Tuesday, March 31, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!

இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன். சில நாட்கள் நட்புகளுக்காக எழுதலாம்னு இப்போ இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.



பாகம் I
=========

வழக்கமாக எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், எனது கல்லூரி தோழிகள் சிலர் எல்லாரும் சேர்ந்து அடிக்கடி டூர் செல்லுவோம். இப்பவும் கூட வேலைப் பளு அதிகம் இருந்தால் அந்த வார இறுதியில் ஏதாவது மலைப் பிரதேசத்தில் எங்களைக் காணலாம்.


இவ்வாறு செல்வதெல்லாம் பிளான் பண்ணி செல்வது கிடையாது, அதனால் கிடைக்கற ஆளுங்களை சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவோம். ஆனால் வருடத்தில் இருமுறையாவது ப்ளான் பண்ணி டூர் சென்று விடுவோம். அப்படி சென்றது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஊட்டி டூர்.


எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் ஹி ஹி ஹி). ரயில்வே ஸ்டேஷன்லே எல்லாரும் கூடியவுடனே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கலாட்டாதான். ஆனா இந்த வாலுங்களுக்கு எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்.


அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே. இவங்க என்னோட அக்கா. இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே?? சரி இப்போ தொடருகிறேன்.


எல்லாரும் ரயிலுக்குள்ளே ஏறிட்டோம். எங்க எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் அமையவில்லை. சிலர் ஒண்ணா இருந்தோம். சிலர் கொஞ்சம் தனித்தனியா இருந்தாங்க. உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா? அதெப்படி முடியும். எல்லாரும் எங்க இடத்துலே வந்து அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகிட்டாங்க. பேச்சு பேச்சு தான் ஒரே கும்மாளம். பாட்டு, டான்ஸ் இப்படி பொழுதை தள்ளினாங்க (போக்கினோம்).


பக்கத்திலே இருக்கறவங்களை பற்றி கவலையா?? அப்படீன்னா என்னா? ஒன்னும் இல்லை. ஒரே ஆட்டம் தான் compartment சும்மா அதிர்ந்து போச்சில்லே அப்படீ ஒரே சத்தம். TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.


அவரு வெளியே செல்லும்போது அவரு யாருன்னு அவருக்கே தெரியாம குத்து மதிப்பா தான் அடுத்த compartment போனார். அவரிடம் அவ்வளவு கேள்வி. அவரு வேலையை Resign பண்ற அளவுக்கு யோசிச்சு இருப்பாரு. அவ்வளவு அமர்க்களம் போங்க. எங்களை மாதிரி நிறைய பேரை பாத்திருப்பாறு போல. நாங்க பண்ண அமர்க்களத்துக்கு அவரு சிரிச்சுகிட்டே பதில் சளைக்காமல் சொன்னாரு. எங்க அக்கா தான் அவரையாவது உருப்படியா இருக்க விடுங்கன்னு கெஞ்சினாங்க. அப்புறம் தான் அவரை அந்த இடத்தை விட்டு நகர அனுமதித்தோம்.


இரயிலில் ஒரு மணி நேரம் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். திடீரென்று நான்கு பேரை காணவில்லை. கொஞ்ச நேரம் ஆனது இந்த முறை ஐந்து பேரை காணவில்லை. மொத்தம் காணாமல் போன லிஸ்ட் ஒன்பது பேரு. எங்க அக்கா கேட்டாங்க (போன பதிவிலே சொன்ன அக்கா இல்லே). என்னா ஆச்சு கொஞ்ச பேரை காணலைன்னு. எனக்கும் ஒன்னும் புரியலை. இருபத்தைந்து பேரில் ஒன்பது பேரு காணோமா?? மீதி எவ்வளவு ?? (பழமைபேசி அண்ணா , இராகவன் நைஜீரியா அண்ணா கணக்கு சொல்லுங்க). மீதி இருக்கறவங்க அதானே இருங்க என்னாச்சுன்னு பாத்துட்டு வாரோம்னு எல்லாரும் கும்பலா கிளம்பி போனாங்க. போனவங்க அவ்வளவுதான்.


பிறகு நான் எனது தோழிகள் எட்டு பேரு மற்றும் தோழிகளின் இரு தம்பிகள் (8 + 2) பேசிக் கொண்டு இருந்தோம். சில நிமிடங்களில் ஒவ்வொருவராக வந்து கஷ்டப்பட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். பேச்சையும் தொடர்ந்தார்கள்.


மொதல்ல சுமாராக பேசிக் கொண்டிருந்தவர்கள்,இப்போ என்னாடான்னா சும்மா சும்மா சிரிச்சாங்க. நாங்க என்ன பேசினாலும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சிது, என் தோழிகளிடம் மெதுவாக என் சந்தேகத்தை கூறினேன். எங்க அக்கா இடத்தை காலி பண்ணிட்டு பின் பக்கத்து இருக்கையில் அந்த சிறுவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்க ஏதோ சப்ஜெக்ட் பற்றி பேசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.


ஆனால் நம் நண்பர்களோ என்னா பேசினாலும் ஓவர் சிரிப்பு. இதில் அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒன்று விழித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சது. இவர்களின் சத்தம் அதிகரித்தது. எனக்கு தர்மசங்கடமாகிப் போச்சு. எல்லாரும் போங்க அவங்க அவங்க பெர்த்லே போயி படுங்க மேட்டுபாளையம் போயி எழுப்பரோம்னு சொல்லி அனுப்ப முயற்சி பண்ணினாலும் ம்ம் ஒண்ணும் முடியலை.

