Wednesday, August 26, 2009

சகோதரர் சிங்கைநாதன் நலம்பெற வாழ்த்துங்க!!

சகோதரர் சிங்கைநாதன்

சகோதரர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக சிங்கைநாதனுக்ககாக கூட்டு பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் நண்பர்களே!!

இங்கும் பாருங்கள்.

நண்பர்களுடன் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களையும் நமது பிரர்த்தனையில் சேர்ந்து கொள்ளச் சொல்லவும் நண்பர்களே!

நல்லவையே நடக்கும்! நல்லதையே நினைப்போம்!







Monday, August 24, 2009

நண்பர்கள் குழாம் சந்திப்பு!! (சேர்ந்து பேசிக்கறாங்கலாமா)

முக்கியமான விவாதமா இருக்கலாம் வாங்க என்னான்னு தெரிஞ்சிக்குவோம்!

சந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.

நாம எல்லாரும் இப்படி ஜாலியா சந்திச்சு எவ்வளவு நாளாச்சு. ரொம்பநாள் கழிச்சு எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுத்தப் போறோம் இல்லே. எங்கே போலாம்? கேள்வியின் நாயகன் கார்த்திகை பாண்டியன்.


தோ! இங்கே ஒரு காம்போண்டு சுவரு இருக்கு பாரு! அதுலே ஏறி உக்காந்துக்கலாம். அப்படியே உக்காந்துகிட்டு எங்கே போகலாம்னு ஒரு முடிவிற்கு வரலாம். ஐடியாவின் நாயகன் வால்பையன்.

சரி வாங்க ஜீவன், இவரு சொல்றதும் சரியாதான் இருக்கு. வாங்க அந்த காம்போண்டு சுவற்றின் மேலே ஏறி உக்காரலாம்.

எனக்கு இப்படி எல்லாம் ஏறி பழக்கம் இல்லையே!


அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன்! நான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க! அப்படியே என்னை மாதிரியே நீங்களும் ஏறி உக்காருங்க.


உனக்கு வாலு இருக்கு, அதான் இவ்வளவு வேகமா ஏறுரே! மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது. என்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ? இருக்கலாம் இருக்கலாம்.

அதற்குள் ஜமாலின் கைபேசி சிணுங்குகிறது. ஹல்லோ!!

ஐயோ! தங்கமணி, என்ன இந்த நேரத்துலே போன் பண்ணறாங்க?

ஏங்க உங்க தங்கமணிகிட்டே அவ்வளவு பயப்படறீங்க! வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க?

என்னோட தங்கமணிகிட்டே நான்தான் பயப்பட முடியும். இதென்ன கேள்வி வாலு?

ஏங்க நான் இங்கே பேசிகிட்டு இருக்கேன், நீங்க வேறே யாருகிட்டேயோ பேசிகிட்டு இருக்கீங்களே. என்ன சங்கதி?

அண்ணே! அண்ணி ரொம்ப கோவமா இருக்காங்க!

அதெப்படி தெரியும் உனக்கு?

நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே! வேர்த்து வேறே கொட்டுது பாருங்க! மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க!

பாண்டி! சும்மா இரு அவ காதுலே விழுந்தா நான் சென்னையிலே இருக்கறதை கண்டுபிடிச்சிடுவா!

என்னாங்க சொல்றீங்க நான் கண்டுபிடிச்சுடுவேனா??

இல்லேம்மா இங்கே பேசிகிட்டு இருக்கேன்....

நான் இங்கே லைன்லே இருக்கேன். உங்களுக்கு அங்கே என்ன பேச்சு??

சரி! சரி! இரு வரேன் பேசிகிட்டு இருக்கவங்களை அடிக்கவா முடியும்? கொஞ்சம் யோசி!

ஏங்க இவ்வளவு கோவப்படறீங்க? எப்பவும் இப்படி பேசமாட்டீங்களே?

அண்ணே நல்லா மாட்டுனீங்க? நீங்க அண்ணிக்கு கொடுத்திருக்கிற போன் நம்பெர் இந்தியா வந்தவுடன் பேசும் சிம் கார்டோடது. அதெ இன்னும் அவங்க கவனிக்கலை போல இருக்கு.

பாண்டி! வேண்டாம் வெவரம் பேசாதே! பெரிய பிரச்சனையாயிடும்? இதெல்லாம் உன் கிட்டே நான் கேட்டேனா? அதுவும் இப்போதான் நீ சொல்லனுமா?

இல்லேண்ணே! உஷாரா பேசுங்கன்னு சொல்ல வந்தேன். ஹி ஹி ஹி ஹையா! எப்படி சமாளிக்கப் போறாரோ? வேடிக்கை பார்க்க ஒரே ஜாலியா இருக்கு!

