Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, October 22, 2009

நான் தேடும் அவன்!!

இன்னைக்கு எப்படியும் இவனை.......... இருடி இன்னைக்கி நீ அவ்வளவுதான்!!

எப்படி அவன் இருக்கும் இடத்தை அடைவது? பலத்த பாதுகாப்போடு அல்லவா இருக்கின்றான். இருந்தா என்ன! நமக்கு குறுக்கு வழியா தெரியாது? தொடர்ந்து ரெண்டு வருடங்களாக எவ்வளவு முயற்சி செய்தும் ஒவ்வொரு வருடமும் தோல்விதான் மிஞ்சியது.

சரியான நேரம் நமக்கு அமையவில்லையே! இன்று எப்படியும் நமது வேலையை கச்சிதமாக முடித்து விடவேண்டும். நமது முயற்சிகள் தொடர்ந்து ரெண்டு வருடங்களாக தோற்றுக் கொண்டே வருகின்றது. இந்த முறை தோல்வியே எனக்கு இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவு செய்தான் சந்துரு. தேவையான உபகரணங்கள் அனைத்தும் மறைத்து வைத்துக் கொண்டான். எப்படி உள்ளே போறது? போலீஸ் வழியிலே நிக்குது. மனம் தளரக்கூடாது. எப்படியாவது உள்ளே நுழைந்து விடவேண்டும்.

மெதுவாக மிக மெதுவாக சுவற்றின் மீது ஏற முயன்று கீழே விழுந்து விட்டான் சந்துரு. விழுந்த வேகத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். சத்தம் கேட்டு ஒரு காவலாளி ஓடி வந்து பார்த்தான். யாரும் கண்களுக்கு தென்படாததால் சற்று நேரம் நின்று விட்டு தன இடத்திற்கே திரும்பினான்.

மறுபடியும் என்ன முயற்சி செய்யலாம்னு யோசித்துக் கொண்டு இருக்கையில், ஒரு மரம் கண்களுக்குப் பட்டது. அந்த மரத்தின் வளர்ச்சியும் சந்துருவிற்கு சாதகமாக வளர்ந்திருப்பது போல் தெரிந்தது. ஆமாம் அந்த மரம் சற்றே சாய்வாக வளர்ந்திருந்தது. அதில் ஏறினால் மாடி வரை செல்ல முடியும். அப்படியே சென்றாலும் அவனை கண்டு பிடிக்க முடியுமா? அவன் எந்த அறையில் இருப்பானோ? என்று சற்றே யோசித்தான். இருட்டில் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை.

"முயற்சி திருவினையாக்கும்" என்ற சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் மரத்தின் மீது கால்களை வைத்து ஏற ஆரம்பித்தான். கால்களை மாற்றி வைக்கும்போது மடியில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்த சத்தத்தில் மறுபடியும் எல்லாரும் விரைப்பானார்கள். காவலுக்கு கட்டி இருந்த செல்லப் பிராணியும் தனது வேலையை கச்சிதமாக செய்தது. மறுபடியும் காவலாளி கோபத்தின் உச்சத்துக்கே போனான்.

"யாரு! யாரு! யாரா இருந்தாலும் மரியாதையா வெளியே வந்திடுங்க, நான் கண்டுபிடிச்சா நாளைக்கு பால்தான்!" என்று குரல் கொடுத்தான்.

கீழே விழுந்த பொருளை எடுத்து மறுபடியும் மடியில் கட்டிக் கொண்டு மறைந்து கொண்டான் சந்துரு. எந்த சத்தமும் இல்லாததால் காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

விளக்கைப் போட்டு "என்னாச்சு கோபால்" என்று குரல் கொடுத்தார். (அந்த வீட்டு முதலாளி சாரங்கன்! இவர் உளவுத்துறை அமைச்சர்! அதனால் அவர்கள் வீட்டில் எந்த நேரமும் காவலுக்கு குறைச்சல் இருக்காது)

"ஒன்றும் இல்லை எசமான்! மரத்திலுள்ள கிளைகள் அசைந்த சத்தம்னு நினைக்கின்றேன். ஏதோ சத்தம் கேட்டுது அப்புறம் யாரும் இல்லை"

"போலீஸ் என்ன செய்யுது?"

