Wednesday, March 11, 2009

என்னை கவர்ந்தவர்கள்!!!



தொடர் பதிவிற்கு அழைத்த ஜீவன் மற்றும் நிலாவும் அம்மாவும் இருவருக்கும் நன்றி!!


தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.


இவரே என்னை கவர்ந்தவர்


ஸ்வாமி விவேகானந்தர்

பாகம் 1


ஸ்வாமி விவேகானந்தர்


உலக விடியலுக்க எழுந்த ஆன்மீக சூரியனான சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவையானது. அதை முழுவதும் படிக்கவோ அதை எழுதவோ என் இந்த பிறவி போதாது. இருப்பினும் குழந்தை பருவத்தில் இருந்தே மிகவும் விரும்பிய, ரசித்த, பிரமித்த ஆசான் ஸ்வாமி விவேகானந்தர். ஒரு காலக் கட்டத்தில் ஸ்வாமி விவேகானந்தர் நாட்டுக்கு செய்ததையும், சிறு பிராயத்தின் குறும்புகளையும், அறிவுபூர்வமான பேச்சுகளையும், இளைஞர்களுக்கு கொடுத்துள்ள அறிவுரைகளையும் யோசித்து யோசித்து அதுபோல் நம்மால் ஆக முடியாதா என்று ஏங்கிய நாட்கள் தான் அதிகம். இது குழந்தைத்தனமான பேராசைதான் .


கேட்டோம் முடிந்து விட்டது, படித்தோம் தெரிந்து விட்டது என்று முடிவெடுக்கும் வரலாறு இல்லை. இவரப் பற்றி மீண்டும் மீண்டும் அறிய வேண்டும், படிக்க வேண்டும், அதை சிந்திக்க வேண்டும். சிந்தித்ததை செயல் படுத்த வேண்டும்; அதன்மூலம் தனிநபரும், நாடும், உலகும் ஒரு புது விடியலைக் காண்பதற்கு பாடுபட வேண்டும். இவரைப் பற்றி படிக்கும் போதெல்லாம் ஒரு ஆன்மீகச் சாதனையாகவும், பிரார்த்தனை பூர்வமாகவும் கேட்பேன்.


தோற்றம்: கொல்கத்தா மாநகரத்தில் சிமூலியா (தற்போதைய சிம்லா) என்ற ஒரு பகுதி உள்ளது. அங்கு விஸ்வநாததத்தர் என்ற பிரபலமான வழக்கறிஞர் இருந்தார். அவரது மனைவி புவனேசுவரிதேவி. அவர் மிகுந்த சிவ பக்தர் திங்கள் தோறும் உபவாசம் இருந்து சிவபெருமானிடம் பிரார்த்தனையும், விசேஷ பூஜைகளும் ஒரு வருட காலம் தொடர்ந்து செய்து பெற்ற தவச்செல்வர் தான் சுவாமி விவேகாந்தர். 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள் திங்கட்கிழமை காலை 6 மணி 33 நிமிடம் 33 வினாடியில் ஒரு அழகிய ஆண் மகனை அன்னை புவனேஸ்வரி தேவி ஈன்றெடுத்தார். இப்படியாக யுக நாயகர் தோன்றினார். அவரின் பெயர்கள் வீரேஷ்வரன், 'பிலே' என்று செல்லப் பெயர் வைத்து அழைத்தார்கள். பின்னாளில் நரேந்திரநாத் என்ற பெயர் வழங்கலாயிற்று. சுருக்கமாக, நரேன் என்று அழைத்தனர்.


சாதித்தவர்களின் வாழ்க்கை சாதரணமாக வாழ்பவர்களுக்குப் பாடம் ஆகிறது. அவர்களையும் சாதிக்கத் தூண்டுகிறது. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவின் சிற்பிகளான சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாரதியார் போன்றோருக்கும், உலகின் சிந்தனையாளர்கள் பலருக்கும் அவரது வாழ்க்கை ஒரு தூண்டுதலாக இருந்திருக்கின்றது.