பாண்டி! ஜமால் வீட்டுக்கு தெரியமல் முன்னமேயே சென்னைக்கு வந்திட்டாரு. எதுக்கு? நண்பர்களை பார்க்க. இது நல்ல விஷயம்தானே! தங்கமணிகிட்டே சொல்லி இருக்கலாம். ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லலை போல. அதுனாலே நீங்க சத்தமா பேசாதீங்க. இது வாலுவோட அட்வைஸ்.

வாலு! சத்தமா பேசாதீங்க, அவங்க காதுலே விழப்போகுது! கிசுகிசுத்தார் ஜமால்

என்னாங்க, என்னாங்க நான் பேசறது காதிலே விழலையா?

விழுது என்னான்னு சொல்லும்மா?

ஆமா! இந்த மாசம் ஹாஜரை பார்க்க வரேன்னு சொன்னீங்களே எப்போ வரீங்க?

அதைத்தான் இன்னும் ஒரு நாளில் முடிவு பண்ணனும், இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே?

என்ன பேச ஆரம்பிக்கலையா? யாரு கிட்டே பேசணும்? யாரு முடிவு பண்ணனும்? ஏங்க ஒரு மாதிரி பேசறீங்க? ஹல்லோ! ஹல்லோ! நான் பேசறது காதிலே விழுதா?

என்ன சொன்னே சரியா கேக்கலையே? என்ன செய்ய? ஹல்லோ! ஹல்லோ! சரி நான் அப்புறமா பேசறேன், சிக்னல் சரி இல்லே போல இருக்கு. வச்சிடும்மா!

இல்லே! இல்லே! வைக்காதீங்க, நீங்க பேசறது எனக்கு நல்லா காதிலே விழுது. பேசுங்க எப்போ வரப்போறீங்க? டிக்கெட் வாங்கிட்டீங்களா?

இன்னும் இல்லேம்மா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு யோசிச்சு சொல்றேன். ஹல்லோ! ஹல்லோ! மறுபடியும் காதிலே விழலை, போனை வச்சிடும்மா!

என்ன கெடுபிடி அதிகமா இருக்கு போல ஜமால்? நீங்க இந்தியா வந்தது உங்க வீட்டுலே தெரியாதா?

இல்லே ஜீவண்ணே! எனக்கு நண்பர்கள் நிறைய பேரு இங்கே இருக்காங்க. எல்லாரையும் பார்த்திட்டு மூன்று நாட்கள் கழித்து ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். அதுக்குள்ளே போன் போட்டு அவசரப் படுத்தறாங்க.

நான் கூட வீட்டுலே வெவரம் சொல்லிட்டு வரலை. ஆபீஸ் வேலையா போறேன்னு மட்டும் சொன்னேன்.

சும்மா அப்படி சொன்னா விட்டுடுவாங்களா வாலு?

இல்லைங்க ஜீவன் உண்மையை சொல்லிட்டா அவ்வளவுதான் என்னை இப்போ வர விட்டிருக்க மாட்டங்க.

பேசிக்கொண்டிருக்கும் போதே வால்பையனின் கைபேசி செல்லச் சினுங்கலை வெளிப்படுத்த, எடுத்தால் வெகுமதியுடன் வந்த திருமதி.

என்னம்மா இப்போ பேசறே?

ஏன் நான் இப்போ பேசக் கூடாதா?

இல்லே இந்த நேரத்துலே உன்னோட போனை எதிர் பார்க்கலை!!

அப்போ வேறே யாரோட போனை எதிர்பார்த்தீங்க!

இங்கே பாரு உனக்கு இப்போ என்ன வேணும்? சட்டுன்னு சொல்லு, எனக்கு நிறைய வேலை இருக்கு.

அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு எங்க அம்மா வருவாங்கன்னு சொல்லி இருந்தேன் இல்லே! அவங்க வரலையாம். நீங்க சென்னையிலே தானே இருக்கீங்க! அப்படியே போயி ஓரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க.

இங்கே பாரு நான் வந்திருக்கிறதோ அலுவலக வேலையாக, நான் அதெ பார்க்கிறதா? இல்லே உங்க அம்மா வீட்டுக்கு போறதா?

என்னாங்க பேச்சு ஒரு மாதிரி போகுது. யாரு இருக்கா பக்கத்துலே! நிஜம்மாவே ஆபீஸ் வேலையாத்தானே போனீங்க?

ஆபீஸ் வேலையாதான் வந்தேன்! அதுலே உனக்கென்னா சந்தேகம்?

இல்லே எனக்கு சந்தேகமாவே இருக்கு. ஏன் பேசும்போது குரல் விட்டு விட்டு வருது?

அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? ஏர்டெல் கம்பெனியைத்தான் கேக்கணும்!

அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஒழுங்கா பேசுங்க!

இல்லேம்மா நான் எப்பவும் போலதானே பேசறேன், சரி பாப்பா நல்லா இருக்காளா?

நான் கேட்டதுக்கு நேரடியா பதிலை காணோம் என்ன பாப்பா பீப்பான்னுகிட்டு.