குழந்தையின் அழுகை சத்தம் அதிகமானதால் என் அக்கா அங்கு வந்தார்கள். ஏம்பா இப்படி சத்தம் போடுகிறீர்கள். மீதி நாளை உதைகையில் போயி பேசிக் கொள்ளலாம்.இப்போ தூங்குங்கன்னு சொன்னாங்க. அக்கா என்றால் எல்லாருக்கேமே கொஞ்சம் பயம். இடம் காலி ஆனது. எனக்கு உள்ளூர ஒரே நிம்மதி.


ஒரு வழியா மேட்டுபாளையம் சென்று அங்கிருந்து உதகை அடைந்தோம். அமர்க்களமா ஊர் சுற்றிப் பார்த்தோம். மாலைப் பொழுது வந்தது. கடைசியாக எல்லாரும் பார்க் சென்று பார்த்துவிட்டு வந்து சாப்பிட்டோம். ஆனால் நண்பர்களோ எதுவுமே சாப்பிடாமல் எல்லாம் கையில் பார்சல் வாங்கிக் கொண்டார்கள். கிளம்பியும் விட்டார்கள். எல்லாவற்றிற்கும் பில் செட்டில் செய்து விட்டு விடுதிக்கு போனோம். அவர்களின் அறையை தாண்டிச் செல்லும் போது ஒரே சத்தம். எங்களுடன் வந்த இரண்டு சின்ன பசங்களும் அவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள்.


நண்பர்களின் அறையை எட்டிப் பார்த்தால்!! மேசை மீது ஐட்டங்கள் (வேறென்னா சரக்குதான்) மற்றும் சாப்பாடு இருந்தது. ஐட்டங்களைப் பார்த்தவுடன் எனது தோழிகளின் தம்பிகளை எங்களுடன் அழைத்து வந்து விட்டேன். வந்த எடத்துலே ஏதாவது கசமுசா ஆகிவிட்டால் என்ன செய்வது அவர்கள் பெற்றோர்களுக்கு நான்தானே பதில் சொல்லணும் அதான்.


ஆனால் அந்த பசங்களுக்கோ அண்ணன்களுடனே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோமே என்று கெஞ்சினார்கள். பசங்களுக்கு பதினைந்து வயதுதான். இந்த வயதிலே இந்த ஐட்டங்கள் வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணம் தான். நான் பேசாமல் வாங்க இல்லேன்னா ஊருக்கு பஸ் ஏற்றி விடுவேன் என்று மிரட்டினேன். பயந்து வந்து விட்டார்கள். யாரு கண்டா உள்ளே திட்டிக் கொண்டே வந்திருப்பார்கள். நசரேயன் சொல்வது போல பூலான் தேவி கணக்கா மிரட்டினா திட்டத்தானே செய்வாங்க!!


எல்லாரும் நம்ப பப்பு மற்றும் கிஷோர் மாதிரி சமத்து பிள்ளைங்களா இருந்த பரவா இல்லை. அவங்களைப் பற்றி விவெரம் தெரியலயே அதான்..... நீங்க என்ன சொல்லறீங்க இப்போ?? நான் சொல்லறது சரிதானே??


அடுத்த பதிவையும் படிங்க. அப்போதான் ஊட்டி பார்த்த ஒரு நிறைவு மனதிற்கு கிடைக்கும்.






Monday, March 30, 2009

நீங்கள் சிங்கங்கள் !!

என் அருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!


ஒரு பெண் சிங்கத்தை பற்றி ஒரு கதை உண்டு. ஒரு சமயம் அது கருவுற்று இருந்தது. அது ஒரு நாள் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன்மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில் சிங்கம் இறந்துவிட்டது. இறப்பதற்கு முன் அது ஒரு குட்டியை ஈன்றது. தாயற்ற அந்தச் சிங்கக்குட்டியை ஆடுகள் வளர்த்தன.


அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்தது. புல்லைத் தின்றது. ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச் சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து, பெரிய சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஒரு ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது.


ஒருநாள் வேறொரு சிங்கம் இரை தேடிக்கொண்டு அங்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அது அந்த ஆட்டுச் சிங்கத்தை நெருங்கி, நீ ஆடல்ல, சிங்கம் என்று சொல்ல முயன்றது. ஆனால் ஆட்டுச் சிங்கம் புதிய சிங்கம் தன்னை நெருங்கும் போதே தலை தெறிக்க ஓடியது. ஓட்டத்தில் பயம்தான் அதிகம் காணப்பட்டது. ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து புதிய சிங்கம் காத்திருந்தது.


ஒருநாள் ஆட்டுச் சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி, நீ ஒரு சிங்கம் என்று கூறியது.


அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொல்வதை நம்பாமல் 'நான் ஆடுதான்' என்று சொல்லிக் கொண்டே ஆட்டைபோல் கத்தியது.


புதிய சிங்கம் ஆட்டுச் சிங்கத்தை ஓர் ஏரிக்கு இழுத்துச் சென்றது. பின்னர் அது ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து, 'தண்ணீரில் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தெரிகின்றன' என்று கூறியது.


