Monday, June 21, 2010

பெருமாளும், பருப்பு போளியும்!!!

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மயிலு விஜி உங்களுக்கு நன்றி !!


ஏதோ பருப்பு, போளி தராங்கன்னு ஓடி வந்தா தாரிணியை தாக்கி, ரம்யாவை தாக்கி, சின்ன அம்மிணியை தாக்கி ம்ம்ம்.. இந்த விஜிக்கு ஓவர் குறும்பு.

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த விஜி உங்களுக்கு தைரியம் அதிகம்தான், எப்படியும் நான் ஒரு அதிர்ச்சி (தாமதமா எழுதுவேன்) தருவேன் என்றும் தெரிந்தும் இப்படியா!

யாரையாவது கலாய்க்க சொன்னா ரொம்ப சந்தோஷமா கலாயிக்கலாம்!! ஆனா சூப்பர் தொடருக்கு அழைத்து என்னை சாச்சிட்டியேம்மா:)

எல்லாரும் என்ன பண்ணீங்க எழுதிட்டீங்களா? கடை தொரக்கலின்னா ஆளையே மறந்துடராங்கப்பா!!

என்னை தொடருக்கு அழைச்சிட்டு என்னிடம் சொல்லாதவங்களோட நான் கா விட்டுக்குறேன், நான்தான் உலக மகா ஆணியிலே மாட்டிகிட்டு முழிக்கிறேன், ஒரு மெயில் அனுப்பலாம்னு யோசிச்சீங்களா? போங்கப்பா....:)) சரி சரி நோ டென்ஷன்...

இப்போ மெயின் டாப்பிக்கு வருவோம்!

நல்ல தலைப்பு உணர்வுகளோடு ஒன்றி போய் எழுதக் கூடிய தலைப்பு இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.(இதுதான் கேள்வியும் நானே பதிலும் நானே என்பது :-)).

சிறு வயதில் எங்க வீட்டுக்கு அருகே கோவில். அதனால் என்னோட தின வாசஸ்தலமும் அந்த கோவில்தான். படிக்கிறது, விளையாடறது எல்லாமே அந்த கோவிலில்தான் (சின்னப் புள்ளைதானே சாமி மன்னிச்சிடுவாங்க). நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கேதான் இருப்பேன், கண்களுக்குத் தெரியாத அரூவமான உருவமாய் எங்குமே நீக்கமற நிறைந்திருக்கும் நான் நம்பும் எனது தந்தையும் தாயுமாகிய சமயபுர அம்மாவைப் பற்றி இங்கே கூற எனக்கு ஒன்றும் தயக்கமோ ஆட்சேபனையோ இல்லை. கடவுள் இல்லை என்று கூறிவிட்டு ஒதுங்க நான் தயாராக இல்லை. மேடை ஏறி சொல்ல என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் எவ்வளவு வேணும்னாலும் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதிலும் எந்த சங்கடமும் இல்லை. இந்த உணர்வுகள் என் உணர்வுகளோடு கலந்தவை. நான் உணரும் அளவிற்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியாது. ஆனாலும் ஓரளவிற்கு சுமாரா எழுதமுடியும்ன்னு நம்பி எழுத ஆரம்பித்து விட்டேன்.

தவறுகள் செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று கூறி யாரும் என்னை வளர்க்கவில்லை. நல்ல எண்ணங்களுடனும், அன்புடனும் நடந்து கொண்டால் அதுவே உன்னை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் என்ற அறிவுரையுடன்தான் நான் வளர்ந்தேன்.

மார்கழி குளிரில் அதிகாலையில் ரெண்டு மணிக்கே எழுந்து குளித்து, அந்த நடுக்கத்துடனேயே கோவிலுக்குச் சென்று சுப்ரபாதம் பாடிய நாட்கள் இன்றும், என்றும் என் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் பசுமையான நினைவுகள்! அந்த நினைவுகள் இன்று நினைத்து பார்த்தாலும் ஆனந்தப்பட வைக்கும் நினைவலைகள்!! என நெஞ்சுக் கூட்டுக்குள்ளே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள இனிமையான நினைவுகள்!!

காலைப்பொழுதில் வாட்டி எடுத்த பனி அரக்கன் கதிரவனின் கதகதப்பில் சற்றே சென்று ஒளிந்து கொண்டாலும் குளிரின் கடுமைதான் குறையுமே தவிர குளிர் குறையாது. அந்த மாலைப் பொழுதில் அந்தக் கோவிலில் செய்யும் பூஜைகள் அபாரமா இருக்கும்!