நரேன் சிறு பிராயத்தில் குறும்பு செய்வதில் அனைவரையும் தன் பால் இழுத்து விடுவார். அந்த குறும்பே சில சமயம் அவரின் தாய்க்கு கோபத்தை உண்டு பண்ணும். அப்போது அந்த தாய் கடவுளைப் பார்த்து கேட்பது என்னவென்றால், கடவுளே நான் குழந்தை வேண்டும் என்று தவம் இருந்தேன். ஆனால் நீ குழந்தை என்ற கூறி உன்னிடம் இருந்த ஒரு பூதத்தை எனக்கு குழந்தையாக அனுப்பி விட்டாயே என்று முறையிடுவார்களாம்.


ஆறாம் வயது முதல் வீட்டிலேயே ஆசிரியர் வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார் அவரின் தந்தை. அவரது நினைவாற்றல் அபாரமானது. அவர் பாடம் கேட்கும் விதமும் அலாதியானது. அவர் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கண்களை மூடியபடி அசையாது அமர்ந்திருப்பார் அல்லது படுத்துக் கொள்வார். நரேன் என்ன செய்கின்றார் என்பது ஆசாரியருக்கு முதலில் புரியவில்லை. நரேன் தூங்குகிறார் என்று முடிவு கட்டிய ஆசரியர் நரேனை உலுக்கி எழுப்பி பாடவேளையில் தூங்குவதற்காக கடிந்து கொண்டார். ஆசரியரின் பேச்சுக்களை முழுவதும் மௌனமாக கேட்டுக் கொண்ட நரேன் அன்றைய பாடம் முழுவதையும் ஒரு வார்த்தை தவறாமல் அப்படியே திருப்பி கூற அதிர்ந்து விட்டார் ஆசிரியர்.


வாழ்க்கையில் எந்த நிலையில் இருப்பவர் ஆயினும், ஆணாகட்டும் பெண்ணாகட்டும். இளைங்கராகட்டும், முதியவராகட்டும், வாழ்க்கையில் வழிதேடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக, நம்பிக்கை நட்ச்சத்திரமாக அவர் திகழ்ந்தார். 1893-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் இந்தத் தமிழ்நாட்டில் நுழைந்தார். தமிழ்நாடு அவரது மகிமையைக் கண்டது! அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெறும் சர்வமத மகாசபையில் அவரை கலந்துகொள்ளச் சொல்ல வேண்டும் என்ற தமது எண்ணத்தை சுவாமிஜியிடம் வெளியிட்டார் ராமநாதபுர மன்னர். அவர் அமெரிக்க செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் சென்னை மக்கள்.


1893, செப்டம்பர் 11 -ஆம் நாள் சுவாமிஜி சர்வமத மகாசபையில் பேசினார். அன்று தொடங்கியது ஒரு புதிய யுகம். சுமார் நான்கு ஆண்டுகள் அங்கே தங்கி, இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்.


அவர், 1896, டிசம்பர் 30-ஆம் நாள் தாய் நாட்டிற்கு புறப்பட்டார். ஸ்ரீலங்கா வழியாக 1897, ஜனவரி 26-ஆம் நாள் பாம்பனை அடைந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிஜியும் சளைக்காமல் எல்லா இடங்களிலும் சொற்பொழிவுகள் ஆற்றி, நமது ஈடு இணையற்ற பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்தினார். பிரவரி 15 - ஆம் நாள் கல்கத்தாவிற்குப் புறப்படும்வரை நமது சொற்பொழிவுகள் மூலமும், உரையாடல்கள் வாயிலாகவும், பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகள் வழியாகவும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பினார்.

பரமக்குடியில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்

மனிதா, நீ தெய்வீகமானவன், ஆண்-பெண், இளையவர்-முதியவர், ஏழை-பணக்காரர், பண்டிதர் - பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரிலும் அந்தத் தெய்வீகம் குடிகொண்டிருக்கிறது. உன்னுள் அந்தத் தெய்வீகத்த எழுப்பு, பிறரும் அதைத் தங்களுள் எழுப்புவதற்கு உதவு. இதை மட்டும் நீ செவாயானால்....


"மன வசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், அதன்ற்கான வழி உங்கள் சாஸ்த்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் (Self-Conscious) செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்."


ராமநாதபுரத்திலிருந்து சுவாமிஜி பரமக்குடி வந்தார். அவரைக் காண்பதற்காகப் பெரும் கூட்டம் திரண்டு வந்தது. அங்கே நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்காணும் வரவேற்புரை வழங்கப்பட்டது.