"இப்போதான் டீ குடிக்கப் போனாங்க எசமான்"

"சரி உஷாரா இரு. ஏன் பிங்கி கத்திகிட்டு இருக்கு?"

"தெரியலை எசமான்! பசியா இருக்கும்னு நினைக்கிறேன்"

"உள்ளே வா பிஸ்கட் தரேன் பிங்கிக்கு கொடு நீ சாப்பிட்டுடாதே"

"இல்லைங்க எசமான்! நான் அப்படி எல்லாம் சாப்பிடமாட்டேன்!"

என்ன செய்யலாம்னு யோசித்த சந்துரு எப்படியும் இந்த முறை தவறு செய்யாமல் மரம் ஏறி மாடியை அடைந்து விட வேண்டும். அவங்க அப்பாவின் ரூம் தெரிந்து விட்டது. அவனின் அறையும் பக்கத்துலே தான் இருக்கணும் என்று ஒரு முடிவிற்கு வந்தவன் மெதுவாக மரத்தை தொட்டு கும்பிட்டான்.

"மரம் மாமா! மரம் மாமா! நான் உன்னை ஒரு மரமா நினைக்கலை. இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்லும் படகு போல் நினைத்துக் கொள்கின்றேன். தயவுசெய்து எந்த தடங்கலும் வராமல் என்னை அக்கரைக்கு கொண்டு சேர்த்து விடு மரம் மாமா" என்று மரத்திடம் கெஞ்சிக் கேட்டு கொண்டபிறகு மெதுவாக ஏற ஆரம்பித்தான்.


பிஸ்கட் போட்ட பிறகும் பிங்கி கத்துவதை நிறுத்தவில்லை. பிங்கியின் சத்தம் சற்றே வேகமாக வந்துகொண்டிருந்தது. குறிப்பா அண்ணாந்து பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது. டீ குடிக்கச் சென்ற போலீஸ் இருவரும் காவலாளி அருகே வந்தனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியலை.

"ஏன் கத்துது?" என்று ஒரு போலீஸ் காவலாளியிடம் கேட்டார்.

"அதான் சார் எனக்கும் புரியலை. இது ரொம்ப நேரமா கத்திகிட்டே இருக்கு. இது கத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தேன். யாரும் அங்கே இல்லை. அதுலே இருந்து பிங்கி கத்திகிட்டே இருக்கு. மொதலாளி பிஸ்கட் கூட கொடுக்க சொன்னாரு. பிங்கி அதை தொடவே இல்லை. கத்திகிட்டே இருக்கு" என்று மூச்சு விடாமல் விளக்கினார் காவலாளி.

"சரி, என் கூட வா! எங்கே சத்தம் கேட்டது? வரதா! அந்த டார்ச் எடுத்து வா" என்று இரெண்டாவது போலீசுக்கு கட்டளை போட்ட முதல் போலீசு இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.

"இந்த இடத்துலேதான் சார் சத்தம் கேட்டிச்சு"

"இங்கே ஒண்ணுமே இல்லையே?" நிமிர்ந்து மரத்தைப் பார்த்தார். "இங்கே யாரும் இல்லையே? ஏன் பிங்கி விடாமல் கத்துது?"

"மருது, பிங்கி கத்தறதை பார்த்தா, யாரோ திருடன் உள்ளே புகுந்த மாதிரி சந்தேகமா இருக்கு. நீ எங்கேடா போனே? நாங்க டீ குடிச்சிட்டு வர்றவரை ஒழுங்கா இங்கேயே நிக்கனம்னுதானே சொல்லிட்டுப் போனோம். அறிவு இருக்கா உனக்கு? நாங்க அந்த பக்கம் போன உடனே நீ இந்த பக்கமா நழுவிட்டியா?"