இப்படியே படிப்பு, பாட்டிக்கு உதவிகள், மற்ற நேரத்தில் கோவில்தான் எனது இருப்பிடம். பேசிக்கொண்டு இருப்பது அங்கே இருக்கின்ற சுவாமி விக்கிரகத்திடந்தான். எனக்கு இருக்கும் ஒரே தோழி அந்த கடவுள்தான்.

இது படிப்போருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை தான் கூறுகிறேன்.கடவுள் இருக்கு என சொல்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் இருக்கு. இல்லை என்பவர்களுக்கும் கண்டிப்பாக கடவுள் இருக்கு. அவங்கதான் எங்கேயோ ஒளியாக திகழ்கின்ற உருவமில்லாத அருவமான உருவம். அண்ட சராசரத்தில் இருக்கும் ஒவ்வொரு துகள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் நம்மை செம்மை படுத்துவதோடல்லாமல் நல்வழி படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்று யாரும் சும்மா சொல்லிவிடுவதில்லை, அப்படி கூற அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கலாம். அதே கடவுள் இருக்கின்றது என்று கூறுவதற்கு என்னிடம் இருக்கும் ஆதாரம் நிமிர்ந்து நிற்கும் நான்தான்!!! இதை தவிர என்னிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை. உன்னோட உழைப்பினால் நீ உயர்ந்தாய் இதற்கு எதற்கு கடவுள் பெயரை கூறுகிறாய் என்று கேட்கலாம், அருமையான கேள்வி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் இந்த வாழ்க்கையை அடைய எனது உழைப்பும் மட்டும் காரணம் இல்லை என்று அடித்துக் கூறவும் முடியும்.

உங்கள் முன் சிரித்துக் கொண்டு வலம் வரும் இந்த ரம்யா சந்தித்த வேதனைகள்தான் எவ்வளவு?இந்த முன்னேற்றம் காண இடையில் ஏற்பட்ட தடங்கல்கல்தான் எவ்வளவு? ஏமாற்றங்கள்தான் எவ்வளவு? அவமானங்கள்தான் எவ்வளவு? எதுவுமே எண்ணிலடங்கா! கணக்கிலடங்கா! அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்ட நான், எழ முடியாமல் முடக்கப்பட்ட நான்,எப்படி சாதரணமாக நடமாட முடிந்தது? அந்த தைரியமும் துணிச்சலும் கொடுத்தது யார்? எங்கோ ஏதோ அண்டத்தில் இருக்கும் அரூவமான உருவம்தான் என்று என்னால் கூற முடியும்!

என உள்ளத்தில் ஒரு மூலையில் ஒளிக் கீற்றாய் அவ்வப்போது வந்து போகும் ஒரு ஜ்வாலைதான் எனக்கு மனதில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா இதில் இருந்து மீண்டு வா! நடந்து வா! ஓடி வா! இந்த உணர்வுகளால் நான் திகைத்தேன். உன்னால் முடியும் என்று அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருந்தது. அந்த ஒளி அளித்த வெளிச்சத்தில் நான் மெதுவாக மிக மெதுவாக என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை விதையை மனதில் மிகவும் ஆழமாக பதித்தேன்.

தாக்கிய அவமானகள்! ஏற்பட்ட துன்பங்கள்! துக்கங்கள்! வேதனைகள் அனைத்தையும் மறந்து! மன்னித்து, சில நிகழ்வுகளை மட்டும் நினைவில் உரம் போட்டு வளர்த்து, அதன் மேல் கோபம் வைத்து, அந்த கோபத்தில் ஏற்பட்ட ஜ்வாலையில் என்னை நானே திடப் படுத்திக் கொண்டு தவழத் தொடங்கினேன்! அப்புறம் தத்தி தத்தி நடந்து, பிறகு சாதாரண நடை நடக்கவே பட்ட கஷ்டங்கள் அதிகம்தான். இதற்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு மூலையில் இருந்து நம்மை வழி நடத்துகிறது! அந்த நடத்துதலில் நமக்கு எந்த தீங்கும் வராது என்ற ஒரே நம்பிக்கை. நடந்தேன்.. நடந்தேன் ஜெயித்தேன்!!!