நம் விதி நம் கையில்

சுமார் நான்கு ஆண்டுகள் மேலை நாடுகளில் வெற்றிகரமான ஆன்மீகப் பணியை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்ற தங்களைப் பரமக்குடி வாசிகளாகிய நாங்கள் இதயபூர்வமாக வரவேற்கிறோம். சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொண்டு, புராதனமான நமது தாய்த்திரு நாட்டிலுள்ள வராதவையுமான செல்வங்களை உலக மதங்களின் பிரதிநிதிகளின் முன் தாங்கள் வைத்தீர்கள். இந்த மகத்தான பணியின் சிறப்பை நாங்கள் நமது நாட்டு மக்களுடன் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறோம். நமது வேதங்களில் காணப்படும் புனிதமான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததின் மூலம் மேலைநாட்டினர் நமது மதத்தின் மீது கொண்டிருந்த தவறான கருத்துக்களை விளக்கினீர்கள். நமது மதத்தின் உலகளாவிய தன்மையையும், எல்லாராலும் எல்லா காலத்திலும் பின்பற்றக் கூடிய பாங்கையும் அவர்களுக்கு ஆனித் தரமாக எடுத்திக் கூறவும் செய்தீர்கள்.


தங்கள் போதனைகள் கருத்தளவில் மட்டுமின்றி செயலளவிலும் அங்கே ஏற்கப்பட்டுள்ளது என்பதற்கு, தங்களுடன் காணப்படுகின்ற மேலை நாட்டுச் சீடர்களே சாட்சி.


தவத்தாலும் புலனடக்கத்த்டாலும் ஆன்மாவை அறிந்து,தங்களை மனித குலத்தின் வழிகாட்டிகளாகவும் ஆச்சாரியகளாகவும் ஆக்கிக் கொண்ட பண்டைய ரிஷிகளுள் ஒருவர் தங்கள் வடிவில் எங்களுடன் இருப்பதாகவே நாங்கள் உணர்கின்றோம்.


நிறைவாக, கருணையே வடிவான இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர பிரார்த்திக்கின்றோம்.


இவ்வாறாக அந்த திருச் சபையினிலே வரவேற்பு அளிக்கப் பட்டது.


சுவாமி விவேகானதரின் பதிலுரை அடுத்து வரும் பதிவில் தொடரும்.


உங்கள் அன்பு ரம்யா.






44 comments :

நட்புடன் ஜமால் said...

எனக்கும் பிடிக்கும் இவரை

குடுகுடுப்பை said...

ஒரு உண்மையான ஆன்மீகவாதி.

புதியவன் said...

//உலக விடியலுக்க எழுந்த ஆன்மீக சூரியனான சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவையானது.//

எனக்கு மிகவும் பிடித்த உண்மையான ஒரு ஆன்மீகவாதி சுவாமி விவேகானந்தர்...அவரைப் பற்றி நினைவு கூர்ந்ததற்கு நன்றி ரம்யா...

ஆயில்யன் said...

//படிக்க வேண்டும், அதை சிந்திக்க வேண்டும். சிந்தித்ததை செயல் படுத்த வேண்டும்; அதன்மூலம் தனிநபரும், நாடும், உலகும் ஒரு புது விடியலைக் காண்பதற்கு பாடுபட வேண்டும். ///

கரீக்டா சொன்னீங்க எத்தனை எத்தனையோ விசயங்கள் தனிநபர் சிந்தனையினை தூண்டும் விதத்தில் விவேகானந்தர் தன் சொற்பொழிவுகளின் மூலம் மக்களுக்கு,நாட்டுக்கு கூறிச்சென்றிருக்கிறார்.அவரது நூல்களினை படிப்பது ஒன்றே நாம் அவருக்கு செய்யும் நன்றி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நம் விதி நம் கையில்//


அந்தக் கால ரஜினின்னு சொல்லுங்க

புதியவன் said...

//1893, செப்டம்பர் 11 -ஆம் நாள் சுவாமிஜி சர்வமத மகாசபையில் பேசினார். //

இது உலகத்தை திரும்பிப்பார்க்க வைத்த ஒரு சொற்பொழிவு...

Ungalranga said...

