சமுதாயம் என்பது நாமதானே! நம்மில் நான்கு பேர் சேர்ந்தால் அது சமுதாயம் சரிதானே நான் கூறுவது?
சில மாதங்களுக்கு முன் நான் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். வயது பதினைந்து இருக்கும் (அவள் பெயர் சரிதா என வைத்துக் கொள்வோம்). அவள் யாரிடமும் பேசமாட்டாள். ஆனால் நான் அந்த பெண்ணிடம் வலியப் போய் பேசுவேன். சரியா பதில் பேசமாட்டாள். என்ன சிகிச்சை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உடன் அந்தப் பெண்ணின் சித்தப்பா இருந்தார். அவரும் ஒரே ஒரு நாள்தான் இருந்தார். இரெண்டாம் நாளில் இருந்து அவரும் இல்லை. சித்தப்பா எங்கே போனார் என்று விசாரித்தேன். ஊருக்குப் போய் இருக்கிறார், வந்திடுவார் என்று நம்பிக்கையுடன் கூறினாள். அம்மா அப்பா இல்லையா என்று கேட்டேன், எல்லாரும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தாள். காலம் அதன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
காலக் கண்ணாடியில் அந்தப் பெண்ணின் சோகங்கள் ஏனோ தெரியவில்லை. மருத்துவர்கள் சரிதாவிற்கு அறுவை சிகிச்சை குறித்து அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதம் சரிதா அறியவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு விவரம் யாரும் தெரிவிக்கவில்லை.
அந்த நாளும் வந்தது. அதாவது சரிதாவின் அறுவை சிகிச்சைக்கு குறித்த நாள். மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து விட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும்படி கூறினார்கள். அப்போதுதான் அவளுடன் ஒருவரும் இல்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொண்டார்கள் மருத்துவர்கள் உட்பட.
தன்னுடன் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள். எனக்கு மிகவும் கஷ்டமா போச்சு. அனைவரும் சேர்ந்து சமாதனப் படுத்தினோம். அப்போ கூட கேட்டோம் என்ன அறுவை சிகிச்சை என்று, சரிதா கூற மறுத்து விட்டாள். விளங்காத விளக்கத்துடன் அறுவைசிகிச்சை முடிந்து வரும்வரை காத்திருந்தோம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு வேற அறைக்கு மாற்றி விட்டார்கள். அது என் அறையில் இருந்து ரெண்டு அறை தள்ளி இருந்தது. அதனால் எனக்கு சரிதாவிடம் பேச வசதியாக இருந்தது.
சரிதாவைப் பார்க்க ஒருவரும் வரவில்லை. மருத்துவமனையில் சரிதாவுடன் வார்டில் இருந்தவர்கள் மட்டுமே வருவதும் போவதுமாக இருந்தார்கள். கடைசியில் ஒரு நாள் சரிதா என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்..
சரிதாவுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை, ரெண்டு தம்பிகள். உடன் பிறப்புகளுடன் மிகவும் ஒத்துமையாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த சரிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இடி போல் இறங்கியது. அதை வெளிப்படுத்த தெரியாமலே சில மாதங்களை கடத்தி இருக்கிறாள். சக மாணவிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, தனது உடன்பிறந்தவர்களிடம் சரியாகப் பேசுவதில்லை. அவர்களே வந்து பேசினாலும் பதில் கூறுவதில்லை.
இன்னும் சில மாதங்கள் ஆனது பள்ளிக்குச் செல்வதை அறவே வெறுக்க ஆரம்பித்தாள். தோழிகள் வந்து பேசினால் கூட பதில் பேசுவது இல்லை. சரிதாவிற்குள் எப்பொழுதும் இல்லாத கூச்ச சுபாவம் ஒரு வியாதி போல் தொற்றிக் கொண்டுள்ளது.
அதை வெளியே காட்டாமல் அமைதியை ஒரு போர்வையாக்கி அதற்குள் ஒளிந்து கொண்டு சில மாதங்களை கடத்தி இருக்கிறாள்.அதுவரை சரிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வராத பெற்றோர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் சந்தேகம் வந்திருக்கிறது. பிறகு உக்கார வச்சி விசாரித்ததில் சரிதாவால் சரியானபடி விளக்கமளிக்க முடியவில்லையாம்.
பிறகு அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே சரிதா தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்துள்ளாள். பெண்மைத் தன்மையில் இருந்து மாற்றங்கள் அவளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டிருக்கிறது. சரிதாவுக்கு புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆனதாம். புரிந்தபிறகு அவள் மனதில் பயமும், கூச்சமும் கோலோச்சி இருக்கிறது. பெற்றோர்களிடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று மனதிற்குள்ளேயே மருகி இருக்கிறாள். உடன் பிறந்தவர்களிடமும் எதையும் விளக்க முடியவில்லை. அவர்களும் சரிதா ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி கேட்டு அலுத்து விட்டார்களாம். இறுதியில் மருத்துவரால் சரிதாவின் நிலை உணர்த்தப் பட்டதுமருத்துவர் ஒரு மருத்துவமனை முகவரி கொடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.
