வைகைபுயலும் பார்த்திபனும் சந்திக்கும் வேளையில்...
[இவர்களைப் பற்றி எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டது என்று எனது நட்புக்கள் அன்புக் கட்டளை இட்டதால் இதோ உங்கள் ரம்யா புறப்பட்டுவிட்டேன்]
வாருங்கள் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று பார்ப்போம்.
"வேலு வேலு...." பார்த்திபனின் குரல் கணீரென்று வேலுவின் வீட்டிற்குள் ஊடுருவிச் சென்றது.
"யாரு இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு. எதுக்கும் ஜன்னல் வழியா யாருன்னு பார்க்கலாம். வில்லங்கத்தை வீதியோட அனுப்பறதா இல்லே பாய் போட்டு உக்கார வக்கிரதான்னு. "ஐயோ இவனா காலையிலேயே வந்துட்டானா? மாட்டிக்ககூடாது. யோசிச்சு முடிவெடுக்கணும். அப்போ அக்கா கண்ணிலே பட..
"அக்கா வெளியே ஒருத்தன் என் பெயரைச் சொல்லி கூவிக்கிட்டு இருக்கான். நான் வீட்லே இல்லேன்னு சொல்லிடு. என்ன முழிக்கறே போ சீக்கிரம்... சீக்கிரம் போ...."
"ஏண்டா காலையிலே என்னை பொய் சொல்ல சொல்றே?
"அப்போ மத்தியானம் பொய் சொல்லுவியா? போக்கா போ நான் சொன்னதை மொதெல்ல செய்.இல்லேன்னா அவன் உள்ளே வந்திடுவான். ஐயோ! சீக்கிரம் போக்கா"
"வேணாம்டா அவன் மொகத்தை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு, வெளியே போய் என்னான்னு கேளு.."
என்ன உள்ளே இருந்து ஒரு சத்தத்தையும் காணோம் என்று யோசித்த பார்த்திபன், வேலு வீடும் நம்ப வீடு மாதிரிதானே என்று உரிமையுடன் உள்ளே நுழைய, அங்கே பார்த்திபன் கண்ட காட்சி...
"நீ என்னோட அக்காவா இல்லே அவனோட அக்காவா? நான் சொன்னதை செய்வியா.... "
"டேய் ரொம்ப ஓவரா பேசறே! மாமாகிட்டே சொல்லிடுவேன் ஜாக்கிரதை"
"ஐயோ அக்கா நான் இப்போ உன்னை என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோவப்படறே. மாமா கிட்டே சொல்றதுக்கு பதிலா உன் கையாலே கொஞ்சம் விஷத்தை கொடுத்திடு உன் மடியிலேயே நான் செத்துப் போய்டறேன் " கண்ணீருடன் சொன்னவுடனே அக்கா பயந்து போட்டாங்க, இருந்தாலும் இந்த செண்டிமெண்ட் வேலை செய்யுமா? என்று வேலுவுக்கு சந்தேகம். ஓரக்கண்ணால் அக்காவை கவனிக்க, அக்கா முகம் பாவமா இருந்ததினால் மனதுக்குள்ளே ஒரே சந்தோசம்.
"சரிடா நீ அழுவாதே, நீ அழுதா எனக்கும் அழுவாச்சியா வரும். நானே போய் சொல்லித் தொலைக்கிறேன். ஆமா நீ எதுக்கு அவனை பார்த்து பயப்படறே? நான் சொன்னா அவன் நம்புவானா?"
"அவன் இருக்கானே அவன் ஒரு கிறுக்கன். ரொம்ப மோசமானவன். அதுமட்டுமில்லே ரொம்ப தப்பானவன்க்கா. திடீர்னு பிடிச்சி அடிச்சிடுவான். என்ன தோணுதோ அதை உடனே செய்திடுவான். கிறுக்குப்பய வந்து கூப்பிடுவான் உடனே நான் போகனுமா? இப்போ உன்னோட தம்பி நான் அவனைப் பார்க்க போகவா? வேணாமா? நீயே சொல்லுக்கா! நீ போசொன்னா நான் போறேன்"
"வேணாம்டா நானே போய் அவன்கிட்டே சொல்றேன். என்னைய ஒன்னும் செய்திடமாட்டானே?"
"ச்சே! ச்சே! உன்னை ஒன்னும் செய்யமாட்டான் அவனுக்கு டார்கெட் நான்தானே?" என்று வேலு முணு முணுக்க....
"என்னாடா முணுமுணுக்கரே?"
"ஒன்னும் இல்லேக்கா நீ போய் அவனை அனுப்பற வழியை பாரு?"