இல்லேம்மா நான் அலுவலக வேலையாதான் வந்திருக்கேன். நீ தேவை இல்லாம சந்தேகப் பட்டு உயிரை வாங்காதே. வேலை முடிஞ்சவுடனே நானே உன்னை போனிலே கூப்பிடறேன். தோ! இங்கே மீட்டிங் ஆரம்பிக்கப் போறாங்க. நீ முடிச்சுக்கோ! அப்பா எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு.

ஐயோ என்னாச்சு பயங்கர டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே? வீட்டுக்கு போனால் சண்டை போடுவாங்களா வாலு.

இல்லே ஜீவன் ஆபீஸ் வேலைன்னு சொன்னேன், அவங்களுக்கு நான் சொன்ன விதம் நம்பிக்கையா இல்லே. நண்பர்களை பார்க்கப் போறேன்னு சொன்னா, அவங்களை வெளியே கூட்டிகிட்டு போகலைன்னு சொல்லுவாங்க. அதான் நைசா வந்துட்டேன். ஜமால் வர்றதே அரிது. அதான் வராருன்னு சொன்னவுடனே கிளம்பிட்டேன். அவரும் அவரு திருமதிகிட்டே பொய்தான் சொல்லி இருக்காரு. நானும் பொய்தான் சொல்லி இருக்கேன். பொய் சொல்லிட்டு தப்பா பண்றோம். நண்பர்கள் சேர்ந்து எங்கேயாவது வெளியே போகலாம்னு முடிவு பண்ணினோம்.

வலையிலே சந்திக்கவா முடியுது பின்னூட்டம் போடுவதோடு சரி. நேரே சந்திச்சாதான் இன்னும் விரிவா பேச முடியும். அப்பபோ சாட் பண்ணிக்கறோம், என்னாதான் ச்சாட்டினாலும் நேரே பேசறது போல ஆகுமா? இந்த பொண்டாட்டிங்களுக்கு இது தெரியவே மாட்டேங்குது ஜீவன். என்ன ஜமால் அமைதியா இருக்கீங்க நான் சொல்றது சரிதானே!

சரிதான்.... ஆனா சரி இல்லாத.... மாதிரி இருக்குங்க வாலு. உண்மையை சொல்லிட்டு வந்திருக்கணும்.

யோவ்! வந்த வேலையை கவனிக்கலாம். இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அமைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்.

கிளம்புற நேரம் பார்த்து அலைபேசியின் செல்ல சிணுங்கல் ஜீவன் பாக்கெட்டில் இருந்து வந்தது. இப்போ ஜீவனின் அலைபேசி சிணுங்க.

ஹல்லோ! ஹல்லோ யாரு பேசறது??

நான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில? என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு?

அம்மணி இப்போதானே எனக்கு வெளியே அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ளே ஏம்மா போன் பண்றே?

அவசர வேலைன்னு சொல்லிட்டுதானே போனீங்க. அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கலை இல்லையா? அப்புறம் என்னா பேச தயக்கம், கேள்வி கேக்கறீங்க??

ஐயோ! அண்ணே அண்ணிகிட்டே கோவபடாமா மெதுவா பேசுங்க.

ஜமால் குரல் குடுக்காதீங்க சிங்கமணி சந்தேகப் படுவாங்க.

என்னாங்க அங்கே சத்தத்தையே காணோம், நான் கேட்டுகிட்டே இருக்கேன்ல்லே.

இரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும்.

ஜீவன்! இன்னும் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளே நிலைமையை பத்தி பேசி சந்தேகத்தை வரவழைச்சிடாதீங்க. அண்ணி ரொம்ப உஷாரா பேசர மாதிரி தெரியுது.

இல்லே வாலு நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க. என் மேலே அவ்வளவு நம்பிக்கை. இருங்க முடிச்சிட்டு வாரேன்.

என்னாங்க எதை முடிப்பீங்க? என்ன சொல்றீங்கன்னே புரியலே!

இல்லேம்மா கிராஸ் டாக்குன்னு நினைக்கறேன், எனக்கு கூட யாரோ நடுவிலே பேசர மாதிரி குரல் கேக்குது... உனக்கும் அதே குரல்தான் கேக்குது போல...எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க வாலு!

என்னாங்க மறுபடியும் கிராஸ் டாக்கா, ஆனா அதுவும் உங்க குரல் மாதிரியே இருக்கே? உண்மையை சொல்லிடுங்க எங்கே போய் இருக்கீங்க?

இல்லேம்மா பதிவர்கள் சேர்த்து அவசரக் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்கு முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கப் போகுது. அதுக்கு முன்னே சிலர் கூடி பேசி தேர்தலை எப்படி நடத்தலாம்னு ஆலோசனை நடத்ததான் வந்திருக்கோம்.