"இல்லே சார் நான் இங்கேதான் இருக்கேன், நீங்க வேணா மொதலாளிகிட்டே கேட்டுப் பாருங்க" என்று அழமாட்ட குறையா சொன்னான் காவலாளி.

மறுபடியும் சத்தம் கேட்டு வெளியே வந்த அமைச்சர். "பிங்கி, சட் அப்! என்ன சத்தம் அங்கே?" என்று உரத்த குரலில் கேட்டாரு. பிங்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தது.

"என்னாங்கடா காவல் காக்கறீங்க! எவனோ உள்ளே பூந்திருக்கான். இல்லேன்னா பிங்கி இப்படி கத்தாது. மொதல்லே பூந்தவன் யாருன்னு தேடுங்க" என்று உரத்த குரலில் கூறினார் அமைச்சர்.

மரம் ஏறி ஒளிந்து கொண்டிருந்த சந்துருவிற்கு சப்த நாடியும் ஓடிங்கிப் போய்டிச்சு. அய்யய்யோ இப்படி வந்து சிக்கிட்டோமே. மாட்டிக்குவோம் போல இருக்கே!எப்படி அவனைப் பார்ப்பது! எனது இந்த எண்ணம் சாத்தியமா? என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கும்போதே சந்துருவின் மனதில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

"பிங்கியை அவுத்து விடுங்க, உங்களாலே என்ன செய்ய முடியும்? நேரத்துக்கு நல்லா சாப்பிடனும்! காவல் காக்காம டீ ரொம்ப முக்கியமா போச்சு இல்லே? விடியட்டும், உங்க ரெண்டுபேரையும் வேலையை விட்டே தூக்குறேன்." கோவத்தில் வார்த்தைகள் தடுமாற இறங்கி வந்த அமைச்சர் தானே பிங்கியை அவிழ்த்து விட்டார்.

பிங்கி வேகமாக மாடியை நோக்கிப் பாய்ந்தது. மாடி ஏறிய வேகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சந்துருவின் சட்டையை பிடித்து இழுத்தது. பின்னாடியே ஓடி வந்த போலீஸ், காவலாளி மற்றும் அமைச்சர் அனைவரும் அதிர்ந்து விட்டனர். அங்கே ஒரு பதினோரு வயது ஒத்த பையன் பயந்த முகத்துடன் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அமைச்சருக்கு கோபம் வந்துவிட்டது, "யார்ரா நீ" என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் ஒரு போலீஸ்காரர் ஓங்கி அந்த பையனின் கன்னத்தில் அறைந்தார். அறைந்த வேகத்தில் அந்த பையன் கொஞ்ச தூரத்தில் போய் சுருண்டு கீழே விழுந்தான்.

"எழுந்திரிடா எங்கே வந்தே" யார் நீ" என்று அமைச்சர் முடிப்பதற்குள் போலீசின் அடுத்த அடி அச்சிறுவனின் மீது விழுந்தது.

"இந்தாப்பா வெவரம் கேளு சும்மா அடிக்காதே. அடிச்சின்னா சரியாப் போயிடுமா?" என்றார் அமைச்சர்.

அடிச்ச அடியில் சந்துரு மடியில் கட்டிக் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் கீழே சிதறிப் போயின.

"என்னடா அது?" என்று போலீஸ் மறுபடியும் மிரட்டியது.

சத்தம் கேட்டு கல்யாண் வெளியே வந்தான். "என்ன டாடி, இங்கே ஒரே சத்தமா இருக்கு? யாரு வந்திருக்காங்க? அம்மா எங்கேப்பா? எனக்கு ஒரே பயமா இருக்கு! இது யாரு? "என்று கூறியபடி அந்த சிறுவனின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

"ஹேய்! சந்துரு நீ எங்கேடா இங்கே? உன்னை ஏன் போட்டு அடிக்கறாங்க!" என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் கல்யாண்.

"என்ன உனக்கு இவனை ஏற்கனவே தெரியுமா?"