//அப்போது அந்த தாய் கடவுளைப் பார்த்து கேட்பது என்னவென்றால், கடவுளே நான் குழந்தை வேண்டும் என்று தவம் இருந்தேன். ஆனால் நீ குழந்தை என்ற கூறி உன்னிடம் இருந்த ஒரு பூதத்தை எனக்கு குழந்தையாக அனுப்பி விட்டாயே//

இதேதான் என் அம்மாவும் சொல்லுறாங்க...

நல்ல பதிவு... என் குருவை பத்தி நல்லாதான் எழுதி இருக்கீங்க...

//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//
வாழ்த்துக்கள்...!!!

Vijay said...

விவேகானந்தர் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள உங்கள் பதிவைப் படித்த பிறகு இன்னும் ஆவலாக இருக்கிறேன். அவர் சிகாகோவில்ல் ஆற்றிய உறையை மட்டும் தான் படித்திருக்கேன். மற்ற புத்தகங்களோ, சொற்பொழிவுகளையோ, எதையும் படித்ததில்லை. நல்ல புத்தகங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்.

குடந்தை அன்புமணி said...

விவேகானந்தரைப்பற்றி தெளிவான நடையில் எளிமையாக பதிவிட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்! எனது வலையிலும் அவரைப்பற்றி ('தர்மசிந்தனை')ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன். தொடரட்டும் தங்கள் பணி!

வால்பையன் said...

விவேகானந்தர் பிறக்கும் போதே தேய்வீகதன்மையுடன் பிறந்தார் என்ற பில்டப் உள்ள புத்தகம் எதையோ படித்துவிட்டீர்கள்.

விவேகானந்தரின் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையே அவரது ஆன்மீக தேடல் தான், அதற்கு முன் அவர் நன்றாக படிக்கும் மாணவர் அவ்வளவே!

முதலில் நாத்தீகராக இருந்த வீவேக்(அவர் ஒன்னும் கோவிச்சிக்க மாட்டார்), ராசாராம் மோகன்ராய் கொண்டுள்ள சமூக அக்கறையின் மேல் பற்று கொண்டு அவரது வழியை பின்பற்றினார். அது அத்வைதம்.
அதாவது கடவுள் உருவமற்றவர் என்ற கொள்கையுடயது.

ஆனாலும் இருப்பது எப்படி உருவமில்லாமல் இருக்கமுடியும் என்ற கேள்வியால் ராசாராம் மோகன்ராயிடம்(இந்தியாவிலிருந்த உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க முதல் குரல் கொடுத்தவர்)இருந்து பிரிந்தார்.

அதன் பிறகு அவர் சந்தித்தது ராமகிருஷ்னர்! இவர் தான் கடவுளை பார்த்ததாக சொல்லி கொள்பவர், அதன் படியே விவேக்குக்கும் காட்டியதாக சொல்வார்கள்.
அதையெல்லாம் பேச மனசிதைவு என நிறைய மேட்டரை தொட வேண்டியிருக்கும், உங்கள் நம்பிக்கையை கொச்சை படுத்த விரும்பவில்லை.

ஆன்மீகவாதியாக இல்லாமல் விவேக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அதாவது மத சார்பில்லாமல். இறுதி கட்டங்களில் விவேக் அப்படி தான் இருந்தார். இந்த நாட்டின் மீது பேரார்வம் கொண்டிருந்தார், அதற்காக தான் நூறு இளைஞர்களை கேட்டார்.

துரதிர்ஷ்டம் எங்கம்மா என்னை லேட்டா பெத்து தொலைச்சிட்டாங்க!

வால்பையன் said...

உங்களை கவர்ந்தவர்கள் என பன்மையில் எழுத சொல்லியிருக்கிறார்கள்!
கண்டிப்பாக இருவர் பற்றி எழுத வேண்டும்.
விவேக்குக்கே ஒரு ரெண்டு பதிவு என்றால் அடுத்துவரும் நபருக்கு..............

pudugaithendral said...

விவேகானந்தரைப் பற்றி பல அருமையான தகவல்கள்(பல தெரியாதவை) மிக அருமை.

நன்றி

கார்க்கிபவா said...

இங்கே நான் வேறுபடுவதால் ஆஜர் மட்டும் சொல்ரேன்..