ஓ அப்படியா! நான் கூட உங்களை சந்தேகப் பட்டுட்டேனுங்க. நல்லா ஆலோசனை பண்ணுங்க உருப்படியா எதானச்சும் செஞ்சா சரிதான். சரிங்க கூட்டம் முடிஞ்ச உடனே நேரா வீட்டுக்கு வரணும். சாயாங்காலம் வெளியே போகணும். பிள்ளைங்க பீச்சுக்கு கூட்டிகிட்டு போக சொல்றாங்க. கடை பக்கம் போய்டாதீங்க. போனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும். ஆமாம் சொல்லிட்டேன். இப்போ போனை வச்சிடறேன். சரியா??

சரிம்மா நேரா வீட்டுக்குத்தான் வருவேன். கவலைப் படாதே. இங்கே எனக்கு வேலை அதிகமா இருக்கு. சீக்கிரம் போனை வச்சுடு. அப்பா எவ்வளவு கஷ்டம் சிங்கமணியை சமாளிச்சுட்டா வேறே எதை சமாளிக்கறதும் கஷ்டமே இல்லே.

மறுபடியும் அலைபேசியின் சிணுங்கல், அய்யய்யோ அண்ணே! நான் கிளம்பறேன், இப்போ யாரு திட்டு வாங்கபோராங்கன்னு விளங்கலை.

ஹையோ! ஹையோ! ஜமால்ண்ணே! போன் எனக்குண்ணே!!

ஹல்லோ! ஹல்லோ! அம்மா என்னாம்மா வேணும்? நான் நாளைக்கு வந்திடறேன். சரி, சரி, சரி, சரி, நீங்க சொன்னதெல்லாம் வாங்கிகிட்டு வரேன்.

என்னா தம்பி இவ்வளவு சரி சொல்றீங்க?

ஜமால்ண்ணே எங்க அம்மா சில பொருட்களை இங்கே இருந்து வாங்கி வரச்சொல்லி இருக்காங்க. அதான்.........

இங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. ஏதோ பிகருகிட்டே தானே பேசினே. பொய் சொல்லாம சொல்லணும்.

என்னா ஜமாலு! சந்தேகமா கேக்குறமாதிரி இருக்கு??

ஆமாம் வாலு எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு!

அதானே கார்த்திகை பாண்டியன் உண்மையை சொல்லிடுப்பா! போன்லே யாரு?

ஜீவண்ணே! உண்மையாகவே எங்க அம்மாதான் போன் பேசினாங்க. நீங்கள்லாம் இவ்வளவு நேரம் போனிலே பட்ட அவஸ்தையை பார்த்தேனே! ரொம்ப யோசிக்கணும் போலிருக்கே. ஆனா இவ்வளவு வெவரமா என்னாலே சமாளிக்க முடியுமான்னு தெரியலை.

அதெல்லாம் பழக்கம் ஆனா தானா வந்திடும் தம்பி... சோகக் குரலில் ஜமால்..

ஆமா எங்களை போட்டு இப்படி தாளிக்கிறியே நீ எப்போ கலியாணம் செஞ்சுக்கப் போறே பாண்டி?

ஜீவன் அண்ணே! திருமணம் என்ற வட்டத்துக்குள்ளே வரனும்னா சில விஷயங்களை நான் விட்டத்து மேலே உக்காந்து யோசிச்சு முடிவு எடுக்கணும்!!! நீங்க எல்லாரும் பட்ட அவஸ்தையை பார்த்து நானே என்னோட சொந்த முடிவுலே ஒரு முடிவிற்கு வந்துட்டேன். இப்போதைக்கு என்னை விட்டுடுங்க....... என்றார் கார்த்திகைப் பாண்டியன்.



Thursday, August 20, 2009

நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு!!

நானும் நாகராஜனும்!!

ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன்.

அங்கேயே கெஸ்ட் ஹவுஸ். அதுலே எனக்கு சூப்பர் A.C. வசதியுடன் கூடிய ரூம் கொடுத்தாங்க. ரூமிலே கம்ப்யூட்டர். தெரிந்த மிக உயர்ந்த உறவு அப்போது அந்த கம்ப்யூட்டர்தான். அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் முன்னேதான் அமர்ந்திருப்பேன். அதுக்காக கேம்ஸ் விளையாடுவேன் என்று நினைக்காதீங்க. அப்படி வேலை செய்வேனாக்கும். இதுலே நாகராஜன் எங்கே இருந்து வந்தான் என்று யோசிக்கிறீங்களா? இருங்க விரிவா சொல்றேன்!

அந்த கெஸ்ட் ஹவுஸ்லே நிறைய பூக்கள் கிடைக்கும். பின்னால் அழகான நந்தவனம் இருக்கும். அந்த நந்தவனத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். செம்பருத்தி மரங்களின் கிளைகளை வளைத்து ஆர்ச் மாதிரி எல்லாம் நுழைவாயிலில் கட்டி இருப்பார்கள். அதில் செருகி வைத்தாற்போல் செம்பருத்தி பூக்கள் பூத்து குலுங்கும். நான் தினமும் அந்த பூக்களைப் பறித்து மாலையாக்கி எனது அறையில் உள்ள படங்களுக்கு போடுவேன்.

