு பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு பாக்கறானே! என்ன சொல்லலாம்! இவனை எப்படி ஆப் பண்ணலாம்?

பதில் வராததால் காவலாளிக்கு கோபம் வந்திடிச்சு. "டேய் எழுந்திரிடா! இங்கே வந்து உக்காந்துகிட்டு பதில் பேசாம முழிக்கறே? ஆமா, நீ யாருன்னு கேக்கறேன் இல்லே?"

"இங்கே பாரு, நான் இங்கே வேலைக்கு வந்திருக்கேன். நீங்க என்ன மரியாதை இல்லாம என்னை பேசறீங்க? உங்க முதலாளிதான் வரசொன்னாரு" என்றான் நந்தா.

"என்னா மொதலாளி வரசொன்னாரா? ஏண்டா ரவுசுவுடறே? வரச்சொல்லி இருந்தா என்கிட்டே கண்டிப்பா சொல்லி இருப்பாரு" என்று கூறி முடிக்குமுன்னே மொதலாளி வருவதை பார்த்ததும் வணக்கம் கூறி விறைப்பாக நின்றான் காவலாளி கபாலி.

"ம்ம்ம், யாருகிட்டே பேசிகிட்டு இருக்கே?"

"ஐயா உங்களை பார்க்கனும்னு இவன் ரொம்ப நேரமா உக்காந்து இருக்கான். நீங்கதான் வரச்சொன்னிங்களாம்! ஆமாவா ஐயா?"

"என்ன ஆமாவா! இல்லையா? கேள்வி பதிலா நடத்துறே? சரி உள்ளே வரச்சொல்லு"

"டேய் உள்ளே போ ஐயா வரச்சொல்றாரு!"

"அட அதை கொஞ்சம் மெதுவா சொன்னா என்னவாம்? ஏன் இப்படி கத்தறீங்க?"

"கதவை தட்டிட்டு உள்ளே போ, அப்படியே உள்ளே ஓடாதே" இவனை போயி ஏன் இந்த முதலாளி வரச்சொல்லி இருக்காரு. சுத்த காட்டானாட்டமா இருக்கான். என்ன வெவரமோ ஒன்னும் புரியலையே?

"சார் வணக்கம், என்னை மொதல்லே மன்னிச்சுடுங்க! நீங்க உள்ளே வந்த போதே வணக்கம் போடலைன்னு தப்பா நினைக்காதீங்க. காவலாளி ரொம்ப கேவலமா திட்டிட்டாரு. அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு"

"என்னா வந்தவுடனே வத்தியா? அதெல்லாம் எனக்கு பிடிக்காது."

"மன்னிச்சுக்குங்க சார்! இனிமே இந்த மாதிரி எதுவும் பேசமாட்டேன். வேலை விஷயமா வரச்சொன்னீங்க! அதான் வந்தேன்"

"என்னா வேலை தெரியும்?"

"என்னால் எல்லா வேலையும் பார்க்க முடியும் சார்"

"எல்லா வேலைன்னா? என்னா வேலை?"

"அதான் எல்லா வேலையும் பார்ப்பேன்!" ரொம்ப வெவரமா பேசறமாதிரி நினைச்சிகிட்டு உளறிட்டோமோ?

"அதெல்லாம் இருக்கட்டும் இப்போ நான் சொல்றதைக் நல்லா கேட்டுக்க! கோவில்லே ஐயிரு சொன்னாறேன்னுதான் உன்னை இங்கே வரச்சொன்னேன். அவரு பேரை காப்பாத்தனும் சரியா?

"சரிங்க சார்"

உன்னோட வேலை இங்கே தயாரிக்கற மெழுகுவத்தியை கடை கடையா ஏறி வித்துட்டு வரணும். கணக்கு சுத்தமா பைசல் பண்ணனும். தினம் காலையிலே எட்டு மணிக்கு வந்துடனும். அங்கே இங்கேன்னு பேசிகிட்டு நிக்கக்கூடாது. பேசறது எனக்கு பிடிக்காது. நீ ரொம்ப பேசுவேன்னு ஐயிரு சொன்னாரு. இருந்தாலும் அவரு உனக்கு வேலை கொடுக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியதாலே , பரிதாபப்பட்டு உனக்கு இந்த வேலையைப் போட்டு தரேன். தினமும் 300 ரூபாய்க்காவது வத்தியை விக்கணும்." என்றார் மொதலாளி வரதன்.