ஆட்டுச் சிங்கம் ஏரி நீரில் தென்பட்ட இரண்டு பிரதிபிம்பங்களையும் ஒத்துப் பார்த்தது.
பின்னர் புதுச் சிங்கத்தையும் தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது. அடுத்த கணமே, தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்துவிட்டது. உடனே அது கர்ஜித்தது. ஆடுபோல் கத்துவது மறைந்துவிட்டது.


பின் குறிப்பு
==========
ஆட்டு மந்தையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்பது தெளிவான கருத்து. சில வருடங்கள் தன் நிலை மறந்திருந்தாலும், தனது இனம் தன்னை உணரவைத்தவுடன் சிங்கமானது தனது குரலே மாறும்படி கர்ஜிக்கின்றது.

எனவே, நாம் இதிலிருந்து அறிவது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மனித நேயமிக்க மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.








Saturday, March 28, 2009

பொருள் தேடுவதின் பயன்!!


என் செல்வங்களே இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான கதை சொல்லப்போகிறேன்!!

ஒரு நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு நாள்தோறும் அழகாக முக சவரம் செய்து வந்தார் நாவிதர் ஒருவர்.

மகிழ்ச்சி அடைந்த அரசர் அவருக்கு நிறைய ஊதியம் தந்தார்.

ஆனால் அவரோ அரசர் தரும் பணத்தைச் சிறிதும் செலவு செய்ய வில்லை. சில ஆண்டுகளில் அவரிடம் ஏராளமான செல்வம் சேர்ந்தது. இருந்தும் அவர் நிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

வெளியூர் சென்று திரும்பிய அவர் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா?" என்று கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் அவர் கண்களுக்குத் தெரிய வில்ல.

அங்கிருந்து சிறிது தொலைவு நடந்தார். மீண்டும் அந்தக் குரல் "உனக்கு ஏழு குடம் தங்கம் வேண்டுமா? என்று கேட்டது.

பேராசை கொண்ட அவர், "ஆமாம் வேண்டும்" என்றார்.

"நீ கேட்ட ஏழு குடம் தங்கமும் உன் வீட்டில் இருக்கும்" என்றது அந்தக் குரல்.

மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தார் அவர். வீட்டிற்குள் ஏழு பெரிய குடங்கள் இருந்தன. ஆறு குடங்களிலும் தங்கம் முழுமையாக இருந்தது. ஒரு குடத்தில் மட்டும் சிறிது குறைவாக இருந்தது.

மறுநாள் 'வழக்கம் போல அரசருக்கு முக சவரம் செய்த அவர், "அரசே! நீங்க குடுக்கும் ஊதியம் எனக்குப் போதவில்லை" என்றார்.

"நாளையில் இருந்து இரண்டு பங்கு ஊதியம் தருகிறேன்" என்றார் அரசர்.

கூடுதலாகக் கிடைத்த ஊதியத்தையும் பொன்னாக மாற்றிக் குடத்தில் போட்டார். குடம் நிறையவில்லை.

ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் பிச்சை எடுத்துப் பொருள் ஈட்டினார். அப்படிக் கிடைத்த பணத்தையும் குடத்தில் போட்டார்.

நகர வீதி வழியாக வந்து கொண்டிருந்த அரசர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நாவிதனைக் கண்டார்.

நாவிதனை தன் அருகே அழைத்த அரசர், "உனக்கு தான் நிறைய ஊதியம் தருகிறேன். அது போதாதா?? இப்பொழுது எல்லாம் பணம் பணம் என்று அலைகிறாய். நீ படும் துன்பத்தைப் பார்த்தால் அந்த ஏழு குடம் தங்கத்தை நீ வாங்கிக் கொண்டாயா?" என்று கேட்டார்.

அதிர்ச்சி அடைந்த நாவிதர். "அரசே! ஏழு தங்கக் குடங்கள் பற்றிய செய்தி' உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

"அந்த தங்கக்குடங்களின் இயல்பு தெரியாமல் நீ அதை வாங்கிக் கொண்டாய். அந்த குடத்தில் தங்கத்தைப் போட்டுக் கொண்டு இருக்கலாமே தவிர அதிலிருந்து குந்து மணி அளவும் எடுக்க முடியாது. அதற்காகப் பொருள் தேடி வீணாக அழிந்து போகாதே" என்று அறிவுரை சொன்னார் அரசர்.

உண்மை உணர்ந்த அவர் காட்டிற்குச் சென்றார் குரல் கேட்ட இடத்தில் நின்று, "எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் இப்பொழுது ஏழு தங்கக் குடங்களும் இல்லை.

"எழாவது குடத்தில் தான் போட்ட தங்கமும் போய் விட்டதே. பேராசையால் உள்ளதையும் இழந்தேன்" என்று வருந்தினார் அவர்.



பின்குறிப்பு
=======
எனதருமைச் செல்லங்களே பேராசை பெரும் நஷ்டம் ஆகிவிட்டது பார்த்தீர்களா?

ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கதையும் உங்களுக்கு எதிர்காலத்திலும் நிகழ காலத்திலும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

எனது கதைகளைப் படித்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கும் அனைத்து என் செல்லங்களுக்கும் மிக்க நன்றி. எனது நன்றியை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு கூறிக் கொள்கிறேன். திங்கட் கிழமையில் இருந்து வேறு பதிவு போட முடிவு செய்திருந்தேன். ஆனால் உங்களின் மின்னஞ்சல்களால் மறுபடியும் இந்த பதிவை போடுகிறேன்.