நந்தவனம் பக்கத்தில் IAS குவார்ட்டர்ஸ் இருக்கிறது. அங்கே பத்து பதினைந்து ரூம்கள் இருக்கிறது. வெளியே இருந்து வரும் கலெக்டர்கள் அங்கேதான் தங்குவார்கள்.

மாவட்டச் ஆட்சியாளர்கள் எந்தவித வித்தியாசம் இன்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். அவங்களை எல்லாம் உணவு அருந்தும் சமயம் சந்திக்க நேரிடும். அதனால் அங்கே வரும் அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். சரி, நம்ம கதைக்கு வருவோம்!!

ஒரு நாள் விடிந்தும் விடியாத காலை நேரம். நிறைய பூக்கள் பூத்திருந்தன வழக்கத்தைவிட மிக ஆர்வத்துடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். மேலே எட்டிபிடித்தும் குதித்தும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன். பூக்களை பிடித்து இழுக்கையில் ஆர்ச் மாதிரி வைத்திருந்த செம்பருத்தி மரம் அழகாக வளைந்து கொடுப்பது சுவாரசியமாக இருக்க அதி வேகத்துடன் குதித்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது கழுத்தில் ஏதோ கணமாக விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியல. வினாடிக்கும் குறைந்த நேரத்தில் விழுந்தது நெளிய ஆரம்பித்தது. கழுத்தில் சத சத என்று ஈரம். கயறு என்று எடுத்துப் போட கையை வைத்தேன். வழ வழவென்று இருந்தது. அதனால் சந்தேகம் மனதில் ஒரு சிறு மின்னல் போல் தோன்றியது. இடது ஓரக்கண்ணால் என்னால் காண முடிந்தது! "நல்லவர்" படமெடுத்துக் கொண்டிருந்தார். எனது வலது புறம் அன்னாரின் வால் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு ஒரு மாவட்ட ஆட்சியாளர் வெளியே வந்திருக்கிறார். கணப்பொழுதில் என் நிலை கண்டு பதறிப் போயிருக்கிறார். எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. மனதில் எண்ணங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. ஆஹா, நாளைக்கு நமக்கு பால் ஊத்துவது இப்பவே கண்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே! இவ்வளவு சின்ன வயதிலேயா! இதுலே போயி வயது என்ன கணக்கு? இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அது சர்வ நிச்சயம்!

பயத்திலே இயந்திரம் இல்லாமலே கை கால்கள் டைப் அடிக்க, எனது உதறல்கள் கழுத்திலே இருந்தவருக்கு புரியல போல. புரிந்திருந்தால் அன்னைக்கே போட்டு தள்ளி இருப்பாரு. இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!


இந்த விபரங்களை எழுதும்போதுதான் இவ்வளவு நேரம், களத்தில் நான் யோசித்து எடுத்த முடிவோ வினாடிக்கும் குறைவானதுதான். அப்போதுதான் நமது மூளை எவ்வளவு விரைவாக வேலை செய்கிறது என்பதை (பல முறை உணர்ந்ததுண்டு) மறுபடியும் உணரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

வாலைப் பிடித்து இழுக்கலாம்! என்ன நடக்கும்? கழுத்துலே போட்டுடுவார்! அதான் எனது இடதுபுறமாக அந்த நல்லவரை சடுதியில் இழுத்து தூக்கி எறிந்தேன். சுருண்டு போயி மணலில் விழுந்தார். விழுந்த வேகத்தில் படம் எடுத்து சிறிது நேரம் அப்படியே இருந்தார். அப்புறமா சர சரன்னு போய்ட்டார். அடுத்து அரை நொடியில் என்னைச் சுற்றி சிறு சல சலப்புடன் கூடிய கும்பல். அங்கே தங்கி இருந்தவர்கள் மற்றும் வேலையாட்கள் அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டனர்.

எனக்கு ஒன்றுமே விளங்கலை(விளங்காதது புதுசா என்ன - இது அடிக்கடி நிகழ்வதுதான்). அங்கே குவார்டர்ஸ்லே தங்கி இருந்த எனது நண்பிக்கு விஷயம் காற்றோடு செல்ல கணவர் சகிதமாக ஓடி வந்துவிட்டார். நானோ பேசும் நிலையில் இல்லை. வேறே என்ன நடந்ததை ஜீரணிக்க முடியாமல் பயத்துலே பேச்சு போச்சில்லே. உடல் முழுவதும் ஒரே நடுக்கம். கால்கள் பின்னி நடக்க முடியல! ஒரு வழியா எனது அறைக்கு வந்து செட்டில் ஆனேன்.

இந்த விஷயம் அதே காற்றோடு எனது அக்காவிற்கு செல்ல அடுத்த நாள் காலையில் அக்கா விஜயம்.

சில நாட்கள் ஆனது இந்த அனுபவத்தை மறக்க!!

Monday, August 10, 2009

நான் பெற்ற வலையுலக விருதுகள்!!

நன்றிகள் பல கோடி மக்கா!!