"இருடி, நீ வெளியே வராமலா போய்டுவே? என்னை பத்தி இந்தமாதிரி எல்லாம் சொல்லிக்கிட்டு திரியரியா? ஐயோ அக்கா வராங்களே! போய் வெளியே நின்னுக்குவோம்"
"தம்பி நீங்கதான் வேலுவைப் பார்க்க வந்தீங்களா?"
"ஆமாம்க்கா!"
"வேலு வீட்டிலே இல்லையே!"
"என்னாது வீட்டிலே இல்லையா! நான் அவன்கிட்டே ஆயிரம்ரூபா கடன் வாங்கியிருந்தேன். அதெ கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன். இல்லேன்னா சரிக்கா நான் கிளம்பறேன். வேலு வந்தா நான் வந்திட்டுப் போனதா சொல்லிடுங்க. என்ன! கையிலே வச்சிருந்தா செலவு பண்ணிடுவேனோன்னு பயந்தேன்" என்று கூறியபடி வீட்டின் உள்ளே பார்க்கிறார் பார்த்திபன்.
"இவன் என்ன நாம ஏதோ பணம் கொடுத்ததா சொல்றான். எப்போ கொடுத்தேன். எனக்கு இவனுக்கு பணம் கொடுத்ததா ஞாபகமே இல்லையே? நானே அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாப் பறக்கறேன். இதுலே ஆயிரம் ரூவாவா? இப்போ என்னா பண்ணலாம் இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டோமே. தப்பு பண்ணிட்டோமோ? பயபிள்ளே காலையிலே கையிலே பணத்தை வச்சிக்கிட்டு என்கிட்டே தான் குடுப்பேன்னு பிடிவாதம் பண்றானே!"
"சரி இப்போதைக்கு உள்ளிருப்புக்கு தடா சொல்லிட்டு வெளியே போவோம். என்று ஒரு முடிவிற்கு வந்தவுடன் மனதில் மிகவும் மகிழ்ச்சி தாண்டவமாடுது. ஏன்னா கையிலே பணம் வரப் போகுதே! இந்த பணத்திலே என்ன வாங்கலாம். இப்போ வெளியே போனா சரியா இருக்குமா?"என்று வேலு யோசித்துக் கொண்டிருக்கும்போதே..
"வேலு உள்ளே இல்லேப்பா நீ அந்த பணத்தை என் கிட்டே கொடு நான் வேலுகிட்டே கொடுத்திடறேன்"
"இல்லேக்கா அவன் யாருகிட்டேயும் கொடுக்காதேன்னு சொல்லி இருக்கான். குறிப்பா உங்ககிட்டே கொடுக்கக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லியிருக்கான். அதான் என்னை தப்பா நினைக்காதீங்க அக்கா"
என்ன இவன் நிசமாலுமே பணத்தை திருப்பிக் கொடுக்கத்தான் வந்திருக்கான். நான் கூட இவனை தப்பா இல்லே நினைச்சுட்டேன். நம்ம பயதான் பொல்லாத பைய போல இருக்கே. என்று தனக்குள்ளே முணுமுணுத்த அக்காவுக்கு செம கோபம் வந்திடுச்சு.
"அப்படியா சொன்னான் வேலு?
"ஆஹா, சரியா கொளுத்திப் போட்டுட்டோம்னு நினைக்கிறேன். பத்த ஆரம்பிச்சிடுச்சு"
"டேய் வாட வெளியே! போனா போவுதுன்னு வீட்டுக்குள்ளே உக்காரவச்ச்சி தண்டச்சோறு போட்டா, நீ இந்த மாதிரியா என் பேரை கெடுக்கறே?"
"ஏன்க்கா கத்தறே என் காது கேக்குது. அட இங்கே பாருய்யா நீ எப்போ வந்தே? நேரே உள்ளே வராமே இங்கே என்ன பண்றே? என்னாக்கா வெளியவே நிக்க வச்சி பேசிகிட்டு இருக்கே. இவரு என் செட்டு" அப்பாவியா மொகத்தை வச்சிக்கிட்டு வேலு பேச ஆரம்பித்தவுடன்..
"என்னா உன் செட்டா? உள்ளே என்னாடா சொன்னே?"
"அதானே! நான் வந்தது உனக்கு தெரியாது? அக்காகிட்டே என்ன சொல்லி அனுப்பினே"?
"தம்பி கூட்டிகிட்டு போய் நல்லா நாலு சாத்து சாத்து அப்போதான் இதுக்கு அறிவு வரும்"
"இதா? மரியாதை போச்சா? ரொம்ப கேவலப்படுத்துராங்களே"
"அக்கா அந்த ஆயிரம் ரூவா நான் வேலுகிட்டே குடுத்திடறேன். உங்ககிட்டே கொடுக்கலைன்னு என்னை தப்பா நினைக்காதீங்க"
"அட நான் மறந்துட்டேனே தம்பி, டேய் உனக்கு ஏதுடா ஆயிரம் ரூபா?"