வால் சொன்னது உண்மை

அண்ணன் வணங்காமுடி said...

ஆத்திகம், நாத்திகம் இரண்டும் கலந்த கலவை இவர்....

நல்ல மனிதர், நல்ல உள்ளம் படைத்தவர்...

தேவன் மாயம் said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் இவரை

தேவன் மாயம் said...

எல்லோரும் ஒரே நேரத்தில் பதிவு போட்டு விட்டொம்

KarthigaVasudevan said...

"விழி...எழு...போராடு...உன் இலக்கை எட்டும் வரை ஓயாதே." இந்த வரிகளுக்காக நான் விவேகானந்தரை மிக மதிக்கிறேன்.அவரை பற்றிய இந்தப் பதிவு அருமை ரம்யா.அவர் ஆன்மீகவாதியாகவே இருந்தாலும் இந்திய இளைஞர்களை உத்வேகத்துடன் தட்டி எழுப்பிய மகாப் பெரிய ஆத்மா என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.அவ்வகையில் அவரை நாம் மரியாதை செய்தே ஆக வேண்டும் .நல்ல பதிவு.தொடருங்கள்.

அப்பாவி முரு said...

வெளியே வேலைக்காக போய் வந்ததால் தாமதமான வருகை பதிவு.

சிக்காகோ மாநாட்டிற்க்கு வந்திருந்த அனைவரையும் “சகோதரர்களே, சகோதரிகளே” என்று விவேகாநந்தர் அழைத்ததுதான் நவீன இந்தியாவின் எழுச்சி.

அதுவரை பாம்பாட்டிகள், அழுக்கானவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று நம்மைப் பற்றி நினைதிருந்த்வர்களின் எண்ணம் தவறு என திருத்தி எழுதிய வார்த்தைகள்.

இன்றும் நம்மைப் பற்றி ஏளனம் செய்யும் வெளிநாட்டவரிடம் நான் விவரிக்கும் தலைப்பும் இதுதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கும் இவரை பிடித்தது ஒரு காலத்தில். இப்போ இது மாதிரி எதையாவது படிக்கும் போதுதான் ஆஹா இவரையும் நமக்கு பிடிக்குமே அப்படின்னு தோணுது.

தகவல்களுக்கு நன்றி ரம்யா.

இன்னொருத்தர் யாரு.

ராமலக்ஷ்மி said...

//”உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் (Self-Conscious) செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்."//

இவரது அத்தனை உரைகளும் அற்புதமானவை. தொடரட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

SK said...

அடுத்த பதிவுக்கு காத்து இருக்கேன்.

நிறைய தெரியாத விடயங்கள்.

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//வெளியே வேலைக்காக போய் வந்ததால் தாமதமான வருகை பதிவு.

சிக்காகோ மாநாட்டிற்க்கு வந்திருந்த அனைவரையும் “சகோதரர்களே, சகோதரிகளே” என்று விவேகாநந்தர் அழைத்ததுதான் நவீன இந்தியாவின் எழுச்சி.//

இதைத் தான் நானும் சொல்லலாமென்று வந்தேன்...

அதுக்குள்ள முரு சொல்லிட்டாரு...

அ.மு.செய்யது said...

அவரது வாழ்வியல்,போதனைகள்,கொள்கைகள் குறித்து நிறைய அலச ஆசை தான்..

என்ன பண்றதுங்க..கிடைக்கிற ஒரு மணி நேர கேப்புல ரெம்ப கஸ்டம்.

Prabhu said...

//அப்போது அந்த தாய் கடவுளைப் பார்த்து கேட்பது என்னவென்றால், கடவுளே நான் குழந்தை வேண்டும் என்று தவம் இருந்தேன். ஆனால் நீ குழந்தை என்ற கூறி உன்னிடம் இருந்த ஒரு பூதத்தை எனக்கு குழந்தையாக அனுப்பி விட்டாயே//


இதே மாதிரிதான் வீட்ல சொல்றாங்க! என்கிட்ட அட்வான்ஸா ஆட்டோகிராஃப் வாங்கிக்கோங்க. பின்னாடி மிஸ் பண்ணிட்டோமேனு வருத்தப்படுவீங்க!

Rajeswari said...