என்னா வத்தி விக்கணுமா? நான் ஏதோ டைப் அடிக்கற வேலைன்னு நினைச்சேன்" பெரிய பொல்லாத வேலை அதுக்கு இவ்வளவு அட்வைஸ்.

"உனக்கு டைப் அடிக்க தெரியுமா?"

"அட என்னாங்க சார் எங்கே இருக்கு மெசின்! காட்டுங்க, நான் நல்லா டைப் அடிப்பேனே?"

"நீ எவ்வளவு படிச்சிருக்கே?"

"சார் டைப் அடிக்க எதுக்கு சார் படிக்கணும்? நீங்க காட்டுங்க நான் நல்லா அடிப்பேன்"

"இங்கே பாரு நந்தா! நான் சொன்ன வேலையை பாரு, தெரியாத வேலையை எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசிகிட்டு நடிக்கக் கூடாது. போ போயி இன்னைக்கே வத்தியை விக்கப்பாரு"

"சரிங்க சார்", நல்லா வந்தோம் வேலைக்கு. வத்தி விக்கனுமாமில்லே வத்தி, ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லையே! வத்தியை தூக்கிகிட்டு தெரு தெருவா சுத்தனுமா? அதுக்கு பிள்ளையார் கோவில்லே பொங்கல் வாங்கி தின்னே காலத்தை கழிப்பேனே! சிதறு தேங்காய் வேறே கிடைக்குமே. இப்படி நம்பளா வந்து மாட்டிகிட்டோமே! இந்த கோவில் குருக்களுக்கு அநியாயத்துக்கு கெட்ட எண்ணம். தெரிஞ்சவரு கிட்டே சொல்லி வேலை வாங்கித்தரேன்னு சொல்லி இப்படி சிக்க வச்சுட்டாரே! இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? வேண்டாம்னு சொல்லிடலாமா? என்று தனக்குத்தானே புலம்பியவாறு வெளியே வந்தான் நந்தா.

காவலாளிக்கு இப்போ நல்லா புரிந்தது! இவன் பைத்தியக்காரன்தான், தனக்குத்தானே பேசிகிட்டு வரான். "டேய் இங்கே வா? மொதலாளி என்ன சொல்லி அனுப்பினாரு?"

"ம்ம்ம், வேலை போட்டு கொடுத்திருக்காரு"

"என்னா வேலை?"

"ம்ம்ம் உன்னோட இடத்துலே இனிமேல் நாந்தான்னு சொன்னாரு"

"எடு செருப்பை நான் எவ்வளவு வருஷமா விசுவாசமா இங்கே இருக்கேன். இப்போ வந்த நீ இங்கே காவலாளியா? பார்த்தா களவாணிப் பய மாதிரி !இருக்கே"

"இங்கே பாருங்க தேவை இல்லாம என்னை பேசாதீங்க"

"சரி கோவப்படாதே! இங்கே உனக்கு அப்படி என்னதான் வேலை?"

"வத்தி விக்கனுமாம்! எனக்கு அந்த பொறுமை எல்லாம் கிடையாது. பேசுவேன் அவ்வளவுதான். வியாபாரமெல்லாம் பண்ணத் தெரியாது"

"அப்போ எதுக்கு வேலைக்கு வந்தே? வேல்லைக்குன்னு வந்திட்டா என்னா வேலைக் கொடுத்தாலும் செய்யனும், வத்தி விக்கறது அவ்வளவு கேவலமா? மொதல்லே அதே மெளுகுவத்தின்னு சொல்லு. அதுவே சொல்லத் தெரியலை. நீயெல்லாம் போய் என்னாத்தே வியாபாரம் பண்ணி பிழைக்கப் போறேயோ?"