"தெரியும் டாடி, இவன் எங்க பள்ளியில்தான் படிக்கறான். என்னோட கிளாஸ்தான் ரொம்ப நல்ல பையன். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா! பாவம் சந்துரு, அவனை அடிக்காதீங்கப்பா. சந்துரு ஒரு தப்பும் கண்டிப்பா பண்ண மாட்டான். ரொம்ப நல்லவன்பா" என்று கெஞ்சிய கல்யாண் தந்தையின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

"சரி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வா" என்று உள்ளே போனார் அமைச்சர்

"டேய் வாடா உள்ளே " என்று அழைத்த கல்யாண் அதிர்ந்து போனான். "என்ன சந்துரு கையிலே? எங்கே காட்டு" அதற்குள் அப்பாவின் குரல் வந்தவுடன் உள்ளே வேகமாக நண்பனின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் கல்யாண்.

"என்ன சத்தம் எல்லாரும் தூங்காமல் இங்கே என்ன செய்யறீங்க?" என்று கேட்ட கல்யாணோட அம்மா, ஒரு பையன் நிற்பதை அப்போதுதான் கவனித்தார்கள். "யாரு இந்த பையன்"

"என்னோட நண்பன் மம்மி"

"அது இருக்கட்டும் இந்த நேரத்தில் அவனுக்கு இங்கே என்ன வேலை? அவங்க வீட்டிலே தேடமாட்டாங்களா?"

"இல்லீங்கம்மா, எங்க அம்மாகிட்டே சொல்லிட்டுதான் வந்தேன்" இப்போதுதான் சந்துரு திருவாய் மலர்ந்தான்.

"என்ன சொல்லிட்டு வந்தியா? எதுக்கு இந்த இருட்டிலே மரம் ஏறி வந்தே?"

"இல்லே சார் இன்னைக்கு கல்யாணுக்கு பிறந்தநாள் இல்லையா? அதனால் முதல் கேக்கும், முதல் வாழ்த்தும் என்னோடதா இருக்கனும்னுதான் வந்தேன். ரெண்டு வருடமாக எப்படியாவது மொதல் ஆளா சொல்லனும்னு முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. கல்யாண் ரொம்ப பாதுகாப்பா இருக்கறதுனாலே என்னால் அவனுக்கு முதல் கேக் கொடுக்க முடிய வில்லை. நாங்க எல்லாம் ரொம்ப ஏழைங்க. உங்க வீட்டுலே எல்லாம் சேர்க்க மாட்டீங்கன்னு நினைச்சிதான், இப்படி தப்பிதமா முயற்சி பண்ணி உங்க வீட்டுக்குள்ளே வந்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார். போலீஸ் கிட்டே பிடிச்சி கொடுத்துடாதீங்க. நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன், ஒரு தங்கச்சிதான் இருக்கு. எங்க அம்மாவுக்கு யாருமே இல்லைங்க சார்" என்று அழ ஆரம்பித்தான் சந்துரு.

"மனம் நெகிழ்ந்த அந்த தாய், அவனை அருகே அழைத்து கன்னத்தில் தட்டி கொடுத்து, சரி உன் நண்பனுக்கு இப்பவே பிறந்த நாள் கொண்டாடுவோமா?" என்று அன்புடன் கேட்டார்கள்.

ஆர்வத்துடன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான் கல்யாண்.

"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ மணி பன்னிரண்டு தாண்டிடுச்சு. பரவா இல்லே, சந்தோஷமா சந்துரு?" என்று அன்பாக சந்துருவைப் பார்த்தார்.

"ரமா நீ போய் கல்யாண் போடாத டிரஸ் இருந்தால் ரெண்டு எடுத்து வா! சந்துரு நீ போய் கை கால்கள் கழுவிக் கொண்டுவா"

இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு. நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிறிய விழா ஆரம்பித்து முடிந்தும் விட்டது. அவனிடம் மிகவும் பரிவாக நடந்து கொண்ட கல்யாணின் பெற்றோர்களை மிகவும் வியப்புடனும் பெருமையுடனும் பார்த்தான் சந்துரு. நாம் எவ்வளவு தவறாக இவர்களை நினைத்து விட்டோம். மறுபடியும் இருவருடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

"ஏண்டா கேக் மட்டும் எடுத்து வரக்கூடாதா? கத்தி கூடவா எடுத்து வருவே? எங்கேயாவது குத்தி இருந்தா என்னடா செய்வே? இதுபோல் என்றுமே செய்யாதே. இனிமேல் என்னோட பிறந்த நாளுக்கு முன் தினமே எங்க வீட்டுக்கு வந்திடு" என்று மிகவும் முதிர்ச்சியான தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான் கல்யாண்.