ஆகா ..எனக்கு மிகவும் பிடித்தவர். சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லம் சென்று இருக்கிறீர்களா ? அமைதியான இடம் .அவரை பற்றிய நிறைய தகவல்கள் அங்கே கொட்டி கிடைக்கின்றன

வேத்தியன் said...

நல்ல செலக்ஷன்...

நட்புடன் ஜமால் said...

arise awake and stop not till the goal is reached

இவரின் பெயரை கேட்டவுடன் ஞாபகம் வரும் விடயம்.

நான் ஒரு முறை கன்னியாகுமரியில் இவருடைய பாறைக்கு சென்று உள்ளேன்

பலசரக்கு said...

ரம்யா, ஸ்வாமி விவேகானந்தர் தொடர் மிக அருமை. உங்க காமடி ஸ்கிரிப்ட் எல்லாம் கூட டாப். நல்ல இயக்குனர்களுக்கு அனுப்பி வையுங்கள். யார் அறிவார்? அதிர்ஷ்டம் அடிக்கலாம். வடிவேலு காமடி ரொம்ப பிடிக்கும் போலும். வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

சிக்காகோ மாநாட்டிற்க்கு வந்திருந்த அனைவரையும் “சகோதரர்களே, சகோதரிகளே” என்று விவேகாநந்தர் அழைத்ததுதான் நவீன இந்தியாவின் எழுச்சி.//

ஆமா!!! உண்மை!!

தேவன் மாயம் said...

/படிக்க வேண்டும், அதை சிந்திக்க வேண்டும். சிந்தித்ததை செயல் படுத்த வேண்டும்; அதன்மூலம் தனிநபரும், நாடும், உலகும் ஒரு புது விடியலைக் காண்பதற்கு பாடுபட வேண்டும். ///

இளம் வயதில் இத்தனை சாதனை?

தேவன் மாயம் said...

1893, செப்டம்பர் 11 -ஆம் நாள் சுவாமிஜி சர்வமத மகாசபையில் பேசினார். அன்று தொடங்கியது ஒரு புதிய யுகம். சுமார் நான்கு ஆண்டுகள் அங்கே தங்கி, இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்.///

தலைநிமிர வைத்த இந்தியன்!

கணினி தேசம் said...

"விழி...எழு...போராடு...உன் இலக்கை எட்டும் வரை ஓயாதே." இந்த வரிகளுக்காக நான் விவேகானந்தரை மிக மதிக்கிறேன்

தமிழ் அமுதன் said...

மிக நல்ல பதிவு ரம்யா! விவேகானந்தரை பற்றி மேலும் சில பதிவு எழுதுங்கள்.

விவேகனந்தர் உலக புகழ் பெற்றது அவரது தெய்வீக தன்மைக்காக அல்ல!
புரட்சியுடனும்,பகுத்தறிவுடனும்,எழுச்சியுடனும் சிந்தனையை தூண்டும்
வகையில் உரையாற்றும் அவர் நாவன்மையால்தான் அவர் புகழ் பெற்றார்.

கடவுள் புகழ் பரப்பும் ஆன்மிக வாதிகளுக்கு மத்தியில்!

///ஒருவன் செல்வத்திலும் மகிழ்ச்சியிலும் பிறக்கிறான், மற்றொருவன் வறுமையிலும்,
துக்கத்திலும் பிறக்கிறான்.இது ஓர வஞ்சனை அல்லவா? இதுதான் கடவுளின் படைப்பு என்றால்? அந்த கடவுள் மிகக் கொடுரமானவராக இருக்கவேண்டும்!///

என்று அன்றே ''பகுத்தறிவு'' விதையை தூவியவர் விவேகானந்தர்!

உயர் ஜாதி மக்களை பார்த்து!

உயர்ஜாதி மக்களே....தாழ்த்த பட்டவனை விட உங்களுக்கே கல்வி கற்கும் சக்தி அதிகம் உண்டெனில்!உயர் ஜாதி மக்கள் இனி கல்விக்கு செலவு செய்யாதீர்கள்.
உயர்ஜாதி மக்களுக்கு பிறவியிலேயே புத்திசாலி தனம் இருந்தால் அவர்கள் தானே
படித்து கொள்ள முடியும். மற்றவர்கள் பிறவியிலேயே கல்வி கற்கும் அறிவு இல்லாதவர்கள் ஆயின்? எல்லா ஆசிரியர்களும் அவர்களுக்கே கல்வி புகட்டட்டும்.