''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' நண்பர் ஜீவன், அன்புத்தம்பி சுரேஷ், அன்புத்தம்பி கனகராஜ் பாண்டியன் மூவரும் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

என் பதிவுகளையும் சுவாரஷ்யமாக்கியத்திற்கு...

மிக்க நன்றி ஜீவன்
மிக்க நன்றி சுரேஷ்
மிக்க நன்றி கனகராஜ் பாண்டியன்

ரூல்ஸ் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும். ஆனா எல்லோரும் இந்த விருதினை வாங்கி விட்டார்கள். வாங்காதவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால்........

என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தர விரும்புகிறேன்! எனது நண்பர்கள் அனைவரும் இந்த விருதினை பெரிய மனது பண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள்!

தனிப்பட்ட முறையில் இந்த ரெண்டு அவார்டுகளையும் எனதன்பு சகோதரர்கள் அண்ணன் வணங்காமுடி மற்றும் S.குமார் இருவருக்கும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இது வரை இந்த அவார்டுகள் இந்த இருவருக்கும் சேரவில்லை என்று நம்பி கொடுக்கிறேன். இவர்கள் இருவருக்கும் கொடுக்கும் விருதுகளின் பெயர்கள் முறையே ! "Interesting Blog Award" AND "This Blogger Is My Best Friend"

இந்த இருவருக்கும் ஒரு வேண்டுகோள்!!

நீங்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க ஆசைப் படுகிறீர்களோ அவ்வளவு பேருக்கும் கொடுக்க தடை ஏதும் இல்லை சகோதரர்களே!!
அதே போல் சிறந்த நட்புக்கான "This Blogger Is My Best Friend" விருது, எனது அன்புச் செல்லம் தோழி தாரிணிப்ரியா எனக்கு கொடுத்தது. விருதுக்கு நன்றி தாரிணி. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதீத கனவுகளோடு தாரிணியுடன் கூட்டு சேர்ந்து எனது சமையல் கலையை உலகறிய பரப்ப வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவுக்கு நல்ல ஆப்பு வச்சிட்டாங்க. ஏன்னா அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. அதனால் என்னோட சமையல் கலை திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. அதுக்காக எனக்கு சமைக்கத் தெரியாது என்று சில எதிர் கட்சிகள் தவறுதலாக பிரச்சாரம் செய்வதாக அறிந்தேன். இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே :)

ஆனா மக்கா இவங்க சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. நான் ரொம்ப நல்லா சமைப்பேன். என்னோட சமையல் பாகம் நள மகராஜவோட கம்பேர் பண்ற அளவுக்கு பிரபலம். (என்ன செய்யறது யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க அதான் நானே சொல்லிக்கறேன்) அதுலே பாருங்க (இதெ V.K.ராமாசாமி ஸ்டைல்லே படிக்கவும்) நான் ஒரு தக்காளி சாம்பார் வைப்பேன், அதோட வாசனையை உணர்ந்தவர்கள் பனிரெண்டு இட்லி தின்பது உறுதிங்க.என்னோட சமயல் அருமை தெரிஞ்சிக்கோங்களேன் ப்ளீஸ்பா :))

சரி நம்ப மாட்டேங்கிராங்கப்பா! ம்ம் இதெல்லாம் கடந்து வந்து ஜெயிக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். ஒரு நாள் நானே சமைச்சு எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றவங்களை எல்லாம் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடபோறேன். :))


தாரிணி நன்றி, மறுபடியும் சமையல் அறையில் நான் ஒரு கலக்கு கலக்க விரைவில் வருகிறேன்!!!

அடுத்து ஏதாவது விருது கொடுத்தா அதோட சேர்த்து முடிப்பு ஏதாவது கொடுத்தீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும் :))

அதையும் போட்டோ எடுத்து ப்லாக்லே போட்டுக்கறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...

விருது கொடுத்த அனைவருக்கும் நன்றிப்பா!!
உங்கள் ரம்யா........

Friday, August 7, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - நிறைவுப் பகுதி!!


வலை நண்பர்கள் ஆடும் கிரிக்கெட்!!

நண்பர்கள் அடைந்த வெற்றிச்சின்னம்



கேப்டன் டோணி

பங்கேற்பவர்கள்
============

கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்

இந்திய வீரர்களின் நிலைப்பாடு
=========================

டோணி - Middle Order Batsman, Jeevan - Fast Bowler, வால்பையன் - Spinner, நசரேயன் - Opening Batsman, குடுகுடுப்பை - Fast Bowler , உருப்படாதது அணிமா - (ஆல் ரௌண்டர்), ஜமால் - Wicket Keeper, அப்பாவி முரு - (ஆல் ரௌண்டர்) , லவ்டேல் மேடி - (ஆல் ரௌண்டர்), அ.மு.செய்யது - Opening batsman, அண்ணன் வணங்காமுடி - (ஆல் ரௌண்டர்)

ஆஸ்திரேலிய கேப்டன்: Ricky Ponting
ஆஸ்திரேலிய துணை கேப்டன்: Michael

ஆஸ்திரேலியர்கள் 320/10


இப்போது அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் ஜோடி சேர்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் Shane Watson முருவின் பந்தை எதிர் கொள்கின்றார்.