இப்படி ஒரு குழந்தையை ஈன்று எடுத்ததிற்கு மிகவும் பெருமை அடைந்த அந்த பெற்றோர்கள் அதே சமயத்தில் சந்துருவின் நட்பையும் அன்பையும் சரிவிகத்தில் புரிந்து கொண்டனர்.

காவலாளியை அனுப்பி சந்துருவை அவங்க வீட்டில் விடச் சொன்னதோடு அல்லாமல், அடுத்த நாள் நடக்கப் போகும் கல்யாணின் பிறந்தநாள் விருந்திலும் சந்துருவின் வீட்டில் அனைவரையும் கலந்து கொள்ளச் சொல்லி அன்பு வேண்டுகோள் விடுத்து அச்சிறுவனை அனுப்பி வைத்தார்கள்.





Monday, June 22, 2009

சிகரம் தொட்ட காதல்!!




"ஏண்டா சரவணா, ஒரு மாதிரி இருக்கே? மேனேஜர்கிட்டே நீ திட்டு வாங்கி இன்னைக்கிதான் பார்த்தேன். என்ன பிரச்சனை? மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு மருகாதே. வெளியே சொன்னா மனப்பாரம் குறையும்." என்றான் சரவணின் நண்பன் நந்து.


"மனசே சரி இல்லைடா. பழைய நினைவுகளின் அதிர்வுகள் மனசோட ஓட்டத்தை நிறுத்திடுச்சுடா. வேலையிலே கவனம் செலுத்த முடியலை. அதான் லீவு போட்டு போயிடலாமான்னு யோசிக்கிறேன்."

"என்னாச்சு?"

"அவள் என்னைவிட்டு போய் வருஷம் மூணு ஆச்சுடா"




"உன்னோட தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிடுவதாக நினைக்காதேடா, அப்படி என்ன உன் வாழ்க்கையில் நடந்தது? என்மீது நம்பிக்கை இருந்தா உன் கவலைகளை என்னிடம் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம் சரவணா"

"நீ என்னோட நண்பன்டா! உங்கிட்டே பகிர்ந்துகரதுலே தப்பே இல்லை! இருந்தாலும் என் கஷ்டம் என்னோட போகட்டும்னுதான்....."


"என் தேவதை என்னோட கல்லூரிதான். எனக்கு ஒரு வருடம் ஜூனியர். கல்லூரி விழாவில் பாடினாங்க. பாட்டு மட்டும் அசத்தல் இல்லே; அவங்களும் அசத்தல் ரகம்தான். அறிமுகப் படுத்தியது என்தோழி. அவளிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு மெல்லிய புன்சிரிப்பு. அவளின் அமைதியான முகம் அன்றலர்ந்த தாமரைபோல் இருந்தது. அன்றே என் மனதிற்குள் அவளின் நினைவுகள் சாமரம் வீசத் தொடங்கிவிட்டன. அதற்குப்பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பும், பேசும் சூழ்நிலையும் அமையவில்லை. என்னோட கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. அவளின் பசுமையான நினைவுகளை ஆனந்தமாகச் சுமந்தேன் என்றுதான் கூற வேண்டும்."


"என்ன ஆச்சர்யம் பாரு! எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனது அலுவலகத்திற்கே வேலைக்கு வந்தாள். அங்கே நான் அவளுக்கு சீனியர். ஆதலால் வேலைகள் அனைத்தும் சொல்லித்தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. நெருக்கத்தின் விளைவு இருவருள்ளும் ஏற்பட்ட ரசாயன மாற்றம் இருவராலும் கண்டு கொள்ளப்பட்டது. விளைவு? பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். எல்லாமாகிப் போன என் தேவதை என்றோ என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஷயம் எனக்கு மட்டும்தானே தெரியும்!"