மின்னஞ்சல்கள் அனுப்பிய செல்லங்கள்
==============================

காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, விமல், விதுஷா, வாண்டு, விக்கி, சதா, சந்தானம், தென்றல், ஏகாம்பரம், சரசு, மிருதுளா, சாதிக், சந்திரன்.

உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப் பெண்கள் பெற எனதன்பு வாழ்த்துக்கள்!!

தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். அதை நான் என் பதிவில் உங்கள் பெயருடனும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் போட்டோவுடனும் பதிவிடுகிறேன்.






Friday, March 27, 2009

நானா? நாமா??


எனது அன்பு செல்லங்களுக்கு இன்று ஒரு அருமையான கதை சொல்லப் போகிறேன் !!

இரண்டு நண்பர்கள் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வழியில் பணப்பை ஒன்று கிடப்பதை அவர்களில் ஒருவன் பார்த்தான். அதை எடுத்துத் திறந்து பார்த்தான் அவன். அதில் ஏராளமான பணம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.

உடன் இருந்த நண்பன், "ஆ! நம் நேரம் நல்ல நேரம். இல்லா விட்டால் இவ்வளவு பணம் நமக்குக் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"பணப்பையைக் கண்டது நான் பணப் பையை எடுத்தது நான். நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய்? உனக்கு என்று குறிப்பிட்டுச் சொல்" என்றான் முதலாமவன்.

இரண்டாமவன் ஏதும் பேச வில்லை. இருவரும் அங்கிருந்து நடந்து சென்றார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்று இருப்பார்கள். வீரர்கள் சிலர் குதிரையில் வருவதை இருவரும் கண்டார்கள்.

அஞ்சி நடுங்கிய முதலாமவன், "அந்த வீரர்கள் பணப் பையைத் தான் தேடி வருகிறார்கள். குதிரையின் பின்னால் வரும் ஒருவன் பணப் பைக்குச் சொந்தக்காரன் போலத் தெரிகிறான். இந்தப் பணப்பையினால் நமக்குத் தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றான்.
அதற்கு இரண்டாமவன், "இந்தப் பணப்பையைக் கண்டது நீ. எடுத்தது நீ. இப்பொழுது மட்டும் நமக்கு என்று ஏன் பொதுவாகச் சொல்கிறாய். எனக்கு என்றே சொல்" என்றான்.


பின்குறிப்பு
==========
என் அன்புச் செல்லங்களே உங்களுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கும் என்று நம்புகின்றேன்.

இதன் கருத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

நண்பர்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத தோழமை உணர்வோடு இருக்க வேண்டும். நட்புக்கு முன் பணமோ மற்ற எந்த சக்திகளானாலும், அங்கே வலுவிழந்து விட வேண்டும்.

நண்பனுக்கு துன்பம் வரும்போது விட்டுக் கொடுக்கக் கூடாது. துன்பத்திலும் தோள் கொடுக்கவேண்டும். இவைகள் தான் நாம் நட்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம்.





Thursday, March 26, 2009

கடமையை செய்தால் உயர்வை அடையலாம் !!


என் செல்வங்களுக்கு இன்று நான் தொடுக்கும் கதை மாலை !!

நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம்.

ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார்.

யோகி அல்லவா! அவரது தலையிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளைச் சாம்பலாக்கிவிட்டது.

அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, தலைகால் புரியாத மகிழ்ச்சி கொண்டார்.சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி உணவிற்காக அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா, பிச்சை இடுங்கள்' என்று கேட்டார்.

'மகனே கொஞ்சம் இரு' என்று வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், 'பேதைப் பெண்ணே, என்னைக் காக்க வைப்பதற்கு உனக்கு என்ன தைரியம்! என் சக்தியை நீ அறியவில்லை' என்று நினைத்தார்.

இப்படி அவர் நினைத்ததுமே உள்ளிருந்து, 'மகனே, உன்னைப்பற்றி அவளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே. இங்கே இருப்பது காகமும், அல்ல. கொக்கும் அல்ல' என்று குரல் வந்தது.

துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது.

கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவளது கால்களில் வீழ்ந்து, 'தாயே, நான் மனதில் நினைத்ததை நீங்க எப்படி அறிந்தீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அவள், 'மகனே, எனக்கு உன்னைப்போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது'.

அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோயுற்றிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன்.

அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்து வருகிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது கணவருக்குச் செய்து வருகின்றேன்.

கடமைகளைச் செய்வதாலேயே என் ஞானக் கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. காட்டில் நடந்ததையும் தெரிந்து கொண்டேன். இதற்கு மேலும் ஏதாவது அறிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்துலுள்ள சந்தைக்குச் செல். அங்கே ஒரு வியாதன் (இறைச்சி வியாபாரி) இருப்பான், அவனை நீ சந்தித்தால் அவன் உனக்கு போதிப்பான்' என்றாள்.

முதலில் அந்தத் துறவி, 'ஒரு வியாதனிடம் போவதா?' என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். சந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார்.

அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, விலை பேசுவதும், விற்பதுவுமாக இருந்தான். 'அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைக் கற்கப் போகிறேன்?. இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே!' என்று அதிர்ந்தார் துறவி.

இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்து விட்டு, 'ஓ ஸ்வாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்து விட்டு வருகிறேன்' என்றான்.

'இங்கே என்ன நடக்கப் போகிறதோ' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழித்து, வேலை முடிந்தது. வியாதன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து, 'வாருங்கள் வீட்டிற்குப் போகலாம்' என்றான்.

வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்காக இருக்கை ஒன்றை அளித்து, 'இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன்'என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

பின்னர், வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான்.

பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தகுந்த விளக்கம் தந்தான். (அது வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் உள்ளது.)

பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இந்தத் தொழில் இழிந்தது ஆயிற்றே' என்று கேட்டார். இதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, 'மகனே, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ கேவலமானதோ இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் வைத்திருக்கிறது. எனக்குப் பற்று ஏதும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கான சேவைகள் அனைத்தையும் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என்னிடம் நீங்கள் பார்ப்பவை கேட்பவை எல்லாம், எனது நிலைக்கு உரிய கடமைகளைப் பற்றின்றிச் செய்ததால் கிடைத்ததாகும்' என்றான்.


பின் குறிப்பு
==========

எனது செல்லங்களாகிய உங்களுக்கு இந்த கதை பிடித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த கதையின் முழு அர்த்தத்தையும் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை உங்கள் பிஞ்சு மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

பிற் காலத்தில் இவைகள் அனைத்தும் உங்களுக்கு உபயோகப்படும்.






எது தானம் ??

என் சக வலைப்பதிவர்களின் வீட்டுச் செல்லங்களுக்கு!!


குருச்சேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லாரும் அந்த யாகத்தின் சிறப்பையும் பெருமையையும் கண்டு வியந்து, அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர்.


யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பின் ஒரு பகுதி பொன்னாகவும், மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது. உள்ளே நுழைந்த கீரிப்பிள்ளை யாக குண்டத்தில் இருந்த சாம்பலில் விழுந்து புரண்டது.


பின் எல்லோரையும் பார்த்து. நீங்கள் அனைவரும் பொய்யர்கள், இது யாகமே அல்ல என்று கூறியது.


கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன! இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய்? எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளி கொடுக்கப் பட்டுள்ளது என்பது உனக்கு தெரியுமா?? எல்லோரும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே! இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.


அதற்கு கீரிப்பிள்ளை கூறியது, முன்பொரு முறை சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள். பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து, அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.


ஒருமுறை அந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன.


அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலயில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத் தயாராயினர். அந்த வேலையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. பிராமணர் கதவத் திறந்தார். எதிரே விருந்தினர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.


இந்தியாவில், விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும்.


எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்பு தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும்படி உபசரித்தார்.


வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினி கிடக்கிறேன். இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது, என்று கதறினார்.


உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம், என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள், வந்திருப்பவர் விருந்தினர். வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை. அவருக்குக் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது, என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித் தன் பங்கை அந்த விருதாளிக்குக் கொடுத்தாள்.


அதை உண்ட பிறகும் விருந்தாளியின் பசி தீரவில்லை. அவர் துடித்தார்.


இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன், தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை. இதோ என் பங்கு உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன் பங்கை அந்த விருந்தாளியிடம் கொடுத்தான்.


அப்படியும் விருந்தாளியின் பசி அடங்கவில்லை. அவர் மிகுந்த வேதனைப் பட்டார். இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது. அவர்களை வாழ்த்தி விடைபெற்றார், அந்த விருந்தாளி.


ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்.


அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள்.


அது போல் நிகழ்வுகள் எங்கேயாவது நடந்துள்ளதா என்று அறிந்தால் அதில் புரண்டு மீதி பாதி உடலையும் பொன்னாக்கி கொள்ளத்தான் ஆசைப் படுகின்றேன்.

அந்த இடம் நோக்கி அலைந்து கொண்டிருக்கின்றேன். இங்கு பெரிய யாகம் நடப்பதாகவும் ஏழைகளுக்கு தானம் செய்வதாகவும் அறிந்து இங்கு ஓடோடி வந்து உங்கள யாக குண்டத்தில் விழுந்து புரண்டேன். அந்த அந்தணர் வீட்டில் சிதறிக் கிடந்த சிறிய பார்லி மாவில் புரண்டு பாதி பொன்னான என் உடலின் மீதி பாதியும் பொன்னாக்க நினைத்துதான் இந்த காரியத்தை செய்தேன். ஆனால் நடந்தது என்ன ? என் உடல் பொன்னாக மாறவில்லை.அப்போ உங்கள் யாகம் தவறுதானே என்றது அந்த கீரிப்பிள்ளை.


அங்கு அமர்ந்திருந்தவர்கள் என்ன சொல்லுவது என்று புரியாமலும், என்ன தவறு நடந்திருக்க முடியும் என்றும் யோசிக்க ஆரம்பித்தனர்.