என்னைப் பொறுத்தவரையில் படிக்கும் காலங்களில்தான் எனது வாசஸ்தலம் கோவிலாக இருந்தது. இப்போ வேலைக்கு வந்த பிறகு நினைத்த நேரத்திலோ அல்லது விசேஷ காலங்களிலோ கோவிலுக்கு செல்ல முடிவதில்லை. அதற்காக நான் வருத்தப்பட்டதும் இல்லை. நம் தூய்மையான மனதே கடவுளின் வாசஸ்தலம், அப்படி இருக்க நான் ஏன் கோவிலுக்கு போகவில்லை என்று வருத்தப் படவேண்டும். சூழ்நிலை அமைந்தால் கண்டிப்பாக செல்வேன். மத்தபடி எனக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் யாரை பற்றியும் யோசிப்பதில்லை, சந்திக்க நினைத்ததும் இல்லை.

பிரபல பதிவர் மயிலு விஜி என்னை சொன்னார்கள் எனது வீட்டை சமயபுரத்திற்கு மாற்ற நினைக்கும் ரம்யா என்று...
ஆமாம் விஜி இதில் என்ன தவறு? அப்படிதான் எங்கள் வீடு!அது ஒரு ஆலயம்தான்!! அந்த ஆலயத்தில்தான் எங்களின் இன்றைய வாசம் என்றால் அது மிகையாகாது! எளிமையான வீடுதான் ஆனாலும் எங்களது வீட்டிலும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்று எங்க வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் கூறுவார்கள். எங்க வீட்டிற்கு வருபவர்கள் எம்மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த இடம் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது என்று சொல்லாமல் சென்றவர்கள் மிகக் குறைவு.

கடவுளுக்கும் நமக்கும் என்ன ஒப்பந்தம் இருக்கிறது? ஒன்றுமே இல்லை! கூட்டி கழிச்சிப் பார்த்தால் எதுவுமே இருக்காது; இந்த உணர்வு என்னோட மனதில் ரீங்காரமிட்டு சுற்றி வரும் ஒரு உண்ணதமான் உணர்வு! இந்த உணர்வை நான் ரசிக்கிறேன்! நேசிக்கிறேன்! போற்றுகிறேன்! துதிக்கிறேன்! கரைந்து போகின்றேன்! இப்படி எவ்வளவ எழுதிக் கொண்டே செல்லலாம்.

எந்த கோவிலுக்கு செல்லும்போதும் பெரிய ஆன்மீகவாதியாகவோ, வேதங்கள் பல கற்றுக்கொண்டோ, நேம நிஷ்டைகள் பல கடைபிடித்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை.மாறாக, யாரையும் துன்புறுத்தாமல், ஒருவருக்கும் கெடுதல் நினைக்காமல், பரிசுத்தமான மனதுடன் இருந்தாலே போதும். எதிலும் ஒரு நிறைவு கிடைக்கும். சாமியிடம் பயம் வேண்டாம்! பக்தி வேண்டாம்! கலப்படமில்லாத நேசம் ஒன்றே போதும்! எளிதில் எதையும் வென்றிடலாம்.

சுருங்கசொல்லின் மனிதன் மனிதனாக இருக்கவேண்டும். அன்பு, பண்புடன், காம, குரோத, லோக, மோக, மத, மாச்சர்ய இவைகள் அனைத்தும் தவிர்த்து, நல்ல மனதால், நல்ல சிந்தனையுடனும் வாழத் தெரிந்திருக்கவேண்டும்.மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக்கூடாது.(இதுதான் ஆறாவது அறிவின் மிக முக்கியமான வேலை)

இந்த பண்புகளை மனிதனால் மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும். அதனால்தான் மனிதப் பிறவியை மிகச் சிறந்த பிறவியாக சிலாக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோவிலுக்கு எதற்கு செல்கிறோம். அங்கே சந்திப்பவர்களிடம் குசலம் விசாரிக்கவா? இல்லை தெரிந்தவர்களுடன் புறம் பேசவா? கண்டிப்பாக இல்லை! செல்லும் நேரம் குறைவாக இருந்தாலும், செல்லும் நாட்கள் கணக்கிலடங்கினாலும் நோக்கம் ஒன்றே!