உயர்ந்தவர்,தாழ்ந்தவர்,வலியார்கள்,மெலியார்கள் -இவர்கள் அனைவரும் அடிப்படையாக அந்த எல்லையற்ற ஆன்மாவை கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அளவற்ற சக்தி பெற முடிந்தவர்கள் என்று,

கூறி அன்றே ''தீண்டாமையை'' எதிர்த்து குரல் கொடுத்தவர்.

இன்னும் நெறைய சொல்லி கொண்டே போகலாம்.

வாழ்த்துக்கள் ரம்யா!! இன்னும் நெறைய எழுதுங்கள் இவரை பற்றி!!!

நிஜமா நல்லவன் said...

எனக்கும் பிடிக்கும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான, விரிவான பதிவு.. விவேகானந்தர்.. எனக்கு பிடித்த மனிதர்... இந்தியாவின் பெருமையை வெளிநாட்டவர்க்கு சொன்னவர்.. என்னையும் இந்த தலைப்பில் பதிவிட நண்பர் ஆதவா அழைத்து இருக்கிறார்.. சீக்கிரம் எழுத வேண்டும் தோழி..

goma said...

துரதிர்ஷ்டம் எங்கம்மா என்னை லேட்டா பெத்து தொலைச்சிட்டாங்க!

ஜோக் ஓகே சிரித்தேன் அதே சமயம் விவேகாநந்தரை இப்படி கலாய்க்க வேண்டாம்
நானும் அவருடைய போதனைகளைப் படித்திருக்கிறேன்
நானும் அவரை மதிப்பவர்கள் லிஸ்ட்டில்..இருக்கிறேன்

goma said...

ரம்யா நின்ங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.அருமையான எழுதுகிறீரக்ள்

RAMYA said...

நன்றி ஜமால்!!

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
ஒரு உண்மையான ஆன்மீகவாதி.

//

ஆமாம் குடுகுடுப்பை நன்றி புரிதலுக்கு!

RAMYA said...

நன்றி புதியவன்

RAMYA said...

ஆயில்யன் said...
//படிக்க வேண்டும், அதை சிந்திக்க வேண்டும். சிந்தித்ததை செயல் படுத்த வேண்டும்; அதன்மூலம் தனிநபரும், நாடும், உலகும் ஒரு புது விடியலைக் காண்பதற்கு பாடுபட வேண்டும். ///

கரீக்டா சொன்னீங்க எத்தனை எத்தனையோ விசயங்கள் தனிநபர் சிந்தனையினை தூண்டும் விதத்தில் விவேகானந்தர் தன் சொற்பொழிவுகளின் மூலம் மக்களுக்கு,நாட்டுக்கு கூறிச்சென்றிருக்கிறார்.அவரது நூல்களினை படிப்பது ஒன்றே நாம் அவருக்கு செய்யும் நன்றி!
//

நன்றி ஆயில்யன் அண்ணா முதல் வருகைக்கும், முதல் வாழ்த்துக்கும் நன்றி!!

RAMYA said...

நன்றி சுரேஷ்
நன்றி ரங்கன்
நன்றி விஜய்
நன்றி அன்புமணி
நன்றி வால்பையன்
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி கார்க்கி
நன்றி அண்ணன் வணங்காமுடி
நன்றி தேவா
நன்றி கணினி தேசம்
நன்றி மிஸஸ்.டவுட்
நன்றி muru
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி SK
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி அ.மு.செய்யது
நன்றி pappu
நன்றி ராஜேஸ்வரி
நன்றி வேத்தியன்
நன்றி நிஜமா நல்லவன்
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி goma

RAMYA said...

//
ஜீவன் said...
மிக நல்ல பதிவு ரம்யா! விவேகானந்தரை பற்றி மேலும் சில பதிவு எழுதுங்கள்.

விவேகனந்தர் உலக புகழ் பெற்றது அவரது தெய்வீக தன்மைக்காக அல்ல!
புரட்சியுடனும்,பகுத்தறிவுடனும்,எழுச்சியுடனும் சிந்தனையை தூண்டும்
வகையில் உரையாற்றும் அவர் நாவன்மையால்தான் அவர் புகழ் பெற்றார்.