பின்குறிப்பு
==========
நான் எழுதும் இந்தக் கதைகள் ஏற்கனவே நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள். இந்த கதைகள் நான் எழுதக் காரணம் இருக்கின்றது. நான் சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு வலைப்பதிவு அண்ணா ஒருவரிடம் சாட்டிங்கில் பேசிக் கொண்டு இருந்தேன். மிகவும் நேரம் ஆகிவிட்டதால் அப்போது அந்த அண்ணா சொன்னாங்க ஏன்மா இன்னும்
தூங்காமல் இருக்கே. நான் வேணும்னா ஒரு கதை சொல்லாவா என்றார். நான் என் சிறு பிராயத்துக்கே சென்று விட்டேன். கதை சொன்னார் மிக அருமையான கதை.

கதை சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு தந்தையின் ஆர்வம் அவர் குரலில் தெரிந்தது. முடிக்கும் போது குழந்தைக்கு சொன்ன ஒரு முழுமையும், பெருமிதமும் அவர் குரலில் தெரிந்தது. அதன் பாதிப்புதான், இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதைகள். கதைக்காக ஏங்கும் குழந்தைகள்! அருகே இருந்தும் அவர்களுக்கு வேலைப் பளுவின் காரனமாக கதை சொல்ல முடியாத தந்தைமார்கள் மற்றும் தாய்மார்கள்!! அருகே இருந்து தன் குழந்தைகளுடன் கழிக்க முடியாமல், தொலை தூரத்தில் இருக்கும் அன்பு தந்தைகள் இவர்களின் ஏக்கத்தைப் போக்கவே இந்தக் கதைகள்.


குழந்தைகளை நினைத்து ஏங்கும் தந்தைமார்களான என் சகோதரர்களின் செல்லங்களுக்கும் இந்த அத்தை எழுதும் மிகச் சிறிய கதைதான்! இது என் கற்பனைக் கதை அல்ல. எல்லாரும் கேள்விப்பட்டு தற்சமயம் மறைந்து கொண்டிக்கும் கதைகள்தான்.


நான் இப்போது எழுதிக்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், தனித்தனியாக இந்தக் கால என் செல்லங்ககளுக்கு சொல்ல முடியாது. அதனால் இந்த பதிவின் மூலமாக சொல்லுகிறேன். என் நோக்கம் அவ்வளவுதான்.









Wednesday, March 25, 2009

பரந்த மனம் வேண்டும் !!!

நான் கேள்விப் பட்ட ஒரு சிறு கதை!!


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது.


அந்த தவளை நாள்தோறும் நீரில் இருந்த புழுபூச்சிகளையும், கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றி சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராயிச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.

கிணற்றுத் தவளை: நீ எங்கிருந்து வருகிறாய்??

கடல் தவளை: கடலில் இருந்து

கிணற்றுத் தவளை: கடலா? அது எவ்வளவு பெரியது?? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா? என்று கூறி, ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குத் தாவிக் குதித்தது .

கடல் தவளை: நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிட முடியும் என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை: மறுபடியும் ஒரு குதி குதித்தது, உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா? என்று கேட்டது.

கடல் தவளை: ச்சேச்சே! என்ன இது முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?

கிணற்றுத் தவளை: நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலங்காலமாக இருந்து வருகின்ற கஷ்டம் இதுதான்

இந்த கஷ்டத்திற்கு விவேகானந்தர் கூறிய ஒரு கூற்று என் நினைவிற்கு வருகிறது அதை பார்ப்போம்:


நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்.







Tuesday, March 24, 2009

ரம்யாவின் சோகம் - PART - II !!


ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!



அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.


அவர்கள் ஊருக்கு போகிறேன் என்று கூறிவிட்டு வால்ப்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில், மாட்டியவர் ரம்யா".


இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள். (ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??)
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

வால்பையனின் கேள்விகள், ரம்யாவின் பதில்கள்.
அந்த அக்காவின் -- மறு விமரிசனம்

===================================

1.இங்கே முதல் ரசனை வால்பையனுக்கு போகின்றது. 2.இரண்டாவதாகத்தான் அவர்களின் சபாஷ் எனக்கு.
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
6.ஜெயித்தது என் நண்பர்தானே. (உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) சேச்சே இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பாட்டு. ஹி ஹி ஹி.


அப்பா ஒரு வழியா முன்னுரை முடிந்தது.


இப்போ வாங்க உள்ளே போகலாம்.
=========================
ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். நல்ல முடிவுதானே!! என்னப்பா சிரிக்கறீங்க?? போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை...


சரி வாங்க மீதியை படிக்கலாம்
======================
அவங்க வந்தப்போ எங்க வீட்டுலே நான் தனியா தான் இருந்தேன். விட்டுலே இருந்தவங்க ஊருக்கு போய் இருந்தாங்க.


வந்தாங்க வந்தவுடன் சில விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் மறுபடியும் ஏன் வந்தாங்க என்கின்ற விஷயத்தை சொன்னாங்க.


அக்கா: ஒன்னும் இல்லைப்பா!!


ரம்யா: ஏதோ விஷயம் என்று தானே சொன்னீங்க, அப்புறம் என்ன ஒன்னும் இல்லை??


அக்கா: இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??


ரம்யா: ஓ!! ஆரம்பமா?? அது சரி


அக்கா: என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.


ரம்யா: இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.


அக்கா: பத்தியா கடைசியிலே என்னையே நீ வாருரே?? பரவா இல்லையாடி??