என்னைப் பொறுத்தவரை எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரே தெய்வத்தின் உருவம் தான் எனது கண்களுக்கு தெரியும், திருப்பதி சென்றாலும் மாரியம்மாதான், ஸ்ரீரங்க நாதரிடம் சென்றாலும் மாரியம்மாதான், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றாலும் தெரியும் உருவம் மாரியம்மாதான். இப்படி எதிலும் அம்மாவை ஒரு நிலைப் படுத்தி வைக்க முதலில் நான் எனது மனதை ஒருநிலைப் படுத்தி வைக்க வேண்டும் அல்லவா? அந்த காரியத்தை மிகச் சிறிய வயதிலேயே செய்து முடித்துவிட்டேன். யோக நிலையை எனது ஒன்பதாவது வயதில் அடைந்தேன். இது என்னோட பாட்டி உபயம். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. எனக்கு முன்னால் ஒரு அதிசயமான ஒரு பிம்பம் எனது பாட்டிதான்!!

அதேபோல்தான், எந்த கோவிலுக்குப் போனாலும் அனைத்தும் மறந்து போகும். ஒரே இலக்கு நம் முன்னால் எந்த உருவச் சிலை உள்ளதோ அதனுடந்தான் மனம் ஒரு நிலைப்பட்டுப் போகும். ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ நமது கவலைகள் அனைத்தையும் மறந்து நிற்கின்றோமே! அதுதான் என மனதில் தோன்றும் ஒரு அருமையான யோக நிலை. இதற்கு மேல் என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம்...

எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கண்களுக்கு மட்டுமல்ல கருத்துக்களுக்கும் தெரிவது கடவுள் ஒன்றுதான். அந்த கடவுள் நான் மனமுருக வழிபாடும் எனதன்பு தெய்வமான சமயபுரமாரியம்மன்தான்!!!

கிறித்துமஸ் விழாவில் அந்த தோழிகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடுவோம்.
இஸ்லாமிய தோழிகளின் வீட்டிற்கு ரமலான் நோன்பு சமயத்தில் சென்று அவர்களின் நோன்பில் கலந்து கொள்வோம். அவர்கள் கொடுக்கும் அந்த நோன்பு கஞ்சியையும் அதே பய பக்தியோடு சாப்பிடுவோம்.

இவர்கள் அனைவரும் எங்க வீட்டில் தீபாவளியை கொண்டாடுவாங்க.

மதம் தாண்டி, இனம் தாண்டி, பல நட்புக்களை அளித்து அந்த நட்புக்களே என்னைச் சுற்றும் உறவுகளாக மாறிய இத்தருணம் கூட அந்த கடவுள அளித்ததுதான் என்றால் அது மிகையாக!

மயிலு, இந்த தலைப்பில் எழுதினால் முடிவே இருக்காது. எனது மனதில் அவ்வளவு உள்ளது. ஆனாலும் முடிக்கும் தருணம் வந்து விட்டது என்று எண்ணுகின்றேன். கைகள் ஒய்ந்து விட்டன, ஆனால் எண்ணங்களும் அதில் எழும் ஓசைகளும் மனதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. மற்றுமொரு தருணத்தில் மறுபடியும் இதே போல் ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.

டிஸ்கி: இங்கு எழுதி இருப்பது அனைத்தும் என்னோட தனிப்பட்ட உணர்வுகள்தான். ஒருவரையும் புண்படுத்த அல்ல. என்னுடைய நம்பிக்கைஎன்னுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எனதருமையான உணர்வுகளின் உயிரோட்டங்களின் ஆர்ப்பரிப்புதான். நண்பர்கள் நல்ல புரிதலுடன் இந்த தோழியை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

16 comments :

வால்பையன் said...

ப்ளஸ் ஓட்டு போட்டிருக்கேன், அதுனால போளி குரியர் அனுப்பிருங்க!

நசரேயன் said...

//
ப்ளஸ் ஓட்டு போட்டிருக்கேன், அதுனால போளி குரியர் அனுப்பிருங்க!//

எனக்கும் தான் ..


கும்மி அடிக்க ஆள் இருந்தா சொல்லி விடுங்க .. கும்முறேன் வந்து

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சொந்தமா செஞ்சதா!
இல்ல சாமிக்கி வாங்கி வச்சு படைச்சுபுட்டு திங்கிறதா?
:)))

நட்புடன் ஜமால் said...