கடவுள் புகழ் பரப்பும் ஆன்மிக வாதிகளுக்கு மத்தியில்!

///ஒருவன் செல்வத்திலும் மகிழ்ச்சியிலும் பிறக்கிறான், மற்றொருவன் வறுமையிலும்,
துக்கத்திலும் பிறக்கிறான்.இது ஓர வஞ்சனை அல்லவா? இதுதான் கடவுளின் படைப்பு என்றால்? அந்த கடவுள் மிகக் கொடுரமானவராக இருக்கவேண்டும்!///

என்று அன்றே ''பகுத்தறிவு'' விதையை தூவியவர் விவேகானந்தர்!

உயர் ஜாதி மக்களை பார்த்து!

உயர்ஜாதி மக்களே....தாழ்த்த பட்டவனை விட உங்களுக்கே கல்வி கற்கும் சக்தி அதிகம் உண்டெனில்!உயர் ஜாதி மக்கள் இனி கல்விக்கு செலவு செய்யாதீர்கள்.
உயர்ஜாதி மக்களுக்கு பிறவியிலேயே புத்திசாலி தனம் இருந்தால் அவர்கள் தானே
படித்து கொள்ள முடியும். மற்றவர்கள் பிறவியிலேயே கல்வி கற்கும் அறிவு இல்லாதவர்கள் ஆயின்? எல்லா ஆசிரியர்களும் அவர்களுக்கே கல்வி புகட்டட்டும்.

உயர்ந்தவர்,தாழ்ந்தவர்,வலியார்கள்,மெலியார்கள் -இவர்கள் அனைவரும் அடிப்படையாக அந்த எல்லையற்ற ஆன்மாவை கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அளவற்ற சக்தி பெற முடிந்தவர்கள் என்று,

கூறி அன்றே ''தீண்டாமையை'' எதிர்த்து குரல் கொடுத்தவர்.

இன்னும் நெறைய சொல்லி கொண்டே போகலாம்.

வாழ்த்துக்கள் ரம்யா!! இன்னும் நெறைய எழுதுங்கள் இவரை பற்றி!!!

//


ஜீவன் உங்கள் பின்னூட்டம் ஒரு பதிவு மாதிரியே இருந்திச்சு.

இன்னும் விவேகானந்தரை பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற
உத்வேகம் என்னுள் தோன்றியது.

விவேகானந்தரை மதிக்காதவர்கள்,
விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

ஒரு முறை பத்து நாட்கள் சுற்றுப்பயணம் முடித்து உறங்காமல், என்ன சாப்பிட்டார் என்று அவருக்கே தெரியாது, அந்த மாதிரி சுற்றுப் பயணம் செய்து உரை ஆற்றி விட்டு, சென்னைக்கு வந்தாராம். அப்போது சென்னை மக்கள், அவர் வந்து இறங்கும் முன்பே இரயில் நிலையத்திற்கு சென்று விட்டார்களாம். இரயில் நிலையத்தில் வரலாறு காணாத கூட்டம் நிறைந்த்திருந்ததாம்.

அந்த இடம் பூரா மலர்களினால் பாதை அமைத்து இருந்தார்களாம்.

கால்கள் தரையில் படாமல் விவேகானந்தர் நடக்க சென்னை மக்கள் ஆனந்தமாக மலர் பாதை அமைத்து வரவேற்பு கொடுத்தார்களாம்.

இவை எல்லாம் அறியும் போது அந்த நாளில் நாம் இருக்க வில்லையே என்ற ஏக்கம் தான் எனக்கு வரும் ஜீவன்.

இன்னும் சில நிகழ்ச்சிகளை எழுதலாம் என்று உள்ளேன் ஜீவன்.

நன்றி!! வந்து ஆழமாக அலசி ஆராய்ந்து, உன்னதாமான உயர்ந்த
உள்ளத்தோடு என்னை பாராட்டி ஊக்குவிக்கும் உங்கள் உயர்ந்த குணம்
நான் மிகவும் உங்களிடம் ரசிக்கும் குணம் ஜீவன்.


தங்கள் வருகைக்கும், தங்களின் வாழ்த்திற்கும் நன்றி ஜீவன்!!