ரம்யா: இல்லேக்கா நான் கடைசியிலே இல்லே மொதல்லே இருந்தே உங்களை வாரிக்கிட்டு தான் இருக்கேன்.


அக்கா: தனியா இருக்கியே அப்படின்னு யோசிச்சு சரி இந்த பிள்ளை கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தா நீ என்னை வச்சி காமெடியா பண்ணறே??


ரம்யா: சேச்சே, நான் உங்களை வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலைக்கா!! சரி, சரி நான் அடங்குறேன், நீங்க இப்போ சொல்லுங்க.


அக்கா: ஏய் குறுக்கே ஒன்னும் பேசக் கூடாது என்ன புரிஞ்சி போச்சா??


ரம்யா: இல்லேக்கா, நான் குறுக்கே பேசவே மாட்டேன். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல விரும்பறேன். எனக்கு உங்க பிரச்சனை புரிஞ்சிடுச்சு, ஆனா போகலை சரியா??


அக்கா: ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை.


ரம்யா: இல்லேக்கா, போன வாரம் டாக்டர் கிட்டே போனேன், நின்னா, நடந்த மயக்கம் வருதுன்னு. டாக்டர் சொன்னாரு உடம்பு ரொம்ப அனிமிக்கா இருக்கு, நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவா எடுத்துக்கோன்னு சொன்னாரு. ஆனா என்னக்கா நீங்களும் அந்த துறைலே தானே இருக்கீங்க. நீங்க மட்டும் என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க??


நான் டாக்டர் சொன்னதை அப்படியே எடுத்துகிட்டு என் உணவு பழக்கங் வழக்கங்களை இப்போ தான் மாற்றிக் கொண்டு வருகின்றேன். உங்க கிரகம் அந்த நேரமா பார்த்து என் கிட்டே மாட்டிடீங்க போல இருக்கு. சரி சரி, கோச்சுகாதீங்க. இப்போதில் இருந்து நான் ஒழுங்கா கேக்கறேன் சரியா??


அக்கா: இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.


ரம்யா: அது நம்ப தம்பி இல்லே, உங்களுக்கு தம்பி, எனக்கு அண்ணா சரியா?


அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க.


ரம்யா: அக்கா எப்படி வர்றது ??


அக்கா: ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க.


ரம்யா: ரெண்டு கிலோமீட்டரிலா?? என்னாக்கா சொல்லறீங்க?? இல்லையே, வீரபாண்டிபட்டினம் ரொம்ப தூரமாச்சே, ரெண்டு கிலோ மீட்டரா?? அதுக்கு எதுக்கு ரயிலு?? எங்க காரிலேயே வந்துடுவொமே?? ஒரே குழப்பம்ஸ். இல்லேக்கா நீங்க சொல்லறமாதிரி ரெண்டு கிலோமீட்டரில் சேத்துப்பட்டே தாண்டாது ரயிலு, எப்படி அது வீரபாண்டிபட்டினம்னு சொல்லறீங்க??


அக்கா:வேண்டாம்டி நான் ஊருக்கு போய் பத்திரிகை அனுப்பறேன்.மரியாதையா வாயை மூடிகிட்டு வந்து சேரு. இப்போ நான் தூங்கப் போறேன், பேசிகிட்டே இருக்காமே தூங்கு சனியனே. எதைப் பேசினாலும் நொண்டு பேசறே!


ரம்யா: இந்த அக்காவை ரொம்ப கடுப்பேத்திட்டோமோன்னு ரொம்ப யோசனையா இருந்திச்சு. சரி சரி இனிமேல் இவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டு அப்படியே கொஞ்சம் லேசா தூங்க ஆரம்பிச்சுட்டேன். திடீர்ன்னு ஒரே சத்தம்.


"என்னங்கடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, நல்லா அழுந்த தேச்சு கழுவுங்கடி" அப்படீன்னு அமானுஷ்யக் குரல் கேட்டுச்சு.


எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் தனியா தானே இருந்தேன். இந்த அக்கா இருப்பது நினைவிற்கு வரலை.


ரொம்ப பயந்துட்டேன். எழுந்து விளக்கு போடக் கூட பயம். வீட்டுக்குள்ளே யாரோ பூந்துட்டாங்க, இப்போ என்னா நடக்கப் போகுதோ,ஐயோ பயந்து வருதேன்னு நினைக்கும்போதே அழுகையா வருது.


கொஞ்சம் நேரம் விழித்திருந்தேன். அப்புறம் ஒன்னும் சத்தம் இல்லை. பயந்தபடியே தூங்கிட்டேன். மறுபடியும் ஒரு குரல்,


"நான் சொல்லிகிட்டே இருக்கேன் உன்னாலே கேக்க முடியலை இல்லே??" இந்த முறை கோவம் குரலில் அதிகம் தெரிஞ்சுது. சரி இன்னைக்கு தூக்கத்திற்கு சங்குதான் தெரிஞ்சி போச்சு. சரி, கொஞ்சம் புத்தியா யோசிக்கலாம்னு நினைச்சேன் (அதெல்லாம் எங்கே உனக்குன்னு கேக்கறது காதிலே விழுது, என்ன செய்ய அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா) எங்கே இருந்து இந்த சத்தம் வருதுன்னு உன்னிப்பா கவனிச்சேன். தொடர்ந்து பேச்சுக் குரல் கேட்ட வண்ணம் இருந்தது.