மனிதன் மனிதனாக இருக்கவேண்டும். அன்பு, பண்புடன், காம, குரோத, லோக, மோக, மத, மாச்சர்ய இவைகள் அனைத்தும் தவிர்த்து, நல்ல மனதால், நல்ல சிந்தனையுடனும் வாழத் தெரிந்திருக்கவேண்டும்.மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக்கூடாது.]]

நல்லா சொல்லியிருக்கீங்க ரம்யா

(இதுதான் ஆறாவது அறிவின் மிக முக்கியமான வேலை)]]

உண்மைதான் - ஆனால் + போகமா - இப்படி போகுது அதுக்கும் 6 தான் காரணம் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க ரம்யா..

அது சரி said...

//
வால்பையன் said...
ப்ளஸ் ஓட்டு போட்டிருக்கேன், அதுனால போளி குரியர் அனுப்பிருங்க!
June 21, 2010 6:26 PM
//

எனக்கும்...பட், ரெண்டு...தமிழ் மணம், தமிழிஷ்னு ரெண்டு வோட்டு போட்ருக்கனாக்கும்! :))

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

மனதின் ஆழத்தில் இருந்து வந்த உணர்ச்சி- ஆழ்ந்து சிந்தித்து - வந்த இடுகை. நன்று நன்று - போளீ பார்சல் ( நாங்க ரெண்டு பேரு இருக்கொம் ) -
சரியா

நல்வாழ்த்துகள் ரம்யா
நட்புடன் சீனா

Sangkavi said...

நல்லா எழுதி இருக்கீங்க....

ரங்கன் said...

எனக்கு ரெண்டு போளி பார்செல்...!!

அம்மாடி..!! இப்படி எழுதி ரொம்ப நாளாச்சே ரம்யா!!

சூப்பர் சூப்பர்!!

அம்மாவின் அன்பு ஆல்வேஸ் வித் யூ!!

கலக்கலான வாழ்க்கையை கலங்காம வாழுங்க!!

வாழ்த்துக்கள்!!

சின்ன அம்மிணி said...

ரம்யா, பதிவு முடியுமான்னு பாத்தேன். உண்மையிலேயே கொஞ்சம் பெரிசுதான். நல்லா இருக்கு :)

தமிழ் அமுதன் said...

///வால்பையன் said...

ப்ளஸ் ஓட்டு போட்டிருக்கேன், அதுனால போளி குரியர் அனுப்பிருங்க! ///

நானும் ப்ளஸ் ஓட்டுதான் போட்டேன்

ஆனா போளி எதும் வேணாம்

போளி சாப்பிட்டு யாரு காலி ஆகுரது..;;))))

RAMYA said...

அனைவருக்கும் மிக்க நன்றி!

மயில் said...

ரம்ஸ்,
உங்க வீடு பத்தி முழுசா உணர்ந்தவள் நான் :))

தேங்க்ஸ் நான் கூப்பிட்டு இந்த வருசத்துக்குள் நீ எழுதினதுக்கு :))

விக்னேஷ்வரி said...

சாமியிடம் பயம் வேண்டாம்! பக்தி வேண்டாம்! கலப்படமில்லாத நேசம் ஒன்றே போதும்! எளிதில் எதையும் வென்றிடலாம். //

ரொம்ப சரி ரம்ஸ். மனதின் ஆழத்தில் உதிக்கும் எண்ணங்கள் ஏராளம். தொடரட்டும்.

இன்பம் துன்பம் said...

சகோதரி உன்னுடைய கருத்துக்கள் மிகவும் நன்று நீ மரியாம்மாவ பார்ப்பதை போல் நான் சிவனாக பார்கிறேன் நமசிவய என்று மட்டுமே என் நா சொல்கிறது.எல்லாமே ஒன்றை நினைத்து விட்டால் எல்லாமே ஓன்று தான் நல்ல தத்துவத்தை மிக சுளுவாய் உணர்ந்து கொண்டாய்,வாழ்க வளமுடன்
subburajpiramu@gmail .com

வால்பையன் said...

@ இன்பம் துன்பம்

மாரியம்மா எப்ப ஆம்பளையாகி சிவனாக மாறியது!?

உங்க நாக்கு அதுவா நமச்சிவாயன்னு சொல்லுதா?
வசம்பு ஓவரா தேச்சிட்டாங்களோ!?