ஆனால் சரிதாவின் பெற்றோர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இதனால் அந்த பதினைந்தே வயது நிறைந்த பெண்ணின் மனதில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நிலையில் அந்த கொடுமையும் நிகழ்த்தி அதிலிருந்தும் காப்பாற்றப் பட்டிருக்கிறாள். இந்த நிகழ்விற்கு பிறகு மருத்துவர் கூறிய மருத்துவமனைக்கு செல்லாமல் வேற மருத்துவமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து நான் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிராகள். மருத்துவர்களும் பரிசோத்தித்து விட்டு அவர்களால் என்ன முடியுமோ அதை செய்வதாக கூறி இருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்ட சரிதாவின் பெற்றோர்கள் சரிதாவின் சித்தப்பாவை துணைக்கு வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். சித்தப்பாவும் அடுத்த நாள் கச்சிதமாக நழுவிவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் சரிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.
அறுவை சிகிச்சை முடிந்து குணமான பிறகு
சரிதாவின் வீட்டிற்கு அனுப்ப பல முயற்சிகள் மேற்கொண்டனர். அனைத்தும் தோல்வியையே தழுவின. அவர்கள் கொடுத்த முகவரியும் தவறானது. சரிதாவிடம் பெற்ற முகவரியிலும் சரிதாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து கொண்டு புறப்பட்டு விட்டனர். எங்கே தேடுவது இது மருத்துவர்களின் முதல் கேள்வி. சரிதாவை என்ன செய்வது இது மருத்துவர்களின் இரெண்டாவது கேள்வி. இறுதியில் சரிதாவிடமே வேறு யாரவாது உறவினர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள்.சில முகவரிகள் சரிதாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றன. அங்கேயும் ஆட்களை அனுப்பி விசாரித்தார்கள். அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது, அவர்கள் பெண்ணை நாங்கள் எப்படி வைத்துக் கொள்வது? பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். மருத்துவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
எங்கே செல்கிறாய் என்ற மருத்துவர்கள் தன்னை நோக்கி கேட்ட கேள்விக்கு அவளின் அழுகைதான் பதிலாகக் மருத்துவர் கிடைக்கப் பெற்றார்கள்.
இந்த சூழ்நிலையில் மனதளவில் மிகவும் பாதித்த சரிதா எங்கே செல்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களும் அவர்களாலான உதவிகளை செய்து வந்தார்கள்.ஆனால் சரிதாவை எவ்வளவு நாட்கள்தான் மருத்துவமனையில் வைத்திருப்பது? அவர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். பிறகு சில தொண்டு நிறுவனத்திடம் பேசி சரிதாவை அங்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே செல்ல சரிதா மறுத்து விட்டாள். மிகவும் பயமாக இருக்கிறது. யார் எப்படி எல்லாம் என்னை கிண்டல் செய்வார்களோ என்று காரணமும் கூறி அழுதாள். ஆனாலும் அனைவரும் சமாதானப் படுத்தி அந்த தொண்டு நிறுவனத்தில் சேர்த்து விட்டார்கள். இப்போ என்ன செய்கிறாள் என்று பிறகு பார்ப்போம்..
இப்போது பெற்றோர்களிடம் வருவோம்... பிறப்பில் குறை ஒன்றும் இல்லை. இடையிலே வந்த குறை. அந்த பதினைந்தே வயது நிரம்பிய பெண் என்ன பாவம் செய்தாள். எப்படி பெற்றோர்களே உங்களக்கு இது போல் செய்ய மனது வந்தது. சரிதாவின் பெற்றோர்கள் ஊரை விட்டே சென்று விட்டார்கள். அதுவும் மிகக் குறுகிய காலத்தில் ஊரை மாற்றுவது என்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. சரிதாவை மருத்தவனையில் சேர்த்த இடைப்பட்ட கால அவகாசத்தில் இடப் பெயர்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டுத்தான் அவர்கள் சரிதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இது சரிதாவின் உறவினர்கள் கூறிய விளக்கங்கள். எது உண்மையோ எது பொய்யோ தெரியாது, ஆனால் இவர்களின் செய்கையால் பாதிக்கப்பட்டு நிற்கும் அந்த பெண்ணிற்கு இவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?
சரிதா மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண்ணாம். ஒவ்வொரு தேர்விலும் சரிதா வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் 90க்கும் மேலே. மேலே படிக்க ஆசைப் படுகிறாள். இதுவும் அந்த பெண் செய்த தவறோ? ஏதோ குறை வந்துவிட்டது. அதற்கு அந்த அறியாப் பெண் எப்படி காரணமாவாள். நல்லா படிக்கற பெண்தானே அவளை அவளின் விருப்பம் போல் படிக்க வைத்திருக்கலாமே!
அவளின் கூச்சத்தை நல்ல கவுன்சிலிங் முறையில் போக்கி இருக்கலாமே!ஏன் செய்யவில்லை? சரிதாவிற்கு வந்த குறைக்கு அவளை எப்படி பெற்றவர்கள் தண்டிக்கலாம்?மற்ற குழந்தைகளை நல்ல முறையில்தானே அதுவும் நகரத்தில் மிக உயரிய பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால தற்சமயம் ஊரை விட்டே சென்று விட்டார்கள். இது எப்படி நியாயமாகும்? இதற்கு விடை தெரியாமல், அந்த தொண்டு நிறுவனத்திற்கு பெரிய நன்றி கூறிவிட்டு எங்களாலான உதவிகள் செய்து விட்டு, அவளின் கண்ணீரை தற்காலிகமாக துடைத்து விட்டு வந்தோம். நாங்கள் விடை பெறும் நேரம் நெருங்கும்போது சரிதாவின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மனம் கனத்து விட்டது....