"அலுவலக வேலைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவா இருந்திருக்கின்றோம். அலுவலக வேலை தவிர எங்கேயும் வெளியே போகமாட்டோம். வேலை அதிகமானால் சில நாட்கள் இரவு நேரமாகிவிடும். அந்த சமயம் அலுவலகத்தில் அவளுக்காக காத்திருந்து இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு கிளம்புவோம். எங்கள் காதல் எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். அலுவலகத்தில் பாகுபாடின்றி அனைவருக்கு உதவிகள் செய்வேன். ஷாலினிக்கு செய்த உதவிகளும் அதே கோணத்தில்தான் பார்க்கப்பட்டன.. "
"அப்படித்தான் ஒரு நாள்.." சரவணனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டார்கள். ஷாலினி அவசரமாக மின்னஞ்சல் தயார் செய்து கொண்டிருந்தாள். நாளைய வேலையின் ஆரம்பம்தான் இந்த அவசரமான மின்னஞ்சல். சரவணன் வேலைகள் முடிந்ததால் அவள் அருகே வந்தமர்ந்து சில மாற்றங்களை கூறிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக வேலை முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் இருவரும் கிளம்பினார்கள்.


"ஏன் ஷாலு, ரொம்ப சோர்வா இருக்கே ?"

"தலை வலிக்குதுங்க "

"வா, பக்கத்திலே இருக்கிற ஹோட்டல்ல காபி குடிச்சிட்டு உன்னை ஆட்டோலே ட்ராப் பண்றேன்."


"வேண்டாம், யாராவது பாத்துடுவாங்க. நம் விஷயத்தை நல்ல முறையில் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கணும். வேறு யாராவது பார்த்து அப்பாகிட்டே சொல்லி காரியம் கெட்டுடக்கூடாது."

"பரவா இல்லே வா. தலைவலிக்குதுன்னு சொல்றே. அப்படியே உன்னை விட்டுட்டு போகச் சொல்றியா?"

"சரி, வாங்க போலாம் ஆனா சீக்கிரம் கிளம்பிடனும். ஐயோ! எங்க அண்ணன்"

"எங்கே?"


"ஐயோ என்னை பாத்துட்டானே! கிட்டே வரான்"

"ஷாலினி இங்கே எதுக்கு வந்தே? இது யாரு?"

"இல்லே இவரு எங்க ஆபீஸ்.. எனக்கு தலை வலிக்குதுன்னு காபி குடிக்க வந்தோம்" என்று தடுமாறினாள் ஷாலினி

"சரி குடிச்சுட்டு வா. வீட்டுக்கு போலாம்"

"தலை வலிக்குதுன்னு சொன்னாங்க ஷாலினி. காபி குடிக்கலாம்னு வந்தோம் ...."

"நான் அவினாஷ். ஷாலினியோட அண்ணன். பரவாயில்லை வாங்க சேர்ந்தே காபி குடிக்கலாம்" என்று மிகவும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான் அவினாஷ்.

"நான் சரவணன்! நன்றி உங்களோட புரிதலுக்கு"

காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.


"அடுத்தநாளும், அதற்கடுத்தநாளும் ஷாலினி அலுவலகம் வரவில்லை. எனக்கு ரொம்ப பயமா போய்டுச்சு. ஆனா, அன்று மாலை அவினாஷ் வந்தான். அவங்க அப்பா என்னை பார்க்கனும்னு அழைத்து வரசொன்னதாகச் சொன்னான். நானும் பார்க்கச் சென்றேன். எனது தேவதை என்னை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தாள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். என்ன என்று கேட்டேன். சரியாக பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்."

சில நிமிடங்களில் காபியும் பிஸ்கட்டும் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஷாலினியின் அப்பா வந்தார். மரியாதை நிமித்தம் எழுந்து நின்றேன்.