"என்னாது ஆயிரம் ரூபாவா? அது சாவித்திரி அம்மா நடிச்ச படம் இல்லே, நீ அதையா சொல்றே?"
"டேய் நான் பணத்தைப் பத்தி பேசிகிட்டு இருக்கேன் நீ படத்தைப் பத்தி பேசிகிட்டு இருக்கியா? ஏண்டா இப்படி கீதத்துக்கு மாத்தா பேசிகிட்டு இருக்கே?"
"என்னாக்கா சொல்றே நீ? "
"உனக்கு இந்த தம்பிக்கு கடன் குடுக்க பணம் ஏது? நீயோ ஒரு வேலையும் செய்யாம சுத்தி வர்றவன். உனக்கு ஏதுடா பணம்?"
அய்யய்யோ இவன் கொளுத்திப் போட்டது இப்போ கொழுந்துவிட்டு எரியுதே. ஏண்டா பாவி உனக்கு எங்கேடா நான் கடன் கொடுத்தேன்? முழியை பாரு ஆடு திருடின கள்ளனாட்டமா? இவனுகளை நம்பறாங்க! நம்பளை ஒருத்தரும் நம்பமாட்டேங்கிறாங்க! இன்னைக்கு விடிஞ்சவுடனே சனி வீட்டுக்கு வந்திடுச்சா. சமாளிக்கலாம்.
"அக்கா இவன் மனசுக்குள்ளே நம்ப ரெண்டு பேரையும் திட்டிகிட்டு இருக்கான். பாருங்க அவன் உதடு மட்டும் அசையுது"
"என்னாது திட்டுரானா டேய்!"
"ஐயோ அக்கா இவன் நம்பளுகுள்ளே சண்டை மூட்டி விடறான். எனக்கு பயத்துலே உதடு ரெண்டும் டைப் அடுக்குது. நான் யாரையும் திட்டலேக்கா"
"டேய் பொய் சொல்லாதே நானும் பார்த்தேன் அந்த தம்பி சொல்றது உண்மைதான். இரு மாமா வரட்டும் இன்னைக்கு உன்னை வீட்டை விட்டு விரட்டிடறேன்"
"போதுமா இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே? பொருத்தி போட்டது சும்மா திகுதிகுன்னு எரியுது இல்லே! போ போய் நிம்மதியா இன்னைக்கி அடுத்த வேலையை பாரு. என்னைய மாதிரி ஒரு இளிச்சவாயன் உனக்கு கிடைக்காமலா போய்டுவான். போப்பா போ"
"அக்கா அப்போ அந்த ஆயிரம் ரூபா எனக்கு கடன் கொடுத்தது உங்களுக்கு தெரியாதா? "
"ஏண்டா! ஏண்டா! மறுபடியும் அதை பத்தியே பேசறே, வா நம்ம போகலாம்" என்று பார்த்திபனை இழுத்துக் கொண்டு நடக்க அவர்களை இடைமறித்த அக்கா..
"ஆமா அன்னைக்கி ஒரு நாளு மாமா சட்டை பாக்கெட்லே வச்சிருந்த பணத்தை காணோம்னு சத்தம் போட்டாரே அது நீதானா? என் கிட்டே கூட சொல்லவே இல்லை?"
"ஐயோ அக்கா அதுக்கு எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த பணத்தை நான் எடுக்கலைக்கா. சத்தியமா நான் எடுக்கலை இப்போதாவாவது என்னை நம்புவியா?"
"ம்ம்ம் நான் உன்னை நம்ப மாட்டேன். அப்போ இந்த தம்பி பொய் சொல்லுதா? என்ன தம்பி எது பொய்? எது உண்மை?"
தூரத்துலே மாமா வருவதை வேலு கவனிக்க உஷாரு உஷாருன்னு மனது சொல்ல
"அக்கா மாமா வராரு சித்த சும்மா இரு. இவரு பணம் கொடுத்தா உங்கிட்டே கொண்டு வந்து கொடுத்திடறேன். பாரு மாமா என்னையே பாக்கறாரு. கொஞ்சம் சிரிச்சிகிட்டே பேசுக்கா. இல்லேன்னா என்னை தப்பா நினைப்பாரு. ப்ளீஸ்க்கா...."
"ம்ம் போயிட்டுவா அப்புறமா இருக்கு உனக்கு....."