தனக்குத்தானே சட்டம் வகித்துக் கொள்ளுதல், என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த "தேவதையின் வரங்கள்" என்ற இடுகையை வெளியிட துணிந்து விட்டேன்.
சமீப காலமாக வலையுலகில் தொடர் பதிவுகள் அனைவரையும் கலக்க வைத்தது - கேள்வி பதில்கள், தேவதையின் வருகை.. இதில் "தேவதையின் வரங்கள்" என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால், அந்த தலைப்பில் நானே என்னை எழுத அழைத்து இதோ எழுதவும் ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் உங்களுக்கு புரியும் (இப்படி குழப்பினா எப்படி புரியும், புரியாம எழுதறது அப்புறம் இப்படி ஒரு பிட்டை போடறது). நான் விளக்க தேவை இல்லை (அட இங்கே பாருய்யா! இந்த மாதிரி தொல்லைகள் வேறே! இப்படி நீங்க சொல்றது என் காதுலே விழுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுத்துக்கோங்க) .
சரி என்ன நடக்குதுன்னு இப்போ பார்க்கலாம்!
தேவதை என் முன்னே வந்தாச்சு! என்னுடைய அழைப்பை ஏற்று ரெண்டு தேவதைகள் வந்து விட்டார்கள். ஒரு தேவதை அமைதி, ஒரு தேவதை கொஞ்சம் லேசா குறும்பு அதிகம்.
தேவதையிடம் எவ்வளவு வரம் என்றெல்லாம் விதி முறைகள் வகுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்படும் தேவைகள் நிறைவடையும் வரை கேக்கலாமே! நீங்க என்ன சொல்லவரீங்க? சரிதானே நண்பர்களே!
பாருங்க ரெண்டு தேவதையும் எப்படி ஜொலிக்கராங்கன்னு!!
இவங்கதான் சாதுவான தேவதை
இவங்கதான் குறும்பான தேவதை
வரம் நம்பர் ஒன்று
சிக்கன் குனியா, தக்காளி குனியா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் ஒருவரையும் தாக்கக் கூடாது. மேலும் குழந்தைகளை டச் பண்ணவே கூடாது. மீறி இந்த நோய் பரவ வேண்டும் என்று விதி இருந்தால், அதை நீயே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வரம் நம்பெர் இரெண்டு
பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். வரம் நம்பர் மூன்று
சினிமாவில் வக்கிரமான மற்றும் வைலன்ட் காட்சிகளை திரையிடும் போது நீதான் அவற்றை நைசாக அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும். ப்ரிவியுவில் காட்சியை பார்க்கும் போது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் காணமல் போன காட்சிகள் தேடினாலும் கிடைக்கக் கூடாது.
வரம் நம்பர் நான்கு
அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.
வரம் நம்பர் ஐந்து
எனது நண்பர்கள்(நண்பிகள் அல்ல) அனைவரையும் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டு பத்திரமாக அவர்கள் இருப்பிடம் சேர்க்க வேண்டும். இந்த வரத்தையும் தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும்.
வரம் நம்பர் ஆறு
நண்பர் குடுகுடுப்பையார் என்னை அவரது ஸ்பெஷல் வலைப்பதிவான "வருங்கால முதல்வர்" என்ற வலைப்பதிவில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். அந்த தலைப்பை எழுதும் போது இந்த ஆசை எனது மனதினுள்ளே தோன்றியது, என்னுடை வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.
வரம் நம்பர் ஏழு
சுனாமி, நிலநடுக்கம் இது போல் பேரழிவைத் தரும் இயற்கை சீற்றங்கள் அறவே இருக்கக் கூடாது.
வரம் நம்பர் எட்டு
நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.
வரம் நம்பர் ஒன்பது
அப்புறம், தேவதைகளே!! நீங்கள் இருவரும் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. நான் நினைக்கும் போதெல்லாம் நான் தேவதையாக மாறி கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் தர வேண்டும்.
வரம் நம்பர் பத்து
நானும் எனது தோழிகள் ஐந்து பேரும் நினைக்கும் போதெல்லாம் இன்விசிபிள் ஆகவேண்டும். அப்படி ஆகி எல்லா சினிமா தியேட்டரிலும் நைசா போயி சினிமா பார்க்கணும். பிடித்த காட்ச்சிகளில் தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து மகிழ வேண்டும். யாருமே சிரிக்காத போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். ஹோட்டல்லே போயி வேண்டியதை எடுத்து சாப்பிடனும். அதான் நாங்க யாருக்கும் தெரிய மாட்டோமே!
வரம் நம்பர் பதினொன்று
பேய்ன்னு ஒன்னு இருந்திச்சுன்னா அது என்னைய பார்த்து பயப்படனும்
வரம் நம்பர் பனிரெண்டு
இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது
வரம் நம்பர் பதிமூன்று
கடலுக்கு அடியில் போயி எல்லாவற்றையும் ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணும். ஆனா மூச்சு முட்டக் கூடாது. பவளப் பாறை மேலே எல்லாம் ஏறி ஒக்காந்துக்கணும்.
வரம் நம்பர் பதினான்கு
வானத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை லேசா தொட்டு பார்த்து முடிந்தால் கையோட எடுத்திகிட்டு வந்துடனும்.
வரம் நம்பர் பதினைந்து
ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும்.
எனது கோரிக்கைகளை கேட்டு தேவதைகள் ஓடி போயிடப் போறாங்க!
அதனாலே இப்போதைக்கு இவ்வளவு போதும்........