"உக்காருப்பா காபி சாப்பிடு! ஷாலினி நீயும் இப்படி வந்து உக்காரு."

"பரவா இல்லை சார், நான் இப்போதான் அலுவலகத்திலே குடிச்சிட்டு வந்தேன்"

"இங்கே பாருப்பா சரவணா! என்பொண்ணு எல்லா விவரத்தையும் என்கிட்டே சொல்லிட்டா.."

"இல்லேங்க சார்! என்னோட பெற்றோர்களை அழைத்து வந்து பெண் கேட்க வேண்டும்" என்று முடிக்கு முன்னே..


"அதெல்லாம் இருக்கட்டும், என்னோட சூழ்நிலையை உனக்கு சொல்லிடறேன். ஷாலினி அழகான, அடக்கமான பொண்ணு. பாக்கறவங்களுக்கு அவளை ரொம்பப் பிடிச்சிடும் அதெல்லாம் உணமைதான். இப்போது அவளுக்குத் திருமணம் செய்வதாக இல்லை."


"உங்களோட காதல் தவறுன்னு சொல்லலை. உன்னுடன் கூடிய ஷாலியின் நட்பை குறித்து உங்கள் அலுவலகத்திலே விசாரித்தேன். எல்லாரும் உங்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் கூறினார்கள். கண்ணியமாகத்தான் உங்கள் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றது."


"சரவணா! உங்க வீட்டிலேயும் காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டங்காளாமே? உங்க தாய்மாமன் கூறி இருக்கிறாரு . உங்க ஊரிலே எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.உங்கள் குடும்பம் குறித்து விசாரித்ததில் இந்த வெவரம் தெரிஞ்சுது. காதலுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் மூன்று பெண்களைப் பெற்ற மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண தந்தையாகப் பேசுகிறேன். நான் எந்த முடிவெடுத்தாலும் எனது சமூகத்திற்குக் கட்டுப்பட்டுதான் எடுப்பேன்."
"சார்..."

"இரு சரவணா நான் இன்னும் பேசி முடிக்கலை, இருமனமும் ஒத்துப் போனால் மட்டும் நிறைவான வாழ்வைத்தராது... அனைவரின் சந்தோஷத்திலும் மலர்வதுதான் வாழ்க்கை"


"இருவர் குடும்பத்திலும் சம்மதிக்கலைன்னா என்ன செய்ய போறீங்க? ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? அப்படி செய்தால் தாயில்லாம வளர்ந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு ஷாலினியை எல்லாரும் தவறாகப் பேசுவாங்களே அதை யோசிச்சீங்களா? மூத்தவள் எப்படி இருக்கிறாளோ அதை வைத்துதான் அவ தங்கச்சிங்களையும் எடை போடுவாங்க அதுவும் உண்மைதானே?" என்று மூச்சு விடாமல் பேசி நிறுத்தினார் நாராயணன். (ஷாலினியின் தந்தை) .

"உங்க நிலைமை எனக்கு புரியுது சார், எனது பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது எனது பொறுப்பு. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க "


"அது இல்லைப்பா அவங்க சம்மதித்தாலும் நான் சம்மதிக்க முடியாதே! எங்க சமூகத்தினர் இந்த திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். அடுத்து எனது ரெண்டு பெண்களின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கு. சூழ்நிலையை நீயே கொஞ்சம் யோசி."


"அதே போல் யாரும் ஒத்துக் கொள்ளாமல் திருமணம் செய்து செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பில்லை. இரு தரப்பு பெற்றோர்களும் ஒதுக்குவார்கள், இரு தரப்பு உறவினர்களும் ஏற்றுக் கொள்வது கடினம். தேவைகள் எந்த ரூபத்திலும் வரலாம். நண்பர்கள் எவ்வளவு நாட்கள்தான் உங்களுக்கு உதவுவார்கள். "திருமணப்பதிவு
அலுவலகம்"
வரை வருவாங்க. அப்புறம் ஒரு ரெண்டு நாட்கள் வரலாம். அதுக்கு மேல் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போய்டுவாங்க. இதுதான் நிதர்சனம்."