"இங்கே யாரு நந்தா?"

"நான்தான் பா என்ன சொல்லு"

"இல்லே மொதலாளி இந்த பையை உங்கிட்டே கொடுக்கச் சொன்னாரு"

"என்னாது?"

"ம்ம்ம் பிரிச்சிப் பாரு, 5 கிலோ அல்வா அனுப்பி இருக்காரு! ஆளுங்களைப் பாரு வந்த வேலையைப் பார்க்காம கேள்வியா கேக்கறே கேள்வி?"

"சரி சரி ரொம்ப சிலும்பாதே, குடு அந்தப் பையை" ஐயோ! என்ன இவ்வளவு கனக்குது? அவ்வளவும் மெளுகுவத்தியா? சரி போகும்போது எடுத்துகிட்டு போகலாம். அதுவரை இந்த மேடை மீது இருக்கட்டும்.

"ஆமா அங்கே ஒரு வீடு இருக்கே அதுலே யாரு இருக்காங்க?"

"அதுலே ஐயா நிறைய பேரை வச்சிருக்காரு, மனநிலை சரி இல்லாதவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நம்ம ஐயாதான் வைத்தியம் பாக்குறாரு"

"ஐயோ அவங்க எல்லாம் இங்கே வருவாங்களா? எனக்கு பயந்து வருதே"

"எதுக்கு பயப்படறே? அவங்க யாரையும் ஒன்னும் செய்யமாட்டாங்க, உன்னோட வேலையை மட்டும் பாரு"

"ஆமா அவங்க கையிலே என்னா ஏதோ குச்சி மிட்டாயிமாதிரி வச்சிக்கிட்டு சப்பிக்கிட்டு இருக்காங்களே? அது என்னா?"

"அதானே அது என்னான்னு தெரியலையே! வா கிட்டே போய் பார்க்கலாம்."

"வேணாம் எனக்கு பயந்து வருது"

"அடச்ச்சே வா போய் பார்க்கலாம். உன்னைப் பார்த்துதான் அவங்க பயப்படுவாங்க"

"ஐயோ இது என்னாதிது கையிலே மெழுகுவத்தி, எங்கே இருந்து இவங்களுக்கு கிடைச்சுது? நிறைய வச்சிருக்காங்க. நிறைய உடைச்சி போட்டிருக்காங்க?"

"ஆமா இங்கே ஒரு பை வேறே கிடக்குதே, இந்த பை உங்கிட்டே மொதலாளி கொடுக்கச் சொல்லி அனுப்பின பைதானே? எங்கே வச்சே நீ? நல்லா மாட்டினியா?"

"ஐயோ அங்கனகுள்ளே இருந்த மேடை மேலேதானே வச்சிருந்தேன்" அதையா தூக்கிட்டு வந்திட்டாங்க? ஐயோ மொதலாளி கேட்டா நான் என்னா சொல்லுவேன்?"

"இருடி, இன்னைக்கு உனக்கு முதுகுக்கு டின்னுதான்! உரிச்சிடுவாரு! நான் போய் அவருகிட்டே சொல்றேன்"

"ஆத்தாடி வந்த அன்னைக்கேவா? அதுசரி போங்கடா நீங்களும் உங்க வத்திங்களும்" மொதல் நாளே இப்படி ஆகிப்போச்சே! ஐயிரு என்ன சொல்லுவாரோ! இப்போதைக்கு இங்கே இருந்து ஓடிடலாம். மீதியை அப்புறமா யோசிக்கலாம்.......



Thursday, June 4, 2009

பெண் மனம்... !!!!


பாலையில் மழை பொழியுமா
நெருப்பினிலே முகை மலருமா
கயமை மனதில் அகலுமா
இரவில் ஆதவன் உதிப்பானா
பகலில் மதியின் ஒளி தெரியுமா
விண்மீன்கள் தோரணமாகுமா
ஆழமில்லா கடல் உருவாகுமா
இவை எல்லாம் நிகழ்ந்தால்

தையலின் மன ஆழம்...... ????