அட நம்ப அக்காதான் இவ்வளவோ அமர்க்களம் பண்ணறாங்க. ஓ!! இவங்களுக்கு தூக்கத்திலே பேசற பழக்கம் போல இருக்கு. தெரிஞ்சாலும் பயத்தோட தான் படுத்திருந்தேன். எப்பபோ விடியும்ன்னு காத்திருந்தேன், காலையிலே என்னாக்கா! ராத்திரி தூக்கத்திலே பேசினீங்கன்னு கேட்டா, இல்லேடி நான் பேசமாட்டேன், ஆனா அந்த ஜெயா அக்கா இல்லே அவங்க தான் தூக்கத்திலே பேசுவாங்க....


ரம்யா:இங்கே பாருங்க நேத்து ராத்திரி இங்கே படுத்து இருந்தது நீங்க தான், நீங்க தான் பேசினீங்க, ஏனக்கா ஜெயாக்கவை சொல்லறிங்க??


அக்கா:சரிடி இப்போ என்னா அதுக்கு, நான் கிளம்பறேன், கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டு.


கிளம்பிட்டாங்கையா!! கிளம்பிட்டாங்க!!




Monday, March 23, 2009

கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு இன்னும் சில!!!

கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!
இன்னும் சில படங்கள் உங்களுக்காக!!

வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !!

வானம், நிலம், நீர் இங்கே சத்தமில்லாமல் மொத்தமா அரங்கேறி இருக்கின்றன!!

அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!

இது இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக!!


இதுவும்தான் இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக


பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே??


அட இங்கே பாருங்க!!
மலை அரசி மேகத்தை மறைக்க பார்க்கிறான்!!



இயற்கையின் எழில் சூழ குருஞ்சியாண்டவர் கோவிலின் தோற்றம்!!


தீப்பெட்டிகளாகத் தெரிகின்றதே!! நேர்த்தியாக இயற்கை அழகுடன் அமைந்திருக்கும் வீடுகள்!!


இன்னும் கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று எடுத்த படம் உங்களுக்காக !!


மற்றொரு கோணத்தில் அதே வீடுகளின் காட்சி உங்களுக்காக!!

ஆஹா!! அங்கே என்னா சிவப்பாய்??
ஒன்றும் இல்லை அழகான ஒட்டு வீடுகளின் அணிவுகுப்பு!!



இதுவும் ஒரு கோணம்தான் இயற்கையின் மறு பரிமாணம் உங்களுக்காக!!



மரம், செடிகளுக்கு பின்னால் இருந்து மலை அரசியை ரசித்த காட்சி!!

இந்த படம் இயற்கையின் வளம் நிறைந்த, வனப்பு மிகுந்த ஒரு காட்சி!!



பூங்காவிற்குள் புகுந்து பிடித்த படம் உங்களுக்காக!!


மலரும், மக்கள் வெள்ளமும் பூங்காவிற்குள் ஒரு இனிய அணிவகுப்பு !!


வசந்தமான மலர்களின் மாயத்தோற்றமா??
இல்லை இல்லை உண்மையான தோற்றம்தான்!!


அழகோ அழகு கொள்ளை அழகு!!
இதுதான் மதி மயக்கும் சோலையோ!!

மலர்களுக்குதான் எத்துனை மயக்கும் திறன் உள்ளது!!
இல்லை! இல்லை!!
இது மதி மயக்கும் சோலையேதான்!!

தண்ணீர் ஒட்டாத தாமிரை இலையும், அதன் அழாகான மலரும்!!


உயரமான மரங்கள் மலை மீது தோன்றும் இந்த காட்சி அழகிற்கு அழகு செய்கின்றது!!

பாருங்க இந்த பில்லர் ராக்ஸ் எவ்வளவு அழகாக இருக்கின்றது, தோளோடு தோள் உரசிக்கொண்டு நிற்கும் அழகான அமைப்பு!!

மலைக்கும், மரங்களுக்கும் இடையே நைசாக நம்மை பனி அரக்கன் எட்டிப்பார்க்கும் காட்சி!!


என்ன சத்தம் இந்த நேரம்??

ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??
எனக்கு அழ அழையா வருது!!

எங்கே போனாலும் விட மாட்டியா??
மவளே இப்போ நீ மாட்டினே என் கிட்டே......

இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!




பின் குறிப்பு
===========
1. ஒட்டு போட்டீங்கன்னா !!
2. இந்த முறை உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்
3. ஏன்னா அவங்களே என்னை தேடிகிட்டு இருக்காங்க
4. உங்களையும் மாட்டி விடவா???







Thursday, March 19, 2009

கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு!!!



கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!


பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!


இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!


மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !!

மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!

ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!

மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!


மலரின் அழகோ கொள்ளை அழகு!!
மலர்களின் வண்ணங்களும் வியக்க வைக்கும் வர்ணங்களும்!!

மஞ்சள் மலரின் மலர்ச்சி!! ஒரு வேளை நமக்காக இருக்குமோ??

இங்கே பாருங்கப்பா மலர் கொத்தின் அணிவகுப்பை!!

மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!

இந்த வெள்ளை மலர்ச் செண்டும் நமக்காகத்தானே!!




பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ??


பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!




இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!


மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!





நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!





நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!





விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!




பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!






பின் குறிப்பு
============
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!
ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??