"பணக்கஷ்டம்! கடன் வாங்கி சமாளிக்கலாம். மனகஷ்டம்! எப்படி தீர்க்க முடியும் சரவணா? இருவருகுள்ளே இருக்கும் குற்ற உணர்வு.அதுதான் நமது மனசாட்சி அதற்கு வேஷம் கட்ட தெரியாது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்குமே! அதை ஜெயிக்க முடியுமா உங்களால்? உறவினர்களின் பிரிவை அப்பட்டமாக வெளிப்படுத்தும். எவ்வளவு நாட்கள் தனிமையில் போராடுவீர்கள்.?"



"சிக்கல்கள் இல்லாதவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்குள் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தால் யார் தீர்த்து வைப்பார்கள்? சட்டமா? ஒரே கோணத்தில் இருந்துகொண்டு வாழ்க்கையை சித்தரிக்கக்கூடாது. நான் பேசுவது எதிர் மறையாகத்தான் உங்கள் இருவருக்கும் இப்போது தெரியும். அதனால் என் மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் கூறுவது அவ்வளவும் நிதர்சனம்."


"இன்றைய சந்தோஷம் மட்டும் நினைவில் கொண்டு நீங்கள் காரியம் மேற்கொண்டால், நாளைய சந்தோசம் யார் கையில் என்று சிறிதேனும் யோசித்தீர்களா? நீயாவது சொல்லும்மா! ஏன் பேசாமல் இருக்கிறாய்? "அழ அழ சொல்வார் தன மனுஷா சிரிக்க சிரிக்கச் சொல்லுவார் பிறர் மனுஷா" அப்படீன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இதன் முழு விளக்கம் புரியுதா? நான் கூறுவதில் ஏதேனும் நியாயம் இருப்பது போல் இருவரும் உணர்ந்தீர்களேயானால் சரியான முறையில் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாங்க."

"நீங்க சம்மதிச்சீங்கன்னா சரவணன் அவங்க பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிடுவாருப்பா ப்ளீஸ்பா"


"ப்ளீஸ் போட்டு வாழ்க்கையை ஆரம்பிக்ககூடாதும்மா. அவர்கள் சம்மதித்தாலும் நானும், நமது உறவினர்களும் சம்மதிக்க மாட்டோம். இருவரும் யோசிச்சு முடிவெடுங்க. ஷாலினி சரவணனை சாப்பிடச் சொல்லி அனுப்பும்மா. நான் கடை வரை போயிட்டு வரேன். வரேன் சரவணா!"

அமைதியை விழுங்கிய நாங்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து அமர்ந்திருந்தோம்.

"ஷாலினி கிளம்பறேன் "

"இப்போ என்ன பண்ணறது சரண், எங்க அப்பா இப்படி சொல்லிட்டாரே?"


"உங்க அப்பா அவரோட கவுரவமும், சமுதாயமும்தான் முக்கியம்னு தெளிவா சொல்லிட்டாரு. அடுத்து திருமணமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்காது. நாம ஓடிபோய் அவமானப்பட வேண்டாம். நாம் இருவரும் சந்திக்கவே இல்லைன்னு நினைச்சுக்குவோம்.

"உங்களாலே முடியுமா சரண்"


"முடியனும் ஷாலினி! நான் கிளம்பறேன்" முத்துக்களாக உருண்டு ஓடி வந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் மறைத்த அதே நேரத்தில் ஷாலினியும் விம்மிக்கொண்டு உள்ளே ஓடுவதும் சரவணனுக்கு தெரிந்தது.

"அதற்குப்பின் அவளை நான் சந்திக்கவில்லை" இந்த ஊருக்கு வந்துட்டேன் என்று பெருமூச்சு விட்டான் சரவணன்.

"சரவணா என்ன சொல்றதுன்னே தெரியலைடா..! ஆனா உங்க காதல் சிகரத்தைத் தொட்ட காதல்தாண்டா!"

('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)