இருவரின் பந்து வீச்சில் அதிர்ந்த ஆஸ்திரேலியர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். பல சாகசங்கள் புரிந்து விளையாடினதால் சில ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இருவரும் தலா ரெண்டு விக்கெட்டை வீழ்த்தினார்கள். டோணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புதியவர்கள் எப்படி ஆடுவார்களோ என்று தவறுதலாக பயந்து விட்டோமே என்று வருத்தப் பட்டதாக விக்கெட் கீப்பர் மற்றும் சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பௌலிங் அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் தலா ரெண்டு விக்கெட்டு எடுத்து தங்களது ஆறு ஓவர்களை முடித்துக் கொண்டார்கள்.

அனைத்து தரப்பிலும் இருந்து இந்தியர்களுக்கு சரமாரியான மகிழ்ச்சி ஆரவாரங்களும், உற்சாகங்களும் வந்த வண்ணம் இருந்தன.

உணவு இடைவேளை முடிந்து முதலில் மட்டை வீச வந்தவர்கள் நமது நண்பர் நசரேயன் மற்றும் அ.மு.செய்யது.

அதிரடி ஆட்டமாக அடித்து விளையாடினார்கள். பார்வையாளர்களும், சக வீரர்களும் ஏற்படுத்திய மகிழ்ச்சி அலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. நண்பர் நசரேயன் அருமையான ஒரு கதை எழுதும் நோக்கத்துடன் வந்திருக்கிறார். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை உணவு இடைவேளையின் போது சக வீரர்களிடம் கூறி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். என்ன செய்யறது விதி வலியது. சாதரணமாக அவரது கனவில் வருவதைத்தான் எழுதுவாராம். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் எழுத வந்து ஏமாந்து போன கதை ஒரு சோக கதைதானே!

நண்பர் நசரேயன் எழுத நினைத்த கதையின் தலைப்பு மட்டும் வெளியே கசிந்து விட்டதாமாம். அதாவது, "துண்டு போட்டு துடித்துப் போன கதை" இது தான் அந்த கதையின் தலைப்பு. தலைப்பே விறுவிறுப்பாக இருக்கும் போல இருக்கே! எப்போ எழுதுவாரோ அப்போ படிக்க தயாராகலாம். இப்போ அவர் விளையாடுவதை கவனிக்க வேண்டுமே! அதுனாலே தான்...........

வால்பையன் மட்டும் எதிர் கவிதைகளும் பின்னூட்டங்களும் இட்டு தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டும், விளையாடியும் விட்டதாக சுற்று வட்டாரங்கள் தெரியப் படுத்தின. நண்பர் வால்பையனுக்கு எதிர் கவிதை எழுதினாலே போதும். எல்லாருக்கும் நல்லா பொழுது போகும். விளையாட்டிலும் அவர் கில்லாடி என்பதை நிரூபித்து விட்டார்.

ஆனால் அ.மு.செய்யது கதை, கட்டுரைகள் என்று எல்லா தரப்பிலும் வெளுத்து வாங்குவார். அதே போல விளையாட்டிலும்......... நசரேயன் அவர்களுக்கும் நம்ம சகோதரர் அ.மு.செய்யதுக்கும் நல்லா ஒத்துப் போகுதுன்னு சொல்லலாம். நல்ல புரிதல் இருக்கு. தவறுகள் செய்யாமல் அருமையா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பதினைந்து ஓவர்களில் அவுட் ஆகாமல் இருவரும் சேர்ந்து எடுத்த ரன்கள் 110. நசரேயன் 60 ரன்கள். அ.மு.செய்யது 50 ரன்கள். ஆஸ்திரேலியர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் புது வியூகம் அமைத்து அதில் இருவரையும் சிங்காரமாக சிக்க வைத்து விட்டனர். (110/2)

தேநீர் இடைவேளையின் போது இந்திய வீரர்கள் இருவரும் அவுட் ஆனார்கள்.

இதை சற்றும் எதிர் பாராத டோணி மிகவும் கவலைக்குள்ளானார்.

இடைவேளைக்குப் பிறகு அடுத்து களம் இறங்கியவர்கள் லவ்டேல் மேடி, அண்ணன் வணங்காமுடி. வந்த வேகத்தில் இருவரும் சிக்சரும் பௌண்டரியுமாக அடித்துத் தள்ளினார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அரங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர்.

மள மளவென்று ரன்கள் குவிந்தன. அதே சமயத்தில் ஆர்வத்தில் ஓடிய அண்ணன் வணங்காமுடி ரன் அவுட் ஆனார். அண்ணன் வணங்காமுடி எடுத்த ரன்கள் 35. (145/3)

மேடியுடன் இப்போது ஜோடி சேர்பவர் வால்பையன்.

வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ்சர்கள். அவரும் ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி அவுட் ஆனார். வால்பையன் எடுத்த ரன்கள் 38. (183/4)

அடுத்து களம் இறங்கியவர் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியர்கள் மிகவும் நிதானாக யோசித்து பீல்டிங் டைட் செய்து விட்டனர். அதனால் சிங்கிள் ரன் எடுக்கவே இந்திய வீரர்கள் தடுமாறினார்கள். ஒவ்வொரு ரன்னாக இருபது எடுத்து இறுதியில் பரிதாபமாக டோணி அவுட் ஆனார். டோணி எடுத்த ரன்கள் 20. (203/5)

லவ்டேல் மேடி களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இவருடன் ஜோடி சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் ஜமால். மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரி எடுத்தார். ரன் அவுட் ஆனது ஜமால். ஜமால் எடுத்த ரன்கள் 38. (241/6.)

லவ்டேல் மேடியுடன் ஜோடி சேர்ந்தவர் ஜீவன். இவர் ஏழாவது விக்கெட். தேவையான ரன்கள் பன்னிரண்டு. எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்க அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையை நன்றாக உள்வாங்கிய மேடி சிக்சருக்கு தூக்கினார். அது அங்கேயே விழுந்தது. ரன் எடுக்க முடிய வில்லை. அவர் நல்ல நேரம் அவுட் ஆகவில்லை. அடுத்த பந்தை எதிர்பார்ப்புடன் எதிர்கொண்டவர் ஜீவன். வந்தது வரட்டும் கடைசிநேர விளையாட்டுதானே என்று எண்ணி விட்டார் போலும். மட்டையை சுழற்றி தூக்கி அடித்தார் பாருங்கள். பந்து பறந்து வந்து அரங்கத்தில் விழுந்தது. இந்தியர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர் என்று எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை வந்து விட்டது. அதன் எதிரொலி கைதட்டல்கள்தான் . அவர்களின் மகிழ்ச்சிக்கு ஏது எல்லை!!

அடுத்த பந்திலும் அதே துணிச்சல் இதிலும் சிக்சருக்கு பந்து பறந்தது. ஜீவன் அடித்த ரன்கள் மூன்று சிக்சர்களும் ஒரு பௌண்டரியும். மொத்தமாக ஜீவன் எடுத்த ரன்கள் 22. தேவையான ரன்கள் 21.

இறுதியில் இந்தியா வெற்றியடைந்தது. அனைத்து நண்பர்களும் ஆடுகளத்தை நோக்கி ஓடினார்கள். இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59. (322/6.)

விவேகம் நிறைந்த வேகமான விளையாட்டில் சிறந்து விளங்கிய நமது இந்திய வீரர்களை பாராட்டாதவர்களே கிடையாது. ஆஸ்திரேலிய வீரர்களும் மனதார இந்திய வீரர்களை பாராட்டினார்கள். இறுதியில் விளையாடிய அனைவரையும் கவுரவப் படுத்தும் வகையில் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியாக பாராட்டினார்கள். அவருடைய சொந்த செலவில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். டோணியை பாராட்டி வெற்றிக் கோப்பையை பிரதமர் வழங்கினார்.

கோப்பையை வாங்கிய டோணி இந்த பாராட்டுதல்களுக்கு காரணமானவர்கள் புதிதாக விளையாட வந்தவர்கள்தான். வழக்கமாக விளையாடுபவர்கள் விளையாட முடியாத சூழ்நிலையில் ரிஸ்க் எடுத்து இந்த புதியவர்களை களம் இறக்கினோம். அம்பயரில் இருந்து ஆடிய அனைத்து வீரர்களுக்குமே இந்த வெற்றி சொந்தமானது.

நான் இந்தக் கோப்பையை முழு மனதுடன் புதிய இந்திய வீரர்களாக களம் இறங்கி புது மாதிரி விளையாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பிரபல வலைப்பதிவர்களுக்குதான் சொந்தமாக்கப் போகிறேன், மைதானத்தில் விளையாட்டுடன் சேர்த்து குறும்புகள் பல செய்தாலும் இறுதியில் வெற்றிக் கனியை பெற்றுத் தந்து விட்டார்கள். அதனால் அனைத்து பெருமைகளும் புது வீரர்களுக்கே! என்று டோணி வாங்கிய கோப்பையை துணை கேப்டன் ஜீவன் அவர்களிடம் கொடுத்து இது உங்கள் அனைவருக்கும் சொந்தம். இது உங்கள் விளையாட்டின் நினைவாக வலையுலகை அலங்கரிக்கட்டும் என்றார்.

அரங்கத்தில் ஏற்பட்ட பலத்த கரகோஷத்துடன் நம் வலை நண்பர்கள் வெற்றிச் சிரிப்போடு பிரியாவிடை பெற்றனர்.

***சுபம்***

நன்றி
ரம்யா....